கல்வி கேள்விகளில் சிறக்க சியாமளா நவராத்திரி வழிபாடு!
கல்வி கேள்விகளில்
சிறக்க சியாமளா நவராத்திரி வழிபாடு!
கருணையின் வடிவமான
அன்னை அம்பிகை வழிபாடு சாக்தம் என்று அழைக்கப்படுகிறது! சாக்த வழிபாட்டில் நவராத்திரி
வழிபாடு மிகவும் விஷேசமான ஒன்றாகும். வழக்கமாக நவராத்திரி என்றால் புரட்டாசி அமாவாசை
கழித்து ஒன்பது நாட்கள் கொண்டாடுவதைத்தான் எல்லோரும் அறிவோம். ஆனால் நான்கு விதமான
நவராத்திரிகள் ஓர் ஆண்டில் உண்டு.
அவை 1. ஆஷாட நவராத்திரி 2. சாரதா நவராத்திரி 3. சியாமளா நவராத்திரி 4. வஸந்த
நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி:
ஆனிமாதம் அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள். இந்த
நவராத்திரியின் பிரதான தெய்வம் வராஹி தேவி.
சாரதாநவராத்திரி: இது புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பின்வரும் பிரதமை
முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள். இதில் துர்கா, லஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்
தேவியரை வழிபடுவோம்.
சியாமளா நவராத்திரி:
இது தை அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள். இந்த
நவராத்திரியின் பிரதான தெய்வம் ராஜ மாதங்கி.
வஸந்த நவராத்திரி:
இது பங்குனிமாதம் அமாவாசைக்குப் பின் வரும்
பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள். இந்த நவராத்திரியின் பிரதான தெய்வம் லலிதா
திரிபுர சுந்தரி.
ஸ்யாமளா தேவி: லலிதாம்பிகையின் கரும்பில் இருந்து தோன்றியவள். மதங்க முனிவரின் குமாரத்தி தஸமஹா வித்யைகளில் ஒன்பதாவது வித்யை. வேத மந்திரங்களுக்கெல்லாம் அதி தேவதையான இவள் மந்திரிணி என்றும் அழைக்கப்படுகிறாள். ல்லிதாம்பிகா தேவியின் மஹா மேருச் சக்ரத்தில் இவளே அமைச்சராக உள்ளார். இத்தகைய சிறப்புகள் கொண்டவள் ஸ்யாமளா தேவி.
மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிக்கும்
விருப்பம் உடையவள். பச்சை நிறம் கொண்டவள். மதங்க முனிவரின் புதல்வி. நான்கு
திருக்கரம் உடையவள் பாசம், அங்குசம், மலர் அம்பு கொண்டவள். சந்திர கலை தலையில் அணிந்தவள். குங்கும
சாந்தை மார்பில் தரித்தவள் என்று கவி காளிதாசர் தன்னுடைய சியாமளா தண்டகத்தில் அம்பிகையின் தோற்றத்தை அழகாக வருணித்துள்ளார்.
அம்பிகையின் கையில் கிளியும்
இடம்பிடித்திருகின்றது. இது வாக்கு திறமையை குறிக்கிறது. இவளின் நிறம் பச்சை
ஆகும். பச்சை புதனுக்குரிய நிறம் இது ஞானத்தை குறிக்கிறது.
இன்னும் சில நூல்கள் சியாமளா
தேவி பச்சை வண்ணம் உடையவளாக தலையில் சந்திரகலையை சூடியவளாக நீண்ட கேசம் உடையவளாக புன்முறுவல்
பூத்தவளாக இனிமையான சொற்களை பேசுபவளாக கவர்ந்திழுக்கும் விழிகளை உடையவளாக கடம்ப மாலை
அணிந்து பனையோலையிலான காதணி அணிந்திருப்பவளாக சர்வ ஆபரண பூஷிதையாக தாமரை மலரில் அமர்ந்திருப்பவளாக
சித்தரிக்கின்றன.
சியாமளா தேவியை பூஜித்து
உபாசிப்பவர்களுக்கு
வாக்கு பலிதம், கல்வி, வித்தை, நுண்ணறிவு, எதையும் எளிதில் புரிந்து
கொள்ளும் தன்மை, ஞானம், மனதை ஒருநிலை படுத்தும்
திறன், புத்தி
கூர்மை, இசை, தேர்வில் வெற்றி போன்றவை
தானாக வந்து சேரும்.
சியாமளா தேவி உபாசனை கடுமையான விஷயம் என்று
தாந்திரீக நூல்கள் கூறுகின்றன. யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர்
உயரிய இலக்கை அடையும் முறைக்கு 'தாந்த்ரீகம்' என்று பெயர்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா
தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது
வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக
வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.
தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை
மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள்.
சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த
உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக்
கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத்
திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.
மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின்
தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா
பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க
முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே 'மாதங்கி' என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது.
கிராமப்புறங்களில், 'பேச்சி', 'பேச்சாயி' 'பேச்சியம்மன்' என்ற
திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக்
கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார
தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.
சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர்.
லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே
அவர்கள்.
நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு
கூடியவராகக் கருதப்படுகிறார்.சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின்
பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, 'கர்ணமாதங்கி' என்கிற, மாதங்கி தேவியின்
திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே காரணம். இந்த மந்திரத்தை முறையாக
உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக
ஐதீகம்.
தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த
மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும்
தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.
சியாமளா நவராத்திரியில்
ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம்.
எனவே, தென்னாட்டில்
விஜயதசமி போல், வடநாட்டில்
வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை
வழிபடுபவருக்கு, கலைகள்
அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.
அப்பய்ய தீட்சிதரின் சகோதரரின் பேரன் நீலகண்ட
தீட்சிதர். இவர் மதுரை மன்னரிடம் அமைச்சராக விளங்கினார். மதுரைக் கோவிலைப்
புதுப்பிக்க உதவியர் இவர். மதுரை மன்னர் தன் மனைவியின் சிலையைக் கோவிலில் அமைக்க
எண்ணினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி நீலகண்ட தீட்சிதரிடம் கூறினார்.
அதன்படி சிலை செய்யப்பட்டது. ஆனால் தொடைப்பகுதியில் சிறு பின்னம் உண்டானது. எனவே
வேறு சிலை செய்யும்படிக் கூறினார் தீட்சிதர். அந்த சிலையிலும் அதே இடத்தில் சிறு
பின்னம் ஏற்பட்டது. சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த தீட்சிதர், அந்த சிலையே
இருக்கட்டும் என்று கூறிவிட்டார். சிலையைப் பார்வையிட வந்த மன்னர் தொடைப்பகுதியில்
இருந்த பின்னத்திற்குக் காரணம் கேட்க, அரசியின் தொடையில் - அந்த இடத்தில் மச்சம் இருப்ப
தாகச் சொன்னார் தீட்சிதர். இதனால் மன்னருக்கு தீட்சிதர் மீது சந்தேகம் எழுந்தது.
அரண் மனை திரும்பிய அவர் மன அமைதியை இழந்தார். சேவகர்களை அழைத்து நீலகண்ட
தீட்சிதரின் கண்களைக் குருடாக்க உத்தரவிட்டார்.
அப்போது அம்பிகையின் பூஜையில் அமர்ந்திருந்த
தீட்சிதருக்கு மன்னரின் உத்தரவு உள்ளுணர்வில் தெரிந்தது. இத்தகைய அபவாதத்திற்கு
ஆளாக நேர்ந்ததே என்று மிகுந்த வேதனையுற்ற அவர், அம்பிகைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து, அந்த தீபச்
சுடரால் தன் கண்களைத் தாமே பொசுக்கிக் கொண்டார். அப்போது மன்னரின் உத்தரவை
நிறைவேற்றுவதற்காக அங்கு வந்த சேவகர்கள், நடந்த காட்சியைக் கண்டு ஓடிப்போய் மன்னரிடம்
தெரிவித்தனர். தன் தவறை உணர்ந்த மன்னன் ஓடி வந்து தீட்சிதரிடம் மன்னிப்பு
கேட்டான். அப்போது தீட்சிதர் மீனாட்சி அன்னைமீது, "ஸ்ரீஆனந்த சாகரஸ்தவம்' என்னும் 108 துதிகளைப் பாடினார். மீனாட்சி அன்னையின் அருளால் அவர்
கண்கள் மீண்டும் பார்வை பெற்று ஒளிர்ந்தன.
நமது உடலில் ' விசுத்தி ' சக்கரமாக அன்னை ஸ்ரீ மாதங்கி உள்ளாள். 16 தளங்களுடன் கூடிய தாமரை வடிவில் உள்ளது. இந்த தளங்கள் பதினாறிலும், 16 அக்ஷரங்களைக் குறிக்கிறது. இந்த சக்ரம் தூண்டப்படும்போது மனோமய கோசத்தில் கேள்வி ஞானம் துலங்குகிறது. அதே நேரம், பிராணமய கோசத்தில் இன்னிசை கேட்கும். பஞ்சபூதங்களில் ஆகாயமாக விளங்கும் சிதம்பரம் " விசுத்தி " க்ஷேத்ரமாகும். நடராஜரின் நடனக்கலையும் மாதங்கியின் கட்டுக்குள் உள்ள 64 கலைகளில் ஒன்றேயாகும்
சியாமளாவின் அம்சமாக மதுரை மீனாட்சி திகழ்கிறாள். இவளை
வழிபடுவதும் மாதங்கியை வழிபடுவதும் ஒன்றே ஆகும்.
தை அமாவாசை முடிந்து பிரதமை அன்று கலசத்தில் புனித நீர்
நிரப்பி மாவிலை, தேங்காய்
வைத்து; திலகம்
இட்டு; மலர்
மாலைகள் சூட்டி; பச்சை
வஸ்திரம் சாத்தி; அதில், இராஜ மாதங்கியை ஆவாஹனம்
செய்து; சியாமளா
தண்டகம், சியாமளா
அஷ்டோத்திரம் மற்றும் சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
வீணை மீட்ட தெரிந்தவர்கள்
அம்பிகை முன் வீணை மீட்டி ஆராதிக்கலாம். மீனாட்சியம்மை பிள்ளை தமிழ்
மற்றும் மீனாட்சியம்மை பதிகம் பாடலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சியாமளா
நவராத்திரி வழிபாட்டை அனுஷ்டித்து அன்னை ராஜமாதங்கியின் அருளைப் பெற்றுய்வோம்!
சியாமளா நவராத்திரி - தகவல்கள் சிறப்பு.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.