தாமோதரனின் தற்பெருமை! பாப்பா மலர்!
தாமோதரனின் தற்பெருமை!
தட்டான் சாவடி
என்ற சிற்றூரில் தாமோதரன் என்பவன் வசித்து
வந்தான். அவனிடம் தற்பெருமை பேசி தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் குணம் நிறைந்து இருந்தது.
நான் படிப்பில் பெரிய கெட்டிக்காரன். வீரத்தின் விளைநிலம். நான் பாட ஆரம்பித்தால் குயில்
கூட தோற்றுவிடும் என்று இல்லாத பொல்லாத பெருமைகளை பீற்றிக் கொள்வான். அவன் பேசுவதும்
சொல்வதும் வெறும் “அல்டாப்பு’ என்று தெரிந்தும் சுவாரஸ்யத்திற்காக அவனை ஏற்றிவிட்டு
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு மகிழ்ந்திருக்கும் ஒரு கும்பல். அவர்கள் தூண்டிவிடுகையில்
தாமோதரனுக்கு சிறகு முளைக்கும் இன்னும் அதிகமாக பீற்றிக் கொள்வான்.
ஆனால் இப்படி தற்பெருமை பேசிக் கொள்வதை அவனது பெற்றோரும்
ஊர்ப் பெரியவர்களும் எச்சரித்தனர். சுயதம்பட்டம் எல்லாம் சோறு போடாது தம்பி! பிழைப்பைப்
பாரு! என்று அவர்கள் சொல்வதை தாமோதரன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
அப்படித்தான் ஒருநாள்
தன் நண்பர்களுடன் தாமோதரன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் நண்பர்களில் ஒருவன் பக்கத்துகிராமத்தில்
முரட்டுக் காளை ஒன்று இருப்பதாகவும் ஜல்லிக் கட்டுப் போட்டியில் ஒரு மணி நேரம் போராடி
அதை தான் அடக்கி ஜெயித்த்தாகவும் கூறினான். அதைக்கேட்ட தாமோதரன் ப்பூ! அந்தக் காளையை
நானாக இருந்திருந்தால் இரண்டே நிமிடத்தில் அடக்கிக் காட்டியிருப்பேன். போனமாதம் வயலூருக்கு
போயிருந்த போது அங்கிருந்த பண்ணையார் ஒருவரிடம் முரட்டுக் குதிரை ஒன்று இருப்பதாகவும்
அதை அடக்கி காட்டுவோருக்கு அந்த குதிரையையே பரிசாக தருவதாகவும் அவர் சொல்லியிருப்பதாக்க்
கூறினார்கள்.
நான் பண்ணையாரிடம் சென்று குதிரையை அடக்குவதாக சொல்லி
குதிரை மீது தாவி ஏற முயன்றேன். அது என்னை புரட்டித் தள்ளப் பார்த்த்து. நான் அதன்
சேணத்தை விடாது பிடித்துக் கொண்டேன். அது வெகு தூரம் ஒடியது. ஆனாலும் நான் பிடியை விடவில்லை.
முடிவில் குதிரை சோர்ந்துபோனது அதை என் வசப்படுத்தி திருப்பி வந்து பண்ணையாரிடம் நிறுத்தினேன்.
அசந்து போன பண்ணையார் குதிரையை எடுத்துக் கொள்ளும்படிச் சொன்னார். நான் எனக்கு குதிரை
தேவை இல்லை! அதற்கு நிகரான தொகையை கொடுத்துவிடுங்கள் என்று பணத்தை வாங்கிக் கொண்டேன்.
என்று அளந்துவிட்டான். அனைவரும் வாயைப் பிளந்து
ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவன், அதென்ன உன் முன் பற்கள் இரண்டு
உடைந்து போயிருக்கிறதே! என்று கேட்க இதெல்லாம்
வீரனுக்கு அழகு! குதிரையை அடக்கிவிட்டு திரும்புகையில்
கையில் நிறைய பணத்தோடு வந்தேன் இல்லையா? திருடர்கள் மோப்பம் பிடித்து துரத்தினர். அவர்களோடு
சண்டையிடுகையில் ஒரு மலை உச்சியில் இருந்து விழுந்துவிட்டேன். நல்ல வேளை ஒரு மரத்தின்
கிளையை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன்.
அந்தக் கிளை கொஞ்சம் கொஞ்சமாக முறிய
கீழே குதித்தேன். அப்போது ஒரு பாறையில் அடிபட்டு பல் உடைந்துவிட்டது. நல்ல வேளை
பல்லோடு போனது பெரிய சாகஸம் செய்து தப்பி வந்தேன். என் பரிசுப்பணமும் உயிரும் தப்பியதே
பெரிய விஷயம் என்றான்.
ஒருநாள் அவனுடைய மனைவி தன்னுடைய தாய் வீட்டீற்குச்
செல்ல வேண்டும் என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போது தாமோதரன் ஏண்டி நகை நட்டு
ஒன்னும் போட்டுக்காம மூளியா கிளம்பறியே! அப்புறம் உன் புருஷன் பெருமை என்னாகிறது? எல்லாத்தையும்
வித்து அழிச்சிட்டான்னு உங்க ஜனம் பேசறதுக்கா? மரியாதையா எல்லா நகையும் எடுத்து போட்டுக்கிட்டு
கிளம்பு. என்றான்.
அவன் மனைவியோ, காலம் கெட்டுக் கிடக்குங்க! பொழுது
இருட்டிருச்சு! நாம போகிற வழியோ கரடு முரடானது. திருட்டு பயம் அதிகம். இப்பல்லாம் நிறைய
வழிப்பறிக் கொள்ளை நடக்குதுன்னு பேசிக்கிறாங்க! இந்த சமயத்துலே நகை நட்டு எல்லாம் போட்டுக்கிட்டு
போகணுமா? என்று கேட்டாள்.
ஏண்டி! இந்த தாமோதரன் இருக்கும்போது ஒருத்தன் உன்
மேலே கை வைச்சிருவானா? உன் நகையெல்லாம் எங்கேயும் போகாது! நான் துணைக்கு வரும்போது
ஒரு திருடனும் கிட்டே கூட வரமாட்டான். தாமோதரன் பேரைக் கேட்டாலே எல்லாப் பயல்களும்
வெலவெலத்து போயிருவானுங்க! பயப்படாம நகையெல்லாம் போட்டுக் கிட்டு கிளம்பு. அப்போதான்
மாமனார் வீட்டுலே என் பெருமை தெரியும். என்று கெத்தாகச் சொன்னான்.
அவன் மனைவி நகைகளை அணிந்துக் கொண்டுவரவும் இருவரும்
புறப்பட்டார்கள். பொழுது சாய்ந்துவிட்டது. அமாவாசை கழித்த நாள் என்பதால் முன்னிருட்டு.
இருவரும் பேசிக்கொண்டே செல்கையில் யாரும் இல்லாத
வனாந்திரப் பாதையொன்றில் திடீரென ஒரு கும்பல்
அவர்களை மடக்கியது.
தாமோதரன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து,”ஏய்!
மரியாதையா நகையெல்லாம் கழட்டிக் கொடுத்திரு! இல்லேன்னா உசுருக்கு உத்தரவாதம் இல்லே!”
என்று மிரட்டினான் ஒருவன்.
”என் வீட்டுக்காரர் யார் தெரியுமா? அவர் பேரைச்
சொன்னாலே எல்லோரும் நடுங்குவாங்க! அவர் பொண்டாட்டிக் கிட்டேவா உங்க வாலை ஆட்டறீங்க! என்ன்ங்க! உங்க வித்தையை கொஞ்சம் காண்பியுங்க! ”என்று
அவன் மனைவி சொல்லும்போதே வாயில் விரலை வைத்து”
பேசாதே..! பேசாதே!” என்று சைகை காட்டிக் கொண்டிருந்தான் தாமோதரன்.
”ஏண்டா! நீ அவ்ளோ பெரிய ஆளா? உன் பேர் சொன்னா ஊரே
நடுங்குமா? உன் பேர் என்னடா?”
”தா..தாமோதரனுங்க!”
”எங்கே? எங்களை
அடிச்சு போட்டுட்டு உன் பொண்டாட்டியோட நகைகளை காப்பாத்திக்க பாக்கலாம்” என்று திருடன்
கர்ஜிக்க
”ஏங்க சும்மா இருக்கீங்க? அடிங்க! திருடனை அடிங்க!
”என்று அவன் மனைவி கத்த
” ஏய்! நீ சும்மா இருடி! திருடன் சார்! நீங்க நகையெல்லாம் எடுத்துகிட்டு
எங்களை விட்டுருங்க நான் சும்மா பில்டப் பண்ணி பேசினதை என் பொண்டாட்டி நம்பிட்டு இப்படி எதெதோ சொல்லிக்கிட்டிருக்கா! பார்த்தீங்களா
என் கையெல்லாம் எப்படி நடுங்குதுன்னு!” என்று திருடன் காலில் விழுந்தான்.
காறி உமிழ்ந்த திருடர்கள், ”நீ உதார் பார்ட்டியா?
பார்க்கும்போதே தெரியுது! உன் புருஷன் பொழிசு தெரிஞ்சுப் போச்சுல்ல! கழட்டும்மா நகைகளை!”
என்று நகைகளை பிடுங்கிக் கொண்டு ஓடினர்.
” ஏங்க! அந்த உதார் விட்டீங்க! இப்ப இப்படி பணிஞ்சு
நிக்கறீங்க! வெக்கமா இல்லே! பத்து சவரன் நகை போச்சு! வீட்டுலேயே வெச்சிருந்தா பத்திரமா
இருந்திருக்கும்!” என்று அவன் மனைவி புலம்ப.
”ஏண்டி அழுது புலம்பறே! நீ போட்டுகிட்டு இருந்த்து
எல்லாம் கவரிங் நகை! சும்மா பெருமை பீத்திக்க நான் வாங்கிப் போட்டது. போனா போகட்டும்
தலைக்கு வந்தது தலைப்பாவோட போச்சு! வா மாமனார் வீட்டுக்கு போவோம்!” என்று சாவதானமாக
கிளம்பினான். தாமோதரன்.
”அடப்பாவி மனுஷா!
நீ வாங்கிப் போட்ட நகை கூட உன்னைப் போல அல்டாப்புதானா? உன்னைக் கட்டிக்கிட்டு நான்
இன்னும் என்ன அவஸ்தை படப் போறனோ தெரியலையே !”என்று நொந்து கொண்டே நடந்தாள் அவள் மனைவி.
வேடிக்கையான
ReplyDeleteகதை!
பில்டப் மட்டும் தானா தாமோதரனுக்கு! :)
ReplyDeleteநல்ல கதை. பாராட்டுகள்.
ரசித்தேன். அருமை.
ReplyDeleteஅண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.