பத்திரிக்கை பாசம்! பகுதி 2
பத்திரிக்கை பாசம்! பகுதி 2
என் பத்திரிக்கை வாசிப்பும் பத்திரிக்கைகளில் எழுதிய அனுபவங்களை சென்ற பதிவில் சொல்லிக் கொண்டிருந்தேன். வலைப்பூ தொடங்கி தட்டுத்தடுமாறி ஓரளவுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருந்த போது நண்பர்கள் பத்திரிக்கைகளுக்கு எழுதலாமே என்று தூண்டிவிட்டனர். ஆனாலும் சூடுபட்ட பூனையாக நான் வலைப்பூவில் மட்டும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முகநூலில் அறிமுகம் ஆனார் எழுத்தாளர் எஸ்.எஸ். பூங்கதிர். சிறுவயதிலிருந்து அவரது நகைச்சுவை துணுக்குகளை குமுதம் விகடனில் வாசித்து ரசித்திருக்கிறேன். முகநூலில் அவருக்கு நட்பு அழைப்பு விடுக்க இணைந்தவர் என் பதிவுகளை வாசித்து நீங்க பாக்யாவுக்கு எழுதலாமே ஜோக்ஸ் கவிதை எழுதுங்க! வரும் என்றார். ஆனால் சன்மானம் வராது என்று சொல்லவில்லை. கொஞ்சம் சபலம் தட்டியது. எழுதித்தான் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்.
பாக்யாவிற்கு ஜோக்ஸ் கவிதை எழுதுங்க என்று பூங்கதிர் சொன்னதால் பத்து ஜோக்ஸ்கள் பத்து ஹைக்கூ கவிதைகள் அனுப்பி வைத்தேன்.. முதன் முதலில் நான் அனுப்பிய பத்து ஜோக்குகளும் ஒரு ஹைக்கூவும் ஒரே இதழில் பிரசுரம் ஆனது. அப்புறம் ஒரு கதை ஜோக்ஸ் என தொடர்ந்து பிரசுரம் ஆனாலும்
பாக்யா இதழ் காரனோடையிலோ பொன்னேரியிலோ கிடைக்கவில்லை. அதனால் பாக்யாவுக்கு தொடர்ந்து
எழுதவில்லை.
அப்போது விகடனுக்கு
தொடர்ந்து ஜோக்ஸ்கள் அனுப்புவேன். அதில் ஒன்று பிரசுரமாக அந்த தகவலைமுகநூல் நண்பர் புதுவண்டி
ரவீந்திரன் முகநூலில் பகிர்ந்தார்.அத்துடன் தமிழக எழுத்தாளர் குழுமம் என்ற வாட்சப்
குழுவிலும் என்னை சேர்த்துவிட்டார்.
அதில் சேர்ந்ததும் வியந்து போனேன். நூற்றுக்கணக்கான
வாசக எழுத்தாளர்களை உள்ளடக்கிய குழுமம் அது. பெரும் ஜாம்பவான்கள் மத்தியில் கத்துக்
குட்டி நான். குழுவில் இணைந்த்தில் பல நண்பர்கள் கிடைத்தனர். நான் இன்றளவும் பெரிதும்
மதிக்கும் ஏந்தல் இளங்கோ அவர்கள், சின்னஞ்சிறு கோபு அவர்கள், கீழை. அ. கதிர்வேல் அவர்கள்
போன்றோரோடு பழகும் வாய்ப்பு. எண்ணற்ற எழுத்தாளர்களோடு
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு. பத்திரிக்கைகளுக்கு எழுதும் நுணுக்கங்களை
அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குழுமத்தின் சார்பாக நடத்தப்பட்ட சந்திப்புக்கள்
சிலவற்றில் கலந்து கொண்டு எழுத்தாள நண்பர்களோடு அளவளாவ முடிந்தது.
குழுமத்தில் இணைந்து முழு நேர பத்திரிக்கை எழுத்தாளராக
மாறிப்போனேன். குமுதம், விகடன், கல்கி, குங்குமம், பொதிகைச்சாரல், பாக்யா, இந்து தமிழ்திசை,
காமதேனு, போன்ற இதழ்களில் என் படைப்புகள் பிரசுரம் ஆகின. அதனால் வலைப்பூவை மறக்கும்
படி ஆகிவிட்டது. பத்திரிக்கையில் வரும் படைப்புக்களை மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் இரு வருடங்கள் முன்பு தேன்சிட்டு என்ற
மின்னிதழை துவக்கி தொடர்ந்து நடத்தி வருகின்றேன். அதன் காரணமாக ஏற்பட்ட பிணக்கொன்றில்
எழுத்தாளர்கள் குழுமத்தில் இருந்துவிலகி எட்டு மாதங்கள் ஆகிவிட்டது.
வலைப்பூ எழுதுகையில் நண்பர்களிடையே போட்டி இருக்கும்.
பொறாமை இருக்காது. அப்படியே இருப்பினும் அது பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது
இல்லை. தமிழ்மணம் திரட்டி இருக்கையில் அதில் யார் முதலிடம் பெறுவது என்றொரு போட்டி
நடக்கும். காப்பி பேஸ்ட் செய்தால் போட்டுக் கொடுப்பர், தமிழ்மணத்தில் இருந்து நீக்குவர்.
அதனால் உங்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. சில பக்கப் பார்வைகள் குறையும். ஆனால்
நம் எழுத்து அதை சீர் செய்துவிடும். தொடர்ந்து வாசகர்களை தக்கவைக்க முடியும்.
நான் பதிவெழுத ஆரம்பித்து தமிழ் மணத்தில் இணைக்கையில்
ஆயிரத்துக்கும் அதிகமான ரேங்கில் இருந்தேன். ஒரே வாரத்தில் அது நானூறுக்கு குறைந்தது.
அப்போதே நான் கவனிக்கப் பட்டிருக்கிறேன். அது புரியாமல் காப்பி- பேஸ்ட் பதிவுகள் சில
போட்டுக் கொண்டிருந்தேன். சோம்பேறித்தனம் அதிகமான வியுக்கள் வருவதுதான் காரணம். உடனே
சிலர் தமிழ் மணத்திற்கு மணம் பரப்பிவிட்டார்கள் போலிருக்கிறது என்னை நீக்கிவிட்டார்கள்.
நான் காப்பி பேஸ்ட் போட மாட்டேன் என்று தெரிவித்து பதினைந்து நாள் சும்மா இருந்தேன்.
அவர்கள் சேர்க்கவில்லை. அப்போது பெட்ரோல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. அதை தினமலர்
இணையத்திலிருந்து எடுத்து நான் பகிர அடுத்த
நிமிடமே தமிழ் மணத்தில் இருந்து ஒரு மெயில் வந்தது. காப்பி- பேஸ்ட் செய்ய மாட்டேன்
என்று சொல்லிவிட்டு இன்று இந்த மாதிரி காப்பி பேஸ்ட் செய்துள்ளீர்கள் இனி உங்கள் பதிவுகள்
தமிழ் மணத்தில் இடம்பெறாது என்று சொல்லிவிட்டார்கள்.
நான் பயந்து போகவில்லை! நீ சேர்க்காவிட்டால் என்ன
எனக்கு வாசகர்களை நானே திரட்டிக் கொள்கிறேன் என்று மற்ற வலைதளங்களுக்குச்சென்று அவர்கள்
பதிவுகளை வாசித்து என் தளப் பதிவுகளை அறிமுகம் செய்திருந்தேன். வாசகர்கள் வரத் தொடங்கினார்கள்.
காப்பி- பேஸ்ட் குறைத்துக் கொண்டு ஷெட்யூல் போட்டு தினம் ஒரு சப்ஜெக்டில் பதிவிட்டேன்.
நிறைய ஃபாலோவர்கள் வந்தார்கள். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் தமிழ் பத்திரிக்கைகளில்
எழுதவேண்டும் என்ற பத்திரிக்கை பாசம் வலைப்பூ எழுதுவதை குறைத்துவிட்டது.
எழுத்தாளர் குழுமத்தில்
இணைந்த்தும் முதலில் நன்றாகத்தான் இருந்தது. அப்புறம்தான் உள்குத்து வேலைகள் புரிய
ஆரம்பித்தது. எல்லோரையும் குறை சொல்ல முடியாது. சிலர் தம் படைப்புகள் பத்திரிக்கைகளில்
வருவதை விட மற்றவர்கள் படைப்பு வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறை செலுத்துகின்றனர்.
அவர்களின் மறைமுக கவனிப்பால் எனது படைப்புக்கள் பத்திரிக்கைகளில் வருவது குறைந்துவிட்டது. தேன்சிட்டு மின்னிதழுக்கும்
அக்குழு உறுப்பினர்களின் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதை வெளிப்படையாக விமர்சித்ததால்
என் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில் நான் குழுவிலிருந்து விலகி தனிப்பட்ட முறையில்
தேன்சிட்டு இதழை தொடர்ந்து நடத்தி வருகின்றேன். பத்திரிக்கைகளுக்கும் எழுதி வருகின்றேன்.
ஆனாலும் இப்போது பத்திரிக்கைகளின் பாணி மிகவும்
மாறியிருக்கிறது. அவர்களுக்கேற்ப பயணிக்க என்னால் முடியவில்லை. சிலருக்கே தொடர் வாய்ப்பு
கிடைக்கிறது. எழுதும் ஒரு படைப்பு பலரால் வாசிக்கப் பட்டு விமர்சிக்கப் படுகையிலேயே
எழுத்தாளன் மகிழ்கின்றான். பத்திரிக்கைகள் வாய்ப்பு தராமல் போகையில் அந்த படைப்பு யார்
பார்வைக்கும் போகாமல் இருந்துவிடுகின்றது. விமர்சனம் கிடைக்காமல் போய் விடுகின்றது.
இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில் நம் படைப்பு ஒரு சிலரையாவது சென்றடைய வேண்டுமெனில்
மீண்டும் வலைப்பூவில் எழுத வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துள்ளது. இதோ எழுத வந்துவிட்டேன். இனி வாரம் ஒரு முறையாவது
என் எழுத்துக்களோடு உங்களிடம் பேசுவேன். தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகின்றேன். நன்றி.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்ட்த்தில் தெரிவித்து ஊக்கப் படுத்துங்கள்!
நன்றி.
மீண்டும் வந்ததற்கும்...பத்திரிக்கை மோகம் விட்டு மீண்டு வந்ததற்கும் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி சார்! பத்திரிக்கையில் எழுதுவது முழுவதுமாய் விட மாட்டேன்! அங்கும் தொடர்வேன். இங்கும் தொடர்வேன்!
Deleteபத்திரிகையில் பிரபலமடைந்து அங்கு சென்று விட்டீர்கள் என்றே எண்ணி இருந்தேன். உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம்தான். வருத்தமாகவும் இருக்கிறது.
ReplyDeleteநன்றி சார்! வலைப்பூவிலும் எழுத ஆசைதான்! முன்பு போல நேரம் ஒதுக்க இயலவில்லை! இனி வாரம் ஒரு முறையேனும் எழுதவும் வாசிக்கவும் முயற்சிக்கிறேன்!
Deleteஇவ்வாறான ஒரு நல்ல நிலைக்கு வருவதற்கு நீங்கள் அப்போது இட்ட அடித்தளமே காரணம் என எண்ணுகிறேன். தொடருங்கள். வாழ்த்துகள். எதிர்மறையாக வருவோரை கண்டுகொள்ளாதீர்கள்.
ReplyDeleteஉண்மைதான் சார்! வலைப்பூவில் எழுதிய பயிற்சியும் என் இடைவிடா முயற்சியும் பத்திரிக்கைகளில் படைப்புகள் வெளிவர உதவின. தங்கள் ஆலோசனையை ஏற்கிறேன்! நன்றிசார்!
Deleteஉங்கள் தளம் திறக்க நெடுநேரம் எடுக்கிறது.
ReplyDelete