பத்திரிக்கை பாசம்! பகுதி 1


பத்திரிக்கை பாசம்! 
 (சற்றே பெரிய பதிவு பொறுமையா வாசியுங்க)

சிறுவயது முதலே வீட்டில் தினமணி பேப்பர் வாங்குவார் அப்பா. வெள்ளிக் கிழமையில் குமுதம், விகடனும் வரும். அது தவிர ஞானபூமி என்ற மாதப்பத்திரிக்கையும் வரும். நடுத்தர வர்க்க குடும்பம் இதற்குமேல் பத்திரிக்கைகளுக்கு செலவு செய்வது இயலாத விஷயம். ஆனாலும் அவ்வப்போது வேறு சில புத்தகங்களும் வாங்குவார். தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக் படக்கதை விரும்பி வாசிப்பேன். நான் என் மாமா வீட்டில் இருந்தமையால் சொந்த ஊர் நத்தம் வருகையில் மொத்தமாக பேப்பர்களை எடுத்து தேதி வாரியாக அடுக்கி படித்து முடிப்பேன். அதே போல தினமணிக் கதிரில் சூப்பர்தும்பி என்றொரு படக்கதை அதையும் விரும்பி வாசிப்பேன். குமுதத்தில் ஆறுவித்தியாசங்கள் என்னை ஈர்க்கும்
.
  நான் ஏழாவது படிக்கையில் விடுமுறைக்கு  ஊருக்கு வந்தபோது பஞ்செட்டி குருக்கள் வீட்டுக்கு கூட்டிச்சென்ற அப்பா அங்கிருந்து பத்து பதினைந்து ராணிக் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க இரவல் வாங்கிக் கொடுத்தார். முகமூடிவீரன் மாயாவி, ஜேம்ஸ்பாண்ட், ப்ளாஷ் கார்டன், லேடி ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி, இன்னும் பல காமிக்ஸ் கதாநாயகர்களுடன் அந்த விடுமுறை கழிந்த்து. விடுமுறை முடிந்து மீண்டும் மாமாவீட்டுக்குச் செல்கையில் கோகுலம்  இதழை வாங்கித்தந்தார் அப்பா. அப்போது இரண்டு ரூபாய் விலை. 96 பக்கங்கள். அதில் ஆன்ந்தி வினு கூட்டணியில் வரும் பதினாறு பக்க சித்திரக்கதைகள் என் பேவரிட்டாக அமைந்தது. அப்புறம் மாதாமாதம் கோகுலம் வீட்டுக்கு வந்தது.

   அப்புறம் விடுமுறைக்கு ஊருக்கு வந்து செல்லும்போது கிடைக்கும் பாக்கெட் மணியில் நானாகவே பூந்தளிர் , பாலமித்ரா, ரத்னபாலா, இன்னும் சில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கத்துவங்கினேன். பொன்னேரியில் லஷ்மி கேப் என்ற ஓட்டல் இருக்கும். அந்த ஓட்டல் வாசலில் ஒரு பங்க் கடையில் பாய் ஒருவர் கடை போட்டிருப்பார். அங்கேதான் இத்தனை புத்தகங்களும் வாங்கி படித்திருக்கிறேன்.  பெரும்பேட்டில் இருந்து பஞ்செட்டி வர ஒரே பேருந்து 58.நெ பேருந்து. அது பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் 5 நிமிடம் நிற்கும். பெரும்பேட்டில் இருந்து பேருந்தில் பயணிக்கு நான் பொன்னேரியில் பஸ் நிற்கும் 5நிமிட இடைவெளியில் பேருந்திலிருந்து இறங்கி சாலையைக் கடந்து பாய் கடையில் இரண்டே நிமிட்த்தில் ஏதாவதொரு சிறுவர் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்து பேருந்தில் ஏறிவிடுவேன். திரும்பும் போதும் அதே மாதிரிதான். சில சமயம் பஞ்செட்டியில் சுந்தரம் பஸ்ஸில் பெரும்பேடு பயணிக்கையில் அது பொன்னேரி பஜாரில் ராகவேந்திரா கபே எதிரில் நிற்கும் டிரைவர் கண்டக்டர் டிபன் சாப்பிடப் போவார்கள். அப்போது அந்த ஓட்டல் வாசலில் ஒரு பங்க் கடையில் பத்திரிக்கைகள் தொங்கும் அங்கே வாங்குவேன். விலை ஒருரூபாய், இரண்டுரூபாய்தான் இருக்கும். அந்த காசு எனக்கு கிடைப்பதே அபூர்வம். அதை இப்படி பத்திரிக்கை வாசிக்க பயன்படுத்துவேன்.

அப்புறம் பெரும்பேட்டில் இருந்து நத்தம் நிரந்தரமாக வந்து சேர்ந்தேன். இதனால் பொன்னேரி பயணம் தடைபட்டாலும் வீட்டில் தொடர்ந்து வரும் தினமணி குமுதம் வாசிப்பு தொடர்ந்தது.

89ல் தினமலருக்கு மாறினார் அப்பா. கன்னிகைப்பேரில் இருந்து தினமும் வீட்டிற்கு பேப்பர் போடுபவர் ஊரில் பேப்பர் வாங்குவது குறைந்துவிட்டதால் ஊருக்கு வராமல் பஞ்செட்டியில் ஒரு டைலர் கடையில் போட்டுவிடுவார். அது நாம் போய் எடுப்பதற்குள் கசங்கி கிழிந்து போய்விடும். அதனால் சிலமாதங்கள் பேப்பரை நிறுத்தியிருந்த அப்பா பொன்னேரி பாய் கடையில் ஞாயிறு, மட்டும் வெள்ளிக்கிழமையில் மட்டும் தினமலர் பேப்பர் எடுத்துவைக்கச்சொல்லி வாங்கி வருவார். இரண்டு பேப்பரும் ஒரே நாளில் வரும். பேப்பர் நமக்கெதற்கு சிறுவர் மலரில் மூழ்கிப் போவேன், பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண், மற்றும் வண்ணப் படக்கதைகள் ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கும். வாரமலர் அந்துமணி அப்போதே என்னைக் கவர்ந்துவிட்டார். அப்புறம் புதன் கிழமைகளில் தினமலர் கதைமலர் வெளியிட ஆரம்பித்ததும் அந்தக் கிழமை பேப்பரும் வாங்க ஆரம்பித்தோம். இப்படி ஒருசில ஆண்டுகள் கடந்தது. அப்புறம் தினமும் பேப்பர் எடுத்து வைக்கச்சொல்லி வாங்க ஆரம்பித்துவிட்டோம். காரனோடையில் விகடன், குமுதம், பொன்னேரியில் தினமலர், கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர் என்று வாங்க ஆரம்பித்தோம்.

  87ல் கோகுலம் வாசிக்க ஆரம்பித்தபோதே அதில் கோகுலம் சிறுவர் சங்கம் என்றொரு அமைப்பை உருவாக்கியிருந்தார் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, அதில் உறுப்பினர் ஆனால் அவர் கையெழுத்திட்ட ஓர் கார்டு உறுப்பினர் எண்ணோடு வரும். நாம் படைப்பு எழுதும்போது அந்த எண்ணை குறிப்பிட்டு அனுப்பினால் நம் பெயரோடு அந்த உறுப்பினர் எண் சேர்த்து படைப்பு வரும். உறுப்பினர்களுக்கு படைப்பு பிரசுரம் ஆவதில் முன்னுரிமை வழங்கப் பட்டது. நானும் அதில் உறுப்பினர் ஆகி கார்டு வாங்கி வைத்திருந்தேன். 90ல் அழ. வள்ளியப்பா காலமாகிவிடவே  அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. அப்போதே நான் எங்கள் ஊரில் நேருமாமா என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பிரதியை தனி ஆவர்த்தனமாக செய்து கொண்டிருந்தேன். அதில் கதை, பாட்டு என எதையோ கிறுக்கி வைத்திருப்பேன். அதை கோகுலத்திற்கு அனுப்ப எனக்கு தைரியம் இல்லை. ஒரு வழியாக நான் ப்ளஸ்டூ படிக்கையில் கோகுலத்திற்கு சில கதைகளை எழுதி அனுப்பி அதில் இரண்டு கதைகள் ஒரே இதழில் பிரசுரம் ஆனது. சன்மானமாக 50 ரூபாயும் வந்தது.

  அப்போது நான் எங்கள் ஊர் கோயிலில் என் நண்பர்களோடு சேர்ந்து புல் செதுக்கிக் கொண்டிருந்தேன். தபால் கார்ர் அண்ணாமலை வந்து  சுரேஷ் உனக்கு கோகுலம் புக் வந்திருக்கு! சந்தா கட்டினியா? என்ற போது இல்லையே? எப்படி வந்துச்சு? என்று ஆர்வமாக வாங்கி பக்கத்தை புரட்டினால் மூன்றாம் பக்கத்திலேயே என்னுடைய கதை வந்திருந்தது.

   எழுத்தாளர் ஆகிவிட்ட மகிழ்ச்சி என் முகத்தில் தாண்டவமாடியது. அண்ணாமலை பாராட்டிவிட்டு சென்றுவிட நண்பர்கள் குதூகலிக்க அந்தப் பொழுது இனிமையாக கழிந்தது. அடுத்த நாள் முதல் பல கதைகளை பாடல்களை எழுதி கோகுலத்திற்கு அனுப்பிக் கொண்டே இருந்தேன். தபால் தலை வைத்து அனுப்புவேன். மறுவாரம் அது திரும்பி வரும். இப்படி சிலமாதங்கள் கழிந்தது. அப்புறம் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். இதற்கிடையில் சின்னப்பூக்கள் என்ற பெயரிலும் இளந்தளிர் என்ற பெயரிலும் சிறுவர் கையெழுத்துப் பிரதிகளை நண்பர்களுடன் இணைந்து தயாரித்து வெளியிட்டு அது எங்கள் வட்டத்தில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தேன்சிட்டு என்ற கையெழுத்து பிரதியும் எழுதி வெளியிட ஆரம்பித்தேன். பத்திரிக்கைகளுக்கு அவ்வப்போது  வாசகர் கடிதம் கேள்வி பதில் போன்றவை அனுப்புவேன். ஒன்றிரண்டு பிரசுரம் ஆகியிருக்கிறது.
 
 அதே சமயத்தில் நான் பொன்னேரியில் கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்து சைக்கிளில் தினமும் சென்றுவர ஆரம்பித்தேன். அப்போது கிடைக்கும் பாக்கெட் மணியில் க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், மாலைமதி, கல்கண்டு, என சில பத்திரிக்கைகள் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். பொன்னேரி நூலகத்திலும் உறுப்பினராக சேர்ந்தேன். அப்போது கதிரவன் பேப்பர் வெளிவர ஆரம்பித்தது.96-97 என்று நினைக்கிறேன். அப்போது பொன்னேரியில் டைப்ரைட்டிங் சென்று கொண்டிருந்தேன். கதிரவன் பேப்பர் வாங்க ஆரம்பித்தேன். அதில் எங்கள் ஊர் பிரச்சனைகளை மனுநீதியில் எழுதி அனுப்புவேன். அவை வாராவாரம் பிரசுரம் ஆகும். அப்போது நான் நண்பர்கள் நலச்சங்கம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அதன் ஆண்டுவிழா 97ல் நடைபெற்றது. அதற்கு வந்த என் தந்தையின் நண்பர் பொன்னேரி கதிரவன் நிருபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

  அவர், தம்பி!, நல்லா எழுதறியே! பொன்னேரி நிருபரா சேர்ந்துடறியா? தந்தி, இல்லே தினகரன்லே சேர்த்துவிடறேன் என்று கேட்டார். என் தந்தை சம்மதிக்கவில்லை. அப்புறம் கொஞ்சம் பிரச்சனைகளால் எழுத்துப் பணியை துறந்து வாசிப்பை மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
 2003ல் நான் டியுசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்த மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக ஒரு பொங்கல் வாழ்த்து மடலை எழுதி மாணவர்களுக்கு வழங்கினேன். அதை படித்து பள்ளிகளில் தன் ஆசிரியர்கள் நண்பர்களிடம் காட்டி என்னை அறிமுகம் செய்தனர் மாணவர்கள். அவர்களின் பாராட்டுதல் என்னை மீண்டும் எழுத வைத்தது. மீண்டும் கையெழுத்துப் பிரதிகள் ஒன்றிரண்டு எழுதினேன். 

பத்திரிக்கைகளுக்கு சில படைப்புகள் அனுப்பினேன். அப்போது குமுதம் பக்தியில் எங்கள் ஊர் கோயில் பற்றிய கட்டுரை பிரசுரம் ஆனது. தினமணியிலும் ஒரு கட்டுரை பிரசுரம் ஆனது. ஆனால் தொடர்ந்து எழுதவில்லை. அப்படியே 2011ல்  தளிர் என்னும் வலைப்பூவை தொடங்கினேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று எதுவும் தெரியாமலேயே எதை எதையோ எழுதி கற்று நண்பர்கள் பாடம் கற்றுக்கொடுக்க அதில் ஆயிரத்து ஐநூறு பதிவுகளுக்கு மேல் எழுதினேன். அப்போதே தமிழ்த்தோட்டம் தளத்தில் ஐநூறு ஹைக்கூக்கள் வரை எழுதினேன்.

அப்புறம் என்ன ஆச்சு! அடுத்த பதிவில் சொல்றேன்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. மிகச் சிறப்பாக எழுதுகிறீர்களே...நிச்சயமாக பின்புலம் பலமானதாக இருக்கும் என நான் ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன்.தொடர் உறுதி செய்கிறது..வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. பின்புலம் எல்லாம் ஏதுமில்லை சார்! தானாகவே வளர்த்துக்கொண்டதுதான். பயிற்சியும் முயற்சியுமே காரணம்!

      Delete
  2. நீங்கள் எழுதும் ஹைக்கூ,  சிறு ஜோக்ஸ் பார்த்தே பிரமித்திருக்கிறேன்.  நல்ல திறமை உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்! திறமையை வளர்த்துக் கொண்டேன். ஆனால் பத்திரிக்கைகளில் இப்போது திறமையை விட சிபாரிசுக்கே அதிக மதிப்பு இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2