ஆலமரத்தின் அகம்பாவம்! பாப்பாமலர்.


ஆலமரத்தின் அகம்பாவம்!  பாப்பாமலர்.


தாழையூத்து என்ற கிராமத்தின் எல்லையில் ஏரிக்கரையோரமாக ஒரு பெரிய ஆலமரம் தன் பரந்து விரிந்த கிளைகளுடனும் விழுதுகளுடனும் செழித்து வளர்ந்து இருந்தது. அந்த பரந்த பெரிய ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து இளைப்பாறிச்செல்லும் சில பறவைகள் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. ஆலமரத்தின் அடியில் அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்கள் களைப்பாறிச் செல்வார்கள்.
அந்த ஊரிலேயே பெரிய மரம் அந்த ஆலமரம்தான். அதன் வயதும் அதிகம். பரந்துவிரிந்த நின்ற கிளைகளும் விழுதுகளும் அதன் பெருமையை பறைச்சாற்றிக்கொண்டிருந்தன. ஊரில் உள்ளோரும் அக்கம் பக்கத்து கிராமத்தினரும் அந்த ஆலமரத்தின் பெருமையை பேசுவர். தாழையூத்து கிராம மக்கள் “எங்க ஊரில்தான் இவ்வளோ பெரிய ஆலமரம் இருக்கு! ரொம்பவும் பழமையானது! பெரிய மரம். நிறைய பேருக்கு நிழலா இருக்குது. இந்த ஆலமரம் இருப்பது எங்க ஊருக்கு பெரிய கவுரவமா இருக்கு!” என்று மற்றவர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வர்.

 இதையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆலமரத்திற்கு கொஞ்சம் ஆணவம் பிடித்துவிட்டது. நாம் இல்லையேல் இந்த ஊர் இல்லை! ஊர்மக்கள் இல்லை. என்னால்தான் இந்த ஊருக்கே பெருமை என்ற எண்ணம் அதன் மனதிலே ஊறிவிட்டது.

அகம்பாவம் கொண்ட மனதிலே தீய எண்ணங்கள் குடிபுகுந்தன. தன் மீது வந்தமரும் பறவைகளிடம் சில நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்தது.  "ஏ! பறவைகளே! என் மீது அமர்ந்து நீங்கள் சத்தமிடக் கூடாது! இங்கே அமர்ந்து இளைப்பாறும் நீங்கள் வேறு எந்த மரத்திலும் இனி அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால் என்மீது அமரக் கூடாது. வேறு ஊர்களுக்கு செல்லும் போது என்னை வாழ்த்தி புகழ்ந்து பேசவேண்டும். உங்களுக்கு கிடைக்கும் கவுரவம் எல்லாம் என் மீது நீங்கள் குடியிருப்பதால்தான் எனவே அந்த கவுரவத்தை அடையும் போதெல்லாம் என்னை வாழ்த்த வேண்டும்!" என்று நிபந்தனைகளை விதித்தது.

பறவைகள் எல்லாம் இந்த நிபந்தனைகளை கேட்டு விதிர்விதித்தன. ”இதென்ன சுத்த பைத்தியகாரத்தனமாக இருக்கிறதே! பறவைகளாகிய நாங்கள் பறக்காமல் இருக்க முடியுமா? அப்படி பறந்து போகையில் இளைப்பாற வேறு எங்காவது அமராமல் இருக்க முடியுமா? ”என்றெல்லாம் கேட்டன.  “அதெல்லாம் முடியாது. நீங்கள் என்னிடத்தில் குடியிருக்க வேண்டும் தங்க வேண்டுமானால் என் நிபந்தனைகளை பின்பற்றித்தான் ஆகவேண்டும். அப்படி பின்பற்றுவதானால் இங்கே தங்குங்கள் இல்லையேல் சென்றுவிடுங்கள் மீறித் தங்கினால் விரட்டிவிடுவேன்” என்றது ஆலமரம் அகம்பாவத்துடன்.

 ஆலமரத்தில் இருக்கும் வசதி வேறு எங்கும் கிடைக்காது என்பதாலும் நூற்றுக்கணக்கான சக பறவைகள் அங்கே தங்குவதாலும் அதுவே பாதுகாப்பான இடம் என்று பறவைகள் அமைதி காத்து ஆலமரத்தின் நிபந்தனையை ஏற்று அங்கே தங்கியிருந்தன.
 இதனால் ஆலமரத்திற்கு மேலும் கர்வம் துளிர்விட்டது. " ஓ பறவைகளே! இத்தனை காலமும் நான் தான் உங்களை காத்து வருகிறேன்! என்னோடு இணைந்து இருப்பதால்தான் உங்களுக்கு பெருமையும் வேண்டிய உணவும் கிடைக்கின்றன. இதை நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இங்கே தங்கும் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு இரைதேடவும் தேடிய இரையை பகிர்ந்துண்பதோ கூடாது. இரை தேடியபிறகு என்னிடம் காட்டிவிட்டே உண்ணவேண்டும் . எனக்கு பிடிக்காத இரை எதையும் இங்கே கொண்டுவரக்கூடாது!" என்று கட்டளையிட்டது.

 ஆலமரத்தின் கட்டுப்பாடுகள் பறவைகளுக்கு கசப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறுவழியின்றி சகித்து கொண்டன. சில பறவைகள் ஆலமரத்தைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டன. பறவைகள் கூட்டம் ஆலமரத்தில் இருந்தும் அமைதியாக இருப்பதை ஊரே ஆச்சரியத்துடன் பார்க்கத் துவங்கியது.

ஒரு நாள்  சில அதிகாரிகள்  அங்கே கூடிப் பேசினர். இவ்வழியே அரசாங்கத்தின் எட்டுவழிச்சாலை வரப்போகிறது. இம்மரத்தை வெட்டிச்சாய்க்க வேண்டும். இடையூறாக இருக்கிறது என்று அவர்கள் பேசிக்கொண்டதை கேட்ட ஆலமரம் நடுங்கிப் போனது.

 இத்தனை நாள் ஆட்டம் இன்று முடிவுக்குவந்துவிட்டதே என்று நம் அகம்பாவம் நம்மையே கொன்று போட்டுவிட்டதே என்று அது கண்ணீர்விட்டது. ஆலமரத்தின் வேதனையைக் கண்டு பறவைகளும் வருந்தின. எத்தனை கஷ்டப்படுத்தி இருந்தாலும் தங்க இடம் கொடுத்த மரம் அல்லவா? கட்டுப்பாட்டை மீறி பறவைகளும் ஓலமிட்டன.
மரத்தின் கீழே கூடியிருந்த அதிகாரிகள் திடீரென பறவைகளின் ஓலத்தை கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர். பறவைகளின் ஆர்வலராக இருந்த ஓர் அதிகாரி சொன்னார்."அடடே! இந்த ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன போலும்.  மேலும் இந்த மரம் அனைவருக்கும் நிழலாக இருக்கின்றது. மாற்று வழி ஏதேனும் இருந்தால் யோசிக்கலாம். இந்த மரத்தை வெட்டுவதை தவிர்க்கலாம்!" என்றார்.

இப்போது பறவைகள் ஆனந்த கூக்குரலிட்டன. ஆலமரமும் தன் செயலுக்கு வெட்கித் தலைகுனிந்தது. பறவைகளால்தான் தன் உயிர் காப்பாற்றப்பட்டது. இல்லையேல் வெட்டி வீழ்த்தியிருப்பார்கள் என்று உணர்ந்தது. பறவைகளின் இயல்பை கட்டுப்படுத்தி தடை விதித்தது தவறு என்பதையும் உணர்ந்தது. தன் அகம்பாவத்தை விட்டொழித்து, பறவைகளிடம் மன்னிப்பு கோரியது.  "ஓ பறவைகளே! உங்களால்தான் நான் இன்று உயிர்பிழைத்தேன். என் தவறை நான் உணர்ந்தேன். உங்களைப்போன்ற நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு நானே காவலன் என்று அகம்பாவம் கொண்டிருந்தேன். ஆனால் இன்று நூற்றுக்கணக்கான பறவைகளான நீங்கள்தான் என்னைக் காத்தீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள்! இனி நீங்கள் சுதந்தரமாய் செயல்படுங்கள்!" என்று கண்ணீர் விட்டுச் சொல்லியது.
திருந்திய மரத்தின் கண்ணீரை பறவைகள் ஏற்றுக்கொண்டன. ஆனந்த கூக்குரலிட்டு மரத்தை ஆற்றுப்படுத்தின.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. 'அகம்பாவம் அழிவு தரும்' எனும் கருத்தை, விளக்கியது கதை!

    நண்பரே! பத்தி பிரித்து போடலாமே!
    உரையாடல் குறி("") போடவில்லையே!

    கதை முடிந்து ஒரு வரி விட்டு,
    "தங்கள் கருத்துக்கு நன்றி"-யை
    போடலாமே?

    ReplyDelete
  2. அருமையான கருத்துள்ள பகிர்வு...

    ReplyDelete
  3. பதிவுகளும் தொடரட்டும்...

    ReplyDelete
  4. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  5. அறிவூட்டும் கதை.பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2