எக்ஸ்கியுஸ்மீ! கொஞ்சம் பாராட்டுங்கள் ப்ளீஸ்!
பாராட்டுங்கள் பாராட்டப் பெறுவீர்கள்!
இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காத மனிதர்கள் யாராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனம் நுட்பமானது. தினம் தினம் எத்தனையோ அனுபவங்களை அது சந்திக்கிறது. மற்றவர்கள் பாராட்டுக்கு ஏங்கும் அது வசை கேட்கும் போது சுருங்கி விடுகிறது. எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தில் இருக்க மனிதன் மட்டுமே பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் ஏங்குகிறான். ஆறறிவு படைத்த மனிதனின் ஆசையே பாராட்டு.
ஒவ்வொரு சின்ன செயலையும் ஒருவித எதிர்பார்ப்புடனே செய்யும் மனிதன் அதற்கான விளைவுகளை எதிர்நோக்கியிருக்கிறான். அந்த விளைவு நேர்மறையாக இருப்பின் மிகவும் மகிழ்கிறான். எதிர்மறையாக இருப்பின் மனம் நோகிறான். ஆனால் பாராட்டோ எதிர்ப்போ அவன் விரும்புகிறான்.
தன்னுடைய ஒவ்வொரு செயலும் சமூகத்தால் கவனிக்கப்படுகிறது என்பதே அவனுக்கு ஒரு ஆர்வத்தை தருகிறது. ஒரு சிறுவன் அல்லது சிறுமி பள்ளியில் தேர்வில் முதலாவதாக வந்தால் பாராட்ட படுகிறார்கள்.அதே சமயம் தோல்வி அடையும்போது வசைபாடப்படுகிறார்கள்.
வாழ்க்கை என்பது வெற்றிகளை மட்டுமே கொண்டிருக்க கூடியது அல்ல! வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறித்தான் வரும். இதற்காக ஒருவரை நொந்து கொள்வதால் என்ன பயன்? வசைமொழிகளாக இல்லாமல் இசைப் பாடி பாருங்கள் ஒரு இனிய மாற்றம் உங்களுக்குள்ளும் அடுத்தவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருக்கும்.
ஒரு சிறிய பாராட்டுச் சொல்! அது ஒருவனை உற்சாகப்படுத்தி சிறப்பாக உழைக்கவைக்கும். அவனது தன்னம்பிக்கையை அதிகரிக்கவைக்கும். அவனது பொறுப்புணர்ச்சியை கூட்ட வைக்கும். இதற்கெல்லாம் மேலாக அவனை இந்த உலகில் எதையாவது சாதிக்க வைக்கும்.
பாராட்டுவதால் உங்கள் பணம் வங்கியில் குறைந்துவிடப்போகிறதா? உங்கள் நேரம் களவாடப்படுகிறதா? இல்லை உங்கள் சொத்து குறைந்து விடப்போகிறதா? அப்படி ஒன்றும் இல்லைதானே! அப்படியென்றால் நல்லது செய்யும் ஒருவனை பாராட்டுவதில் என்ன தவறு நடந்து விடப் போகிறது?
எந்த செயல்களிலும் குற்றம் கண்டுபிடித்து குறைசொல்லிக் கொண்டிருந்தால் அந்த பணியாளர் உங்கள் மீது வருத்தமும் வெறுப்புமே அடைவார். நாம் என்ன தான் செய்தாலும் முதலாளி குறைதானே சொல்ல போகிறார்? எதற்கு ஒழுங்காக செய்ய வேண்டும்? எப்படி இருந்தாலும் திட்டு கிடைக்க போகிறது! அந்த திட்டை வேலை செய்யாமலே வாங்கி கொண்டால் என்ன என்றுதான் அவர் எண்ணுவார். வேலையில் கவனம் செலுத்தமாட்டார்.
அதே சமயம், அவரது வேலையில் உள்ள ஒரு நல்லதை கண்டு பிடித்து பாராட்டிவிட்டு இந்த வேலையை இன்னும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள். அந்த மனிதர் மிகவும் மகிழ்ந்து போவார். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக அந்த வேலையை செய்திருப்பார்.
இது என் அனுபவத்தில் அறிந்த ஒன்று. அப்போது நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு டியுசன் எடுத்துக் கொண்டு இருந்தேன். ஒரு மாணவன் புதிதாக ஒன்பதாம் வகுப்பில் வந்து சேர்ந்தான். சராசரி மாணவன் தான். ஆனால் கணக்கு மற்றும் ஆங்கிலத்தில் சராசரிக்கும் குறைவாக இருந்தான். அவனது பெற்றோர் படிக்கவே மாட்டேங்கிறான். நீங்க தான் எப்படியாவது புத்தி சொல்லி படிக்க வெச்சு பாஸ் செய்ய வைக்கணும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
ஓரிரு நாள் சென்றது. சில ஆங்கிலப்பாடல்கள் நடத்தி அந்த பாடல்களை டெஸ்ட் வைத்து எழுதச் சொன்னேன். புதிய மாணவனும் எழுதி இருந்தான். எல்லோரும் இரண்டு பாரா எழுதி இருந்தால் இவன் ஒரே பாரா எழுதி இருந்தான். அதிலும் பல தவறுகள்.
தவறுகளை சுழித்துக் காட்டி, நல்லா எழுதி இருக்கே! இவ்வளவுதான் ஆங்கிலம் இதைக் கண்டு பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு முறை முயற்சித்தால் இந்த பிழைகளும் குறைந்து விடும் என்று ஊக்கம் கொடுத்தேன். அடுத்த அடுத்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று 10 வகுப்பிலும் தேர்ச்சி பெற்றான் அந்த மாணவன்.
இதையே நான் என்னடா எழுதி இருக்கே? ஒரே தப்பும் தவறுமா? நீயெல்லாம் தேற மாட்டே என்றால் என்ன ஆகியிருக்கும். அவனுள் தன்னம்பிக்கை அன்றே அழிந்து போயிருக்கும் நாம் வேஸ்ட்! இனி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்று படிக்காமலே இருந்து விடுவான்.
இதுதான் வித்தியாசம்! இன்னொன்று நான் ஹைக்கூ எழுத ஆரம்பித்த போது நிகழ்ந்த நிகழ்வு. தமிழ் தோட்டம் தளத்தில் எனது படைப்புகளை பகிர்ந்து வந்தேன். அப்போது ஹைக்கூ என்று சில கவிதைகளை தளத்தில் பகிர்ந்தேன். எனக்கு கவிதையின் இலக்கணம் தெரியாது. நான் தமிழிலக்கியம், இலக்கணம் படித்தவன் அல்ல, எனக்கு தோன்றியதை எழுதினேன் சிறு கவிதையாக இருந்தால் ஹைக்கூ என்று தலைப்பிட்டேன்.
தளத்தில் கவிதையை வாசித்த திரு ம. ரமேஷ் ஹைக்கூ என்பது இப்படி இருக்க வேண்டும் மூன்று அடிகளில் அமைய வேண்டும் தலைப்பு இருக்க கூடாது என்று இன்னும் சில அடிப்படைகளை கூறியிருந்தார். எனக்கு அவர் கூறிய முறை பிடித்து இருந்தது. இறுதியாக அவர். இதுதான் ஹைக்கூ இலக்கணம். ஆனால் படைப்பாளியின் சுதந்திரத்தில் நான் தலையிட விரும்ப வில்லை! நான் கூறியது பிடித்திருந்தால் ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள் இல்லை நீங்கள் எழுதுவதுதான் சரி என்றால் விட்டுவிடுங்கள் ஆனால் அது ஹைக்கூ ஆகாது என்று சொல்லியிருந்தார். அவர் கவிஞரும் கூட சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்து சில நாட்கள் கழித்து சில ஹைக்கூக்களை எழுதி இது ஹைக்கூவா என்று ரமேஷ்தான் கூற வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
அவர் அந்த ஹைக்கூக்களை படித்து பாராட்டி சிறப்பாக எழுதுகிறீர்கள்! தொடருங்கள் திருத்தம் தேவைப்படின் திருத்துகிறேன் என்று உற்சாகம் தந்தார். அவரது உற்சாகத்தால் இன்று நானூறு ஹைக்கூக்கள் அந்த தளத்தில் பதிந்து உள்ளேன். இத்தனைக்கும் நானும் அவரும் சந்தித்தது கிடையாது. போனிலும் ஓரிருமுறை பேசிக்கொண்டதோடு சரி! இன்று அவரும் நானும் நண்பர்கள் ஆகிவிட்டோம்.
ஒரு சிறிய பாராட்டு ஒன்றும் தெரியாதவனை கவிஞன் ஆக்கியுள்ளதை பார்க்கும் போது பாராட்டுவதில் என்ன தப்பு இருக்க முடியும்? எனவே எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன்! ப்ளீஸ்!
உங்கள் பாராட்டு உங்களுக்கும் பாராட்டை பெற்றுத்தரும்! மொய்க்கு மொய் என்று பதிவுலகில் கூறப்படும் வார்த்தை போல பாராட்டினால் நீங்களும் பாராட்டப் படுவீர்கள்.ஒவ்வொரு செயலுக்கும் ஒர் எதிர்வினை உண்டு என்று படித்திருப்பீர்கள் நீங்கள் நல்லது செய்தால் நன்மை கிடைக்கும் தீமை செய்தால் தீமை கிடைக்கும். பாண்டவர்களுக்கு உலகில் எல்லோரும்நல்லவர்களாக தெரிந்தார்கள்! அதே சமயம் கௌரவர்களுக்கு எல்லோரும் கெட்டவர்களாக தெரிந்தார்கள். எதுவுமே நாம் அணுகும் விசயத்தில் தான் இருக்கிறது.
எனவே மனம் திறந்து பாராட்டுங்கள் நன்மையை காணும் போது! அது பாராட்டப் படுபவர்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் மன மகிழ்ச்சியை தரும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!
மீள்பதிவு.
அது பாராட்டப் படுபவர்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் மன மகிழ்ச்சியை தரும்!//
ReplyDeleteஇது யாருக்கு தெரிகிறது? நான் மற்றவர்களை பாராட்டினால் தான் என்னையும் மற்றவர்கள் பாராட்டுவார்கள் என்று தெரிந்தவர்கள் அனைவரையும் பாராட்டுவார்கள் பாராட்டுவார்கள்.
→ மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...? ←
ReplyDelete→ பாராட்டுங்க...! பாராட்டப்படுவீங்க...! ←
ReplyDeleteபிறரை பாராட்டுகின்ற போது எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது பாராட்டு என்பது ஒரு ஊக்க பானம் ஆகவே நான் கருதுகின்றேன்
ReplyDeleteபாராட்டு மகத்தான டானிக்.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் போல தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருப்பினும் பாராட்ட வேண்டும். பாராட்டு மகிழ்ச்சி தரும். சில நேரங்களில் கடமைக்கு பாராட்டுவார்கள்.பதவியின் காரணமாக பாராட்டுவார்கள். பயந்து பாராட்டுவார்கள். சில சமயங்களில் உண்மையான பாராட்டும் கிடைக்கும். எடு உண்மையாக இருக்கும் என்று பெறுபருக்கு தெரியும்.
ReplyDelete