கரும்புப்பழம்! பாப்பாமலர்


கரும்புப் பழம்!

பொதிகை மலை காட்டுக்குள் நரிக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அந்த கூட்டத்தின் தலைவனாக ஒரு முட்டாள் நரி இருந்தது. அந்த நரி அவ்வப்போது காட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கும் வயல்வெளிகளுக்கும் சென்று மேய்ந்து வரும். அப்படி ஒரு சமயம் மேய்ந்து வருகையில் அது ஒரு கரும்புத்தோட்டத்தைக் கண்டது.

    அது கரும்பு அறுவடைக் காலம் ஆதலால் கரும்பு அறுவடை செய்து கொண்டிருந்தனர். கரும்பை வெட்டி கட்டுக்களாக கட்டி அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர் விவசாயிகள். அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து நின்று வேடிக்கைப்பார்த்த நரி அவர்கள் சென்றதும் ஓசைப்படாமல் சென்று ஒரு கரும்புக் கிடையை கடித்தது. கடினமாக இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு தோலை கடித்து துப்பி கரும்புத்தண்டை கடிக்க ஆரம்பித்தது. இனிப்பின் சுவை அதற்கு மிகவும் பிடித்துப்போனது.

அது தன்னை மறந்து கரும்பை சுவைத்துக்கொண்டிருக்கும் வேளையில் விவசாயிகள் வந்துவிட்டனர். அவர்கள் நரியை நையப்புடைக்க ஆரம்பித்துவிட விட்டால் போதும் என்று காட்டுக்குள் ஓடியது நரி.

காட்டுக்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்து தன் வலிகள் குறைந்தபிறகு மீண்டும் மேய்ச்சலுக்குத் தயார் ஆனது நரி. அது இனி உஷாராக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டது. ஆனால் கரும்பின் சுவை அதை வயலுக்கு அழைத்துச்சென்றது. ஆனால் ஐயோ பாவம்! அங்கிருந்த கரும்பு வயல்கள் அறுவடை ஆகிவிட்டிருந்தன.

  கரும்பை சுவைக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பவும் இன்னும் கொஞ்ச தூரம் முன்னேறிச்சென்றது. அங்கே ஒரு கரும்புக்காடு தென்படவே ஆசையோடு சென்றது. அந்த கரும்புக் காட்டில் நுழையும்போது தேன்கூடு ஒன்றை நரி கண்டது.
நரி அதற்குமுன் தேன் கூட்டை கண்டதில்லை. எனவே கரும்புத்தண்டில் உள்ள தேன்கூட்டை அது கரும்பின் பழம் என்று நினைத்துக்கொண்டது. கரும்புத்தண்டே இனிப்பாக இருக்கிறதே! இந்த கரும்பு பழம் அதைவிட இனிப்பாக இருக்கும் என்று முடிவு செய்து அந்த கூட்டின் மீது வாய் வைத்தது.

மறுகணம்! கூட்டில் இருந்த தேனிக்கள் நரியின் வாயெங்கும் கொட்டி வைக்க விட்டால் போதும் என்று ஓடிப்போனது.
நாக்கும் வாயும் வீங்கிப்போன நரி சிலநாட்கள் சும்மா இருந்தது. ஆனால் அதன் கரும்பு ஆசை மீண்டும் வயல்வெளிக்கு அழைத்துச்சென்றது. இப்போது அது ஒரு உத்தியை கண்டுபிடித்து இருந்தது. கையில் ஒரு குச்சியை எடுத்துச்சென்றது.

  பழத்தை சுவைக்கும் போது அதன் மீது எறும்புகள் உண்ணிகள் ஒட்டிக்கொண்டு நம்மை சுவைக்கவிடாமல் செய்கின்றது. இந்த குச்சியைக்கொண்டு அவற்றை விரட்டிவிட்டு பழத்தை உண்பேன் என்று அது சொல்லிக்கொண்டது.

     இப்போது நரி சென்று பார்த்தபோது அங்கே தேன்கூடு கலைக்கப்பட்டு இருந்தது. ஐயகோ! யாரோ! நான் பார்த்து வைத்த கரும்புப் பழத்தை பறித்துச்சென்றுவிட்டார்களே! என்று அழுது புலம்பியபடியே காட்டுக்குச் சென்றது.

நரி அழுதபடி வருவதை பார்த்த கரடி ஒன்று என்ன நரியாரே ஏன் அழுதபடி வருகிறீர்கள் என்று கேட்டது. நரி நடந்த அனைத்தையும் சொன்னதும் கரடி “கலகல”வென சிரித்தது. நரிக்கு கோபம் வந்து விட்டது.

“நான் அழுவது உமக்கு சிரிப்பாக இருக்கிறதா?” என்று கேட்டது.
“பின்னே உம்மோடு சேர்ந்து அழச்சொல்கிறீர்களா? கரும்புப் பழம் என்று ஒன்று இல்லவே இல்லை! நீர் பார்த்தது தேன் கூடாக இருக்கும். தேனிக்கள் உம்மை கொட்டி இருக்கிறது. இரண்டாவது முறை நல்லவேளையாக கூடு கலைத்து சென்றுவிட்டிருக்கிறது. இல்லாவிட்டால் நீர் குச்சி கொண்டு கலைத்திருந்தால் தேனிக்கள் உம்மை கொட்டித் தீர்த்திருக்கும்” என்றது கரடி.

    ”அப்படியா? அதை  “தேன்கூடு” என்றா சொல்கிறீர்கள்? ஆயினும் அதன் சுவை என்னை இழுக்கிறதே?”
     ”எனக்கும் கூட தேன் மிகவும் பிடிக்
கும்தான்! ஆனால் அதை உண்ணுவது மிகவும் கஷ்டம்.” எனக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்து தேன் கிடைத்தால் உங்களுக்கும் தருகிறேன்! அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள் என்றது கரடி.

 சிலநாட்கள் சென்றன. கரும்பின் சுவை நரியை மீண்டும்வயல்வெளிக்கு அழைத்தது. இம்முறை அது துணைக்கு கரடியை அழைத்துக்கொண்டு வயலுக்கு வந்தது. அதனுடைய கண்களில் தேன்கூடு தென்படவில்லை. மாறாக கூட்டமாக கம்பளிப்புழுக்கள் கரும்பின் இலைகளில் அப்பியிருந்ததை பார்த்தது.

   “கரடியாரே! இதோ பாருங்கள்! கரும்புப்பழத்தை இப்பூச்சிகள் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை! இவற்றை விரட்டிவிட்டு நாம் சுவைப்போம் வாருங்கள் என்றுவேகமாக ஓடியது.

ஐயா நரியாரே! வேண்டாம்! அவை… கம்பளி…!

அதற்குள் நரி கம்பளிப்புழுக்களை கையால் அகற்ற அவை நரியின் உடலெங்கும் தீண்டின.
உடலெங்கும் அரிப்பும் நமைச்சலும் எடுக்க சொறிந்து சொறிந்துகொண்டு ஐயோ! எரிகிறதே! எரிகிறதே என்று அலறியவாரே ஓடியது நரி.

அன்புக்குழந்தைகளே! பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது கூடாது. நமக்குத்தெரியாத பொருளை எடுக்கக்கூடாது. ஆபத்து எவ்வடிவிலும் நம்மை சூழலாம். எனவே கவனமாக இருக்கவேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?