தினமணி கவிதை மணியில் வெளியான கவிதைகள்!
தினமணி கவிதைமணி இணையதள பக்கத்தில் சென்ற வாரமும் இந்த வாரமும் வெளியான எனது இரண்டு கவிதைகள். படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே! நன்றி!
தனிமையோடு பேசுங்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 12th February 2018 04:32 PM | அ+அ அ- |
யாருமற்ற ஒர்ப் பொழுதின் தனிமைதனில் தனித்திருக்கையில் மெல்ல காதருகில் கேட்கும் குரல்! ஆம்! தனிமை பேசுகின்றது! நலம் விசாரிப்புக்குப் பின் தனிமையிடம் கேட்டேன்! சுகம் தானே? சுகத்திற்கென்ன குறைச்சல்! பின் ஏன் இந்த அலுப்பு? தனித்திருக்க விடமாட்டேன்கிறாயே? மோனம்தான் என் தவம்! மோனத்தை கலைத்து என் தவத்தை தின்று தீர்க்கிறாய்? ஒரு நொடியும் உன்னை பிரிவதில்லை கைபேசி! கணிணிமுன் காலம் கடத்துகின்றாய்? பெண்டாட்டி பிள்ளைகளை பிரிந்தாலும் உன் காதுகளைவிட்டு பிரியவில்லை செவிவாங்கிகள்! புத்தகங்களை தொலைத்துவிட்டாய்! நட்புக்களை பிரிந்துவிட்டாய்! தனிமைதனை உதறிவிட்டாய்! பின் எப்படி நான் சுகமாயிருக்க முடியும்! இன்று போல் என்றாவது ஒருநாளாவது என்னோடு பேசு! என் இதயத்தை திற! உன்னோடு பேச ஆயிரம் கதைகள் உண்டு என்னிடம்! உன் கவசங்களை உதறி எறி! தனிமை நேசிக்கையில் பேசிக்கொண்டிருப்போம்! இனிமையாக கடந்து போகும் பொழுது!
அந்நாளே திருநாள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 17th February 2018 05:19 PM | அ+அ அ- |பொழுது விடியும் ஒவ்வொரு நாளுமே பொன்னாள் தான் அன்றைய பொழுதுக்கு! உழைப்பின் பலன் உறுதியாய் பெற்றால் உழைத்தவனுக்கு அந்நாளே திருநாள்! வாடிய பயிர்கள் ஓடிய நீரால் மலர்ச்சிபெற்றால் உழவனுக்கு அந்நாளே திருநாள்! மூடிய ஆலைகள் மீண்டும் இயங்கினால் தொழிலாளிக்கு அந்நாளே திருநாள்! பசித்திருந்த ஒருவனுக்கு பல்சுவை விருந்து கிட்டுமேயானால் அந்நாளே திருநாள்! வறண்ட நதிகளில் எல்லாம் திரண்ட வெள்ளம் பெருக்கெடுத்தால் தமிழனுக்கு அந்நாளே திருநாள்! பின் தங்கிய கல்வியில் முன்வந்த மாணாக்கர்களுக்கு முழுநாளும் திருநாள்தான்! இலஞ்சம், வழிப்பறி, திருட்டு, கொள்ளை வழக்கொழிந்து இல்லை கொள்ளை என்ற நிலை என்று வருமோ அன்றே எல்லோருக்கும் திருநாள்! பசி பட்டினி, வறட்சி, என்பவை மாறி வளமை புகுந்து வறுமை ஒழியும் நாள் வருமோ அன்றே தமிழர்க்கு திருநாள்!தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களைபின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments
Post a Comment