இலங்கை அணி தோற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?


    உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி படு தோல்வியை சந்தித்ததும் சில பேருக்கு பயங்கர சந்தோஷம்! உணர்ச்சி வசப்பட்டு பட்டாசு எல்லாம் வெடித்து கொண்டாடுகிறார்கள். ஏதோ எதிரியை வீழ்த்திவிட்ட சந்தோசம் சிலருக்கு. இதனால் ஆகப்போவது என்ன?

    96 உலகக் கோப்பை தொடரில் இலங்கையுடன் அடி வாங்கிய பின்னர் இந்திய அணி கொஞ்சம் சுதாரித்துக் கொண்டது என்று சொல்லலாம். அதுவரை இந்திய அணி இலங்கையை ஒரு கத்துக் குட்டி அணியாகவே கருதியது. அப்புறம்தான் இந்திய அணியின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் உண்டானது. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்  தமிழ் உணர்வாளர்களும் இன்னும் இலங்கை அணியினரை மன்னிக்கத் தயாராக இல்லை! அவர்களை பொறுத்தவரை இலங்கை தோற்றால் கொண்டாட வேண்டும். அது  ராஜபக்சேவாக  இருக்கட்டும் அல்லது மாத்யூஸ் தலைமையிலான கிரிக்கெட் அணியாகட்டும் தோற்றால் மகிழ்ச்சி.
        
              வெடி எல்லாம் வெடித்து கொண்டாடுகிறார்கள். எனக்கு வருத்தம்தான். இலங்கை அணியின் இப்படிப்பட்ட சரணாகதி நிலையை நான் கூட எதிர்பார்க்கவில்லை! டுமினியின் ஹாட்ரிக்கும் தாஹிர் மற்றும் மோர்கலின் பந்துவீச்சும் சுத்தமாக இலங்கை அணியை நிலை குலைய வைத்துவிட்டது. முக்கியமான போட்டியில் சோதனைகள் வேறு செய்து சொதப்பிவிட்டது இலங்கை. தோற்றும் போனது. இதனால் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது ஏதாவது நடந்து விடப் போகிறதா? ஒன்றும் கிடையாது. அப்புறம் ஏன் இந்த வெற்று சந்தோஷம் என்று  தெரியவில்லை!

         
     நம்மவர்களிடையே இந்த மனப்பான்மை இன்று நேற்றல்ல! ரொம்ப காலமாய் தொடர்கிறது. நம்முடைய எதிரியை எவனாவது அடித்துவிட்டால் அவனை தூக்கி வைத்து கொண்டாடுவது. இது மிகவும் மோசமான பழக்கம் ஆகும். அண்டை வீட்டுக்காரனுடன்  சண்டை என்றால் நாம்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் நபர் அண்டை வீட்டுக்காரனை அடிக்கையில் கைகொட்டி ரசித்து மகிழ்வது என்பது  வக்கிரமான ஒன்று. இதைத்தான் நம்மவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

      நாம் தோற்றாலும் பரவாயில்லை! எதிரியும் தோற்கவேண்டும் என்று எண்ணுவது எந்தவித மனோநிலை என்று எனக்குப்புரியவில்லை! அதுவும் இல்லாமல் விளையாட்டுக்கும் அரசியலுக்கு இந்தியாவில் இருக்கும் வினோதமான சம்பந்தம் போல் எங்கும்  இருக்குமா என்று தெரியவில்லை!

       விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதில் அரசியலை புகுத்தி ஆட்டக் களத்தை ரணகளமாக்குவதில் தேர்ந்தவர்கள் நம்மவர்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட போது இலங்கை வீரர்களை தமிழகத்தில் விளையாட விடாமல் தடுத்தது ஓர் அரசியல். அதே போல இலங்கை இந்தியாவிடம் விளையாட்டில் தோற்கும் போதெல்லாம் இந்திய மீனவர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவது மகா கேவலமான ஒன்று.

        இப்படி விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக்கி பலகோடிகளை குவித்துவிடுவார்கள் அரசியல்வாதிகள். இதில் மயங்கி குரல் கொடுத்து ஏமாந்து போவது சாதாரண ரசிகர்களே! விளையாட்டை விளையாட்டாக பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்! அது சாதாரணமான ஓர் போட்டிதான் போர் அல்ல! இரு நாடுகளுக்கான போர் மாதிரி ஊடகங்களும் செய்தித்தாள்களும் சித்தரிப்பது அதைவிட மகா கொடுமை!

     இன்று இதோ இலங்கை படுதோல்வி அடைந்துவிட்டது. இதனால் இலங்கை இந்தியா உறவில் ஏதாவது மாற்றம் வந்துவிடுமா? இல்லை அங்குள்ள தமிழர்கள் வாழ்வில்தான்  ஏற்றம் உதித்துவிட்டதா? அதெல்லாம்  ஒன்றும் நடக்காது. அப்புறம் எதற்கு இந்த ஆர்பாட்டம். நமக்கு பசி எடுக்கிறது என்றால்  அடுத்தவன் வீட்டில் எவனோ கொள்ளையடித்துப் போனால் மகிழ்ந்து போவது என்பது என்னவிதமான கொடுமையான மனோநிலை?

      சங்ககாரா, மகிளா ஜெயவர்தனே போன்ற சிறந்த வீரர்களின் கடைசிப் போட்டி தோல்வியில் முடிந்ததில் எனக்கு வருத்தமே! கொண்டாடும் ரசிகர்கள் கொலைவெறியை உதறிவிட்டு ஸ்போர்ட்டிவாக சிந்திப்பார்களே ஆனால் அவர்களுக்கும் இலங்கை அணியின் வெளியேற்றம்  வருத்தத்தையே தரும்.

              துவக்க வீரராக திசாரா பெரோராவை இறக்கியது முதல் புது சுழல் பந்து வீச்சாளரை அறிமுகம் செய்தது என்று துணிச்சலாக முடிவு எடுத்தாலும் இன்று இலங்கை வீரர்களிடம் கொஞ்சம் கூட தன்னம்பிக்கை காணப்படவில்லை! தனி ஒருவராக அணியினை கரை சேர்க்கும் அரவிந்தா போன்ற ஜாம்பாவான்கள் இப்போது அணியில் இல்லை! மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவற்று போய் விட்டது. மலிங்காவின் காயத்தினால் பந்துவீச்சும் பலவீனமாக சுத்தமாக சரணாகதி அடைந்துவிட்டது.

     நாக் அவுட் போட்டிகளில் தடுமாறிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா முதல் முறையாக வெற்றி கண்டுள்ளது. அதே சமயம் காயங்களால் பலவீனப்பட்ட இலங்கை அணி இப்போது தடுமாறத் துவங்கி உள்ளது. 96க்கு அப்புறம் இரண்டு முறை பைனல் வரை வந்து கோட்டை விட்ட இலங்கை இந்த முறை காலிறுதியோடு நடையைக் கட்டிவிட்டது. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பொதுவான எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஓர் ஏமாற்றமே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நீங்கள் சொல்வதை எல்லாம் நானும் ஒத்துக் கொள்கிறேன் சுரேஷ். இது எல்லாம் புத்திக்குத் தெரிகிறது ஆனால் மனசுக்கு? இலங்கை தோற்றவுடன் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம். இத்தனைக்கும் எனக்கு இங்கு மூன்று சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள்.
    இப்படி மனசு சந்தோசப்படுவது தவறு, விளையாட்டை விளையாட்டாகத் தான் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். இருந்தும் சில சமயங்களில் மனசு வென்று விடுகிறது.

    ReplyDelete
  2. அய்யா இது தான் எல்லாவற்றிலும் ஏற்படுகிறது. என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
  3. 'இப்படிப்பட்ட சரணாகதி நிலையை நான் கூட எதிர்பார்க்கவில்லை'!
    உண்மைதான்
    இந்த கலக (மன்னிக்க) உலக கோப்பை போட்டியில் பெரும்பாலான வெற்றிகள் ( குறிப்பாக நாம் பெற்றது உட்பட) சுவாரசியமாகவே இல்லை.
    ஏதோ நிச்சயம் செய்த கல்யாணத்தை வீடியோவில் பார்த்த மாதிரி இருந்ததே தவிர கடைசி பந்து வரை நகம் கடிக்கும் விறுவிறுப்பும் இல்லவே இல்லை.

    ReplyDelete
  4. இந்த பொது புத்தி மன நிலை மிகவும் தவறானதே ஆனால் அதிலிருந்து வெளியே வரும் ரகசியம் இன்னமும்தான் நமக்கு புரிபடவில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2