நூறு கோடி இந்தியர்களின் கலைந்த கனவு!
ஒட்டுமொத்த இந்தியாவும் ஏன் உலகமே கூட இன்று இந்திய அணியின் வெற்றியை எதிர்பார்த்து இருக்க மிகச்சாதாரணமான முறையில் தோற்று நூறு கோடி இந்தியர்களின் கனவை அசாதாரணமாக கலைத்துவிட்டது இந்திய அணி. விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். இதற்காக எல்லாம் கவலைப்படுவது கோஷம்போடுவது உயிரைமாய்த்துக் கொள்வது எல்லாம் வீண் தான். கிரிக்கெட் ஓர் விளையாட்டு. அதில் சிறப்பாக விளையாடுபவர்கள் ஜெயிக்கிறார்கள். மோசமாக ஆடுபவர்கள் தோற்கிறார்கள். அதை உணர்வுப் பூர்வமாக அணுகக் கூடாது என்பதெல்லாம் சரிதான்.
ஆனால் இதையெல்லாம் உலக கிரிக்கெட் ரசிகர்களோ இந்திய கிரிக்கெட் ரசிகர்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த உலகக் கோப்பை ஆரம்பிக்கும் வரையில் இந்திய அணியின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் போட்டியின் முதலிலேயே பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவை வென்றதும் ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஜிம்பாப்வே , வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசத்துக்கு எதிராக கொஞ்சம் தடுமாறினாலும் சுதாரித்து வெற்றியை தன் வசமாக்கி தொடர்ந்து ஏழு வெற்றிகளை பெற்றிருந்த இந்திய அணி இன்று ஆடிய ஆட்டம் மகா மோசம்.
உலகக் கோப்பை அரையிறுதி என்ற ஒரு முக்கியமான போட்டியில் எந்தவித கேம் ப்ளானும் இந்திய அணியில் இல்லை. சிட்னி பிட்ச் சுழலுக்கு சாதகம் என்று மீடியாக்கள் வரிந்து கட்டி எழுதின. அது கடைசியில் ப்ளாட் விக்கெட்டாக பரிமளித்தது. கொஞ்சமும் சிரமபடாமல் ஸ்டீவன் ஸ்மித் முதல் மிட்செல் ஜான்சன் வரை அதில் ரன் குவித்தார்கள். அதே பிட்சில் இந்திய அணி ரன் குவிக்க தடுமாறியது உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்களின் தரத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தினை உணர்த்தியது.
முதல் விக்கெட் விழுந்த பின் பின்ச் -ஸ்மித் பார்ட்னர் ஷிப் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெல்ல முக்கிய காரணம். அந்த ஜோடியை பிரிக்க தோனி எதையும் செய்யவில்லை பார்ட் டைம் பவுலர்கள் யாருக்காவது கொடுத்து கொஞ்சம் முன்னதாக விக்கெட் எடுத்து இருந்தால் ஆஸ்திரேலியா முன்னூறு ரன்களை எட்டியிருக்காது. உமேஷ் யாதவ் நன்கு வீசினாலும் ரன்களை வாரி வழங்கிவிட்டார். அஸ்வின் கட்டுக்கோப்பாக வீசினாலும் விக்கெட்களை வீழ்த்த வில்லை. ஷமி விக்கெட் எடுக்க வில்லை ஆஸ்திரேலியாவின் ஏழு விக்கெட்டுக்களை மட்டுமே நம்மால் கைப்பற்ற முடிந்தது எனும் போதே தோல்வி உறுதியாகிவிட்டது.
ஆனால் உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். 75 ரன்கள் வரை முதல்விக்கெட் பார்ட்னர் ஷிப் அருமையாக இருந்த போது தேவையற்ற ஷாட் அடித்து தவாண் வீழ்ந்தார். ஓர் அரையிறுதிப் போட்டியில் தவாண் இப்படி ஆடியிருக்க கூடாது. பார்ம் இன்றி தவித்து வரும் கோஹ்லியை மூன்றாவதாக இறக்கியது பெரும் தவறாகி விட்டது. ஷார்ட் பிட்ச்சில் தவறான ஷாட் அடித்து அவர் அவுட்டானபோதே தோல்வி உறுதியாகிவிட்டது. கொஞ்ச நேரத்தில் ரோகித், ரெய்னா என்று கிளம்ப அஜின்கியா பந்துகளை தடவ ஆரம்பித்துவிட்டார். விஜய் டீவி வர்ணனையாளர்கள் தோனி தோனி என்று சொன்னாலும் அவரும் எவ்வளவு ரன்களை அடிக்க முடியும் ஓவருக்கு பதிமூன்று ரன்னுக்கும் மேல் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் போது ரஹானே, ஜடேஜா என்று அவுட் ஆக தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இரண்டு சிக்சர்களை வீசி ஆறுதல் தந்த தோனியும் நடையைகட்ட இந்தியாவும் இந்த போட்டித் தொடரில் இருந்து நடையைக் கட்டிவிட்டது.
ஆஸ்திரேலியர்கள் அப்படி ஒன்றும் பிரமாதமாக பந்துவீசிவிடவில்லை! ரோஹித்- தவான் கூட்டணி ஒரு இருபத்தைந்து ஓவர்கள் வரை தாக்கு பிடித்து இருந்தாலோ அல்லது விராத் கோலி இன்னும் ஒரு பத்து ஓவர் தாக்கு பிடித்து இருந்தாலோ வெற்றியை எட்டிப் பறித்து இருக்கலாம். போட்டிக்கேற்ப வியூகங்களை மாற்ற வேண்டியது அவசியம். ஆஸ்திரேலிய அணியில் வாட்சன் ஒன் டவுன் இறங்குவார் இன்று ஸ்மித் இறங்கினார். அதே போல ஸ்மித் அவுட்டானதும் பவர் பிளேவில் ரன் அடிக்க வேண்டும் என்று மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார். அது நன்கு பலனும் அளித்தது.
ஆனால் இன்று தோனி அப்படி ஏதும் பரிட்சார்த்தங்கள் செய்யவில்லை! போட்டி நம் கையை விட்டு நழுவாமல் இருக்க சில யுக்திகளை கையாளவேண்டும். சென்ற உலக கோப்பை இறுதி போட்டியில் கூட தோனி முன்னதாக களம் இறங்கி வெற்றிக்கு வழி வகுத்தார். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் செய்யவில்லை. ஷமியின் பந்து வீச்சு கடைசியில் எடுபடாமல் போனது. இன்று புவனேஸ்வர் குமாருக்கு ஒரு வாய்ப்பு தந்து இருக்கலாம். அதே போல அம்பாதி ராயுடு, அக்சர் படேல் போன்றவர்கள் ஒரு மேட்ச் கூட ஆடாமல் வீடு திரும்புகிறார்கள். இவர்களை சில போட்டிகளில் களமிறக்கி இருக்கலாம்.
எப்படியோ இந்தியர்களின் கனவு கலைந்து போய்விட்டது. இன்னும் நான்கு ஆண்டுகள் அடுத்த கனவிற்கு காத்து இருக்க வேண்டியதுதான். மொத்தத்தில் இந்தியாவைவிட இன்று சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. அதே சமயம் தொடர்ச்சியாக வென்ற இந்தியா இன்று படுதோல்வி அடைந்தது ஏதோ சந்தேகத்தை கூட எழுப்புகிறது. இன்னும் சூதாட்ட காரர்களின் பிடியில் இருந்து கிரிக்கெட் தப்பவில்லை என்று மட்டும் இந்த உலகக் கோப்பை போட்டிகளின் முடிவுகளில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஜெயிக்கும்போது சூதாட்டக்காரர்கள் நினைவு வரவில்லை இல்லையா!! இந்த அளவு வந்ததே பெரிது.
ReplyDeleteஎனக்கென்னவோ அம்பயர் சிவப்பா இல்லாமல் சட்டைமட்டும் சிவப்பா இருந்ததான் தோல்விக்கு காரணமா ? தோன்றுகிறது.
ReplyDeleteம்... அவர்கள் நம்மை போல் ஆடி விட்டார்கள்...!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
தாங்கள் சொல்வது போல.. எல்லாம் அதுவாகத்தான் இருக்கும்... போல..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அடுத்து நான்கு வருடமும் இதே நினைவுக்குள் முழ்க வேண்டுமோ...
ReplyDeleteவரவர அந்த நாட்டுக்காரங்களுக்கு நம்ம ஆளுங்களைப்பார்த்தா ரொம்ப இளக்காரமா தெரியுது போல. எல்லாம் கில்லர்ஜீ பக்கத்துல இல்லை என்கிற துணிச்சல்தான் போல.
Deleteஅடுத்தும் இப்படியே இருந்தால்.? விளையாட்டு என்பது தற்போது வியாபாரமே.
ReplyDeleteகிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் சகஜம் என்றாலும் ஒரு அரை இறுதி போட்டியை விளையாடும் போது நமது வீரர்கள் வெல்வதற்கான முயற்சி எதுவும் செய்யாமல் ஆட்டத்தை கோட்டை விட்டது போன்றே தோன்றுகிறது
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteகிரிக்கெட்டினால் இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன என நம்புபவன் நான் !
ஒரு விளையாட்டு என்ற வகையில் அதன் வீரர்களுக்கும் உங்களை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் தோல்வியினால் ஏற்பட்ட வலியை மதிக்கிறேன்... அதே நேரத்தில் அதீதமான விளம்பரமும், பணபுழக்கமும் சேர்ந்து சீர்குலைந்து போன கிரிக்கெட் குழுமம் தன்னை சுயபரிசோதனைக்கு உற்படுத்திக்கொள்ள சில வேலைகளில் இது போன்ற தோல்விகள் உதவும்.
நன்றி
சாமானியன்
( தங்கள் தளத்தினை எனது வலைப்பூவில் இணைத்துள்ளேன். நன்றி )
எதிர்பார்ப்பு ஏமாற்றம் எல்லாம் நமக்குத்தான், எனக்கும் அப்படித்தான்,,,,,,,,,,,,
ReplyDeleteஇவர்களது கனவு 20/20 தானே
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteநூறு கோடி இந்தியர்களின் கலைந்த கனவு! -மிக அருமையாக தங்களின் விமர்சனக் கண்னோட்டம் இருந்ததைப் பாராட்டுகிறேன்.
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றாலும்... அந்தத் தோல்வியை மனம் ஏற்க மறுப்பதென்னவோ உண்மைதான்.
சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம். அன்றைய தினம் டாஸில் ஜெயித்து... முதல் விக்கட்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் நீண்ட நேரம் விக்கெட் இழப்பின்றி நிலைத்து விளையாடியது .................... .............. .........................................................................
என்னதான் சொன்னாலும்...கிரிக்கெட் ஓர் விளையாட்டு. அதில் சிறப்பாக விளையாடுபவர்கள் ஜெயிக்கிறார்கள். மோசமாக ஆடுபவர்கள் தோற்கிறார்கள்.
அருமை.
நன்றி.
த.ம.
விளையாட்டில் எதுவும் நடக்கலாம் விதிப்படி!
ReplyDelete