சிவகார்த்திகேயன் எக்ஸ்பிரஸ்! பேருந்து அனுபவம்!

நேற்று மாலைப்பொழுதில் நண்பர் ஒருவரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நண்பர் எனக்கு நண்பர் அல்ல! தந்தையின் நண்பர்! கிளையண்டும் கூட! கிளையண்ட் என்பதால் அப்பா வக்கீல் என்று தப்பர்த்தம் செய்து கொள்ள வேண்டாம். எங்கள் பகுதிக்கு எங்கள் அப்பா ஜோஸ்யர், புரோகிதமும் செய்வதுண்டு. எனவே சுற்றுவட்டார மக்கள் நன்கு பழக்கம்.

          எனக்கு இந்த திருமண ரிசப்ஷன் செல்வது என்பதே பிடிக்காத ஒன்று. சொந்தங்களின் திருமணங்கள் தவிர பெரும்பாலானவை தவிர்த்துவிடுவேன். இன்றும் அப்படித்தான் அப்பா மட்டும் சென்றுவருவார் என்று பார்த்தேன். அவர் என்னை அழைத்தார். தட்டமுடியவில்லை! மாதவரம் பை-பாஸ் ரோடில் ராமலஷ்மி பேரடைஸில் திருமணம்.

     ஊரில் இருந்து ஆறுமணிக்கு புறப்பட்டு பஞ்செட்டி சென்று பேருந்தை பிடித்தோம். பேருந்தில் நிறையக் கூட்டம். கூட்ட நெரிசலில் பேருந்துகளில் பயணிப்பதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும். எப்போது வேண்டுமானாலும் நமது வேட்டி உருவப்படலாம். பேண்ட் போட்டவர்களுக்கு அந்தத் தொல்லை இல்லை. யாராவது நம் காலை மிதித்து  நமக்கு சொரணை இருக்கிறதா என்று சோதிக்கலாம். இன்னும் சில புண்ணியவான்கள் அக்குள் பிரதேசத்தை நம் முகத்துக்கு நேரே காண்பித்து மூச்சு முட்டச் செய்யலாம். இந்த சுகானுபவங்களை எல்லாம் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முன்பே நான் முறித்துக் கொண்டுவிட்டேன்.

      இப்போதெல்லாம் டூ வீலரில் தான் பயணம். பயண நேரம் இரவு, தந்தையுடன் செல்வது, சென்னையின் நெரிசல் போன்றவை பஸ் பயணத்தை முடிவு செய்தன. கும்முடிப்பூண்டியில் இருந்து பாரீஸ் செல்லும் அந்த பேருந்தில் முதலில் படியில் தொற்றி  பின்னர் உள்ளே நுழைந்தேன். பஸ்ஸின் நடுமத்திய பகுதியில் தந்தையின் அருகில் நின்றிருந்தேன். என் பக்கவாட்டு திசையில் இரண்டு இருக்கைகளில் நான்கு இளம்பெண்கள். சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு வந்தனர். அவர்களது பேச்சு கொஞ்சம் உரக்கவே இருக்க நானும் காதைத் தீட்டிக்கொண்டேன். பதிவுக்கு ஏதாவது மேட்டர் தேத்த வேண்டாமா?

         இந்த மந்த் எய்டீந்த் தான்  சிவகார்த்தியோட பர்டே போச்சு!  இந்த ஒரு சொல்லாடல் போதுமானதாக இருந்தது என்னை அவர்கள் பக்கம் இழுக்க. கூர்ந்து கவனித்தேன். அந்த நால்வரும் டீனேஜினர் தான் பதினைந்து அல்லது பதினாறு வயசுதான் இருக்கும். அவர்கள் பேசிக்கொண்டு வந்தது காக்கிச்சட்டை படம் பற்றியும் சிவகார்த்திகேயன் நடிப்பு பற்றியும்.

     “எனக்கு ரொம்ப சிவகார்த்திகேயனை பிடிக்கும்பா!” ஒரு பெண் சொல்கையில் அவர் கண்கள் மின்னியது.  எனக்கும்பா! என்று ஒத்து ஊதியது இன்னொரு பெண்! எனக்கு தனுஷ்தான் பிடிக்கும் என்றது இன்னொன்று!  எனக்கு முதல்ல தனுஷை பிடிச்சிருந்தது ஆனா இப்ப சிவகார்த்திகேயனைத்தான் பிடிக்கும் என்று  சொன்னது இன்னொரு பெண்.
        
            எனக்கு பர்ஸ்ட் சிவகார்த்திகேயன்! அப்புறம் தனுஷ், அப்புறம் விஜய், சூர்யா! என்றது இன்னொன்று.
         உனக்கு அஜித்தை பிடிக்காதா?  என்று இன்னொன்று கேட்க எனக்கு முதல்லேயிருந்தே அஜித் பிடிக்காது! என்றது இன்னொன்று. 
     
    அடடா! இப்பொழுதுதான் நடிக்க வந்த சிவகார்த்திகேயன் இவ்வளவு ரசிகர்களை ஈர்த்துவிட்டாரா! அசந்து போனேன். தன் அப்பா- அம்மா பிறந்த நாளைக் கூட அறிந்திருப்பார்களா தெரியவில்லை! ஆனால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல இன்னும் சில நடிகர்களின் பிறந்தநாளைக் கூட இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    இதற்கிடையில் என் அருகில் நின்று கொண்டிருந்த பெண்மணியின் செல்  ஸ்ரீ வெங்கடேசம் மனஸஸ்வாமி! என்று ஓ என்று அலறியது. அந்த பெண்மணியால் பதட்டத்தில் அட்டெண்ட் செய்வதற்கு கூட முடியவில்லை! ஒரு வழியாக சமாளித்து  அட்டெண்ட் செய்து  ரெட் ஹில்ஸ் வந்துட்டோம்! என்று சொன்னார். அப்போது பாடிய நல்லூரைக் கூட வண்டி தாண்டவில்லை! எனது வலப்புறம் நின்று கொண்டிருந்த ஆசாமி தலையில் முன் வழுக்கையை மறைக்க கர்ச்சீப் கட்டியிருந்தான்.
    
         அவ்வப்போது  அவன் நின்றிருந்த ஓரம் இருந்த சீட்டின்மீது சாய்ந்து கொண்டிருந்தான் என்னையும் இடித்தான். என்னடா ஆசாமி ஒருமாதிரி சாமியாடுகிறானே குடிமகனாகிவிட்டானா? என்று எட்டிப் பார்க்கையில்தான் தெரிந்தது. அவன் நின்றிறுந்த இருக்கையில் ஓர் இளம் ஜோடிகள் அமர்ந்திருந்தது. அந்த பெண் இவனின் தொல்லைத் தாங்காது தனது ஜோடியின் தோள் மீது சாய்ந்துகொண்டிருந்தது. கர்சீப் ஆசாமியை வறுத்தெடுக்கலாமா என்ற சமூகப் போராளியின் அவதாரம் எடுக்க முனைகையில் செங்குன்றம் வந்துவிட்டது.

                    அந்த சீட் ஜோடிகளும் இவனும் இறங்கிவிட நானும் தந்தையும் அந்த  சீட்டில் அமர்ந்தோம். பேருந்தே காலியாகி மீண்டும் நிறைந்தது. இப்போது மீண்டும் ஸ்ரீ வெங்கடேசம் ஒலிக்க எங்கள் பின் இருக்கையில் இருந்த பெண் அம்மா போன்! என்று தன் அம்மாவிடம் கொடுத்தது. நீயே அட்டெண்ட் பண்ணு! இதுக்குள்ள நூறுதடவை பண்ணிடுவாரு! என்று அம்மா அலுத்துக்கொண்டது.

        இத்தனைக் கூட்டம் ஏறி இறங்கியும் கண்டக்டர் தன் சீட்டை விட்டு எழுந்திருக்கவில்லை! அங்கேயே நின்று டிக்கெட் போட்டுக் கொண்டிருந்தார். கல்யாண மண்டபத்தின் அருகிலேயே பஸ் நிற்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரம்மாண்டமான ஏற்பாடுகள்  நிறைய உணவு வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள்! மின்னொளி அலங்காரங்கள் என மண்டபம் களை கட்டியிருந்தது.

    உள்ளே சென்று கவரைக் கொடுத்து வாழ்த்தி பெயருக்கு ஓர் பழச்சாறுமட்டும் அருந்திவிட்டு வெளியே வந்தோம். இப்போது மீண்டும் பேருந்து பிடிக்க கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தது. மாதவரம் பைபாஸ் முனைக்கு வருகையில் விழுப்புரம் கோட்ட பேருந்து புத்துர் வரை செல்வது வந்தது. அதில் ஏறினோம். உடன் நிறைய பேர் ஏறினார்கள். அனைவரும் இந்த கல்யாணத்திற்கு வந்து திரும்புபவர்கள். வெள்ளந்தி மனிதர்கள், கிராமத்து ஆட்கள் ஒளிவு மறைவின்றி பேசி கிண்டல் செய்து கொண்டார்கள். ஆண்கள் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்க பெண்கள் பட்டுப்புடவையில் இருந்தார்கள்.

     கிராமத்து ஆள் ஒருவர் ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி அதுக்கு டிக்கெட் எடுத்திட்டியா? ஏன் முழு டிக்கெட் எடுத்த? அரை அதுகூட வேண்டாம் கால் டிக்கெட் வாங்கியிருக்கிறதுதானே? என்று கிண்டல் செய்ய அந்த பெண் பதிலுக்கு ஏதோ சொல்ல அந்த கும்பல் முழுவதுமே உற்சாகமாய் பேசிக்கொண்டு இருந்தது.

      மாலையில் சென்ற பேருந்து நகரப்பேருந்து ஒருமணி நேரம் எடுத்துக் கொண்டது. ஆனால் திரும்பும் சமயம் இந்த பேருந்து அரைமணி நேரத்தில் அதே தூரத்தை கடந்துவிட்டது. பேருந்துப் பயணங்கள் சங்கடங்களை தந்தாலும்  சுவாரஸ்யத்தை கூட்டக்கூடியவை! நம் காதுகளையும் கண்களையும் கூர்மையாக்கிக் கொண்டோமானால் ஒரு தொலைக்காட்சி  சேனலின்  சுவாரஸ்யமான  பொழுது போக்கு நிகழ்வை விட சுவையான காட்சிகளை இதில் காணலாம். 

                வித்தியாசமான  ஓர் பேருந்துப் பயணம் மிக நீண்ட நாளுக்குப் பின் கிடைத்த மகிழ்வுடன் வீடு திரும்பினேன். கல்யாணமோ மண்டபமோ என்னை ஈர்க்கவில்லை! இந்த பயணம் மிகவும் ஈர்த்தது. இனி அடிக்கடி இல்லாவிடினும் எப்போதாவது ஒருமுறையாவது பேருந்தில் பயணிக்கவேண்டும் என்ற ஆசையை இந்த பயணம் கிளப்பிவிட்டிருந்தது!

Comments

 1. //தன் அப்பா- அம்மா பிறந்த நாளைக் கூட அறிந்திருப்பார்களா தெரியவில்லை! ஆனால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல இன்னும் சில நடிகர்களின் பிறந்தநாளைக் கூட இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்//
  உண்மைதான் நண்பரே சமூகம் இப்படித்தான் குழியில் விழுந்து கொண்டு இருக்கிறது. எனக்கு இப்படிப்பட்டவர்களைக் கண்டால் '' சட்டீர் ''என அறையவேண்டும் போலிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்குக்கூட நன்றாக நாலு கேள்வி கேட்கத் தோன்றியது! பொது இடம் என்பதால் தவிர்த்துவிட்டேன்!

   Delete
 2. சரிதான் நீங்கள் சொல்வது.இன்றைய இளம் தலைமுறையினருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதில் இருக்கும் அக்கறையை விட சினிமாவில் நிறைய இருக்கிறது.அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு.

  ReplyDelete
 3. நிழலைப் பார்த்து... ம்... என்னத்த சொல்ல....?

  ReplyDelete
 4. படாதபாடு பட்டாலும் பஸ் பயணத்தில் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நன்றாகவே ரசித்து இருக்கிறீர்கள். சொல்லிய விதமும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.

  ReplyDelete
 5. தன் அப்பா- அம்மா பிறந்த நாளைக் கூட அறிந்திருப்பார்களா தெரியவில்லை! ஆனால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல இன்னும் சில நடிகர்களின் பிறந்தநாளைக் கூட இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்//

  ம்ம்ம்ம் நல்ல சமுதாய இளவட்டங்கள் என்னத்த சொல்ல...அதே போல பேருந்தில் ப்ண்களை இடிக்கும் ஆண்கள் ...கோபம்தான் வரும்....ஆனால் நாம் படத்தில் வருவது போல ஹீரோயிசம் காமிக்க முடியுமா என்ன..

  ஒரு வேளை நாமும் அப்படி ஹீரோயிசம் காமிச்சா இளசுகள் சிவகார்த்திகேயனை விட்டுட்டு நம்மள முகநூலில் லைக் பண்ணுமோ...ஹஹ்ஹஹஹ சும்மா ஒரு லைட்டர் பார்ட்...இதுதானே இங்க நடக்குது

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6