பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே!

     நம்முடைய வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பிறருக்காக நம்முடைய வாழ்க்கையில் ஒரு நிமிடமாகவாது வாழ்ந்திருக்கிறோமா? என்று மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள்! உங்கள் மனசாட்சி வாழ்ந்திருக்கிறாய் என்று சொன்னால் உண்மையில் நீங்கள் உயர்ந்தவர்தான். இல்லை என்று சொன்னால் வெட்கப்படுங்கள். இனிமேலாவாது பிறருக்காக கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள். அதன் அருமையும் சந்தோஷமும் உங்களுக்கு புரியவரும்.

           அதிகாலையில் எழுந்து கொள்ளும் போதே நம் குடும்பம் குழந்தைகள், மனைவி, பெற்றோர், இன்றைய வேலைகள், அலுவலகம், அலுவலகத்தில் பணி, அடுத்த நாளுக்கு  என்ன செய்யவேண்டும் அடுத்தவாரம் உறவுமுறையில் கல்யாணத்திற்கு என்ன சீர் செய்வது? இப்படி தன்னைப் பற்றியும் தம் குடும்பத்தை பற்றியுமே சிந்தனைகள். அதற்காகவே எந்த நேரமும் சிந்தனை. குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது? அங்கே நன்றாக சொல்லிக் கொடுப்பார்களா? பள்ளிப் பேருந்தை நம்பலாமா? அல்லது தானே அழைத்து வர முடியுமா? 

                குடும்பத்திற்கான செலவுகள் போக சேமிப்பை எதில் முதலீடு செய்வது? காப்பீடு எதில் செய்வது? இப்படி எப்போதும் சுய சிந்தனையில் உழலும் பலருக்கு  எளிமையான மனிதர்கள் பலர் பிறருக்காக வாழ்வது கண்ணில் படுவது இல்லை!  அவர்கள்தான் எளிமையாக வாழ்ந்து சேவை செய்த அன்னை தெரசாவைக் கூட இழிவு படுத்துகிறார்கள்.

        உன்னைப்பற்றி சிந்தனை செய்வதை விட்டு பிற உயிரிகளுக்காக ஒரு நிமிடம் செலவழித்தால் கூட நீங்கள் உயர்ந்த மனிதர்தான். எத்தனையோ நல்ல உள்ளங்கள் தன் பணத்தையும் நேரத்தையும்  இன்றும் செலவழித்து பிறருக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் தீப்பிடித்து எரிந்தால் கூட உதவச் செல்லாமல் ரசித்துக் கொண்டிருப்பவர்கள் வாழும் உலகில் பிறருக்காக வாழ்வது என்பதெல்லாம் மிகப்பெரிய பண்பே! அவர்களை போற்றாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டும்.

         நாள்தோறும் செய்தித் தாள்களில் இப்படிப்பட்ட  மனிதர்களை பற்றி படிக்கும் போதெல்லாம் மனதில் ஓர் இனம்புரியா மகிழ்ச்சி குடிகொள்ளும். சாலையில் அலைந்து திரியும் மனநோயாளிகளை அழைத்துச் சென்று குளிப்பாட்டி முடிதிருத்தி விடுபவர்கள், தினமும் அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பவர்கள், அரசு மருத்துவ மனைக்கு  பிரசவத்திற்கு வந்த பெண்மணிக்கு மதிய சாப்பாடு வாங்கி கொடுப்பவர்கள். ஊர்கள் தோறும் மரக்கன்றுகள் நடுபவர்கள். அனாதை ஆசிரமங்களுக்குச் சென்று  சம்பளம் இன்றி தொண்டு  செய்பவர்கள். இரத்த தானம் கொடுப்பவர்கள், குறைந்த விலையில் சிற்றுண்டி அளிப்பவர்கள் இப்படி  எளிமையாக  சத்தமின்றி தொண்டு செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். 

         உலகம் கெட்டுவிட்டது! மனிதத் தன்மையே இல்லை! எல்லோரும் சுயநலமிகள் என்றெல்லாம் பேசுகின்றோம்! உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே?  எப்படி?

      பேருந்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கிறோம்! யாராவது முதியவர்கள் வந்தால் எழுந்து நின்று இடம் கொடுப்போமே?  பயணச்சீட்டு வாங்க உதவி புரியலாமே?

    வங்கிகளில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் விண்ணப்பங்களை நிரப்ப சிரமப்படுகையில்  நிரப்பிக் கொடுக்கலாமே!  மருத்துவ மனைகளில் மருந்துகள் வாங்க அல்லல்படுவொருக்கு மருந்துகள் வாங்கி கொடுக்கலாமே
வாகனத்தில் செல்லும்போது  நடந்து செல்பவர்களுக்கு லிப்ட் கொடுக்கலாமே! ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கலாம். இப்படி நம்மால் செய்ய முடிந்த சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.

        ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள்  மாதத்தில் ஒருநாளோ வருடத்தில் ஒரு நாளோ  அருகில் உள்ள வசதி குறைந்த அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் உணவு வழங்கலாமே!  இருண்டு கிடக்கும் கோயில்களுக்கு ஒருநாள் தீபம் ஏற்றி வைக்கலாமே!   இப்படி நம் அவசர யுகத்திலும் நம்மால் இயன்ற செய்ய முடிகின்ற சிறு உதவியை பிறருக்கு செய்யலாம். நமது பிள்ளைகளையும் பழக்கலாம். 

      அப்போதுதான் ஓர் மாறுபட்ட சமுதாயம் உருவாகும். உதவி என்று கேட்பவர்களுக்கு தகுதி அறிந்து உதவலாம். இப்போதெல்லாம் இதில் ஏமாற்று பேர்வழிகள் பெருகிவிட்டார்கள்தான். ஆனால் இல்லாதவர்களுக்கு உதவும்போது அவர்கள் மனதார வாழ்த்துவார்கள்.  அந்த வாழ்த்து நம் குடும்பத்தை பாதுகாக்கும்.

         நம்மைப் பற்றி நினைக்காமல் பிறரை பற்றியும் கொஞ்சம் சிந்தித்து பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்! அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! 



டிஸ்கி}   ஒரு வாரகாலமாக கோயில் பணியில் மஹா சங்கட ஹர சதுர்த்தி ஹோமம் வேலைகளில் பிஸியானதால் எதையும் எழுதவில்லை! இன்று காலை இந்த தலைப்பு மனதில் உதித்தது. இப்போது உட்கார்ந்து தோன்றியதை எழுதி விட்டேன். இப்போது எனது எழுத்துக்களை தந்தையும் வாசிப்பதால் கூடுதல் பொறுப்பும் வந்துவிட்டது. வேலைகள் கூடி விட்டதால் இனி தினமும் எழுத முடியும் என்று தோன்றவில்லை! அவ்வப்போது எழுதுகிறேன்! பிறரின் பதிவுகள் வாசிக்க முடியவில்லை! இரண்டொரு தினத்தில்  நண்பர்களின் பதிவுகளை வாசித்து கருத்திடுகிறேன்! அதுவரை பொறுத்தருள்க!

Comments

  1. வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே? எப்படி ?

    அருமையான சிந்தனை நண்பரே, நான் பெருமைக்காக எழுதவில்லை நான் பலருக்காகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நான் அடிக்கடி என் மனசாட்சியோடு வாதிடுபவன்,
    எனக்கு தமிழ் நாட்டில் பல அனாதை ஆஸ்ரமங்களோடு நெடுநாளாக தொடர்பு உண்டு என்பதை பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்,
    சிந்தனைக்குறிய பதிவு தந்தமைக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  2. பணம் கொடுத்துத்தான் உதவவேண்டும் என்றில்லை, எந்த வகையானாலும் உதவி செய்யலாம். நம்முடைய நேரத்தை செலவிடுவது முதல் உடலுழைப்பு உள்ளிட்ட எதுவானாலும் சரிதான்... பகிர்வு அருமை....

    ReplyDelete
  3. // உலகம் கெட்டுவிட்டது! மனிதத் தன்மையே இல்லை! எல்லோரும் சுயநலமிகள் என்றெல்லாம் பேசுகின்றோம்! உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே? எப்படி?// மிக்க அருமை சகோ! வாழ்த்துகள்! நல்ல கருத்துள்ள பதிவு, பிறருக்காகவும் வாழ வேண்டும்.
    வாகனத்தில் லிப்ட் கொடுப்பது மட்டும் இக்காலச் சூழ்நிலையில் பயம் என்று தோன்றுகிறது சகோ...

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.
    தாங்கள் சொல்லிய மனப்பக்குவம் எல்லோருக்கும் வராது... 100இல் 10 பேருக்கு வரும்... இன்றைய மனிதர்களை சொல்ல வேண்டுமா...
    தாங்கள் சொல்லிய தகவலை எல்லோரும் படிப்பார்கள் என்றால்திருந்த வாய்ப்பு அதிகம் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி..ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும்
    சிறந்த எண்ணங்களின் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. வாழை போல் தன்னை தந்து தியாகி ஆகலாம்
    பதிவில் கண்டேன்.
    தொடருங்கள் நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. ஒரே ஒருமுறை அது தான் உண்மையான சந்தோசம் என்பதை உணர்ந்து கொண்டால்... என்றும் திருப்தியான மகிழ்ச்சியே...

    ReplyDelete
  8. மிக மிக அருமையான ப்திவு நண்பரே!/ உலகம் கெட்டுவிட்டது! மனிதத் தன்மையே இல்லை! எல்லோரும் சுயநலமிகள் என்றெல்லாம் பேசுகின்றோம்! உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே? // ஆம்! வாழ முடியும். பொருளால் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, மனமிருந்தால் மார்கமுண்டு. உடலாலும் செய்ய முடியுமே! ...நல்ல பதிவு.

    ReplyDelete
  9. பிறருக்காக சில மணித்துளிகள் வாழ்ந்தாலும் அதில் கிடைக்கும் சந்தோஷம் எவ்வளவு கோடி வந்தாலும் கிடைக்காது.
    நல்லதொரு பதிவு.
    தங்களின் தந்தையும் உங்களின் எழுத்துக்களைப் படிக்கிறாரா! மகிழ்ச்சி நண்பரே.

    ReplyDelete
  10. நல்ல சிந்தனை. சிறப்பான யோசனைகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2