தடைகளை தகர்க்கும் ஸ்ரீ காரியசித்தி கணபதி!
தடைகளை தகர்க்கும்
ஸ்ரீ காரியசித்தி கணபதி!
அன்று சிவராத்திரி!
கைலாயத்தில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். தேவர்கள் அனைவரும்
மெய்மறந்து அந்த காட்சியை நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். படைக்கும் கடவுள் பிரம்ம
தேவர் அவசர அவசரமாக அப்போது கைலாயத்திற்குள் நுழைந்தார். அவரது பணிகளின் ஊடே சிவராத்திரியையும்
சிவதரிசனத்தையும் மறந்துவிட்டிருந்தார். திடீரென நினைவுக்கு வந்து வேக வேகமாக கைலாயத்திற்குள்
நுழைந்தார்.
கைலாய வாயிலில் கணபதி, முருகன், நந்தி தேவர், சிவகணங்கள்
நின்றிருக்க யாரையும் கவனியாது உள்ளே நுழைய முற்பட்டார். ஆறுமுகக் கடவுள் அவரை தடுத்தார்.
“யாரையா
நீர்? இவ்வளவு வேகமாக உள்ளே நுழைகின்றீர்?”
”குமரா! விளையாடாதே! சிவதரிசனத்திற்கு நேரமாகிவிட்டது!
நான் யாரென்று உனக்குத் தெரியாதா?”
”நீர் யார் என்பது எனக்குத் தெரிவது இருக்கட்டும்! உமக்குத் தெரியுமா? அதைத்தான் நான்
கேட்கிறேன்!”
“என்ன இது முருகப்பெருமானே! நான் யாரென்று எனக்குத்
தெரியாதா என்ன?”
“தெரிந்தால் சொல்லிவிட்டுச் செல்லுங்களேன்!”
“ நான் தான் பிரம்மா!”
“ பிரம்மாவா? அப்படியென்றால்?
”
“இந்த உலகங்களையும் அதில் உள்ள உயிர்களையும் படைப்பவன்! அதனால் எனக்கு பிரம்மன்
என்று பெயர்.”
“ஓ! அதனால்தான் இந்த ஆணவமா?” சரி படைப்புக்கு ஆதாரம்
எது?
“ஓம்” என்ற பிரணவாகாரம்!”
“அப்படியா? அதற்கு விளக்கம் கூறிவிட்டு சிவதரிசனம்
செய்யுங்கள்!”
“குழந்தாய்! அதற்கு நேரம் இல்லை! சொல்லவும் கூடாது!”
“ யார் சொன்னது?”
“யாரும் சொல்லவில்லை! நானாகவேத்தான் சொல்லுகிறேன்!”
“அப்படியானால் நான் கேட்கிறேன்! விளக்கம் சொல்லுங்கள்!”
“அது ரகசியம் குழந்தாய்! சொல்லக் கூடாது!”
“நானும் ரகசியத்தை யாரிடமும் சொல்லமாட்டேன்! என்
காதோடு சொல்லுங்கள்!”
“ அ.. அது..!”
“ அப்படியானால் உங்களுக்குத் தெரியாது! பிரணவத்தின்
பொருள் தெரியாத நீங்கள் எதற்கு படைக்க வேண்டும்! நானே படைப்பு தொழிலை செய்கிறேன்! உங்களை
சிறை வைக்கின்றேன்!
இப்படி முருகப் பெருமான் பிரம்மனை சிறைவைத்த இடம்
ஆண்டார்குப்பம். பின்னர் சிவபெருமானிடமும் தர்க்கம் செய்து பிரணவ உபதேசம் செய்த இடம்
சுவாமி மலை. பின்னர் பிரம்ம தேவன் விடுதலை ஆகிறார். அவருடைய தொழிலை துவக்குகின்றார்.
தொழில் நடைபெறவில்லை. பிள்ளையார் பிடித்தால் குரங்காய் ஆனது என்பார்களே அதுபோல அவரது
சிருஷ்டி பின்னப் பட்டது. விக்னம் ஏற்பட்டது. பிரம்ம தேவர் வருத்தமுடன் அமர்ந்திருக்கையில்
அங்கு நாரதர் வந்தார்.
“ தந்தையே! உமது வருத்தம் அறிந்தேன்! அன்று சிவதரிசனம்
செய்ய போகையில் முருகப்பெருமானுடன் கணபதியும் இருந்தார். இருவரையும் வணங்காமல் சென்றது
பெரும் குற்றம். தம்பி உடனே உங்களை சிறைபிடித்து தண்டணை அளித்துவிட்டார். அண்ணன் பொறுமையானவர்.
அதனால் அவர் இப்போது தண்டணை தந்துகொண்டிருக்கிறார். நீங்கள் கணபதியை வழிபட காரியங்கள்
கை கூடும்!” என்றார்.
உண்மைதான் நாரதா! கணபதியை எந்த இடத்தில் வழிபடுவது?”
நீங்கள் சிறைபட்ட
ஆண்டார்க் குப்பத்திற்கு தென் மேற்கே நெல்லிக் காடு ஒன்றுள்ளது. அங்கு ஈசன் அருள் பாலிக்கின்றார்.
அங்கே சென்று கணபதியை குறித்து தவம் மேற்கொள்ளுங்கள்! உங்கள் தடைகளை தகர்த்து எறிப்பார்
கண்பதி என்றார் நாரதர்.
பிரம்ம தேவர் நெல்லிவனம் என்னும் காட்டிற்கு வந்தார்.
ஈசனை தரிசித்தார். அங்கே கணபதிக்குரிய கன்னி மூலையில் அமர்ந்து தவம் செய்தார். பன்னிரண்டு
ஆண்டுகள் ஓடின. கணபதி தோன்றினார். பிரம்ம தேவர் அகமகிழ்ந்து போனார். ஐயனே! தவறை மன்னித்து
பழையபடி என்னை சிருஷ்டித் தொழில் செய்ய அருள்பாலிக்க வேண்டும் என்றார்.
கணபதியும் மகிழ்ந்தார்! உன் தவத்தால் மகிழ்ந்தேன்!
உன் சிருஷ்டித் தொழில் இனி சிறப்பாக விக்னம் இல்லாமல் நடைபெறும். வேறு ஏதாவது வேண்டுமா?
கணநாதா! இங்கு என்னுடைய கோரிக்கை நிறைவேறி வந்த
காரியம் சித்தியானது. என்னைப் போல தடை ஏற்பட்டு துன்புறும் பக்தர்கள் இங்கு வந்து உன்னை
வணங்க அவர்களின் தடைகளை விலக்கி காரியம் சித்தியாக அருள் பாலிக்க வேண்டும். அதே போல
சிவதரிசனம் செய்ய போய் சிறைபட்டேன். இங்கு சிவனின் தாண்டவ தரிசனத்தை காண வேண்டும் என்று
பணிவோடு வேண்டி நின்றார் பிரம்மா.
நான்முகனே!
உன் நலம் மட்டும் விரும்பாமல் பொதுநலம் கருதியும் கோரிக்கை வைத்தாய்! உன் கோரிக்கை
ஏற்கப்பட்டது. இங்கு என்னை வந்து வழிபடும் பக்தர்கள் வாழ்க்கையில் தடைகள் விலகும் அவர்களின்
காரியங்கள் இனி சித்தியாகும். நான் காரிய சித்தி கணபதியாக இங்கு அருள் பாலிப்பேன்.
இங்கு நீ விரும்பிய சிவதரிசனம் கிடைக்கும் என்று அருள் பாலித்து மறைந்தார். அது சமயம்
சிவனும் பார்வதியும் தாண்டவக் கோலத்தில் தோன்ற முருகப் பெருமானும் துணைவியரோடு காட்சி
அளிக்க பரவசமடைந்தார் பிரம்மா. வணங்கி வழிபட்டு சிருஷ்டியை துவக்க பின்னமில்லாது நடந்தது.
இத்தகைய பிரம்மா வழிபட்ட கணபதி அமைந்துள்ள இடம்
தான் நத்தம் கிராமம். சென்னை செங்குன்றத்தில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது பஞ்செட்டி என்னும் கிராமம். அங்கிருந்து மேற்கே பிரியும் சாலையில் இரண்டரை
கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நத்தம் கிராமம். பசுமையான கிராமத்தின் இறுதியில்
தென் மேற்கில் அமைந்துள்ளது வாலீஸ்வரர் ஆலயம். இவ்வாலயத்தின் தென் மேற்கு மூலையில்
சர்வாபரண பூஷிதராக காரியசித்தி கணபதி காட்சி அளிக்கிறார்.
வேறு எங்கும் காணக் கிடைக்காத தோற்றம். பிரம்மனுக்கு
அருளியதால் பிரம்மனின் ஆசனமான தாமரை மொட்டில் அமர்ந்த கணபதி தாமரை மொட்டு போல அடிப்பாகம்
குறுகி இடைப்பாகம் சற்று அகன்று மேல் பாகம் குறுகி காட்சி தருகின்றார். மேல் இரண்டு
கரங்களில் கோடரியும் ருத்திராட்சமும் கீழிரண்டு கரங்களில் தந்ததும் மோதகம் ஏந்தியுள்ள
கணபதிக்கு நெற்றிக் கண் உண்டு. தொந்தியில்லாமல் காட்சி தரும் கணபதியை இந்தியாவில் வேறு
எங்கும் இந்த கோலத்தில் காணமுடியாது.
பிரம்மனின் ஆணவத்தை அழித்து ஞானத்தை வழங்கியதன் வடிவமாக
குருத்துவமாக காட்சி தருகின்றார் காரிய சித்தி கணபதி. ஆணவத்தை அழிப்பது கோடரி, ஞானத்தை
வழங்குவது ருத்திராட்சம். பூர்ணத்துவத்தை வழங்குவது நெற்றிக் கண், பிரம்மாவின் ஆசனம்
தாமரை, அதில் அமர்ந்து குருவாக தொந்தியில்லாது அருள் பாலிக்கின்றார்.
இந்த காரிய சித்தி விநாயகரை விரதம் இருந்து வழிபடுவது
மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். காரியத்தடைகள் விலகும், திருமணத் தடை நீங்கும்,
புத்திரபாக்கியம் கிட்டும், வேலைவாய்ப்பு, கல்வித் தடைகள் அகலும்.
இவருக்கு சிதறு
தேங்காய் வழிபாடு சிறப்பானது, ஷோடச நாமாவளி அர்ச்சனையும் பதினாறு சுற்று பிரதட்சணமும்
சிறப்பாகும்.
காரியசித்தி கணபதிக்கு
ரோஜா மாலை சார்த்தி, பச்சரிசி, வெல்லம்,பச்சைபருப்பு, முந்திரி, திராட்சை, நெய், ஏலக்காய்,
பச்சைகற்பூரம் ஆகியவை படைத்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்து சிதறு தேங்காய் விட்டு வழிபாடு செய்தால் திருமணத் தடை அகலுகின்றது. இவ்விதம்
எட்டு வாரங்கள் வழிபாடு செய்ய வேண்டும்.
குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள் மேலே சொன்ன பொருட்களுடன் ஒரு வெள்ளெருக்கினால் ஆன விநாயகரை கொண்டு வந்து
வைத்து வழிபாடு செய்து அதை மடியில் கட்டிக்கொண்டு விநாயகரை பதினாறு முறை வலம் வந்து
சிதறு தேங்காய் விட்டு வழிபாடு செய்கையில் புத்திரப்பாக்கியம் கிட்டுகிறது.
கல்வித்தடை, வியாபாரத்தடை, போன்ற பிறதடைகள் உள்ளவர்களும்
விநாயகருக்கு அர்ச்சனை செய்து சிதறு தேங்காய் விட தடைகள் அகலுகின்றது.
இந்த ஆலயத்தில்
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று சங்கட நிவாரண மஹா ஹோமம் பக்தர்களின் சங்கடங்கள்
நிவர்த்தியாக வேண்டி செய்யப்படுகின்றது.
ஆயிரம் ஆண்டுகள்
பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு சமயங்களில் புனரமைக்கப் பட்டுள்ளது. தற்சமயம் காரிய
சித்தி கணபதி ஆலயம் புதிதாக புணரமைக்கப் பட்டு கடந்த 2013ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இந்த ஆலயத்தில்
அமைந்துள்ள ஈசனை பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் நாகதோஷம், ராகு-கேது தோஷம் விலகுகின்றது.
இராஜராஜ சோழன் காலத்திய ஆலயம் என்று இந்த ஊரில் கண்டெடுக்கப்பட்ட ஓர் கல்வெட்டு மூலம்
அறிய முடிகின்றது.
இத்தனை சிறப்பு
மிக்க ஆலயம் செல்வோம்! கணபதியின் அருள் பெறுவோம்!
ஆலயத்திற்கு செல்லும்
வழி! சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடி பூண்டி பொன்னேரி செல்லும்
பேருந்துகள், 557, 558, 514, 547, 558 ஏ, பி, 90, 58, இறங்குமிடம் பஞ்செட்டி, அங்கிருந்து மேற்கே செல்லும் சாலையில் இரண்டரை கிலோமீட்டர்
தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து வசதி இல்லை.
ஆட்டோ வசதி வேண்டும் எனில் பெரியபாளையம் கூட்டு
ரோட்டில் கிடைக்கும் சென்றுவர ரூ 150 கட்டணம் வசூல் செய்கின்றார்கள், வெயிட்டிங் சார்ஜ்
தனியாக கேட்பார்கள். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது.
தொடர்புக்கு: அ.
சாமிநாத குருக்கள், செல் நம்பர் 9444497425
இந்து அறநிலையத்துறை
பராமரிப்பில் உள்ள இந்த ஆலயம் மேலும் பல திருப்பணிகளை எதிர்பார்த்துள்ளது.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
படித்தேன். தெரிந்து கொண்டேன். எத்தனை எத்தனை வரலாறு, கதைகள் இல்லை? ஆனால், தன்னை வணங்காமல் போனார் என்பதற்காக அவரது காரியங்களை இடைஞ்சல் செய்வது என்பது தெய்வத்துக்கு அழகா என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை!
ReplyDelete:)))))
என்னுடைய எழுத்தில்தான் பிழை இருக்கிறது என்று நினைக்கிறேன்! படைப்பவன் என்ற ஆணவத்துடன் நடந்து கொண்ட பிரம்மாவிற்கு அகந்தையை அழித்து ஞானத்தை கொடுத்து படைப்புத் தொழில் சிறக்க அருளியதாக புராணத் தகவல்! அதை கதையாக வடித்தபோது இப்படி ஒரு கருத்தை தோன்றவைத்துவிட்டது என் தவறுதான்!
Deleteஆணவம் மனிதனை அழிக்கும் என்ற தத்துவம், அருமை. நன்றி,
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே...
ReplyDeleteகோயிலின் தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteமுருகப் பெருமான் பிரம்மனை சிறைவைத்த இடம் ஆண்டார்குப்பம் என்பதை தற்போதுதான் அறிந்தேன். வாய்ப்பிருபபின் ஆண்டார்குப்பம் எங்கு உள்ளது என்பதைத் தெரிவிக்கவேண்டுகிறேன். அருமையான பதிவு.
ReplyDeleteசென்னை-செங்குன்றம் பஸ் நிலையத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம், பொன்னேரி செல்லும் பேருந்துகள் இவ்வழியே செல்லும், செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்முடிபூண்டி செல்லும் ரயில்களில் ஏறி பொன்னேரியில் இறங்கி பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் பேருந்துகளில் ஆண்டார்குப்பம் வந்தடையலாம்.பொன்னேரி ஆண்டார் குப்பம் 5 கிலோமீட்டர் தொலைவு. ஆண்டார்குப்பத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் காரியசித்தி கணபதி கோவில் இருக்கிறது. ஆலய தரிசனம் வரும்போது என்னை தொடர்பு கொண்டால் சிறப்பான தரிசனம் கிடைக்க வழி செய்வேன். தொடர்பு எண் 9444091441. நன்றி ஐயா.
Deleteமுருகப் பெருமான் பிரம்மனை சிறைவைத்த இடம் ஆண்டார்குப்பம்
ReplyDeleteஅறியாத ஆன்மீக தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
தடைகளை தகர்க்கும் ஸ்ரீ காரியசித்தி கணபதி! அருள்பெற சன்னதி சென்று வழிபட்டு அருள் பெறுவோம்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தகவலுக்கு மிக்க நன்றி சுரேஷ் நண்பரே!
ReplyDeleteபுதிய தகவல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசித்திகளை அள்ளித் தருவார்
ReplyDeleteசித்தி விநாயகர் என்றறிந்தேன்
நானும்
சித்தி விநாயகர் அடியார் தான்
இன்று தான்
ஸ்ரீ காரியசித்தி கணபதி பற்றி
நானும் அறிந்தேன்.
அருமையான பதிவு
தொடருங்கள்
அருமையான கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி சுரேஷ்.
ReplyDelete