அமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 4
அமானுஷ்ய அனுபவங்கள்!
சில வருடங்களுக்கு
முன்பு இந்த தலைப்பில் ஒரு மூன்று பதிவிட்டு இருந்தேன். என் வாழ்வில் நடந்த அமானுஷ்ய
அனுபவங்கள் சிலவற்றை சொல்லி இருந்தேன். பலர் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், சிலர் நம்ப
முடியவில்லை என்றும் சொன்னார்கள். இது போன்ற நிகழ்வுகளை அனுபவித்தே உணர முடியும். இப்படியெல்லாம்
நடந்தது என்று சொல்ல முடியுமே தவிர ஊர்ஜிதம் செய்வது முடியாத ஒன்று. அதனால் தொடராமல்
விட்டுவிட்டேன். இன்று என் வலைப்பு ஸ்டாட்டஸ் பார்த்தால் அமானுஷ்ய அனுபவங்கள் இரண்டாம்
பகுதி அதிக பக்கப் பார்வைகளை கொண்டுள்ளது. இன்று மட்டும் இதுவரை 195 பக்க பார்வைகள்.
எப்படி இப்படி திடீரென பக்க பார்வைகள் வந்தது என்று தெரியவில்லை. அதனால் இதைப்பற்றி
அமானுஷ்யங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதலாம் என்று இந்த பதிவை தொடங்கி விட்டேன்.
என் அப்பா ஒரு
தேவதா உபாசகர் என்று சொல்லியிருந்தேன். இதனால் அவர் பலருக்கு நன்மை செய்தாலும் அவருக்குத்
தொந்தரவே வரும். நிறைய முறை அல்லல் பட்டு இப்போது இந்த உபாசனைகளை குறைத்துக் கொண்டு
உள்ளார்.
நான் அப்போது ப்ளஸ்டூ படித்த சமயம். எங்கள் ஊர்
பசங்கள் இணைந்து நேரு நண்பர்கள் நலச்சங்கம் என்று ஒரு அமைப்பை தொடங்கி இருந்தோம். கோயில்
பிரகாரத்தில் கிரிக்கெட் விளையாடுவோம். கோயில் மடைப்பள்ளிதான் எங்கள் அலுவலகம். அங்கே
ஓர் நூலகமும் வைத்து இருந்தோம். நண்பர்கள் கட்டும் சந்தா தொகை நூலகப் பணம் அனைத்தும்
அந்த மடைப்பள்ளியில் ஒரு சிறு மரப்பெட்டிக்குள்
இரண்டு ப்ளாஸ்டிக் டப்பாவில் வைத்து இருந்தோம். நூலகப்பணம் இந்த பணம் அனைத்தும் சில்லறைகள்.
மேலும் அந்த பெட்டியில் அந்த பெட்டியின் மற்றொரு சாவியையும் வைத்து இருந்தோம். மடைப்பள்ளிக்கும் தனி பூட்டு உண்டு.
அன்று காலையில் மடைப்பள்ளியை திறந்து விட்ட பின்
நிறைய நண்பர்கள் வந்தார்கள். புதியவர்களும் வந்தார்கள். நான் வேறு ஒரு வேலை காரணமாக
தாத்தா ஊருக்குச் சென்று விட்டேன். மாலையில் தான் திரும்பினேன். தாத்தாவீட்டில் இருந்து
வந்ததால் கையில் கொஞ்சம் பணம் இருந்தது. சந்தா கட்டுகிறேன் என்று செகரெட்டரியாக இருந்த
நண்பனிடம் கூறினேன்.
அவனும் உள்ளே சென்று பில் போட்டான். சந்தாரசிது
பிரிண்ட் அடிப்பது போல கையாலேயே எழுதி வைத்திருப்போம். என்னுடையது மட்டும் இல்லாமல்
என் தங்கைகளுக்கும் சேர்த்து சந்தா கட்டியதும் அதை பெட்டியில் போட சென்றால் பெட்டியினுள்
இருந்த பண டப்பாக்களை காணவில்லை. அதிர்ந்து போய் விட்டோம். சில்லறையாக இருந்தாலும்
இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு மேல் கணக்கில் இருக்கிறது. அப்போது அது பெரிய தொகை.
செகரெட்டரி அழுதே விட்டான். அவன் பொறுப்பில் அன்று
அலுவலகம் இருந்தது. காலை முதல் கோயில் பிரகாரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்
அவ்வப்போது ஓய்வு எடுக்க மடைப்பள்ளியினுள் பலரும் வந்திருக்கிறார்கள் யார் எடுத்திருப்பார்கள்?
யாரை சந்தேகிப்பது? நீயும் நானும் தான் பணத்தை கட்டவேண்டும். ஆனால் இதை எப்படி புரட்டுவது
என்று கேட்டேன்.
உனக்காவது பரவாயில்லை! என் வீட்டில் கொன்றே போட்டுவிடுவார்கள்!
இவ்வளவு பணம் தரமாட்டார்கள் என்றான்.
மெல்ல அப்பாவிடம் விஷயத்தை கூறினேன். அந்தி சாய்ந்த
பொழுது! கோயிலில் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தார். தீபம் ஏற்றி முடித்தவுடன் பூஜையில்
அமர்ந்து பார்த்துவிட்டு வந்து ஒரு பையனின் பெயரைக் கூறி அவன் தான் எடுத்து இருக்கிறான்
என்றார்.
அவன் பெரிய இடத்துப் பையன். எங்கள் குருப்பில்
அவன் கிடையாது. அன்று விளையாட மட்டும் வந்திருக்கிறான். அவனை எப்படி திருடன் என்று
சொல்லுவது? அவர்கள் வீட்டில் போய் கேட்க முடியாதே! நம்மில் யாராவது ஒருவர் என்றாலும்
எப்படியாவது வாங்கிவிடலாம். இவனை எந்த சாட்சியும் இல்லாமல் பிடிக்க முடியாதே! அவ்வளவுதான் என்றான் செகரெட்டரி.
அப்பா! ஏதாவது செய்யுங்கப்பா! ப்ளீஸ்! என்றேன்.
சரி பூஜையில உத்தரவு
கொடுக்கிறேன். பார்க்கலாம்! நான் முன்ன மாதிரி இப்ப ஜபம் செய்யறது இல்லே! உங்களுக்கு
அதிர்ஷ்டம் இருந்தா பணம் திரும்ப கிடைக்கும் என்றார்.
மறுநாள் விடியற்காலை பல்விளக்கி கொண்டிருக்கையில்
வந்து உங்க பணம் வந்துருச்சு! கோயில் மண்டபத்துல இருக்கு போய் எடுத்துக்க என்றார்.
அவசர அவசரமாக பல்விளக்கி ஓடி வந்தேன். மண்டபத்தில் நாங்கள் வைத்திருந்த அதே ப்ளாஸ்டிக்
டப்பியில் ஒரு பைசா கூட குறையாமல் பணம் அப்படியே இருந்தது.
உடனே ஓடிப்போய் செகரெட்டரியிடம் சொன்னேன். அவன்
சிலிர்த்துப் போனான். என் தந்தைக்கு பலமுறை நன்றிகள் சொன்னான். இனிமேலாவது உஷாரா இருங்க!
வெளிப் பசங்களை உள்ளே விடாதீங்க! இதுபோல எப்பவும் கிடைக்காது என்று சாதாரணமாகச் சொல்லி
சென்றுவிட்டார் அப்பா.
இது ஒரு சம்பவம்தான்! அவருடைய வாழ்க்கையில் இப்படி
இழந்த பொருட்களை பல முறை மீட்டுக் கொடுத்து உள்ளார். எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக
இருக்கும். ஒரு வருடம் முன்பு கூட என் தங்கையின் கைப்பையில் இருந்த ஐநூறு ரூபாய் காணமல்
போனது. பையை சுத்தமாக கொட்டி அலசியும் பணம் கிடைக்க வில்லை. யாரோ எடுத்துவிட்டார்கள்
என்று தெரிந்துவிட்டது. அந்த சமயம் சிலர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் அவர்களை குற்றம்
சொல்ல முடியுமா?
பூஜையில் அமரும் போது பணம் தொலைந்ததை சொன்னோம்.
இப்போது போய் பையை திறந்து பாருங்கள் இருக்கும் என்றார். அதே போல திறந்து பார்க்கையில்
இருந்தது. அதற்கு முன்பு பல முறை அந்த பையை அலசியும் கிடைக்காத பணம் அப்போது கிடைத்தது.
இது எல்லோருக்கும்
ஆச்சர்யம்தானே! சபரி மலை மகரஜோதி தரிசனம் பார்ப்பதை எல்லோரும் பெருமையாக கருதுவார்கள்.
இப்போது டீவியில் நேரடியாக பார்க்கிறார்கள். ஒரு முப்பது வருடங்கள் முன்பு இப்படி நேரடி
ஒளிபரப்புக்கள் இல்லாத சமயம் மகர ஜோதி சமயம் எங்கள் தந்தை கோயிலுக்குள் சென்று தியானத்தில்
மூழ்கி விடுவார்.
அப்போது அவர் முன்பு சபரிமலைக் காட்சிகள் வீடியோ
போல ஓடுமாம். ஐயப்ப தரிசனம் மற்றும் ஜோதி தரிசனம் காண்பார். அதோடு மட்டும் இல்லாமல்
ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த சந்தனம் அங்கிருந்த காட்டு இலைகளில் சுற்றி சிறிதளவு, மற்றும்
விபூதி, தீர்த்தம், மஞ்சமாதா குங்குமம் எல்லாம் சிறிதளவு அங்கிருந்து கிடைக்கும். இதை
பெறுவதற்கு என்றே எங்கள் குடும்பத்தினர் காத்திருப்பர். அவர் ஜோதி தரிசனம் பார்த்ததை
விவரிக்கும் அழகை கேட்பதே தனியாக இருக்கும்.
அப்போது நான் டியுசன்
எடுத்துக் கொண்டு இருந்தேன். மாலை நேரம் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் எதைக் கேட்டாலும்
சிரித்துக் கொண்டே இருந்தாள். என்ன இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கே பதில் சொல்லு என்றாலும்
சிரித்தாள். அவள் நடவடிக்கை எதுவுமே சரியில்லை. ஒரு மாதிரி இருந்தது. கோபம் வந்து பிரம்பை
எடுத்து அடித்தாலும் அழாமல் சிரித்தாள்.. கோயிலில்தான் டியுசன் நடக்கும். நடை சார்த்த
வந்த அப்பாவிடம் கூறினேன். சரி விபூதி மந்திரிக்கலாம் என்று சொல்லி மந்திரித்தார்.
பின்னர் அதை பெண் மீது ஊதி விட்டார். அவ்வளவுதான் அந்தப் பெண் சிரித்துக் கொண்டே அப்படியே
மயங்கி விட்டாள். தண்ணீர் தெளித்து எழுப்பினோம். இப்போது பழைய நிலைக்கு வந்துவிட்டாள்.
சிரிக்கவில்லை! கூடப்படித்தவர்கள் எல்லோருமே
கொஞ்சம் பயந்துதான் போய்விட்டார்கள். ஏதோ காற்று சேஷ்டை அந்த பெண்ணை தொடர்ந்து வந்திருக்கிறது.
இப்போது சரியாகிவிட்டது என்றார். அனைவரும் விபூதி இட்டுக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
இப்படி எத்தனையோ
அமானுஷ்யங்கள்! சொல்ல சமயம் வருகையில் மேலும் பகிர்கிறேன் நன்றி!
இறைநம்பிக்கை இல்லாதவர்கள் இதை நம்ப மாட்டார்கள் என்ன செய்ய முடியும் நானும் பலமுறை இந்த வகையான சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன் நண்பரே...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநம்பினவருக்கு தெய்வம் இருக்கு நம்ப வில்லை என்றால் தெய்வம் இல்லை.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதை மாதிரி நானும் நிறைய கேள்விபடுகிறேன் ,நம்பும்படியா நேரடியாக எதுவும் நடக்க மாட்டேங்குதே:)
ReplyDeleteபணம் இருந்தது ஆச்சரியம் தான்...!
ReplyDeleteநமக்கு மேல் ஒரு சக்தி இருப்பது உண்மையே, மற்றவை அவரவர் விருப்பம் போல்,,,,,,,,,
ReplyDeleteஆச்சரியமாக இருக்கின்றது !!!
ReplyDeleteகொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் அவநம்பிக்கை!
ReplyDeleteஅமானுஷ்ய அனுபவங்கள்.....
ReplyDeleteபல சமயங்களில் இப்படி நடப்பது குறித்து படித்திருக்கிறேன் - நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இப்படிப்பட்ட சக்தி எல்லோருக்கு கிடைக்காது அல்லவா. அவருக்கு வாய்த்திருகிறது. புண்ணியம் செய்தவர். எனக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை நிறைய உண்டு. மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDelete