Monday, September 29, 2014

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

சிறகடித்தது
பறக்கமுடியவில்லை!
செடியில் இலை!

கீழே விழுந்ததும்
ஆசுவாசம்!
நிழல்!

வளரவளர குறைகின்றன
கற்பனைகள்!
குழந்தைகள்!


பூத்தது ஆனாலும்
பறிக்க முடியவில்லை!
குழந்தையிடம் குறும்பு!

ஒட்டி உறவாடினாலும்
தட்டிவைத்தார்கள்!
காலில் தூசு!

இருபுறமும் நம்பிக்கை
நடுவே கரை!
அலை, மக்கள்!

சிவந்த சூரியன்!
கவிழ்ந்த பூமி!
அந்திமாலை!

ஓட்டம் எடுத்ததும்
நகரத்துவங்கியது படகு!
காற்று!

கடத்தி வந்து
காதில் போட்டது காற்று!
இசை!

ஓலமிட்டதை
ஊர்க்கூடி ரசித்தது!
கடல்!

ஓசையின்றி சிரித்தன!
ஒருநூறு மொட்டுக்கள்!
நந்தியாவதனம்!


மிதிபடவே
வளர்க்கிறார்கள்!
புல்வெளி!

நட்டுப் பராமரித்தும்
வளரவே இல்லை!
மின்கம்பம்!

பிடித்துக்கொண்டால்
விடுவதேஇல்லை குழந்தைகளிடம்
பிடிவாதம்!

ஒரே பருக்கைதான்!
நிறைந்துபோனது மனசு!
குழந்தை ஊட்டிய சோறு!

விழவைத்து முத்தம்!
குழந்தைக்கு கொடுக்கிறாள்!
பூமித்தாய்!

கண் அயர்கையில்
விழிக்க ஆரம்பிக்கின்றது
நகரம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அம்மாவின் கைதும் அல்லக்கைகளில் ஆர்பாட்டமும்!

அம்மாவின் கைதும் அல்லக்கைகளில் ஆர்பாட்டமும்!

மைக்கேல் டி குன்ஹா இந்த பெயரை இனி அம்மா கனவிலும் கூட மறக்கமாட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லோருமே சொல்லிக் கொண்டிருந்தது அம்மாவுக்கு பெரிய தண்டனை கிடைக்காது. அப்படியே தண்டணை என்றாலும் சிறிய அளவில்தான் இருக்கும். அல்லது அபராதம் மட்டுமே இருக்கும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கேற்றார் போலவே வழக்கின் தீர்ப்பும் 22 ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

   சில அதிமுக விசுவாசிகள் அம்மா விடுதலை என்றெல்லாம் பேனர் அடித்து ஒட்டி கொண்டாடினார்கள். பல லட்சக் கணக்கில் பட்டாசுகள் வாங்கிவரப்பட்டன விடுதலையானதும் கொண்டாடி மகிழ. இவையெல்லாம் வெறும் கனவாகிப் போய்விட்டது.
  பதினொறு மணி தீர்ப்பு தள்ளிப்போய் மூன்று மணி அளவில் குற்றவாளி என்று அறிவித்து பின்னர் 4 மணிக்குமேல்தான் தண்டணை அளிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் தண்டணை, 100 கோடி ரூபாய் அபராதம். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட போதே அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன. சமாளித்து கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டார். இரண்டு வருடங்களுக்குள் தண்டனை இருக்கும் என்று எதிர்பார்ப்பில் மண் விழுந்துவிட்டது. அப்பீல் பற்றி தீர்ப்பில் ஏதும் கூறவில்லை. தொடர்ச்சியான தசரா விடுமுறை என்பதால் ஜாமீனுக்கும் வழி இல்லை என்று எல்லா பக்கமும் கதவை அடைத்தாகிவிட்டது.

       குற்றவாளி என்றால் தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும். தண்டனை என்ன என்று முடிவு செய்வது நீதிபதியின் வேலை. அதற்கு அவர் சட்டப்புத்தகங்கள், முந்தைய தீர்ப்புக்கள் பலவற்றை ஆலோசித்து தண்டனை அளிப்பார். ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு  ஏற்புடையது இல்லை என்றால் மேல் முறையீட்டுக்கு என்றே உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், இறுதியில் ஜனாதிபதியின் பரிசீலனை என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் கடந்து வர கொஞ்சம் காலம் எடுக்கும். அதுவரை பொறுமை ஒன்றே வழி.
    ஆனால் அம்மாவின் அடிபொடிகளுக்கும் அல்லக்கைகளுக்கும் இந்த பொறுமை என்பது துளிக்கூட இல்லை. அல்லக்கை என்று சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய இன்றைய அதிமுக தொண்டர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். எதை வீசி எதைப் பிடிக்கலாம் என்றுதான் எல்லா கட்சிக்காரர்களும் இருப்பதால் இவர்களை சொல்லியும் குற்றமில்லை.
    தீர்ப்பு வெளியானதுமே சென்னையில் அப்படி ஒன்றும் கலவரங்கள் கொழுந்துவிட்டு எரியவில்லை. இதுவே வேறு மாநிலம் என்றால் நிலைமையே வேறாகத்தான் இருந்திருக்கும். தமிழகத்தில் கலவரம் சட்டம் ஒழுங்கு பாதித்துவிட்டது என்று கூச்சல் இடுபவர்கள் 1990ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது நடந்த கலவரங்களையோ 91ல் ராஜிவ் படுகொலையின் போது நடந்த கலவரங்களையோ மறந்துவிட்டிருப்பார்கள் போல.
    ஒரு தமிழக முதல்வரின் கைதுக்கு இந்த அளவிற்காவது அசம்பாவிதங்கள் நிகழாவிட்டால் அது அந்த முதல்வரின் மீது அந்த கட்சி தலைவரின் மீது தொண்டர்களின் நம்பிக்கையின்மையைத்தான் காட்டும். இரண்டுநாட்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அப்படி ஒன்றும் மோசம் இல்லை.
   இந்த சமயத்தில் அதிமுக அல்லக்கைகளான அமைச்சர்களையும் சில எம்,எல். ஏக்களையும் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். வழக்குத் தொடுத்தது சுப்ரமண்யம் சாமி, தீர்ப்பு கொடுத்தது நீதிபதி குன்ஹா. இவர்கள் இருவரையும் விட்டுவிட்ட அல்லக்கைகள் பாவம் 90 வயது கிழவர் கருணாநிதியை சகட்டு மேனிக்கு திட்டினர். அவரது உருவபொம்மையை கொளுத்தினர். செருப்புமாலை போட்டனர். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி போல. இந்த காழ்ப்புணர்ச்சி அரசியல் என்றுதான் மாறுமோ தெரியவில்லை.
    ஒரு சட்டசபை சபாநாயகராக இருந்தவர், நான்கு முறைக்கு மேல் எம்.எல். ஏ. அமைச்சராக இருந்தவர் பா. ஜெயக்குமார். அவர்கூட பொது இடத்தில் கலைஞரை வசைபாடி ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதே போல்தான் பலரும். அங்கு நீதிமன்ற வளாகத்தில் எங்களையும் அம்மாவுடன் சிறைபடுத்துங்கள் என்று சிறுபிள்ளைப் போல அடம்பிடித்து  தடியடிப்பட்டார்கள் சிலர்.
   இதெல்லாம் எதற்கு? இப்படியெல்லாம் எதையாவது செய்து அந்த அம்மாவின் பார்வையில் பட்டுவிட்டால் நமக்கு ஏதாவது பதவி கிடைக்காதா? என்ற அல்ப ஆசைதான். இதை ஊக்குவித்ததும் அம்மையாரே தான்! எதிர்கட்சியினரை வசைபாடினால் தகுதியே இல்லாவிட்டாலும் பதவி, பரிசுகள் என்று அள்ளிவீசி ஓர் தவறான முன்னுதாரணம் ஏற்படுத்திவிட்டார். விளைவு. இன்று ஒரு நம்பிக்கையான விசுவாசியைக் கூட தேடவேண்டிய சூழ்நிலை.

    உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து ஆகவேண்டும் என்பது பழமொழி. அதையே இந்த கைது காட்டினாலும் பலரிடம் அம்மாவின் மீது ஓர் பரிவையே காண முடிந்தது. ஆட்சிக்கு வந்த புதிதில் கொள்ளையடித்து இருந்தாலும் இப்போதைய சூழலில் அம்மாவின் அணுகுமுறை பலருக்கும் பிடித்துதான் இருக்கிறது. அம்மா உணவகம் போன்றவையும் மகளிர் நலத் திட்டங்கள் சிலதும் பெண்கள் மத்தியில் அம்மா அலையை நன்கு ஏற்படுத்தி இருக்கின்றன.
   இதற்கிடையே சிலர் முக நூலில் அம்மாவிற்கு மினரல் வாட்டர் கேட்டால் அதோ பானையில் முகர்ந்து குடி! காவிரி தண்ணீர் கேட்டாயே அதுதான் என்று சொன்னார்கள் என்றும் களி கொடுத்தார்கள் என்றும் ஆளாளுக்கு கற்பனை கலந்து கட்டி எழுதி லைக்கும் ஹிட்ஸும் வாங்கிவிட்டார்கள்.
   எல்லாம் சரிதான். எதற்கு இந்த பேருந்துகளை அல்லக்கைகள் கொளுத்தினார்கள் என்று தெரியவில்லை. எந்த ஒரு போராட்டம் என்றாலும் பாவம் பேருந்துகள் தான் மாட்டிக் கொள்கின்றன. பேருந்துகள் நம் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. நம்மை சுமந்து செல்கின்றன. இதை கொளுத்திவிடுவதால் தவறு சரியாகிவிடுமா? இல்லை குற்றம்தான் இல்லையென்று ஆகிவிடுமா? இதனால் பொதுமக்களுக்குத்தான் இடையூறு. ஒரு பேருந்தை கொளுத்திவிட்டால் அந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்து ஒன்று குறைந்து போகிறது. அந்த பேருந்து மீண்டும் எப்போது வாங்கப்படுமோ இறைவனுக்கே வெளிச்சம். எத்தனை லட்சங்கள் கோடிகள் மக்கள் பணம் விரையம் ஆகின்றது. இதை உணர்வதில்லை அல்லக்கைகள். ஒரு செத்த பாம்பை அடிப்பது போல இந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்து வீரப்புலிகளாக காட்டிக் கொள்கின்றனர்.

    இன்று காலையில் கோயிலுக்கு மாணவி ஒருவர் வந்திருந்தார். பாவம் அம்மா! குற்றவாளின்னு சொன்னவுடனே அழுதுட்டாங்க! ஸ்கூல் பேக், சத்துணவுல முட்டை எல்லாம் போட்டாங்க என்று வருத்தப்பட்டார்.
    இதையெல்லாம் அவங்க சொந்த பணத்துலயா கொடுத்தாங்க? நாம வரி கட்டிறோம்! அந்த பணத்துல நமக்கு கொடுக்கிறாங்க! அவங்க பணம் ஒண்ணும் இல்லையே? தப்பு செஞ்சாங்க தண்டணை அனுபவிக்கிறாங்க என்றேன்.
   அப்ப கருணாநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் எல்லாம்கூடத்தான் தப்பு செய்தாங்க! என்றார்.
  அவங்களும் ஒருநாள் மாட்டுவாங்க! என்றேன்.
கொஞ்சமா திருடனுவங்க மாட்டிக்கிறாங்க! நிறைய திருடனவுங்க நல்லா இருக்கிறாங்க! என்றார்.

இன்னும் ஒருவர் வந்தார். இது திட்டமிட்ட சதிங்க! தீர்ப்பு கொடுத்திட்டு நீதிபதி எழுந்து போயிட்டார். ஜாமீனை பத்தியோ அப்பீலை பத்தியோ எதுவும் சொல்லலை! அந்த அம்மா என்ன சாதாரண பொம்பளையா? எப்பேர்ப்பட்ட பதவி அந்தஸ்து? வேணுமின்னே சிக்க வைச்சிட்டாங்க?  என்றார்.

இப்படி நான் சந்திக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அம்மா செய்தது தப்பு என்று சொன்னாலும் தண்டணையை ஏற்கவில்லை. இது அதிகம் என்றே சொல்லுகின்றனர். ஆக அம்மா மீது மக்களிடையே வெறுப்பு இல்லை.  ஒருவித பரிதாபமே இருப்பதை காணமுடிகிறது.
    இந்த பரிதாபத்தை அதிமுகவின் அல்லக்கைகள் கடைகளை உடைப்பது பேருந்தை எரிப்பது போன்ற அராஜகங்கள் செய்து கலைத்துவிடுவார்கள் போல.

இதில் இன்னும் ஒன்றை சொல்ல வேண்டும் தேமுதிக தலைவர். ஊழல் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்றெல்லாம் பேட்டிக் கொடுக்கிறார். இவருக்கு அன்று கூட்டணி வைக்கும் போது அம்மா ஊழல்வாதி என்று தெரியவில்லையா?  எருது இளைச்சால் காக்காவுக்கு கொண்டாட்டமாம்.

திமுக இதுகுறித்து ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை! ஒருவேளை 2ஜி என்ற அபாயசங்கு இருப்பதால் வீணாக சொல்லி சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

அல்லக்கைகளின் ஆர்பாட்டத்தை தவிர்த்து பார்த்தோம் என்றால் இந்த கைது விவகாரம்  அம்மாவின் மீது பரிதாபத்தையே ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் நீதித்துறை மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற முதல் தமிழக முதல்வர் என்ற வேதனையான சாதனையையும் அம்மா வசம் சென்றுவிட்டது. இது தமிழகத்திற்கு என்றைக்கும் ஓர் அவமானச் சின்னமாக அமைந்துவிட்டது இந்த கைதின் முக்கிய அம்சமாகிவிட்டது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, September 25, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 17

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 17

 1. எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்னு பொலம்பிக்கிட்டு இருக்கியே என்ன விஷயம்?
கல்யாணமாகி வந்தா மாமியார் கூட சண்டை போடலாம்னு பார்த்தா நான் எது சொன்னாலும் சரின்னு ஒத்துக்கிறாங்க! சண்டை போடுற மாமியார் கிடைக்கவும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்னு புலம்பிக்கிட்டு இருக்கேன்!

 1. மண்டபத்துல புதுசா நாலு ஜோடிகளை சேர்த்துவச்சேன்!

அடடே! கல்யாண மண்டபத்துலேயே இன்னும் நாலு கல்யாணமா?
ஊகும்! புதுசா நாலு ஜோடி செருப்புக்களை  சேர்த்துவச்சேன்னு சொல்ல வந்தேன்!

 1. தலைவர் பேரைக் கேட்டாலே ஜட்ஜ் கூட மிரண்டு போயிருவாரு!
அவ்வளவு செல்வாக்கா?
நீ வேற அவ்வளவு வாய்தா வாங்கி வச்சிருக்காரு!

 1. ஃப்ரி எஸ்.எம்.எஸ் பண்ணி ஒரு பொண்ணை லவ்விக்கிட்டு இருந்தியே இப்ப என்ன ஆச்சு?
ஃப்ரி சிம் கொடுக்கிற ஆள் சிக்கினதும் அந்த பொண்ணு கழண்டுக்கிச்சு!


 1. மன்னருக்கு உடலெல்லாம் காதுகள் என்று எவ்வாறு சொல்கிறாய்?
    எதிரி மன்னன் அவன் நாட்டில் முரசு கொட்டுவதைக் கேட்டு இப்படி கால்கள் நடுங்குகிறதே!

 1. மன்னா! மன்னா! நட்பு பாராட்டி நூறு புறாக்களை அனுப்பிய பக்கத்து நாட்டு மன்னன் இலவச இணைப்பாக இன்னொன்றையும் அனுப்பிவிட்டான்!
    அட! என்ன அது?
   பறவைக் காய்ச்சல் மன்னா!

 1. மன்னருக்கு நம்பிக்கை அதிகம் என்று எதை வைத்துச் சொல்கிறாய்?
போரில் குதிரையை இழந்ததும் அதனால் என்ன ஓட கால்கள் இருக்கிறதே என்று ஓடிவந்துவிட்டாரே!

 1. டாக்டர்! இஞ்ஜெக்சனை கையிலே போடாம ஏன் பெட்டுல போடறீங்க?
    நீங்கதானே சொன்னீங்க வலிக்காம இஞ்செக்‌ஷன் போடுங்கன்னு!

 1. டாக்டர் இது உங்களுக்கு முதல் ஆபரேஷனா இருக்கலாம்! அதுக்காக என்னோட வயித்துல ரிப்பனை கட்டி ஓப்பன் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!


 1. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?

மூக்கு ஒழுகுது டாக்டர்னு சொன்னா எம்சீல் வாங்கி அடைச்சிருங்கன்னு சொல்றாரே!

 1. கல்யாணம் ஆன நாளிலே இருந்து என் மனைவி ஆசைப்பட்ட எதையும் நான் வாங்கி கொடுத்தது இல்லே…
அடப்பாவி மனுசா…! ஏன் இப்படி?

இரு… இரு… அவளாவே வாங்கிட்டுத்தான் என்கிட்ட சொல்லுவான்னு சொல்ல வந்தேன்!

 1. தலைவருக்கு மேயர் பதவி கிடைச்சதும் தலைகால் புரியலை!
ஏன் என்ன ஆச்சு?
மேயர் மேயர்னு சொல்றீங்க? யாரைக் கட்டி மேய்க்கணும்னு கேக்கறாரு!

 1. சில்லரை இல்லாதவங்கள்லாம் பஸ்ஸைவிட்டு இறங்குங்க!
கண்டக்டர் உங்க கிட்ட சில்லரை இருக்கா?
 இல்லே!
அப்ப முதல்ல நீங்க கீழே இறங்குங்க!

 1. தலைவர் விஞ்ஞானிகள் கூட்டத்துல ஏடாகூடமா பேசி உளறிட்டார்!
அப்படி என்ன பேசினார்?
செயற்கைகோள் தயாரிப்பில் மட்டுமல்ல இயற்கைக் கோள் தயாரிப்பிலும் இந்தியா விரைவில் தன்னிறைவு அடையும்னு சொல்லிட்டார்.


 1. தலைவருக்கு பிரியாணி நியாபகம் வந்திருச்சுன்னா உடனே கிளம்பிடுவார்!
    எங்கே?
  உண்ணாவிரதப் பந்தலுக்குத்தான்!

 1. கட்டிங்க் பண்ணிக்க போய் உடனே திரும்பிட்டியே ஏன்?
    சலூன் காரன் ஒரு  ‘கட்டிங்க்’ போட்டுட்டு இல்ல கடையை திறந்து வைச்சிருக்கான்!

 1. மன்னரை வாயாற புகழ்ந்தீர்களே பரிசு கிடைத்ததா?
காதாற கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார்!

 1. அந்த டாக்டர் ஏகப்பட்ட கடன் வாங்கி இந்த கிளினிக்கை கட்டி இருக்கார்!
    அதான் அவர் வாங்கிற பீஸ்ல இருந்தே தெரியுதே!

 1. நோய் முத்திப் போச்சு! இனிமே இதை ஆபரேஷன்லதான் குணப்படுத்த முடியும்!
எதை வச்சு சொல்றீங்க டாக்டர்?
நான் வாங்கின கடனுக்கு டியு வந்திருக்கிறதை வச்சு சொல்றேன்!


 1. என்ன சொல்கிறீர் மந்திரியாரே! மன்னர் மரண அவஸ்தையில் இருக்கிறாரா?
பின்னே! மன்னரை பாட புலவர் சென்றுள்ளாரே!

 1. ஒரு நகை நட்டு கூட கேக்காம உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனே இதுல இருந்து என்ன தெரிஞ்சுது!
நீங்க ஒரு மறை கழண்ட கேஸுன்னு நல்லாவே தெரியுது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும் நன்றி!


   


Wednesday, September 24, 2014

தோத்திரம் செய்பவர்களுக்கு ஒரு தோத்திரம்!

தோத்திரம் செய்பவர்களுக்கு ஒரு தோத்திரம்!

நான் இந்து மதத்தை சேர்ந்த ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பிற மதங்களை இதுவரை தூஷித்தது இல்லை! நம் மதம் போல் அவர்களுக்கும் அவர்களுடைய மதம் உயர்ந்தது என்று நினைத்து இருந்தேன். எனக்கு இஸ்லாமிய கிறித்தவ, ஜைன மத நண்பர்களும் படிக்கும் காலத்திலும் பின்னரும் உண்டு.
    ஒரு லிமிட் தாண்டி யாரும் யாருடைய மதத்தையும் விமரிசித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஊர் அருகில் இருக்கும் ஒரு தர்காவில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் திருவிழாவிற்கு ஒரு பாய் எங்கள் வீட்டிற்கு வந்து நன்கொடை வாங்கிச் செல்வார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னேரியில் பாய் ஒருவர் வைத்திருந்த பெட்டிக்கடையில்தான் நியுஸ்பேப்பர் வாங்கிக் கொண்டிருந்தோம். இப்படி இஸ்லாமியர்களோடு எந்த முரண்பாடும் ஏற்பட்டது இல்லை.
   கிறித்தவர்களும் கூட நிறைய மிஷினரிகள் அமைத்து மருத்துவ சேவை செய்து வந்தார்கள். சோழவரம் அருகே ரெய்னி ஆஸ்பிடல், அழிஞ்சிவாக்கம் அருகே ஒரு மருத்துவமனை என்று குறைந்த கட்டணம் அல்லது இலவச மருத்துவம் செய்து வந்ததால் அவர்கள் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. நல்ல மரியாதையையே வைத்திருந்தேன்.

   ஆனால் சமீப காலமாக இந்த மரியாதையை குறைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. சென்ற  வாரம் ஒரு நண்பர் அவர் மைத்துனரை அழைத்து வந்தார். அவரது பிள்ளைக்கு வரன் வந்துள்ளது பொருத்தம் பார்க்க வேண்டும் என்று என் தந்தையிடம் வந்தார்கள். என் தந்தை ஒரு ஜோஸ்யரும் கூட! பொருத்தம் பார்த்து கொடுத்தார். அன்று எங்கள் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்து பிரசாதம் இருந்தது. பிள்ளையாரை கும்பிட்டு வாப்பா! பிரசாதம் தருகிறேன்! என்றார் அப்பா.
     அந்த நண்பர் மட்டும் சென்று பிள்ளையாரை வணங்கி பிரசாதம் வாங்கிக் கொண்டார். உடன் வந்த அவர் மைத்துனர் மறுத்துவிட்டார். காரணம் என்னவென்று அப்பா கேட்டபோது சர்க்கரை அது இது என்று கூறி சமாளித்து வெளியே சென்றுவிட்டார். அவர் சென்றதும் நண்பர் என்னிடம் கூறினார். அவர் கிறிஸ்டியனாகி விட்டார். அதனால்தான் உள்ளே வரவே தயங்கினார். பிரசாதம் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றார்.
    “ அப்படியானால் எதற்கு இந்த பொருத்தம் பார்க்கிறீர்கள்?” இது நம் மதத்தில் தானே வழக்கம் என்றேன்.
   இல்லை! அவர் வீட்டில் அனைவரும் இந்துவாகத்தான் இருக்கிறார்கள்! இவர்மட்டும் தான் மாறிவிட்டார்! இவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சர்ச்சுக்கு சென்றாராம். இப்போது சரியாகிவிட்டது. அதனால் இவர் மட்டும் கிறிஸ்டியனாக மாறிவிட்டார் என்றார்.
   “ இதென்ன பைத்தியகாரத்தனமாக இருக்கிறது! உடம்பு சரியில்லை என்றால் மதம் மாறி விடுவதா?” எத்தனை கிறித்தவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது? அவர்கள் எல்லாம் மதம் மாறிவிட்டார்களா என்ன? என்றேன்.
   “ என்ன பண்றது? இவர் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்?” விட்டுத் தள்ளுங்க! என்று கிளம்பி விட்டார் நண்பர்.
  உடம்பு நன்றாக இருந்தவரை சாப்பிட்ட கோயில் பிரசாதங்களும் எடுத்துக் கொண்ட திருநீறும் உடம்பு கெட்டு கிறித்தவத்தில் சேர்ந்தவுடன் கசக்கிறது. திருநீறு அணிந்து பிரசாதம் சாப்பிட்டால் உடம்பு மீண்டும் கெட்டுப் போய்விடுமாம். 
   ஒரு கிறித்தவன் இந்துக்கள் பெரும்பாண்மையாக வாழும்  நாட்டுக்குள் நுழைந்து இந்துவை கிறித்தவன் ஆக்கலாமாம். அதே இந்துவாக இருந்த ஒருவன் மூளைச்சலவை செய்யப்பட்டு கிறித்தவன் ஆனவுடன் அவனது பழைய கடவுளை மறந்துவிட வேண்டும். கடவுளின் பிரசாதங்களையும் மறந்துவிட வேண்டும். என்னடா இது போக்கிரித் தனம்? இந்துக்கள் வாழும் ஊரில் உங்களை வாழ வேண்டாம் என்று சொல்லவில்லை! உங்கள் கடவுளுக்கு கோயில்( சர்ச்) எழுப்பத் தடை செய்யவில்லை. உங்கள் மதத் திருவிழாக்களை தடை செய்யவில்லை. எங்கள் அப்பாவிகளை ஏமாற்றி மதம் மாற்றாதீர்கள் என்றுதான் சொல்லுகின்றேன்.

 இது இப்படி என்றால் ஒரு இரண்டு வருடங்கள் முன்பு, காலை பத்து மணி வாக்கில் தச்சூர் கூட்டுச் சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்தேன். பொன்னேரி சாலையில் திரும்பும் சமயம் இளைஞர் ஒருவர் வழி மறித்தார். ஏதோ லிப்ட் கேட்கிறார் போல என்று வண்டியினை நிறுத்தினேன்.
    கையில் ஒரு கவருடன் வந்தவர், உங்களை தினமும் இந்த வழியில் பார்க்கிறேன்! நீங்கள் செய்யும் தொழில் சரியில்லை! இதை செய்யாதீர்கள்! அது பாவம்! என்றார்.
    நான் அப்படி என்ன தொழில் செய்கிறேன்? என்றேன்.
இந்த தொழில்தான்! எதற்கு விநாயகரை பூஜை செய்கிறீர்கள்? அதெல்லாம் செய்யாதீர்கள்!  இதைப் படித்து பாருங்கள் என்று கவரை நீட்டீனார்.
   எனக்கு மிகவும் ஆத்திரம் வந்துவிட்டது. இதை சொல்லத்தான் நிறுத்தினாயா? என்றேன்.
    ஆமாம்! இந்த பாவத் தொழிலை விட்டுவிடுங்கள்! என்றார்.
முதலில் நீ இதே போல வழியில் செல்பவர்களை மறித்து நிறுத்துவதை விட்டுவிடு! என்றேன்.
  இல்லை! இல்லை! நான் சொல்வதைக் கேளுங்கள்! இதை படியுங்கள்! நீங்கள் பரிசுத்தமாவீர்கள் என்றார்.
   நான் அந்தக் கவரை பிடுங்கி அவர் கண் முன்னே கிழித்து எறிந்தேன்.
   நீங்கள் கர்த்தரின் சாபத்திற்கு ஆளாகிறீர்கள்! என்றார்.
மரியாதையாக வழியைவிடு! இல்லையேல் என்னுடைய சாபத்திற்கு ஆளாவாய்! என்றேன்.
   என்னுடைய பதினைந்து நிமிடங்கள் அன்று வீணானது.

அதே நபரை நேற்றும் பார்த்தேன். மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பஞ்செட்டியில் போகும் வரும் வாகனங்களை எல்லாம் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் போல தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார். பரபரப்பான காலை நேரம்.
  சிலர் அடிக்கவே வந்து விட்டார்கள். சிலர் பரிதாபமாக பார்த்தார்கள். சிலர் விரட்டி அடித்தார்கள்.
  பைத்தியம் முத்திருச்சு! டிராபிக் போலீஸ் ஆக பணம் கொடுத்து ஏமாந்துட்டாரு! என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.

எத்தனைபேர் கொடுத்த சாபமோ? என்று நினைத்துக் கொண்டேன். இப்போது ஏன் இவருடைய கடவுள் இவரை ஏமாறுவதில் இருந்து காப்பாற்றவில்லை! அல்லது குறைந்தபட்சம் இப்படி மனநிலை பாதிக்கப்பட்ட இவரை இவரது மதத்தினர் இப்படி சாலையில் அலையவிடாமல் பிறரிடம் வசவு வாங்க விடாமல் தங்களுடைய சர்ச்சிலோ அல்லது மருத்துவமனையிலோ சேர்த்து சிகிச்சை அளித்திருக்கலாமே?
   இவர்  இந்துவாக இருக்கும் போது இவரை மதம் மாற்றி மூளைச் சலவைச் செய்து பிறரை மதம் மாற்றச்சொல்லி துண்டு பிரசுரம் கொடுத்து கேன்வாஸ் செய்ய சொன்ன அமைப்புக்கு இப்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டபோது சரிவர உதவி கூட செய்யவில்லையே?
   இப்போது எங்கு போனது அவரின் கடவுள்?

தோத்திரம் செய்து வழியில் போகிறவர் வருகிறவர்களைக் கூட உங்கள் மதத்திற்கு மாற்ற நினைக்கும் கிறித்தவ அன்பர்களே! உங்களுக்கு ஒரு தோத்திரம்!
    மதம் என்பது ரத்தத்தில் ஊறியது! எப்படி தாய்க்கு பிள்ளையோ அப்படித்தான் மதமும். நீங்கள் என்னதான் கூவிக் கூவி அழைத்து ராமசாமியை ஆசிர்வாதம் என்று பெயர் மாற்றி உங்கள் மதத்திற்கு மாற்றினாலும் அவர் ரத்தத்தில் ஊறிய இந்துமதம் மறக்க விடாது. என்றாவது ஒருநாள் அவர் தன் தாய் மத நம்பிக்கைகளையோ சடங்குகளையோ பின்பற்றுவார். இதை அறிந்துதான் இப்போதெல்லாம் இந்துமத சடங்குகளை எல்லாம் நீங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டீர்கள். இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?
     உங்களை நாங்கள் வெறுக்கும்படி உங்கள் செய்கைகளை அமைந்துவிடுகிறது! இதை விட்டொழியுங்கள்! உங்கள் மதம் உங்கள் உரிமை என்பது போல எங்கள் மதம் எங்கள் உரிமை! எங்கள் உரிமையில் தலையிடாதீர்கள். ஏதோ வணிகம் செய்ய எங்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்தீர்கள். அந்த வணிகம் வர்த்தகம் மட்டுமாகவே இருக்கட்டும் மத வணிகம் செய்வதாக இருக்க வேண்டாம்.
     இந்துக்களை மதம் மாற்றித்தான் உங்கள் பிழைப்பு நடக்க வேண்டும் என்றால் அதைவிட கேவலம் உங்கள் மதத்திற்கு இல்லை! இதை உணர்ந்துகொள்ளுங்கள்! அனாவசியமாக எங்கோ அவசர வேலைக்கு செல்பவனைக் கூட வழிமறித்து மத உபதேசம் செய்வதை எல்லாம் மாற்றிக் கொள்ளுங்கள்! மதங்களைவிட மனிதம் தான் உயர்ந்தது. இதை உங்கள் கடவுளே சொல்லி இருக்கிறார் அதை பின்பற்றினாலே உங்கள் மதம் செழிக்கும் இதை அறியாது மதவியாபாரம் செய்யாதீர்கள்!!

 இந்துமத அன்பர்களே! நம் மதத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மறைந்து வருகிறது! எங்கோ சில இருக்கலாம்! நம் மதத்தில் அழுக்கு இருக்கிறது என்றால் அதை துடைத்து சுத்தப்படுத்த வேண்டுமே தவிர பிற மதத்தில் சேர்ந்து நீங்கள் வெள்ளையடித்து கொள்ளக் கூடாது. துன்பங்களும் இன்பங்களும் வாழ்வின் இரண்டு பக்கங்கள்! நல்லது கெட்டது இரண்டும் அனைவர் வாழ்விலும் உண்டு. கிறித்தவத்தில் சேர்ந்தால் வியாதி குணமாகிவிடும். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். வீடு வாங்கலாம் மனை வாங்கலாம்! என்பதெல்லாம் சும்மா ஒரு கட்டுக் கதை. அதை நம்பி சுயத்தை இழக்காதீர்கள்.

இந்தப் பதிவை பார்த்து பிற மத அன்பர்கள் வருந்த வேண்டாம். நான் எந்த மதத்திற்கும் எதிரி அல்ல. மதத்திற்குள் இருக்கும் வியாபாரிகளுக்குத்தான் எதிரி. இந்த வியாபாரிகளிடம் சிக்கி இருப்பதையும் இழக்கும் சில அப்பாவிகளை காப்பாற்றவே இந்தப் பதிவு.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, September 23, 2014

மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!

மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!


புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும். இதற்கு முன் வரும் கிருஷ்ண பட்ச  (தேய்பிறை) பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு பின் வரும் சுக்லபட்ச பிரதமை வரை மஹாளய பட்சம் எனப்படும். இந்த பதினைந்து தினங்களில் நமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணங்கள் செய்து தானங்கள் செய்து பின்னர் உணவருந்த வேண்டும். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணங்களே முக்கியத்துவம் பெறுவதால் மங்கலகாரியங்கள் செய்தல் கூடாது. 

சீமந்தம், வளைகாப்பு, நாமகரணம் போன்றவை விதிவிலக்குகள் ஆகும்.

     மஹாளய பட்சத்தில் மஹாபரணி, அஷ்டமி, ஏகாதசி போன்ற திதிகளில் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். மேலும் பிதுர் லோகத்தில் வாழும் பிதுர்கள் இந்த பதினைந்து தினங்கள் நம்மோடு நம் இல்லத்தில் வந்து தங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் தள்ளிப்போதல், குழந்தைப்பேறின்மை, சரியான வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவைகளுக்கு பிதுர் தோஷமே காரணம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.
   வாழும் காலத்தில் பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் இறந்த பின்னரும் அவர்களது திதிகளை நினைவில் வைத்துக் கொண்டு சிரார்த்தங்கள் செய்து தர்ப்பணாதிகள் செய்து வர வேண்டும். ஒருவன் ஆண்டு ஒன்றிற்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன.
     நம் முன்னோர்களும் இதை தவறாது கடைபிடித்து வந்தார்கள். தற்போது இயந்திர உலகில் சிரார்த்தம் செய்வது கூட ஒரு கடமை என்ற அளவில் உள்ளது. இதுவே துன்பங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.
பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர்.   நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது.

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.

அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம். திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். ""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி. இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

 மஹாளய பட்சம் பதினைந்து தினங்கள் தர்ப்பணம் செய்யாவிடினும் கூட  தாய்- தந்தையர் திதி நாட்களிலும் அமாவாசை நாளிலுமாவது தர்ப்பணம் செய்து தானங்கள் செய்யலாம்.    

   இந்த நாளில் அருகில் ஆலயங்களுக்கு சென்று குளக்கரையில் நம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடுவோமாக!

சிரார்த்தம் செய்வது பற்றிய குறிப்புக்கள் அடங்கிய இணைப்பு:


(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Monday, September 22, 2014

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

மூடி வைத்த வீடு!
குடிபுகுந்தது!
ஒட்டடை!

கும்மிருட்டு
கூட்டி வந்தது!
பயம்!

தொலைவில் பூத்தன!
வாசமில்லா மலர்கள்!
நட்சத்திரங்கள்!

தூண்டில் போடாமலே
சிக்கின மீன்கள்!
நட்சத்திரங்கள்!

தாகம் தீர்த்தவனை
வெட்டிப்போட்டார்கள்!
இளநீர்!

சிதறும் ஒளியில்
சீறிப்பாய்ந்தன
வாகனங்கள்!

மழலையிடம் பூக்கிறது
மாசில்லாத
புன்னகை!

குழிவிழுந்ததும்
குதூகலம்!
குழந்தையின் சிரிப்பு!

தும்பிகள் அழைத்ததும்
தூறல் ஆரம்பித்தது
மழை!

சிறைபிடித்தது
விலங்கிடவில்லை!
குழந்தையின் சிரிப்பு!

ரசமில்லை!
ரசிக்க முடியவில்லை!
கண்ணாடியில் முகம்!

முரட்டுத் தழுவல்!
சிக்கிக் கொண்டது கொடி!
காற்று!

இரவு முழுதும் சப்தம்!
கேட்க ஆளில்லை!
சில்வண்டுகள்!

சேற்றில் பூத்தன
இறகுள்ள பூக்கள்!
கொக்குகள்!

வண்டுகள் இசையில்
வளைந்து கொடுத்தன
மலர்கள்!

கள்வனே ஆனாலும்
கடவுளும் அவனே!
காற்று!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


Saturday, September 20, 2014

கத்தரிக்காய் மூளி! பாப்பா மலர்!

கத்தரிக்காய் மூளி! பாப்பா மலர்!


சயனாவரம் என்ற கிராமத்தில் மாடசாமி என்பவன் வசித்துவந்தான். அவனது மனைவி மேகலா. மாடசாமி ஓர் அப்பாவி. யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவான். சூது வாது தெரியாதவன். தாய் சொல்லை தட்டாதவன். அவனுடைய தாயான மகாதேவி மருமகள் மேகலாவை படாத பாடு படுத்துவாள்.
     உட்கார்ந்தால் குற்றம், நிமிர்ந்தால் குற்றம், படுத்தால் குற்றம் என்று குற்றம் கண்டுபிடித்து பெயர்வாங்கும் புலவர்கள் வகையைச் சேர்ந்தவள் மகாதேவி. மேகலாவோ இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் குடும்ப வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். ஆனாலும் மகாதேவிக்கு ஏனோ மேகலாவை பிடிக்கவில்லை. சதா திட்டிக்கொண்டே இருப்பாள்.
    சமையலுக்குக் கூட காய்கறிகளை எண்ணித்தருவாள். சமையல் முடிந்ததும் எண்ணிப் பார்ப்பாள். உருளைக்கிழங்கு, வாழைக்காய், பூண்டு என்று அனைத்திற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பாள். அதற்கு குறைந்தால் மருமகளை பாடித் தீர்த்துவிடுவாள். இத்தனைக்கும் வக்கணையாக சமைப்பது மருமகள். அதை தானும் தன் மகனும் மட்டுமே தின்றுவிட்டு வெறும் பழைய சோறை மருமகளுக்குப் போடுவாள் மகாதேவி. புளி, மிளகாய் எல்லாம் சாப்பிட்டால் உடம்பு சோம்பேறியாகிவிடும். இதை சாப்பிடு போதும்! என்று சொல்லிவிடுவாள் மகாதேவி.
    மனைவியின் கஷ்டம் மாடசாமிக்குப் புரிந்தாலும் தாயை எதிர்த்து எதுவும் செய்யமுடியாமல் இருந்தான். ஒருநாள் மனைவியை அழைத்து, “ நீ உன் தாய் வீட்டிற்கு சென்று விடு! இங்கு ஏன் கஷ்டப்படுகிறாய்?” என்று சொன்னான். ஆனால் மேகலாவோ அதை மறுத்துவிட்டாள்.  “எல்லாம் நான் செய்த வினையின் பயன்! தாய் வீட்டீற்கு சென்று அவர்களை துயரம் அடையச் செய்யேன்! என் துயரம் என்னோடு போகட்டும்!” என்றாள் மேகலா.
    ஒரு நாள் மகாதேவி, எட்டுப் பிஞ்சு கத்தரிக்காய்களை கொண்டுவந்து மருமகளிடம் கொடுத்து அதை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வைக்கச் சொன்னாள்.
    மேகலா இந்த வகை குழம்பு செய்வதில் தேர்ந்தவள். அவற்றை நன்கு கூறிட்டு அவற்றில் தேவையான எள்ளுப்பொடியை திணித்து நிறைய எண்ணெயிட்டுவெங்காயத்தை வதக்கி அதன் பின் இந்த கத்தரிக்காய்களை இட்டு வதக்கி அவை வெந்த பின் மிளகாய் புளி அரைத்து உப்பு சேர்த்து சிறிது தீயிட்டு நன்றாக வற்றியபின் இறக்கி வைத்து அதனுள் மீண்டும் சிறிது எள்ளுப்பொடி தூவி மூடிவைத்தாள்.
   இத்தனை நாள் சபலப்படாத மேகலாவுக்கு இன்று செய்த சமையலின் ருசி நாவில் நீர் ஊறியது. எள்ளுப்பொடியின் மணமும் எண்ணெய் கத்தரிக்காய் வாசமும் அவள் மனதை வென்றன. ஒன்றை எடுத்து தின்று பார்க்கலாம் என்றாலும் மாமியார் என்ன சொல்வாளோ? என்ற பயம்! ஆனால் நாக்கோ ருசி கேட்டது. ஆவலில் ஒரு கத்திரிக்காயை எடுத்து அதில் ஒரு கீற்றை பிரித்து வாயில் போட்டாள். மிக்க சுவையாக இருந்தது. அடுத்த துண்டை வாயில் போடும் முன் மாமியார் வந்துவிட்டாள்.
       “அடியேய்! என்ன காரியம் செய்தாய்? எட்டுக் கத்தரிக்காயில் ஒரு கத்திரிக்காயை மூளியாக்கிவிட்டாயே! அடியேய் கத்திரிக்காய் மூளி! உன் நாக்குக்கு இந்த சுவை கேட்கிறதா? என் உத்தரவு இல்லாமல் நீ எப்படி ஒரு பிஞ்சை சாப்பிடலாம்! இனி உனக்கு இந்த வீட்டில் இடமில்லை!”  என்று வானுக்கும் பூமிக்குமாய் குதித்தாள்.
   “அடேய் மாடசாமி! இவள் நம் வீட்டிற்கு ஆகாதவள்! இவளைக் கொண்டுபோய்  மயானத்தில் உயிரோடு கொளுத்திவிடு!” என்று கட்டளையிட்டாள்.
    தாய்ச் சொல்லை மீறாத அந்த தனயனும் மனைவியை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று  மயானத்தில் நிறுத்திவிட்டான். தீ மூட்ட விறகு தேடி சென்றான். அந்த சமயத்தில் அந்த பக்கமாக ஒரு வழிப்போக்கர் வந்தார். என்ன இது மயானத்தில் மூட்டை கிடக்கிறதே என்று அதை பிரித்தார். உள்ளே இருக்கும் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் “யாரம்மா! நீ! ஏன் இந்த மூட்டையில் கட்டி வைத்தார்கள்?” என்று வினவினார்.
   மேகலா தன்னுடைய கதை முழுவதையும் கூறினாள். அவர்   “வா மகளே! நாம் இந்த நாட்டு அரசனிடம் சென்று முறையிடலாம்! உன் மாமியாருக்கும் கணவனுக்கும் தண்டனை பெற்றுத் தரலாம்!” என்றார்.
   மேகலாவோ,  “வேண்டாம் ஐயா! என் மாமியார் கொடுமை செய்தாலும் என் கணவர் ஒரு அப்பாவி! இருவரையும் தண்டித்துவிட்டால் நான் எங்கு போவது? என் விதி இப்படி இருந்தால் அப்படியே இருக்கட்டும்” என்றாள்.
    “சரி மகளே! இந்த சாக்கில் வேறு உதவாத துணிமணிகள் வைக்கோல்களைபோட்டு கட்டி வைத்து விடுகிறேன்! நீ வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்!” என்று சொல்லி மேகலாவை விடுவித்தார் அந்த வழிப்போக்கர்.
   மேகலா உயிர் வாழும் ஆசையின்றி அந்த மயானத்தின் அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தாள். அந்த காட்டிற்குள் ஒரு காளி கோயில் இருந்தது. அந்த காளியிடம் சென்று தன் மனக்குறைகளை முறையிட்டாள். பின் அங்கிருந்த தூணில் மோதி உயிர் விடத் துணிந்தாள். அப்போது காளி தேவி காட்சி கொடுத்து,  “பெண்ணே! வருந்தாதே! இந்த கோவிலில் நீ நினைத்த எல்லாம் வரும். என்னை வழிபட்டுக் கொண்டு சுகமாய் இரு!” என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
     அதன் பின் மேகலா நினைத்த பொருட்கள் அந்த கோயிலுக்கு வந்தன. அதைக்கொண்டு காளியை வழிபட்டபடி ஆண்டுகளை கழித்து வந்தாள். மூன்று ஆண்டுகள் இப்படி ஓடிவிட்டன. ஒருநாள் ஓர் அழகிய பட்டாடையை வேண்டினாள். அது கிடைத்ததும் காளிதேவிக்கு சார்த்தி வழிபட்டாள். மறுநாள் அதை அவள் அணிந்து கொண்டாள். அப்போது, அவளுக்கு இது போன்ற பட்டாடையை மாமியாருக்குத் தந்தால் நன்றாக இருக்குமே! என்று எண்ணினாள்.
   அவள் மனதை அறிந்த காளி தேவி பிரத்யட்சமாகி, பெண்ணே! உனக்கு இன்னும் குடும்ப பாசம் போகவில்லை! இங்குள்ளவற்றில் தேவையான ஆடை அணிகலன்களை எடுத்துக் கொண்டு சென்று சிலகாலம் கணவனுடன் வாழ்ந்துவிட்டு வா! நான் உன்னுடன் இருப்பேன்! பயமில்லாமல் செல்! என்றாள்.
   மேகலாவிற்கு காளி கோயிலை விட்டு பிரியவும் மனமில்லை! அதே சமயம் புருஷனின் நினைவும் வரவே, காளிதேவிதான் உடனிருப்பதாக சொன்னாலே என்று ஆடைகள் அணிகலன்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தாள்.
   இப்போதைய நிலையில் மகாதேவிக்கு மருமகளை அடையாளமே தெரியவில்லை! “ யாரம்மா நீ! எதற்கு இங்கு வருகிறாய்?” என்று கேட்டாள்.

    “மாமி! நான் தான் உங்கள் மருமகள்!”
   “ அடியேய்! கத்தரிக்காய் மூளியா நீ! இத்தனை  அழகாய் எப்படி மாறினாய்! இவ்வளவு நகைகளும் பட்டாடைகளும் உனக்கு ஏது?”
   இப்போது மேகலாவுடனே இருந்த காளி பேசினாள். “ அத்தே! உங்கள் மகன் என்னை தீயிட்டதும் நான் வானுலகம் போய் மாமாவை சந்தித்தேன்! அவருடைய ஆதரவில் இத்தனை நாள் இருந்தேன். அவர் உங்கள் நினைவாகவே உள்ளார். அவர்தான் உங்களைப் பார்த்து இதையெல்லாம் கொடுத்துவிட்டு வரச்சொன்னார்” என்றாள்.
   “ அப்படியா மருமகளே! அவர் பாசக்காரர்தான்! நான் படுத்திய கொடுமையில் தூக்குப் போட்டு செத்துப் போனார்! இப்போது வசதியாக இருக்கிறார் போல! அதனால்தான் நான் செய்த கொடுமைகளை மறந்து இத்தனை பொருள்களை கொடுத்து அனுப்பி இருக்கிறார்.!”
    “இதென்ன பொருள் அத்தே! வானுலகில் அவர் மாளிகையில் இருப்பதை கணக்கிட்டால் இதெல்லாம் சின்னதாகி விடும்!  நீங்கள் அங்கு வரமாட்டீர்களே! என்று அவர் வருந்துகிறார்!”
   “ அப்படியா! நான் ஏன் வராமல் போகிறேன்! இங்குதான் வசதியில்லாமல் வேலை செய்ய வக்கில்லாமல் இருந்தார்! தூற்றிக் கொண்டிருந்தேன்! அங்கே பெரும் பணக்காரராக இருந்தால் அதையெல்லாம் நான் அனுபவிக்க வேண்டாமா!  மகனே மாடசாமி! என்னை உடனே மயானத்தில் வைத்து கொளுத்து! நான் உன் அப்பாவிடம் போக வேண்டும். அங்குள்ள சொத்துக்களை பார்த்து அனுபவிக்க வேண்டும்!” என்றாள்.

   மாடசாமியும் தாயை அவள் சொன்னபடியே தீயிட்டு கொளுத்திவிட்டான்.
பின்னர் வீடு திரும்பிய அவன் மேகலா! அம்மா அப்பாவிடம் போய் சேர்ந்திருப்பார்களா? எப்போது திரும்புவார்கள்? என்று அப்பாவியாக கேட்டான்.
   உங்கப்பா அம்மாவைப் பிரிந்து இத்தனை நாள் ஏக்கமாய் இருந்தார்! இனி அவர் அவர்களை அனுப்புவாரோ மாட்டாரோ யாருக்குத் தெரியும்? அவர்கள் அங்கேயே சுகமாய் இருக்கட்டும்! நாம் இங்கே சந்தோஷமாக இருப்போம்! என்றாள் மேகலா.
   அதுவும் சரிதான்! என்றான் மாடசாமி.

மதியால் மாமியாரை வீழ்த்திய மேகலா அதன் பின் மகிழ்ச்சியோடு மாடசாமியோடு குடும்பம் நடத்தினாள்.

 (செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

   

Thursday, September 18, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 16

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!


1. மாப்பிள்ளைக்கு ஏதோ தோஷம் இருக்கறதுனாலே வரன் வேண்டாம்னு சொல்லிட்டாங்களா? செவ்வாய் தோஷமா? சர்ப்ப தோஷமா?
  நீங்க வேற சகவாச தோஷம் சரியில்லைன்னு சொல்லிட்டாங்க!

2. அந்த டாக்டர் குழந்தை டாக்டர்னு எப்படி சொல்றீங்க?
  பிரிப்ஸ்கிரிஷன் எழுத ஃபைவ் ஸ்டார் சாக்லெட் வேணும்னு அடம்பிடிக்கிறாரே!

3. அமைச்சரே! சாமரம் வீசும் பெண்களை காணோமே ஏன்?
   நீங்கள் ஓவராக ஜொள்ளு விடுவதாக புகார் எழுந்ததால் ராணியார் அவர்களை மாற்றி விட்டார்!


4.          தலைவருக்கு எப்பவுமே ஜெயில் ஞாபகமாவே இருக்குது!
செல்லுல கூப்பிடறாங்கன்னு சொன்னா புழலா பாளையங்கோட்டையான்னு கேக்கறாரே!

5.          தலைவருக்கு பதவி மேல ஆசையே இல்லையாமே!
ஆனா பதவியாலே வரும் பணத்துமேல ஆசை இருக்குதாம்!

6.          உங்க கட்சியிலே நிறைய கோஷ்டிங்க இருக்குதே நீங்க எந்த கோஷ்டி?
கோஷ்டிங்க எதுலேயும் சேராத கோஷ்டி!


7.          என்ன இருந்தாலும் எங்க அம்மாவோட கைபக்குவம் என் மனைவிக்கு அமையலை?
சமையலிலா?
ஊகும்! புருஷனை அறையறதுல!

8.          நாலு கல்யாணம் அட்டெண்ட் பண்ணியும் ஒரு ஜோடியும் தேறலை!
கல்யாண பிள்ளைங்க அவ்வளோ மோசமாவா இருந்தாங்க?
நீ வேற நான் சொல்றது செருப்பு ஜோடியை!

9.          மன்னர் படை திரட்டுகின்றார் என்று கேள்விப்பட்டதுமே அனைவருமே படை எடுத்துவிட்டனர்!
சபாஷ்!
நீ வேற அவர்கள் படையெடுத்தது நாட்டை விட்டு!

10.      ரத கஜ துரஜகபாதிகளுடன் படைஎடுத்துச் சென்றாரே நம் மன்னர் எப்படி இருக்கிறார்?
ரண, கள, புண் இத்யாதிகளுடன் குற்றுயிராய் திரும்பி வந்து விட்டார்!11.      மன்னரின் கைகள் சிவந்து இருக்கிறதே கொடுத்து சிவந்த கைகளா?
  ஊகும்! அது ராத்திரி கொசுவை அடித்து அடித்து சிவந்த கைகள்!

12.      காது குத்து விழாவுல என்ன கலாட்டா?
காதை சரியா குத்தலைன்னு ஆச்சாரியோட வயித்துல யாரோ குத்து விட்டுட்டாங்களாம்!

13.      அந்த கேஸ்ல ஏசி வந்ததுக்கு அப்புறம் தான் ஸ்டேஷன்ல இருந்து வெளியே விட்டாங்க?
அஸிஸ்டெண்ட் கமிஷனரே வந்தாரா?
நீ வேற ஏசி மிஷினை வாங்கிங்கிட்டு விட்டாங்கன்னு சொல்ல வந்தேன்!

14.      மன்னருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்னு எப்படி சொல்றே?
போர்க்களம் சென்று வந்த மன்னரை பாட வந்த புலவரிடம்
போரில் பெற்ற புண்ணே போதும் உங்கள் பண்ணால் மேலும் புண்ணாக்க வேண்டாம்னு சொல்றாரே!


15.      தலைவருக்கு கட்சியிலே பவர் அதிகம்?
அதுக்காக  எப்பவும் கையில ஒரு ஸ்டெபிலைசரோடவே திரியறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

16.      கட்சி ஆபிஸ்ல ஏன் கிரேன் ஒண்ணு வந்து நிக்குது?
இன்னிக்கு கட்சியிலெ வெயிட்டான ஆளை கட்சியை விட்டு தூக்கப் போறாங்களாம்!

17.      தலைவர் மானம் கப்பலேறிப் போச்சு!
ஜுகல் பந்தியில கச்சேரிக்கு கூப்பிட்டபோது பந்தியிலே என்னென்ன பறிமாறிவீங்கன்னு கேட்டுட்டாரு!

18.      பொண்ணுக்கு ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா?ன்னு பொண்ணுக்கிட்டே கேட்டது தப்பா போச்சு!
     ஏன்?

  பையனுக்கு ஓடத்தெரியுமான்னு திருப்பிக் கேக்குது!


19.      ஈசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், பயாப்ஸி இத்தனை டெஸ்ட் எடுத்திருங்கீங்களே டாக்டர் எதையாவது கண்டுபிடிச்சீங்களா?
உங்க பேங்க் பேலன்ஸ்ல இன்னும் பணம் இருக்குதுன்றது மட்டும் தான் கண்டுபிடிச்சேன்!

20.       முடியிழந்த மன்னரை பார்க்கவே சகிக்கவில்லை!
     பாவம்! போரில் அவ்வளவு இழப்பா?
    ஊகும்! தலையில் இருந்த ஒன்றிரண்டு முடிகளும் கொட்டிவிட்டதைத்தான் சொன்னேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   


Related Posts Plugin for WordPress, Blogger...