வந்து விட்டேன் அம்மா…!

 

வந்து விட்டேன் அம்மா…!

 

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 

மொபைல் போன் ஒலித்தது. அம்மாதான் அழைக்கின்றாள். இதோ சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. தினமும் மூன்று வேளையும் தவறாமல் போன் செய்து கொண்டிருக்கிறாள். என்மீது அவ்வளவு பாசம்.  ஆன் செய்தேன்.

  ”சாப்பிட்டியா கண்ணா!” முதல் வார்த்தையே இதுதான்..! 

”அம்மா! இப்போ மணி காலையிலே ஏழுதான் ஆகுது! இப்போதான் எந்திரிச்சேன். இப்போ போய் சாப்பிட்டிட்டியான்னு கேக்கறே?” 

 “குழந்தை நீ பசிதாங்க மாட்டேடா? நேத்து நைட் தோசை கம்மியாத்தான் சாப்பிட்டே டேஸ்ட் பிடிக்கலைன்னு சொன்னே இல்லையா? இப்போ பாரு மணி ஏழு ஆகிருச்சு! உனக்கு பசிக்கலையாடா கண்ணா! போய் சீக்கிரம் பல் துலக்கிட்டு பாட்டிக்கிட்டே டிபன் கேட்டு வாங்கி சாப்பிடு. நான் உடனே பாட்டிக்குப் போன் பண்றேன்.”

    “ஏம்மா! நான் என்ன சின்னக் கொழந்தையா? ப்ளஸ் டூ முடிச்சிட்டு டிகிரி படிக்க சென்னை வந்திருக்கேன்.! இன்னும் நீ என்னை குழந்தையாவே ட்ரீட் பண்ணிக்கிட்டு இருக்கே?”

  ”பெத்தவளுக்கு நீ எப்பவும் கொழந்தைதான்பா! அது பாட்டி வீடுதான் சங்கோஜப்பட்டுகிட்டு கிடக்காதே! உனக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிச் சாப்பிடு!” அம்மா பரிவோடு சொல்ல..

   ”ஏம்மா! அங்கே இருந்தாத்தான் எப்பவும் ஏதாவது ஒண்ணு பண்ணி கொடுத்து என்னை சதா சாப்பிட்டுகிட்டு இருக்கச் சொல்வே! இங்கே வந்தாலும் இப்படி போன் பண்ணி டார்ச்சர் பண்றியே?”

   ”இது டார்ச்சர் இல்லேடா! அன்பு! தவமாய் இருந்து ஒத்த புள்ளை ஒன்னை பெத்தெடுத்திருக்கேன்! உன்னைக் கவனிக்காம வேற யாரை கவனிக்கனும் சொல்லு! நீ என் தெய்வம்டா! பாட்டி வீடு மாமா எதாவது சொல்லப் போறான்னு வெட்கப் படாதே! எது வேணும்னாலும் தயங்காம கேளு! உனக்கு அங்க நிறைய உரிமை இருக்கு! பயப்படாதே! அப்புறம்   அம்மாவுக்கு உன்னை பாக்கணும் போல இருக்குடா!”

  “ என்னது வந்து ஒரு வாரம்தான் ஆகுது! அதுக்குள்ளே பார்க்கணுமா? முழுசா அஞ்சு வருஷம் நான் இங்கதான் தங்கிப் படிக்கணும் தெரியும் இல்லே..!”

     ”எல்லாம் தெரியும்! ஆனா உன்னை விட்டு பிரிஞ்சிருக்க முடியலைடா! ஒருவாட்டி வந்து போயேன்! இப்போ கோவிட்னு ஆன்லைன் கிளாஸ்தானே போய்க் கிட்டிருக்கு!”

   ”வேலூர் என்ன பக்கத்திலேயா இருக்குது! 150 கிலோ மீட்டர் வந்து போகணும்! ஒருநாள் சரியா போயிரும்! வேணும்னா வீடியோ கால் போடு! என்னை பார்த்துக்கோ!”

   ”டேய் அது நேரிலே பார்த்த மாதிரி ஆகுமாடா! ப்ளீஸ்டா! இந்த ஒருவாட்டி வந்து போடா! நாளைக்கு சாட்டர்டே தானே..! வந்துண்டு மண்டே திரும்பவும் சென்னை போயிருடா!”

  “ம்ம்ம்…! யோசிக்கிறேன்!”

”அப்படி சொல்லாதேடா! கண்டிப்பா வரணும்டா! உனக்குப் பிடிச்ச பூரி மசால் பண்ணி வைக்கிறேன். அப்புறம் சுண்டக்கா வத்தக் குழம்பு, வெண்டைக்காய் பொரியல், எல்லாம் பண்ணித் தரேண்டா! அம்மாவை பார்க்க கண்டிப்பா நீ வரணும்டா!”

   ”சரி சரி! வந்து தொலைக்கிறேன்! ஆனா இதையே சாக்கிட்டு வாராவாரம் கூப்பிடக் கூடாது! ஆமா சொல்லிப்புட்டேன்!”

   ”இந்த வாரம் மட்டும் வந்துட்டு போ கண்ணா! மத்த்தை அப்புறம் பார்க்கலாம்!”

   ”சரிம்மா! பை..!” போனை கட் செய்தேன்.

 நான் முதலாமாண்டு இஞ்சினியரிங்க் மாணவன். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. பாட்டி வீடும் இங்கே இருக்க ஜாயின் செய்ய முடிவெடுத்துவிட்டேன். ஆனால் அம்மா இங்கே சேர கொஞ்சத்தில் சம்மதிக்கவில்லை! வீட்டுக்கு ஒரே பிள்ளை! உன்னைவிட்டுப் பிரிந்திருக்க முடியாது! அவ்வளவு தூரம் போய் படிக்க வேண்டாம் வி.ஐ.டியில் படி என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் நான் சம்மதிக்கவில்லை! அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் தவம் இருக்கிறான். கிடைத்த சீட்டை வீணாக்க சொல்கிறாயா? அங்கே தான் பாட்டி வீடு இருக்கிறதே அங்கே போய் தங்கிக் கொள்கிறேன். அவங்க உன் அம்மாதானே  உன்னைப் போல நல்லா பார்த்துப்பாங்க நீ பயப்பட வேண்டாம் என்று பிடிவாதமாய் போராடினேன். அப்பாவும் இது படிப்பு விஷயம்! அவன் என்ன சின்னப் பையனா? வீட்டிலேயே அடைத்து வைப்பதற்கு? போய்ப் படிக்கட்டும் என்று எனக்காக பரிந்து பேசவும் வேறு வழியே இல்லாமல் பாட்டி வீட்டில் தங்கி படிக்க சம்மதித்தாள் அம்மா.

  ரொம்பத் தேங்க்ஸ்பா! என்று அப்பாவிடம் சொல்லவும், ”பாட்டி வீட்டுக்குப் போனதும் அம்மாவை மறந்துடாதே! அவ ரொம்ப சென்சிடிவ்! உம்மேல ரொம்ப பாசம் வைச்சிருக்கிறவ தினமும் வீடியோ கால் போட்டுப் பேசு! அப்பப்ப வந்து போ! அப்பத்தான் அவ மனசு நோகாமா இருப்பா!’ என்றார்.

  சரிப்பா! என்று சொல்லி இங்கு வந்து யூனிவர்சிட்டியில் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் நூற்றுக் கணக்கில் போன் செய்துவிட்டிருப்பாள் அம்மா!  பேசாமல் இதற்கு  நான் அங்கேயே இருந்திருக்கலாம் போல! நாளை நேரில் போய் இப்படியெல்லாம் தொந்தரவு செய்யாதே என்று சொல்லிவிட வேண்டியதுதான் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

 

சனிக்கிழமை! காலையிலேயே கிளம்பிவிட்டேன் பாட்டி மாமாவிடம் சொல்லிவிட்டு அதிகாலைப் பேருந்தில் டிரைவர் சீட்டுக்கு  பக்கத்தில் முதல் இருக்கையில் அமர்ந்தேன். அந்த சீட் எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பக்க கண்ணாடி வழியாக வெளியே தெரியும் காட்சிகளை கண்டு மகிழ்வது சந்தோஷமான ஒன்று. எப்படியும் இரண்டரை மணி நேரம் பயணம் இருக்கும். அந்த நேரம் இப்படி இயற்கையை ரசித்துக் கொண்டு வருவதால் இன்பமாய் கழியும்.  பஸ் கிளம்பியது. அப்படியே அரையிருட்டில் தூரத்தே தெரியும் காட்சிகளை பார்த்துக் கொண்டே வர ஜன்னல் வழியே வீசிய குளுமையான காற்று அப்படியே கண்களை சொக்கியது. உறங்கிப் போனேன்.

 

நேற்று அம்மாவிடம் பேசியதோடு சரி! இன்று கிளம்பும்போது போன் செய்யவில்லை! விடியற்காலை 4.30க்கு பஸ் ஏறியது. இதோ பொழுது விடிந்துகொண்டிருக்கிறது அம்மா எழுந்து வாசல் தெளித்துக் கொண்டிருப்பாள். இன்றைக்கு என்ன கோலம் போட்டிருக்கிறாளோ? கோலம் போடுவதில் என் அம்மாவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஒரு நாள் போட்ட கோலம் மீண்டும் வாசலை அலங்கரிக்கவே செய்யாது! தினமும் புதிது புதிதாகப் போடுவாள். அந்தத் தெருவே அம்மாவைக் கொண்டாடும். எப்படித்தான் புதுசு புதுசாக தினமும் கோலம் போடறீங்களோ! அதுவும் அச்சடிச்சா மாதிரி அவ்ளோ அழகா? என்னாலே இந்த மாதிரி போட முடியாதுப்பா! எதிர் ஆத்து மாமி வாயைப் பிளந்து அதிசயிப்பார்!  ஒரு வாரம் ஆகிவிட்டது அம்மா போட்டக் கோலத்தைப் பார்த்து இன்று பார்க்கப் போகிறேன். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அம்மா திடிரென என்னைப் பார்த்ததும் ஓடி வந்துக்  கட்டிக் கொள்வாள். ஏன் போன் பண்ணலேன்னு கடிந்து கொள்வாள்.

   என்னதான் அம்மாவை போனில் திட்டிப் பேசினாலும் அவள் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கியது மனம். இதோ எங்கள் தெருவுக்குள் நுழைந்து விட்டேன். நாயொன்று குரைத்தது என்னைப் பார்த்து  ஏய் என்று அதட்டவும் ஓடிப்போனது எதிர் வீட்டு மாமி வாசலில் நின்று கொண்டிருந்தாள். புன்னகைத்தேன். அவள் கண்டுகொள்ளவே இல்லை! வேறு யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். கேட் முன்பு அழகிய கோலம். மிதிக்காமல் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தேன். உள்ளே டீவி ஓடிக்கொண்டிருந்தது. அப்பா நியுஸ் பார்த்துக் கொண்டிருக்க அம்மா சமையல் கட்டில் அந்த காலை வேளையிலேயே குளித்துவிட்டு சமையலில் ஈடுபட்டிருந்தாள்.

 முதுகில் தொங்கிய பையை கழற்றி சோபாவில் போட்டேன். சத்தம் கேட்டுத் திரும்பிய அப்பாவிடம் உதட்டில் விரலை வைத்து சத்தம் போடாதீங்க! சர்ப்ரைஸ் என்று சொல்லிவிட்டு. மெதுவாக  சமையலறையினுள் நுழைந்தேன்.

  பில்டர் காபியின் மணம் மூக்கைத் துளைத்தது. அட ஒருவாரம் ஆகிவிட்டது இந்த அருமையான காபியைக் குடித்து! அம்மா சொல்வது சரிதான்! அம்மா இல்லாமல் என்னாலும் இருக்க முடியாது கொஞ்ச நாள் கழித்து அப்பாவை சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்துவிடும்படி சொல்ல வேண்டும். அங்கேயே ஒரு வாடகை வீடு பிடித்துக் கொண்டு ஐந்து வருடப் படிப்பை ஓட்டி விட வேண்டும். என்று நினைத்துக் கொண்டேன். சத்தமே செய்யாமல் அப்படியே அம்மாவின் பின்னால் சென்று கண்களை மூடினேன். அம்மாவிடம் துளியும் சலனம் இல்லை!

     அம்மா! உன் செல்லப் பிள்ளை வந்திருக்கிறேன்! உன் கண்களை மூடிக்கொண்டு நிற்கின்றேன் திரும்பிப்பார் உரக்க கூவுகின்றேன். அம்மா! நான் வந்துவிட்டேன்..!  எதுவுமே அங்கே நிகழவில்லை! ஒரு மகிழ்ச்சி துள்ளல், கோபம், எதுவும் இல்லை! அமைதி அமைதி பேரமைதி நிலவ, நான் கத்தினேன்.

     அம்மா! நான் வந்துவிட்டேன்! ஒருவாரமாய் என்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றாயே! இதோ கண் முன்னே வந்து நிற்கிறேன் சும்மா இருக்கிறாயே! அம்மா… அம்மா… நான் கத்த கத்த .. அம்மாவிடம் பதிலே இல்லை. இந்த அம்மாவுக்கு என்ன ஆகிவிட்டது? ஏன் இப்படி இருக்கிறாள் ? அம்மா! ப்ளீஸ்மா பேசும்மா! நான் வேண்டுமானால் இங்கேயே தங்கிவிடுகிறேன்! உன் விருப்ப்ப்படியே இங்கேயே படிக்கிறேன்! இப்படி என்னிடம் பேசாமல் இருக்காதே…! நான் சொல்லிக்கொண்டிருக்க

  அப்பா பதட்டமுடன் கையில் போனோடு உள்ளே வருகிறார்!  “மோசம் போயிட்டோம்டி! மோசம் போயிட்டோம்! என்று தலையில் அடித்துக் கொள்கிறார்!

    ஏம்ப்பா! என்ன ஆச்சு? என்னிடம் சொல்லுங்க? என்று நான் சொல்வதை அவர் காதில் வாங்கவில்லை!  “ நம்ம பையன் நம்ம கண்ணன் நம்ம வீட்டுக்கு வரும்போது பஸ் ஆக்ஸிடெண்டில் இறந்து போயிட்டானாம்!” என்று  அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அம்மா தடாலென்று கீழே சரிகின்றாள்

  அம்மா…! அம்மா! நான்  கத்த கத்த.. இப்போது அம்மா எழுந்து வருகிறாள்.  அம்மா! அம்மா! நான் வந்துட்டேன்மா! என்று நான் சொல்ல சிறு புன்னகையுடன் ”நானும் உன் கூட வந்துட்டேன் கண்ணா!” என்று கட்டி அணைக்கிறாள்.  

 

மன்றில் சிறுகதைப் போட்டிக்காக நேற்று எழுத நினைத்து எழுதவில்லை! ஏற்கனவே ஒரு கதை பதிவிட்டமையால் இதைப் பதிவிட வில்லை! எழுதவும் நேற்று முடியவில்லை!  இன்று பதிவிடுகின்றேன். நன்றி!

 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2