ரன் எக்ஸ்பிரஸ் மிதாலி ராஜ்! பகுதி 2

 


ரன்
எக்ஸ்பிரஸ் மிதாலி ராஜ்! பகுதி 2

 

 "எனது பரத நாட்டிய குரு, ஒரு கட்டத்தில் நடனமா, விளையாட்டா.. எது லட்சிய பயணம்..? என்பதை இன்றே முடிவு செய்து கொள் என்று சொன்னபோது, முடிவு எடுப்பது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், அன்று கிரிக்கெட்டை விட்டுவிட்டு மற்றொன்றை தொடர்வது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடைசியில் கிரிக்கெட்தான் எனது பயணம் என்பதை உறுதி செய்தேன்,"

     தன்னுடைய பரதநாட்டிய பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்ததைப்பற்றி இப்படி கூறுகின்றார் மிதாலி. ஆம் அவர் கிரிக்கெட்டை முழுவதுமாக நேசித்த காரணத்தினால் பரதம் ஆடுவதை கைவிட முடிவு செய்தார். இன்னும் சில நாட்களில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்ய முடிவு செய்ததை கைவிட்டார். கிரிக்கெட்டே தன் வாழ்க்கை என்று உறுதியான முடிவுக்கு சென்றார்.

 

அதன்பின்னர் கிரிக்கெட்டில் தன் முழுக்கவனத்தை செலுத்த துவங்கினார். இடைவிடாதபயிற்சி. ஒருகாலத்தில் அவரது சகோதரர்தான் தன் ஸ்கூட்டரில் வலுக்கட்டாயமாக மிதாலியை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்துச் செல்வாராம். ஆனால் கிரிக்கெட்தான் தன் கனவும் என்று மிதாலி முடிவு செய்த்தும் மாறிப் போனது. கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது கனவு நினைவானது.

 1999ம் வருஷம் மிதாலி அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கினார். அது அவரது பெரும் கனவு நினைவான நாள். அவரால் என்றும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. அயர்லாந்து அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளிய மிதாலி அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். 114 ரன்களை எடுத்து அந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார். உலகம் இந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது.

 அதுவரை இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் யாரும் சதம் அடித்த்து இல்லை! இவர் அந்தச் சாதனையை தன் முதல் போட்டியிலேயே தன் வசமாக்கிக் கொண்டார். அந்த ரன் எடுக்கும் தாகம் இன்னும் குறையவில்லை.

மிதாலி ஒரே நாளில் இப்புகழை எட்டிவிடவில்லை! கடுமையான உழைப்பும் தளராத மன உறுதியும் ரன் எடுக்க வேண்டும் என்ற தாகமும் அவருள் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தது. பல தடைகளை வென்று கடந்து இந்திய அணியில் இடம் பிடித்தபோது எல்லோரும் அவரை வழக்கமான ஒரு வீராங்கணையாகத்தான் பார்த்தனர். ஆனால் மிதாலிக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய ஓர் அவசியம் இருந்தது.தான் வழக்கமான வீராங்கனை அல்ல வேறுபட்டவள் என்று ஒவ்வொரு போட்டியிலும் அவர் உணர்த்திக் கொண்டே இருந்தார்.அவரது ரன் வேட்டை தொடர்ந்தது. 1999ல் இந்திய பெண்கள் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்தாலும் மூன்று ஆண்டுகள் கழித்துதான்  டெஸ்ட் போட்டியில் விளையாட மிதாலிக்கு வாய்ப்பு கிடைத்தது.

  காரணம் பெண்கள் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் பெருமளவில் விளையாடப் படுவது கிடையாது. அவ்வப்போது ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடக்கும். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு விளையாட வந்தபோது மிதாலி டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். 2002 ஜனவரி 14 பொங்கலன்று லக்னோவில் நடந்த அந்தப் போட்டியில் மிதாலி ராஜ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

   அந்தப் போட்டியில் ஆட்டம் இழந்தாரே தவிர நம்பிக்கை இழக்கவில்லை மிதாலிராஜ். ஆம் அவரது தன்னம்பிக்கை அடுத்தப் போட்டியிலேயே ஓர் உலக சாதனையை நிகழ்த்த உறுதுணையாக நின்றது. தன்னுடைய மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்திலேயே அதுவரை தனிநபர் அதிகரன் குவித்தவராக இருந்த கரேன் ரோல்டன் 209 ரன்கள் சாதனையை உடைத்து 214 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். இந்த நிகழ்வு இந்திய பெண்கள் கிரிக்கெட் உலகில் பெருமளவில் பேசப்பட்டது. மிதாலியின் எழுச்சி இந்திய பெண்கள் கிரிக்கெட்டையே எழுச்சியில் ஆழ்த்தியது. அதுவரை பெண்கள் கிரிக்கெட் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெண்கள் கிரிக்கெட் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பினர்.

  டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச்சதம் விளாசியபோது மிதாலிக்கு வயது 19 தான்.இளம் வீராங்கனை ஒருவர் இரட்டைச் சதம் விளாசியது பெரும் சாதனையாக இருந்தது.அதன் பின்னர் மிதாலியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வெற்றிக்கான பாதையை கண்டறிய ஆரம்பித்தது. மிடில் ஆர்டரில் அணியின் தூணாக நங்கூரம் பாய்ச்சி நின்று அதே சமயம் அடிக்க வேண்டிய பந்துகளில் ரன்களை குவித்து ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ் உமனாக வலம் வந்த மிதாலியை தேடி வந்தது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி.

 இந்திய கிரிக்கெட் வீர்ர்களின் கனவு இந்திய அணியின் கேப்டனாக ஆகவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். மிதாலிக்கும் அந்த கனவு இருந்தது. இந்திய அணியில் இடம்பிடித்து ஆறு ஆண்டுகள் கழித்து அவருக்கு அந்த கனவு நிறைவேறியது. 2005 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப் பட்டார் மிதாலி ராஜ். அதுவும் அது பெண்கள் உலக கோப்பைத் தொடர்.

 மிகப்பெரிய தொடர் அது. பெண்கள் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்திருந்தது ஆஸ்திரேலியா. அதற்கு சற்றும் குறையாமல் கோப்பை வெல்ல காத்திருந்தது இங்கிலாந்து. தொடரை நடத்தும் நாடாக தென் ஆப்ரிக்க அணி வலிமையாக இருந்தது. நியுசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, அயர்லாந்து,இவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணி மோத வேண்டும். மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இந்திய அணி அயர்லாந்து,மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளை வென்றது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுடனான போட்டிகள் கைவிடப்பட்டு புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்து அரையிறுதி போட்டியில் வலிமையான நியுசிலாந்தை சந்தித்தது.

அரையிறுதியில் மிடில் ஆர்டரில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி 91 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 204 ரன்களை எடுத்து நியுசிலாந்திற்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அமிதா ஷர்மாவும் நூஷன் அலி காதீரும் சிக்கனமாக பந்துவீசி தலா மூன்று விக்கெட்களை சாய்க்க இந்திய அணி நியுசிலாந்தை 164 ரன்களில் சுருட்டி 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதன் முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றது.

தேர்வுக்குழுத் தலைவர் சுதா ஷா, பயிற்சியாளர் சுபாங்கி குல்கர்ணி, மற்றும் மிதாலிராஜ் இணைந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை லைம் லைட்டுக்கு கொண்டுவந்த தினம் அன்று. இந்திய அணி உலக கோப்பையை கிட்டத் தட்ட நெருங்கிவிட்டது. மொத்த இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் இந்திய அணியை பார்க்க ஆவலாக இருந்தது.

அதுவரை உலக கோப்பையில் அசைக்க முடியாத அணியாக இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சவால் கொடுத்ததா? அடுத்த பகுதியில்!

 

Comments

  1. தன்னம்பிக்கையைத் தரும் பதிவு. தொடர்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2