இரண்டு ரூபாய்!”
“இரண்டு ரூபாய்!”
நான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து ஏதோ பெட்டிக்கடைகள் முளைத்திருக்க வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர் என்னோடு இன்னும் சிலர்.
நான் பேருந்தில் பயணித்து ஏறக்குறைய நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ தொலை தூரம் என்றால் பேருந்து பயணமே தவிர அருகில் உள்ள இடங்களுக்கு இருசக்கரவாகனத்தில்தான் பயணம். ஒருகாலத்தில் பேருந்திலேயே பயணித்தபோது பேருந்து கட்டணங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. நடத்துனர் கேட்கும் முன்னரே சரியான சில்லரையைக்கொடுத்து டிக்கெட் வாங்குவேன். நடத்துனர்கள் எல்லோரும் “நீங்கதான் சரியான சில்லரை கொடுத்து எங்க டென்சனை குறைக்கறீங்க!” என்று பாராட்டுவர். இப்போது டூ வீலர் வாங்கிவிடவே பேருந்து பயணம் குறைந்து போனது. பஸ் கட்டணங்களும் மறந்து போனது.
இன்று திடீரென்று பஸ் பயணம் செல்ல வேண்டியதாகிவிட்டது. டூ வீலரை சர்வீஸ் விட்டுவிட்டு அருகில் உள்ள நகரில் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம். சர்வீஸ் செண்டருக்கும் அருகில் உள்ள நகருக்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர்தான் தூரம் இருக்கும். ஏதாவது டூவீலரில் லிப்ட் கேட்டுச் சென்றுவிடலாம் என்றால் சமயம் பார்த்து வரும் எல்லா டூ விலர்களிலும் பில்லியனில் யாரோ அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். சரி இது ஆகாது… என்று நடந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். கையில் சுமை ஒன்றும் இல்லைதான். ஆனாலும் காலை வெயில் முதுகை சுட்டு முடியில்லாத மண்டையையையும் காய்ச்சி எடுத்தது.
கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி பஸ் நிறுத்தத்தில் கால்மணி நேரம் காத்திருந்த பிறகே பஸ் ஒன்று வந்தது. நல்ல கூட்டம். கூட்டத்தை பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று முண்டியடித்து ஏறினேன். புட்போர்டில்தான் நிற்க முடிந்தது. அதற்கு நேர்மேலே நின்றிருந்த கண்டக்டர் டிக்கெட், டிக்கெட் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். மேல்சட்டைப் பையினை மெதுவாகத் துழாவினேன். ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, பொன்னேரி ஒண்ணு கொடுங்க! என்றேன்
அது தனியார் பேருந்து! அரசுப் பேருந்து என்றால் அப்படியே எரிந்து விழுந்திருப்பார் கண்டக்டர். அந்த கண்டக்டரோ, சில்லரை இல்லையா? ஏழு ரூபாய் இருந்தா கொடுங்க! என்றார்.
பையைத் துழாவி இல்லையே! என்றேன். சரி இந்தாங்க அஞ்சு ரூபா! ரெண்டு ரூபா இருந்தா கொடுங்க! என்றார்.
ரெண்டு ரூபா இருக்கும்! ஆனா படியிலே இருக்கேன்! இறங்கறப்ப கொடுக்கிறேனே! என்றேன்.
கண்டக்டரும் பரவாயில்லை! இறங்கரப்ப கொடுங்க! என்றார்.
எப்படியோ தொத்திக் கொண்டு பொன்னேரி வந்துவிட்டேன். கண்டக்டர் கூட்டத்தை விலக்கி முன்னே சென்று விட்டார். பழைய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் இடமும் கிடைக்க வசதியாக அமர்ந்துவிட்டேன். அப்படியே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டேன். அந்த இரண்டு ரூபாய் எனக்கு மறந்தே போய்விட்டது. கண்டக்டரும் கேட்கவில்லை.
நான் அடுத்து செல்ல வேண்டிய ஊருக்கான வண்டி புறப்பட்டுக் கொண்டிருக்க அதில் மடமடவென்று ஏறிவிட்டேன். அந்த பஸ்ஸில் அமர்ந்து டிக்கெட் வாங்கும் போதுதான் அடடே! அந்த பஸ்ஸில ரெண்டு ரூபாய் கொடுக்காமல் விட்டுவிட்டோமே என்று தோன்றியது.
விழாவில் கலந்துகொண்டேன்! ஆனாலும் மனம் என்னவோ அந்த இரண்டுரூபாயையே சுற்றி சுற்றி வந்தது. ரெண்டுரூபாயை கொடுக்காம வந்துட்டோமே! அந்த கண்டக்டர் என்ன நினைப்பார்? என்று தவித்துக் கொண்டிருந்தது மனசு.
சுவையான மாம்பழம் ஒன்றை சாப்பிட்டு முடித்ததும் அதனுடைய நார் ஒன்று பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டால் அதை எடுக்கும் வரை ஓர் அசவுகர்யமாக இருக்குமே அதே போன்று இருந்தது.
அந்த மங்கல நிகழ்ச்சியில் என் கவனம் செல்லாமல் இந்த ரெண்டு ரூபாயையே நினைத்துக் கொண்டிருக்க என் அருகில் அமர்ந்தவர் கேட்டே விட்டார்.
“என்ன ஓய்! என்ன ஏதோ சிந்தனையிலே இருக்கீர்! கவனம் இந்த பக்கமே காணோம்!”
“அதெல்லாம் ஒண்ணுமில்லையே!”
“சும்மா சொல்லும் ஓய்! கவனம் இல்லேன்னா நான் அங்க தூரத்துல நின்னு கை அசைக்கிறேன்! நீர் விட்டத்தை பார்த்துகிட்டு உக்காந்து இருக்கீர்! என்ன ஆச்சு?”
“ஒண்ணுமில்லே ஓய்! பஸ்ஸில ஒரு ரெண்டு ரூபா விட்டுட்டேன்!”
“ ரெண்டாயிரமா? பிக்பாக்கெட்டா!”
“ யோவ்! நீ வேற பெரிசா பீதியை கிளப்பிக்கிட்டு! ரெண்டுரூபா சில்லரை…”
அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார்! பைத்தியம் முத்திவிட்டதோ என்பது போல இருந்தது அவர் பார்வை! “என்னய்யா ரெண்டு ரூபா தொலைச்சதுக்கா இவ்வளவு பில்டப்!”
“ நான் தொலைக்கலை! கண்டக்டருக்கு ரெண்டு ரூபா சில்லரை தர மறந்துட்டேன்!”
இப்போது அவர் என்னை முழுப்பைத்தியம் என்றே தீர்மானித்து இருக்க வேண்டும். “யோவ்! அவனவன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லேயே உலகம் பூரா சுத்தி வரான்! இவரு ரெண்டு ரூபா சில்லரை தரலையாம்! உக்காந்து கவலைப்பட்டுக்கிட்டு இருக்காரு! நீர் யோக்கியந்தான்யா! ஒத்துக்கறேன்! என்று ஏளனம் செய்துவிட்டு போய்விட்டார்.
அருகில் அமர்ந்திருந்த சிலரும் பெரிதாக ஜோக் கேட்டதைப் போல சிரித்துவிட்டு, விட்டுத் தள்ளுங்க சார்! அவனுங்க எத்தனை முறை நம்ம கிட்ட ஒருரூபா, ஐம்பது பைசான்னு அடிக்கிறானுங்க! இன்னிக்கு உங்க டர்னுன்னு நினைச்சுக்கோங்க! என்றனர்.
ஆனாலும் என் மனம் அமைதி அடையவில்லை! ஒரு மாதிரி அலைந்து கொண்டிருந்தது. விழா முடிந்து மாலையில் புறப்பட்டேன். பொன்னேரி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். காலையில் என்னை இறக்கிவிட்ட தனியார் பேருந்து அங்கு இருக்கிறதா என்று பார்த்தேன். ஊகும்! காணோம்!
என்ன செய்யலாம்? அங்கே இருந்த நேரக் கண்காணிப்பாளரிடம் விசாரித்தேன்.
“அந்த பெரும்பேடு போற பஸ்ஸா?”
“ஆமாங்க!”
“இப்ப போயிருக்கு! இன்னும் ஒரு அரைமணி இல்லே முக்காமணி நேரத்துல ரிட்டர்ன் வரும்! ஆனா பெரும்பேடு போகாது ரெட் ஹில்ஸ்தான் போவும்!”
“ரொம்ப நன்றி சார்!”
அந்த முக்கால் மணி நேரமும் முள்ளின் மேல் நின்றிருப்பது போல ஒரு அவஸ்தை! இந்த நேரத்தில் சர்வீஸ் செண்டருக்கு சென்று வண்டியை எடுத்து வந்து விடலாமா? என்று தோன்றியது. ஆனால் அதற்குள் அந்த பஸ் வந்துவிட்டால்?
அங்கேயே காத்திருந்தேன்.
என் பொறுமையை சோதித்த அந்த பேருந்து பொறுமையாக ஒரு மணி நேரம் கழித்து வந்து நின்றது. பஸ் நின்றதும் நிற்காததுமாய் ஓடிச் சென்றேன்.
கண்டக்டர் படியில் இருந்து இறங்கியபடியே, இருங்க சார்! பேசண்ஜர்ஸ் இறங்கட்டும்! பொறுமையா வாங்க! சீட் இருக்கு! என்றார்.
எனக்கு அவரை நினைவிருந்தாலும் அவர் என்னை சுத்தமாய் மறந்துவிட்டிருந்தார்.
“சார்! என்னைத் தெரியலையா?”
“தெரியலையே! யாரு நீங்க?”
“காலையிலே உங்க வண்டியிலே வந்தேன். பத்து ரூபா கொடுத்து ஏழுரூபா டிக்கெட் எடுத்தேன்! நீங்க அஞ்சு ரூபாய கொடுத்து ரெண்டு ரூபா கேட்டீங்க! நான் படியில தொங்கிட்டு வந்ததாலே அப்புறமா தரேன்னு சொன்னேன். நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க! ஆனா நான் மறந்து போய் அவசரத்துல அந்த ரெண்டு ரூபாயை தராம இறங்கிட்டேன். வெரி சாரி சார்! இந்தாங்க அந்த ரெண்டுரூபாய்! இதை கொடுக்காம விட்டுட்டேமேன்னு என் மனசாட்சி என்னை வாட்டி வதைச்சுன்னு இருந்தது! இப்ப நிம்மதியா ஆயிருச்சு!” என்று சொல்லி ரெண்டுரூபாயை நீட்டினேன்.
கண்டக்டரால் நம்பவே முடியவில்லை! “ சார்! நான் எப்பவோ அதை மறந்துட்டேன்! என் டூட்டியிலே எத்தனையோ பேர் என்கிட்ட சில்லரை வாங்காம போயிருவாங்க! சிலபேர் மறுநாள் இல்ல அடுத்த ட்ரிப்புல கேட்பாங்க! கொஞ்சம் கூட யோசிக்காம இல்லேன்னு நிர்தாட்சண்யமா சொல்லியிருக்கேன். எனக்கு அது மத்தவங்க காசுன்னு கொஞ்சம் கூட ஒறைச்சதே இல்லை! ஒரு ரூபா ரெண்டு ரூபாய்தானேன்னு அலட்சியமா இருந்திருக்கேன்! இன்னிக்கு நீங்க இந்த ரெண்டு ரூபாயை திருப்பிக் கொடுத்து என் கண்ணை திறந்து விட்டிருக்கீங்க! இனிமே யாருடைய சில்லரையையும் எடுக்காம ஒழுங்கா கொடுத்திருவேன்! இது சத்தியமா சார்! நீங்க உண்மையிலேயே கிரேட் சார்!” என்றார் அந்த கண்டக்டர்.
“இதெல்லாம் பெரிய விசயம் இல்லேப்பா! நான் தப்பு செஞ்சேன்! அதை திருத்திக்கிட்டேன்! இந்த சின்ன விசயம் உன்னை திருத்தி இருக்கே! அதுதான் கிரேட்! நீதான் கிரேட்! காட் ப்ளஸ் யூ!” என்று வாழ்த்தி விட்டு திரும்பினேன் நான்.
மீள்பதிவு)
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்தவும். நன்றி!
வாசிக்கத்தொடங்கியதும் வாசித்த நினைவு வந்தது. பின்னர் தெரிந்தது மீள் பதிவு என்பதும்...நல்ல கதை சுரேஷ்...
ReplyDelete