இன்று முதல் 8மணி நேரம் மின்வெட்டு! இருண்ட தமிழகம்!

 
பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின் பற்றாக்குறையால், ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது. புதிய மின் திட்டங்கள் அமலாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். செயலில் உள்ள திட்டங்களிலும், சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை. ஆனால், பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக மின் வாரியம் திணறி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 1 மணி நேரம், புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில், 3 மணி நேரம், கிராமப்புறங்களில், 6 மணி நேரம் என, மூன்று விதமாக, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர, பெரும்பாலான இடங்களில், இதை விடவும் அதிகமான நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.பாகுபாடு கிடையாது: நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே
கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது. எந்த நேரம்?இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.
இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9
முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும். பற்றாக்குறையும், பயன்பாடும் அதிகரித்து வருவதால், தமிழக அரசுக்கும் வேறு

வழியில்லாதது போல் தான் தெரிகிறது.மாலை, 6 மணிக்கு மேல், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டரைத் தான் பயன்படுத்த வேண்டும்; அரசின் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. மின் உற்பத்தி சீராகும் வரை, புதிய இணைப்புகள் வழங்கப்படாது என்பன போன்ற முடிவுகளை மின்வாரியம் எடுத்தால், பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். அப்பாவி பொதுமக்களும், தொழில் துறையும் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும்.முதல்வரின் மவுனம் கலையுமா? தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்குமா?மின் தட்டுப்பாட்டால் திணறும் ஒரு மாநிலத்தில், புதிய மின் உற்பத்தித் திட்டம் துவக்கப்படாமல் தடுக்கப்படுவது, ஒரு வினோதம் தான். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவக்கப்பட்டால், அதில், தமிழகத்தின் பங்காகமட்டும், 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இன்றைய பற்றாக்குறை நிலையில், இது மிகப்பெரிய அளவு. ஆனால், அந்த நிலையத்தைத் துவக்கவிடாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். மத்திய அரசு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், பேச்சு நடத்தியும், விளக்கங்கள் பல அளித்தும், இவர்கள், தங்கள் பிடிவாதத்தை மட்டும் தளர்த்துவதாக தெரியவில்லை. எல்லா பிரச்னைகளிலும் மன உறுதியோடு நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், இந்த விஷயத்தில் மட்டும் ஏன் மவுனம் காக்கிறார் என்பது, புரியாத புதிராக இருக்கிறது. ஒரு படி மேலே போய், "முதல்வரின் மவுனத்தில் உள்நோக்கம் இருக்கிறது' என்றே, தி.மு.., குற்றம் சாட்டிவிட்டது. அப்படியும், அவரது மவுனம் கலையவில்லை.முதல்வரின் மவுனம் கலையுமா? தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்குமா?
-
நமது சிறப்பு நிருபர் -

நன்றி தினமலர்

Comments

  1. It is a fate of this nation.. What to do....? Let us hope the best in the coming days...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2