கவர்ச்சிக்கு மரியாதை! ஒரு பக்க கதை!
கவர்ச்சிக்கு மரியாதை!
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
கண்ணன் தன் மனைவி கோதையுடன் பக்கத்து டவுனுக்கு பைக்கில் சென்று
கொண்டிருந்தான். வீட்டுத்தேவைக்காக சில அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும்
என்று கோதை நச்சரித்தமையால் அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.
அழகான கிராமத்து சாலையின் ஓரத்தில் . ஒரு முலாம்பழத்தோட்டத்தில் பழங்களை பறித்து சாலையோரம் குவித்து வைத்திருந்தார்கள். அங்கே சிறியதும் பெரியதுமாய் அடுக்கியிருந்த
பழங்களைப் பார்த்ததும், என்னங்க! முலாம் பழம் தோட்டத்துலே பழுத்தது விக்கிறாங்க!
வெயிலுக்கு ஜுஸ் போட்டு குடிச்சா உடம்புக்கு நல்லது. ஒண்ணு வாங்கிகிட்டு போலாங்க!
என்றாள் கோதை.
வண்டியை நிறுத்திவிட்டு பழங்களில் ஒரு பெரிய பழத்தை பொறுக்கி எடுத்து எவ்வளவுப்பா?
என்றாள். அறுபது ரூபா கொடும்மா!
”என்னது இந்த பழம் அறுபது ரூபாயா? நாற்பது ரூபாய்க்கு கொடு!”
“கட்டுப்படியாகாதும்மா! அஞ்சு ரூபா கொறைச்சு கொடுங்க!”
“நாற்பதுன்னா கொடு! இல்லேன்னா வேணாம்!”
” வராதும்மா!”
” கொட்டிக்கிடக்குது பழம்! குறைச்சு கொடுக்க அவனுக்கு மனசே வர மாட்டேங்குது வண்டியை எடுங்க போகலாம்!”
டவுனுக்கு சென்று வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி முடித்ததும் அந்த குளிரூட்டப்பட பழ அங்காடிக்கு சென்றனர்.
”இதோ இருக்கு முலாம் பழம்! அதை எடுங்க!
அங்காடியில் இருந்தவர் எடுத்தார் எடை போட்டார். 6கிலோ வருதுங்க! கிலோ இருபது ரூபா 120 ரூபா வரும்…”
பில் போடுங்க! என்று பேசாமல் பணத்தை எண்ணிக் கொடுத்த மனைவியை ஒன்றும்
செய்ய முடியாமல் கவர்ச்சிக்குத்தான் இந்த காலத்தில் மரியாதை என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான் கண்ணன்.
நல்ல கதை. இந்த காலத்தில் இப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ReplyDelete