தித்திக்கும் தமிழ்! பாகம் 2 பகுதி 1 பேய் பிடித்திட்ட தூதன்!
தித்திக்கும் தமிழ்!
நம் தமிழ் பாரம்பரியத்தில்
பெண் பார்க்கும் படலம் என்பது பழங்காலத்தொட்டு நடைமுறையில் உள்ளது. நல்ல பெண்கள் உறவிலோ
அசலிலோ இருப்பது அறிந்தால் பெற்றோர் தம் மகனுக்கு மணமுடிக்க பெண்ணுக்குத் தெரிந்தவர்
வாயிலாகவோ உறவினர் வாயிலாகவோ தூதனுப்பி தம் பிள்ளையின் தகுதிகளை எடுத்துக் கூறி பெண்கேட்பது
வழக்கமான ஒன்று.
அப்புறம் பெண்பார்க்கும்
படலம் சொஜ்ஜி, பஜ்ஜி எல்லாம் அரங்கேறும். இன்றைய அவசரயுகத்தில் ஆன்லைன் திருமணங்கள்
மேட்ரிமோனியல்கள் மூலம் நடைபெற்றாலும் பாரம்பரியப்படி இப்படி பெண்கேட்டு தூது போவது
இன்னும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படி தூது போகின்றவர்பாடு
பெரும்பாலும் கஷ்டம்தான். திருமணமாகி அவர்களிடையே ஏதாவது மனஸ்தாபங்கள் வந்துவிட்டால்
தூது போனவரைத்தான் குறை சொல்வார்கள். அந்த பாவி மனுஷன் தான் என் பொண்ணை பாழுங்கிணத்துலே
கொண்டு தள்ளிட்டான்.. அவன் மட்டும் இல்லைன்னா என் பொண்ணை நல்ல இட்த்திலே கொடுத்திருப்பேன்
என்று காது படவே ஏசுவார்கள். பிள்ளைவிட்டிலும் அவர்கள் சொல்லித்தான் நாம் தூதுக்குச்
சென்றிருந்தாலும் “இந்த பயலுக்கு எல்லாம் தெரிஞ்சும் நம்மை கழுத்தறுத்துட்டான்! நாம
அந்தப் பொண்ணை பார்க்கச் சொன்னப்பவே விஷயம் ஏதும் சொல்லாம கமுக்கமா இருந்து மாட்டிவைச்சிட்டான்
என்று இருபக்கமும் மத்தளமாக நம்மை அடித்து நொறுக்கிவிடுவர்.
இது இந்தக் காலத்தில் என்றால் அந்தக் காலத்திலும்
இப்படி தூது போன ஒருவர் அடிபட்டு வந்திருக்கின்றார். அதை பழம்பாடல் ஒன்று அழகாக சொல்லுகிறது.
அந்தப் பாடலை படிப்போமா?
விற்ற தார்கலை பாதி கொண்டுவ
னத்தி லேயழ
விட்டதார்
வெஞ்சி றைப்புக
நின்ற தார் உடை
உரிய விட்டு விழித்ததார்
உற்ற தாரம்வி ரும்பி
யின்னமும்
மன்னர் பெண்கொள ஆசையோ?
உமிழடா, மணம் என்ற
வாய்கிழி
ஓலை காற்றில் ஒழுக்கடா,
இற்றை நாள்வரை
கொற்ற வன் சிறு
முத்தன் வாழிடை
மெச்சியூர்
ஏற்ற மால்வரை மறவ வேமிறை
எங்கள் எச்சிக
லந்தபின்
பெற்ற வேலவ ருக்கு
யாமொரு
பெண்வ ளப்பி லளித்தனம்
பெற்ற பெண்கள்
கொடுத்த தாருரை
பேய்பி டித்திடு
தூதனே?
ஐவகை நிலங்களில்
மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி. அத்தகைய குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடமறவர் பெண்ணை மணப்பதற்காக ஒரு மன்னன் தூது அனுப்புகின்றான்.
அந்த தூதனிடம்
தம் குல மரபும் பெருமையும் வீரமும் தோன்ற மறுத்துக் கூறுகின்றாள் வேடர்குல பெண்.
கலம்பகத்து வகையில்
மறம் என்னும் துறையைச் சேர்ந்த பாடலான இது பதினான்கு சீர் ஆசிரியச் சந்த விருத்தமாகும்.
விளக்கம்: மன்னனென்ற பேயினால் பிடிக்கப்பட்ட தூதனே! அரச
குலத்தாரைப் போல எங்கள் குலத்தில் மனைவியை விற்றது யார். மனைவி உடையில் பாதியைப் பறித்துக்
கொண்டுஅவளை நள்ளிரவில் வனத்தில் அழும்படி விட்டது யார்? கொடிய சிறையில் புகவிட்டு வாளா இருந்தவர் யார்?
பகைவன் தம் மனைவியின் ஆடையை உரிதல் கண்டும்
தடுக்காமல் விழித்தது யார்? இவையெல்லாம் உங்கள் மன்னர் குலத்தார்க்கே உரியவை.
அப்படியிருக்க இன்னும் தாரத்தை விரும்பி பெண் கொள்ள ஆசையா? உங்களுக்கு நாணமில்லையா?
சீ! உமிழடா இவனை! மணம்பேசிவந்த இவன் வாயைக் கிழி! அந்த்த் தூது ஓலையை பிடுங்கி காற்றிலே
விடு! இன்று வரையிலும் கொற்றவனாகிய சிறுமுத்தன் வாழும் இந்த ஊரை விரும்பி அவனுடைய மலையிலே
வாழ்கின்ற மறவர் நாங்கள் இப்படியொரு செயலை செய்யவில்லை. எங்களிடையே வந்து எச்சிலையும்
சிறிது உண்டு கலந்துபின் நாங்கள் வளர்த்த பெண்ணை வள்ளியை வேலவனுக்குக் கொடுத்தோம்.
பெற்ற பெண்களை யார் கொடுத்தார்கள்? நீயே உரைப்பாயாக!
மனைவியை விற்றவன்
அரிச்சந்திரன் வனத்திலே ஆடையைக் கிழித்துக் கொண்டு தவிக்கவிட்டது
நளன் சிறைபுகவிட்டது இராமன் துகில் உரிக்கையில் சும்மா இருந்தவர் பாண்டவர்கள்.
இவர்கள் அனைவரும் மன்னர்குலத்தினர். இவர்களின் செயல்களை இழுக்காக கூறிய சொல்நயமும்,
தங்கள் குலத்திலே கூடி தங்களுடன் சோறுண்ட வேலவனுக்குக் கூட தாங்கள் வளர்த்த பெண்ணான
வள்ளியைத்தான் மணம்புரியக் கொடுத்தோம் பெற்ற பெண்ணைக் கொடுக்கவில்லை என்று தங்கள் குலப்பெருமையை
வியந்தோதும் நயமும் பாராட்டத் தக்கது.
இந்த மறவர்குலப்
பெண் கூறும் அரசர்களான அரிச்சந்திரன், நளன், இராமன், பாண்டவர்கள் அனைவரும் புராணத்திலும்
இலக்கியத்திலும் வியந்தோதி மன்னர்குல திலகமாகவும் புராண புருஷர்களாகவும் அறியப்பட்டவர்கள்.
அவர்களை இகழ்ந்து தம் குலத்தை உயர்த்தி பாடும் மறவர் குலப் பெண்ணின் தமிழ்தான் எத்தனை
அழகு.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில்
மீண்டும் ஒரு அழகான பாடலோடு சந்திப்போம்! நன்றி!
பதிவுகுறித்த உங்கள்
கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி! வணக்கம்.
அழகான பாடலோடு அருமையான விளக்கம்...
ReplyDeleteபாடலும் பாடலுக்கான விளக்கமும் நன்று. பாராட்டுகள்.
ReplyDelete