விருந்து

 

விருந்து

  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 




ஆனந்த இல்லத்தின் நூறு குழந்தைகள் உணவு உண்ணும் அறையின் வரிசையாக அமர்ந்திருக்க அவர்கள் முன்பே சாதம், புளியோதரை,கூட்டு, பொரியல், சர்க்கரைப் பொங்கல், வடை, என்று சுவையான உணவு பாத்திரங்களில் நிரம்பி வழிந்தது.

சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைக்க நாவில் எச்சில் ஊறியது அந்த இல்லக் குழந்தைகளுக்கு. இன்னும் சற்று நேரத்தில் இன்றைய உணவை அளிக்கும் விருந்தினர் வந்ததும் உணவு பரிமாறப்படும். இப்படி வகை வகையான உணவுகள் வாரத்தில் ஒரு முறை தான் கிடைக்கும். சில சமயம் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

வழக்கமாக சாதம், கூட்டு, பொரியல் சாம்பார் மோர், ஊறுகாய் தான் உணவு. யாருக்காவது பிறந்தநாள் திருமணநாள், கல்யாணம் என்று விஷேசம் வரும்போது இந்த குழந்தைகளுக்கும் விஷேசம். அன்று விருந்தினர் வந்ததும் இறைவணக்கம் பாடி முடித்ததும் அவர் ஒரு சிலருக்கு பரிமாறி புகைப்படம் எடுத்துக் கொள்வார். பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும். உண்டு முடித்தபின் அனைவரோடும் மீண்டும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு விருந்தினர் கிளம்பிச்செல்வார். அனைவரும் விருந்தினருக்கு கை கூப்பி நன்றி தெரிவிப்பர்.

 ஒவ்வொரு விருந்தினர் வந்து போகும் போதும் தினேஷின் முகம் மட்டும் சுருங்கியிருக்கும். ஏதோ வேண்டா வெறுப்பாய் அந்த உணவை உண்பான். புகைப்படம் எடுக்கும் போது அவன் முகம் சுண்டைக்காயாக சுருங்கி இருக்கும். வழி அனுப்புகையில் வரவே மாட்டான். அவனுக்கு இப்படி போட்டோ எடுப்பது சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது.

 

 

 மதியம் 12 .30 மணிக்குசர் சர்என்று இரண்டு கார்கள் வந்து நின்றன.   தொழிலதிபர் கார்த்திகேயனும் அவரது மகன் அனிருத்தும் முதல் காரிலிருந்து இறங்க . மற்றொரு காரில் இருந்து சீருடை அணிந்து சில பணியாளர்கள் இறங்கினார்கள்.

  சார்! டைம் ஆயிருச்சு! பிள்ளைங்க ரெடியா? பறிமாற ஆரம்பிச்சிரலாமா?” என்றார் கார்த்திகேயன்  

  எல்லாம் ரெடியாக உட்கார்ந்திருக்காங்க! நீங்க வந்ததும் பிரேயர் பண்ணிட்டு ஒரு ரெண்டு பேருக்கு சாப்பாடு போட்டு போட்டோ எடுத்ததும் எல்லோருக்கும் பறிமாறிடச் சொல்றேன். அவங்க சாப்பிட்டு முடிச்சதும் ஒரு குருப் போட்டோ எடுத்துட்டு நீங்க கிளம்பிடலாம் சார்! அதிகபட்சம் ஒரு அரைமணிநேரம்  ஆகும். விடுதிக்காப்பாளர் சொல்ல..

நோ நோஎன்று மறுத்தார் கார்த்திகேயன்.  .

 ப்ரேயர் பண்ணிட்டு நாம எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்!போட்டோ எல்லாம் வேண்டாம் . பரிமாற நான் ஆட்களை கூட்டி வந்துட்டேன்! என்று அவர் சொன்னபோது ஆச்சர்யமாக பார்த்தார் விடுதி காப்பாளர்.

  “இல்லே சார்! வழக்கமா ப்ரேயர், போட்டோ எல்லாம் எடுத்தபிறகுதான் சாப்பாடு பரிமாறுவோம்!”

   வழக்கத்தை நாம மாத்துவோம்!” . இங்க இருக்கிற பிள்ளைங்களும் என் பிள்ளைங்க மாதிரி  அவங்களுக்கு சாப்பாடு போட்டு அதை போட்டோ எடுத்து விளம்பரம் தேடிக்கிறது சரியில்லை! ஏதோ இன்னிக்கு எனக்கு வசதியிருக்கு! நாலு பேருக்கு உதவறேன்! சில காலத்துக்கு அப்புறம் இதே  இல்லத்துலே இருந்து ஒரு குழந்தை வளர்ந்து என்னை மாதிரி நாலு பேருக்கு உதவலாம். அப்போ நானும் உதவி வாங்கிற நிலையிலே இருக்கலாம். உதவனுங்கிறது மனுஷனோட அடிப்படை பண்பு. அதை விளம்பரம் பண்ணிக்கும் போது அந்த பண்பே கெட்டுப்போயிருது.

  இந்த குழந்தைங்க மனசுலே நாம தாழ்ந்து போயிட்டோம் என்கிற எண்ணம் வரவே கூடாது. அதனாலே எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம் வாங்க!  விடுதிகாப்பாளர் எதுவும் பேசாது உடன் செல்ல

   .ப்ரேயர் முடிந்து பிறந்தநாள்வாழ்த்துபாடி அனைவரும் சாப்பிட அமர்ந்த்தும் உடன் கார்த்திகேயனும் அவர் மகனும் அமர்ந்துசாப்பிட்டதும் தினேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு போட்டோக் கூட எடுக்கவில்லை என்பது அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. முதல் முறையாக அவன் முகத்தில் புன்னகை.  

   

 கார் கிளம்புகையில் ஓடோடி வந்தான் தினேஷ். தொழிலதிபர் கார்த்திகேயன் கரங்களை பிடித்துக் கொண்டு மிக்க நன்றிசார்! என்றார்  .

   

  தம்பி! இதுவரைக்கும் நீ இப்படி சாப்பிடும் போது மகிழ்ச்சியா இருந்தது இல்லேன்னும் சாப்பாடு போட்டவங்களுக்கு நன்றி சொன்னதும் இல்லேன்னு வார்டன் சொன்னார். இன்னிக்கு நீ மகிழ்ச்சியா இருக்கே! எனக்கு நன்றி சொல்றே? அதுக்கு காரணம் எனக்குத் தெரியும். இன்னிக்கு நான் உங்களோட உட்கார்ந்து சாப்பிட்டேன். போட்டோ எடுக்கவே இல்லை! இதுதானே உன் மகிழ்ச்சிக்கு காரணம்.

     ’ஆமாம் சார்! ஆனா இது எப்படி உங்களுக்குத் தெரியும்.?’

  ”நானும் உன்னை மாதிரிதான் தம்பி! ரொம்பவும் சுயமரியாதைக்காரன்! உன் வயசுலே நானும் இதே மாதிரி ஒரு ஆசிரமத்துலேதான் வளர்ந்தேன். அங்க இந்தமாதிரி சாப்பாடு போட்டு போட்டோ எடுத்து அலப்பறை பண்ற போதெல்லாம் எனக்கு அப்படியே மனசு கூசிப்போகும். அப்பவே மனசிலே உறுதி எடுத்தேன். நல்லா படிச்சு உயர்ந்து நாமும் இப்படி நாலு பேருக்கு உதவி செய்யணும். ஆனா போட்டோ எடுத்து விளம்பரப்படுத்திக்க கூடாதுன்னு முடிவு செய்தேன். அதை நடைமுறைப் படுத்திகிட்டும்வரேன்! நீயும் நல்லா படி! வருங்காலத்துலே உயர்ந்து நிற்கும்போது என்னைப் போலவே இரு! வாழ்த்துகள்!” என்று அவர் சொன்னதும் அவர் கரங்களில் முத்தமிட்டான் தினேஷ்.

 

டிஸ்கி: முகநூலில் மத்யமர் என்ற குழுவில் இருக்கிறேன். அங்கு ஒரு போட்டிக்காக இந்த  கதை எழுதினேன். அதற்குள் நேரம் கடந்துவிட்டது அதனால் அங்கு பதிவிடவில்லை. இங்கு பதிவிட்டுள்ளேன். உங்கள் பொன்னான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

  

Comments

  1. நல்லதொரு கதை.

    விளம்பரம் தேடும் உலகம் இது. மாறுபட்டு இருப்பது நல்லதே.

    ReplyDelete
  2. இன்றைக்கும் இந்த தீண்டாமை நடப்பது உண்மை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2