சகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்!

சகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்!

 சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30 மணி முதல் 6-00 மணிவரை பிரதோஷ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதோஷத்தில் இருபது வகைகள் உண்டு என்று ஆகமத்தில் கூறப்படினும் மாதம் இருமுறை இந்த இரண்டு பிரதோஷங்கள் சிவாலயங்களில் விமரிசையாக கொண்டாடப்பபடும்.
     கார்த்திகை மாத தேய்பிறை திரயோதசி நாளில் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டார். அது ஒரு சனிக்கிழமை என்று கூறப்படுவதால் சனிக்கிழமை வரும் பிரதோஷங்கள் பெருமை வாய்ந்ததாகவும் விஷேசமாகவும் கொண்டாடப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதம் தேய்பிறை சனிப்பிரதோஷம் சனிமஹாப் பிரதோஷம் என்று வழங்கப்பட்டு சிறப்பான ஆராதனைகள் சிவனுக்கு நடைபெறுகின்றன.
   பிரதோஷ வழிபாடு சகல வினைகளையும் போக்கக் கூடியது, வறுமை, கடன், மரணபயம், ரோகம், போன்ற சகல துயரங்களை வேரறுக்கக் கூடியது என்று காரணாகமம் என்ற ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. சனிப்பிரதோஷம் இன்னும் விஷேசமானதால் சனிப்பிரதோஷத்தன்று உபவாசம் இருந்து சிவனை நினைந்துருகி சிவாலயங்களுக்கு சென்று அபிஷேகப் பொருட்களை சமர்ப்பித்து சிவனுக்கும் நந்தியெம்பெருமானுக்கும் செய்யக்கூடிய பல்வேறு அபிஷேகங்களை கண்ணாறக் கண்டு மகிழ்ந்து இன்புற்று நம் வேண்டுதல்களை வேண்டி வருவோமானால் சிவனருள் என்றும் நிரந்தரமாக நம்மிடம் இருக்கும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று  செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

  சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில்  மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்
மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.
 . பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது
நாம் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதில் ஒரு சிறு தொகையை சனிப்பிரதோஷ வேளையில் தர, நம் கடன்கள் சீக்கிரம் அடைபடும் என்பார்கள்.
 தினமும் மாலைவேளையை தினப்பிரதோஷம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை, திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் என்றும், மகாசிவராத்திரிக்கு முன் வரும் பிரதோஷம் மகாபிரதோஷம் என்றும் அழைக்கப்படுகின்றன. மகாசிவராத்திரிக்கு முன்வரும் பிரதோஷம் சனிக்கிழமையன்று வந்தால் அது சனி மகாபிரதோஷமாகும். அன்று ஈசனை தரிசித்தால் ஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும்.
 தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்பவர்களுக்கு சிவலோக பதவி கிட்டும்பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம்போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாராயணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.

 பிரதோஷ காலங்களில் ஈசனின் கருவறை கோமுகம் அருட்சக்தியோடு துலங்குவதால் அதை பக்தியுடன் வணங்க வேண்டும். ஆலகால விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் முன்னும் பின்னுமாக ஓடியதை நினைவுறுத்தும் வகையில் பிரதோஷ வேளையில் சோமசூக்தப் பிர தட்சிணம் செய்யப்படுகிறது. அது அனந்தகோடி பலனைத் தரும் என்பர்.
சனிப்பிரதோஷ காலத்தில் சிவனுக்கு எள் அன்னம் நிவேதனம் செய்யப்படுகிறது. எள் பிதுர்களுக்கு பிரத்தியேகமான தானியம். சனிபகவானுடைய தானியம். எள்+ எண்ணெய்- நல்ல எண்ணெய். சமையலுக்கு மிகவும் உகந்தது. எள்- தீமையை அகற்றி நன்மையை தரக்கூடிய ஒரு தானியமாகும்.
   சனிப்பிரதோஷத்தில் சிவாலயங்களில் எள் அன்னம் பிரசாதம் செய்ய பொருட்கள் வாங்கியளித்து வழிபாடு செய்கையில் உங்கள் வாழ்வில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.
மிகவும் பெருமை வாய்ந்த சனிப்பிரதோஷ காலத்தில் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச்சென்று வழிபாடுகள் செய்து வாழ்வில் வளம்பெறுவீர்களாக!

செங்குன்றம் அருகே பஞ்செட்டி அடுத்த நத்தம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள இறைவன் சர்ப்ப தோஷம் நீக்குபவர். இவ்வாலயத்தில் உள்ள நந்தியெம்பெருமான் தலை சாய்க்காது நிமிர்ந்து இரு கால்களும் முட்டிபோட்டு அமர்ந்துள்ளார். இங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால் சுருட்டபள்ளி சிவன் கோயிலில் கலந்து கொண்டதன் மூன்று மடங்கு பலன் என்று நந்திஆரூடம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.  இங்கு நாளை 6-10-18 சனிக்கிழமை அன்று சனிப்பிரதோஷ வழிபாடு சிறப்புற நடைபெற உள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொண்டு சிவனருள் பெற்று வரலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2