குருவருள் பெறுவோம்! திருவருள் கிடைக்கும்!

குருவருள் பெறுவோம்! திருவருள் கிடைக்கும்!

நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர்.  சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை (வியாழன்) வழிபாடு செய்வதும் அவசியம்.
  குருபெயர்ச்சி நேற்று 4-10-18 அன்று துலா ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு பெயர்ந்துள்ளார். குரு பார்க்க கோடி நன்மை! குருபலன் இருந்தால் விவாகம் செய்யலாம் என்ற வழக்குகள் ஜோதிடத்தில் உண்டு. குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஆலயங்களில் தக்ஷ்ணா மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    நவகிரகங்களில் ஒன்று குருபகவான். அவர்தான் வருடம் ஒருமுறை பெயர்ச்சி ஆகிறார். தக்ஷ்ணா மூர்த்தி சிவாம்சம். ஞானக் கடவுள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை அவருக்கு செய்து வருகின்றனர் பக்தர்கள். அது தவறு. மஞ்சள் ஆடை, மஞ்சள்பூ, கொண்டைக் கடலை எல்லாம் நவகிரக குருவுக்குத்தான். தக்ஷ்ணா மூர்த்திக்கு அல்ல. எல்லோரும் குருபெயர்ச்சி என்று தக்ஷ்ணா மூர்த்திக்கு வழிபாடு செய்வதால் பலன் இல்லை.
·                       தக்ஷ்ணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.  இவர் சிவன், அவர் பிரகஸ்பதி
·                      தக்ஷ்ணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி
·                      தக்ஷ்ணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.

தக்ஷ்ணா மூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

 தக்ஷ்ணா மூர்த்தி  64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல..தக்ஷ்ணா.  மூர்த்தியை  மூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

      ஆலங்குடி குரு ஸ்தலத்தில் தக்ஷ்ணா மூர்த்திக்கு வழிபாடு என்று தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு அனைவரும் தக்ஷ்ணா மூர்த்திக்கு குருபெயர்ச்சி அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். ஞானக் கடவுளுக்கு பெயர்ச்சி ஏது.
     நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் நவகிரக சன்னதியில் வடக்கு முகமாக எழுந்தருளி இருப்பார். குருபெயர்ச்சி முடிந்த பின் அவருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பாகும். அவருக்குத்தான் மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பூ, கொண்டைக் கடலை எல்லாம்.  சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம்.
  இதை விடுத்து நவகிரக தெய்வத்தோடு ஞான குருவான தக்ஷ்ணா மூர்த்தியை வழிபடுவது என்பது உங்களின்  ஆசிரியரை வழிபடுவது போலாகும். உங்கள் ஆசிரியர் உங்களுக்கு குரு. அவரை போற்றலாம் வணங்கலாம்  சரிதான். ஆனால் குருபெயர்ச்சி ஆகிறார் என்று அவரை குருபெயர்ச்சி அன்று வழிபடலாமா?
குருப்பெயர்ச்சியன்று தக்ஷ்ணா மூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள்
என்றாலும் தக்ஷ்ணா மூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தக்ஷ்ணா  மூர்த்தி என்று சொல்கிறார்கள்.
அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. எனவே தக்ஷ்ணா மூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
        
கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்
.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்
* குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
* குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.
* குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
* குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.
* குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
* குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
* குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
* குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
* குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
* குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
* குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
* குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
குருவின் அருளோடு, திருவும் குறைவிலா வாழ்க்கை அளிக்கும் குருவித்துறை சித்திரவல்லபப் பெருமாள் கோவில் மதுரை சோழவந்தான் தென்கரையில் உள்ளது. இங்குள்ள பெருமாள், குருபகவானின் மகனானகசபனுக்குசாபவிமோசனம் அளித்துக் காத்த சிறப்பு பெற்றவர்.மதுரையிலிருந்து சுமார் 32கி.மீ தொலைவில் உள்ளது குருவித்துறை என்னும் திருதலம். குரு தவம் செய்த இடம் என்பதால், குரு வீற்றிருந்த துறை என்ற பெயர் மாறி தற்போது இது குருவித்துறை என அழைக்கப்படுகிறது
குருபகவானுக்கு உரிய சிறந்த பிரார்த்தனைத் தலம் என்பதால், இங்கு வியாழக்கிழமை மிகவும் விசேஷம். அன்று குருவையும், சக்கரத்தாழ்வாரையும், தலத்து பெருமாளையும்  வணங்கினால் சகல நன்மைகளும், புத்திரப்பேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இங்குள்ள மூலவர்,சித்திர ரதவல்லபப் பெருமாள். சுமார் 10அடி உயரத்தில், ஆஜானுபாகனாக, சங்கு சக்கரதாரியாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இவர் சந்தன மரத்தாலான திருமேனி, என்பதால், மூன்று மாதத்திற்கு ஒரு முறை தைலக்காப்பு மட்டும் தான்,அபிஷேகம் கிடையாது. இங்கு இவரை வணங்கினால், குருபகவானின் அருளுடன்,புத்திர பாக்யமும், சகல சௌபாக்யமும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த சாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதிகள் கூறுகின்றன.

குருபெயர்ச்சி நாளில் நவகிரக குரு பகவானை வழிபடுவோம்! குருவருளோடு திருவருளும் பெறுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னுட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2