ஆனந்த வாழ்வளிக்கும் ஆருத்ரா தரிசனம்!

ஆனந்த வாழ்வளிக்கும் ஆருத்ரா தரிசனம்!


ஒவ்வொரு ஆண்டும் ஹேமந்த ருது தனுர் மாசத்தில்  (மார்கழி மாதம்) பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாள். ஆருத்ரா தரிசன நாளாகும். ஆருத்ரா அபிஷேகம் நடராஜப்பெருமானுக்கு செய்விக்கப் படுவதாகும். உலகையே ரட்சித்து இயக்கி கொண்டிருக்கும் எம்பெருமானின் அருந்தவக் கோலம்தான் நடராஜப்பெருமான் கோலம். அத்தகைய நடராஜப்பெருமானுக்கு குறிப்பிட்ட திதி, மற்றும் நட்சத்திரங்களில்தான் அபிஷேகம் செய்விக்கப்படவேண்டும் என்ற ஆகம விதிகள் உள்ளன. அதில் ஆனிமாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் வரும் ஆனித் திருமஞ்சனம் என்னும் வைபவமும் மார்கழி திருவாதிரை நாளில் வரும் ஆருத்ரா அபிஷேகமும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
ஆனந்த வாழ்வளிக்க கூடிய ஆருத்ரா அபிஷேகத்தினை சிவாலயங்களில் தரிசித்து பிறவிக்கடன் நீங்கி சுகம்பெற கோடானு கோடி பேர் காத்திருப்பர். தமிழகத்தில் தில்லை சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவானது சிவாலயங்கள் அனைத்திலும் கொண்டாடப்படக்கூடிய விழா ஆகும்.

சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்று கவலையில் இருந்தபோது, ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவர் தேஜசாக ஜடாமுடி தரித்துக் காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. ஈரவிறகால் சாதம் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் சேந்தனாரின் மனைவி. இருந்தாலும், எப்படியோ ஒருவாறாக ஊதி நெருப்பு பற்றவைத்தார். அரிசியை மாவாக்கி, உளுந்து சேர்த்து வெல்லமும் நெய்யும் கலந்து களி தயாரித்துவிட்டார்.
அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி. திருவாதிரை நட்சத்திரம்.  வந்தவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார். தினமும் தயிர்ச்சாதமும், புளி சாதமும், சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு தாங்கள் அளித்த களி மிகப் பிரமாதம்! என்றார். தம்பதியர் ஆனந்தம் கொண்டனர். மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்கச் சென்றனர். கோயில் நடையெல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்து உடல் புல்லரித்துப் போயினர். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். அன்றுமுதல் நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று. திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.  அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம்.


சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

பொன்னம்பலத் தத்துவம்

பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக்கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனிதனின் இதயம் போல பொன்னம்பலத்தின் நடுவில் நடராஜப்பெருமான் வீற்றிருக்கிறார். மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பதுபோல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.



திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில், நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தினசபை உள்ளது. காரைக்காலம்மையார் சிவனைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றபோது சிவன் அவரை அம்மா! என்றழைத்து, என்ன வரம் வேண்டும்? எனக்கேட்டார். அவர் பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்! என்றார். சிவன் அந்த வரத்தை அருளவே, ஆலங்காடு வந்த அம்மையார் மூத்த திருப்பதிகம் பாடினார். இவ்வேளையில் மன்னன் ஒருவனின் கனவில் தோன்றிய சிவன், தனக்கு பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னதி எழுப்பினான். இதில் காரைக்காலம்மையார் ஐக்கியமானார். இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை ஆலங்காட்டு ரகசியம் என்கின்றனர்.

நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால், அப்பெருமானை நடேசன் என்று போற்றுகிறோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். இதனைபார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர். நம் ஆன்மாவை, சிவகாமியாக எண்ணி, நடராஜப் பெருமானின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.


மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.


நோன்பு நோற்கப்படும் முறை

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.

விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.

"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை நாளில் சிவாலயங்களுக்குச்சென்று ஆருத்ரா அபிஷேகத்தை தரிசித்து ஆனந்த வாழ்வினை அனுபவிப்போமாக!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நல்ல விளக்கம் சுரேஷ்....நாளை ஆருத்ரா தரிசனம்...

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2