இவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்!
இவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்!
அரபு நாட்டில் உமர் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். நமது அரசியல்வாதிகள் போல பந்தாவும் பகட்டும் அவரிடம் கிடையாது. இருப்பதைக் கொண்டு எளிமையாக வாழ்ந்த அவர் மக்களிடம் நன்மதிப்பு பெற்றிருந்தார்.
ஒரு சமயம் அவர் ஏமன் நாட்டின் மீது படையெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த படையெடுப்பில் உமர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் உமர் கைப்பற்றினார். பின்னர் அவைகளை மூட்டையாக கட்டி தம் நாட்டுக்கு கொண்டுவந்தார்.
இன்றைய தலைவர்கள் போல அதை தாமே அனுபவிக்க நினையாமல், அந்த பொருள்களை எல்லாம் தன் வீரர்களுக்கு ஏற்ற தாழ்வு இன்றி சமமாக பங்கிட்டு கொடுத்தார். அதே போல தனக்கும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டார்.
ஏமன் நாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களில் விலை உயர்ந்த ஒரு பட்டாடையும் இருந்தது. அதை அனைவருக்கும் பங்கிட்ட போது ஒரு சிறு துண்டே அனைவருக்கும் கிடைத்தது. அந்த துணியில் தனக்கு மேலாடை தைத்துக் கொண்டார் உமர்.
அன்று மக்களுக்கு இஸ்லாம் மதத்தின் உயர்வை பற்றி பேசுவதற்காக மதினா நகரத்தில் இருந்த மேடையில் அமர்ந்தார் உமர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து நின்று, "அரசே! நீங்கள் நேர்மையானவர் அல்ல! உங்களை எல்லோரும் புகழலாம்! ஆனால் நேர்மை தவறிவிட்டீர்! இனி உங்கள் கட்டளைக்கு நான் அடிபணிய மாட்டேன்!" என்றான்.
"நானா? நேர்மை தவறி விட்டேனா? எப்படி?" என்றார் உமர் அமைதியாக.
"நீங்கள் நேர்மையாக பங்கு பிரிக்கவில்லை! எனக்கு பங்காக கிடைத்த பட்டுத்துணியில் கண்டிப்பாக மேலாடை தைக்க முடியாது. நீங்களோ அந்த துணியில் மேலாடை அணிந்துள்ளீர். நீங்கள் என்னைவிட உயரமானவரும் கூட! நீங்கள் அதிகமாக பாகம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள்!"என்றான் அவன் ஆவேசமாக.
"வீர்னே! நீ சற்று பொறுமையாக அமைதியாக இரு! உன் குற்றச்சாட்டுக்கு நான் பதில் அளிப்பதை விட என் மகன் பதில் அளிப்பது சரியாக இருக்கும். மகனே அப்துல்லா! நீ இதற்கு பதில் கூறு!" என்றார் உமர்.
அதுவரை அமைதியாக இருந்த அப்துல்லா எழுந்தான். "மக்களே! நம் அரசர் தனக்கு கிடைத்த துணியில் மேலாடை தைத்துக் கொள்ள விரும்பினார். அதற்கு அந்த துணி போதுமானதாக இல்லை! அதனால் அவருடைய மகனான நான் என் பங்கு துணியையும் கொடுத்தேன். இரண்டையும் சேர்த்து தைத்த துணிதான் அவர் மேலாடையாக அணிந்திருப்பது. இங்கே அமர்ந்து உங்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு வேறு நல்ல ஆடை இல்லை என்று எனக்கு தெரியும்! எனவே நான் என் பங்கினை அவருக்கு தந்து ஆடை தைத்துக் கொள்ள சொன்னேன்" என்றார்.
குரல் எழுப்பியவன் தலை குனிந்தான்! மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
" இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை! நீ உன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டாய் அவ்வளவுதான்! உங்கள் தலைவனின் நேர்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்தான்! நேர்மையற்றவன் தலைவனாக இருக்க அறுகதை அற்றவன்!" என்றார் அமைதியாக உமர்.
மீள்பதிவு
பின்குறிப்பு) தமிழகம் இப்போது இருக்கும் சூழலில் இது போன்ற தலைவர்களின் கதை பிள்ளைகளுக்குத் தேவை என்பதால் மீண்டும் மீள்பதிவு செய்துள்ளேன்! குழந்தைகளுக்கு இந்த கதையை சொல்லி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள் நண்பர்களே!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அருமையான கதை சுரேஷ்...கண்டிப்பாகக் குழந்தைகளுக்குச் சொல்லுகிறோம்....வாழ்த்துகள்...
ReplyDeleteநல்ல கதை. இப்படியான தலைவர்கள் இப்போது எங்கே....
ReplyDeleteஅருமையான கதை சகோதரா...
ReplyDelete