தவளை ராணி! பாப்பா மலர்!

தவளை ராணி! பாப்பா மலர்!

  முன்னொரு காலத்துல வேங்கடபுரி என்ற நாட்டை வேங்கட நாதன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மூணு பசங்க. இளவரசருங்க மூணு பேரும் குருகுலம் போய் கல்வியும் வில், வாள் பயிற்சியெல்லாம் எடுத்து வாலிபர்களாக வளர்ந்து நின்னாங்க. அவங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கணும்னு ராஜா நினைச்சாரு.
   அந்த சமயத்துல அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தாரு. வந்தவர் ராஜ தர்பாருக்கு வந்து.  “வேங்கடநாதா, நான் தருகிற மூன்று அம்புகளை ஒவ்வொரு மகனிடமும் ஒரு அம்பு கொடுத்து வில்லில் பூட்டி எய்தச் சொல். அந்த அம்பு எங்கே சென்று விழுகிறதோ அங்கு உனக்கு மருமகள் கிடைப்பாள்”  அவளையே நீ உன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது! அப்படின்னு சொல்லிட்டு அம்புகளை கொடுத்துட்டு புறப்பட்டு போயிட்டாரு.
   அரசனும் தன் மகன்கள் கிட்டே அம்புகளை கொடுத்து எய்தச் சொன்னான். முதல் மகன் எய்த அம்பு பக்கத்து நாட்டு அந்தப்புரத்தில் விழுந்தது.  இரண்டாவது மகன் எய்த அம்பு மந்திரி குமாரியின் மடியில் விழுந்தது. மூன்றாவது மகன் எய்த அம்பு ஒரு குளத்தில் இருந்த தவளை மீது விழுந்தது.
  இரண்டு மகன்களுக்கும் இளவரசியும், மந்திரி குமாரியும் மனைவியாக கிடைக்க மூன்றாவது மகனுக்கு தவளையை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று மன்னன் கலங்கினான். ஆனாலும் முனிவரின் சொல்லைத் தட்டினால் ஏதாவது தீங்கு ஏற்படுமோ என்று அஞ்சி தவளையைத் திருமணம் செய்து வைத்துவிட்டான்.
   இரண்டு இளவரசர்களும்  மூன்றாமவனை கிண்டலாக பார்த்தனர். போ! போய் குளத்தில் குடித்தனம் நடத்து! ராத்திரி முழுவதும் பாடல் கச்சேரிதான்! கொர்! கொர்! என்று கிண்டல் பேசினர். மூன்றாவது இளவரசன் வருத்தமாக தனக்கு மட்டும் இப்படி தவளை மனைவியாக அமைந்துவிட்டதே! என்று நினைத்து அழுதபடி சென்று விட்டான்.
   ஒருவாரம் கடந்ததும் அரசன் வேங்கட நாதன் தன்னோட மருமகள்கள் விருந்து செய்யனும் யாரோட விருந்து நன்றாக இருக்கிறதோ அவர்களுக்கு பரிசு வழங்குவேன்னு அறிவிச்சாரு.
   இளவரசியும் மந்திரி குமாரியும் விதவிதமா போட்டி போட்டு சமைச்சு தள்ளிட்டாங்க. மூணாவது இளவரசன் தவளை எப்படி சமைக்கும்? இதிலும் நமக்கு அவமானம்தான்! என்று அழுதபடி அரண்மனையில் அமர்ந்து இருந்தான். அப்போது அவனது நண்பன், ஏன் நண்பா! இப்படி வருந்தி அழுகிறாய்? என்று கேட்டான்.
   என்னுடைய தந்தை மூன்று மருமகள்களில் யார் நன்றாக விருந்து சமைக்கிறார்கள் என்று போட்டி வைத்திருக்கிறார். என் தவளை மனைவி எப்படி அதில் கலந்து கொள்ள முடியும்? அவளை எப்படி நான் சமைக்கச் சொல்ல முடியும்? என்று அழுகிறேன்! என்றான் இளவரசன்.
  இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தவளை நடு இரவில் நீர் நிலையை விட்டு வெளியே வந்தது. “க்ராக் க்ராக்” என்று கத்தியது. உடனே ஏராளமான தவளைகள் அங்கே வந்துருச்சு. சில நொடியில் அவை அழகான பெண்களா உருமாறிருச்சு. இந்த தவளையும் அவர்களை விட அழகான பெண்ணா உருமாறி  நின்னுச்சு. சில நிமிடங்களில் அவை பிரமாதமான விருந்தை செய்து வைத்துவிட்டு மீண்டும் தவளையாக மாறி குளத்திற்கு சென்றுவிட்டன.
   தவளை ராணியும் மெல்ல கணவனை அழைத்து “நாதா! விருந்து  தயாராஇருக்கு! மாமாவை அழைத்து வாருங்கள் என்று சொன்னது.  தவளை பேசினதும் விருந்து  தயாரா இருக்குன்னு சொன்னதும் இளவரசனாலே நம்பவே முடியலை!  நீ எப்படி பேசுறே? அப்படின்னு தவளையைக் கேட்டான்.
  இன்னும் ஒரு பவுர்ணமி வரைக்கும் பொறுத்திருங்கள். அப்புறம் எல்லாம் சொல்றேன்! முதல்ல ராஜாவை விருந்துக்கு கூப்பிட்டு வாருங்கள் அப்படின்னு சொல்லுச்சு தவளை.
    தவளை ராணி சமைச்ச உணவை சிலாகித்து சாப்பிட்ட ராஜா, தவளையா இருந்தாலும் அருமையா சமைச்சிருக்கா! இந்த சாப்பாடுதான் ஜோரா இருக்குன்னு பாராட்டி ஓர் அட்டிகையை பரிசா கொடுத்துட்டு போயிட்டாரு. இது மத்த ராணிகளுக்கு வருத்தமாயிருச்சு. கேவலம் ஒரு தவளை நம்பளை போட்டியிலே ஜெயிச்சிருச்சே! மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டாங்க!

   மேலும் ஒரு வாரம் கழிச்சு, ராஜா! தனக்கு ஒரு அழகான அங்கி வேணும் அது உங்க மனைவியர் கையால் நெய்ததாக இருக்க வேண்டும்!  என்று உத்தரவு போட்டார். வழக்கம் போல மூணாவது இளவரசன். வருத்தப்பட்டு ஒரு தவளையாலே எப்படி அங்கி நெய்ய முடியும்? அப்பா ஏன் இப்படி போட்டி வைக்கிறார்னு புலம்பிக்கிட்டு  இருந்தான்.
  இதைக் கேட்ட தவளை ராணி நள்ளிரவில் பெண்ணா உருமாறி ஒரு புதிய அங்கியை நெய்து தைச்சு வச்சிருச்சு.
   விடிகாலையில் விழிச்ச அரச குமாரனுக்கு அதிசயமா போயிருச்சு! ஒரே இரவில் இத்தனை அழகா பளபளப்பா ஒரு புதிய அங்கியை  தவளை ராணி செய்திருக்கான்னா அவகிட்ட ஏதோ சக்தி இருக்குன்னு நினைச்சுகிட்டான். தவளை ராணிகிட்டேயும் கேட்டான்.
  ஆனா தவளை ராணி, இப்ப எதுவும் கேக்காதீங்க! வரும் பவுர்ணமி அன்னிக்கு என்னோட சுயரூபம் தெரியும். இந்த அங்கியை மாமாவுக்கு கொடுத்திருங்க அப்படின்னு சொல்லிருச்சு.
  தவளை ராணியின் அங்கி தான் பாராட்டு வாங்கிச்சு! அதை பார்த்து மத்த இளவரசனுங்களும் இளவரசிகளும்  மனதில் கருவிக் கொண்டு. ஒரு தவளை நம்மையெல்லாம் ஜெயிச்சிருச்சே! இந்த முறை எப்படியும் அவனை அவமானப் படுத்தனும்னு  நினைச்சிகிட்டாங்க.
  அன்னிக்கு பவுர்ணமி! ராஜா மூணு பசங்களையும் கூப்பிட்டு, பிள்ளைகளே! இன்னிக்கு நம்ம குலதெய்வத்துக்கு பூஜை! உங்க மனைவிகளை கூட்டிக்கிட்டு கோயிலுக்கு வந்திருங்கன்னு சொன்னார்.
 மத்த ரெண்டு பேரும் “ என்னடா! தவளையை எப்படி கூட்டிட்டு வரப் போறே? உன் சட்டைப் பையில் போட்டு கூட்டிட்டு வா! வழியில யாரும் மிதிச்சிடாம பார்த்துக்க! நம்ம குலதெய்வம் வேற நாகராஜா! தவளைங்கன்னா அதுக்கு உசிராச்சே! பாத்து பத்திரமா கூட்டி வா! என்று ஏளனம் செய்தனர்.
    மூன்றாம் இளவரசன் அழுதபடி தன் அறைக்கு சென்றான். அங்கே தவளை ராணி  அவனை ஆறுதல் படுத்தி, இளவரசே கவலைப்படாதீர்கள்! இன்று பவுர்ணமி! நிலா முழுதும் உதயமாகி அதன் கிரணங்கள் என் மீது படுகையில் நான் பெண்ணாக உருமாறி விடுவேன். ஒரு சாபத்தினால் தேவலோக மங்கையான நான் இப்படி தவளையாக உருமாறும்படி ஆகிவிட்டது. கவலைப்படாமல் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றது.
   இளவரசன் தவளையை தன் கையில் ஏந்தியபடி கோயிலுக்குச் சென்றான். நிலவு உதித்து அதன் கிரணங்கள் தவளை மீது பட அது அழகிய பெண்ணாக உருமாறியது. தேவலோக மங்கையாக பிரகாசமாக அங்கிருப்பவர்கள் அனைவரும் அவளையே நோக்கும்படி அழகான பெண்ணாக மாறியது தவளை.
   இந்த காட்சியை பார்த்து அரசரும் இளவரசர்களும் அவர்களது மனைவியரும் வியந்தனர்..  தேவலோக மங்கையான தவளை, அரசே ஒரு சாபத்தினால் தவளையாக மாறினேன். முனிவர் அருளினால் இவரை மணந்து சாபவிமோசனம் பெற்றேன். என்று ராஜாவின் காலில் விழுந்து வணங்கினாள்.
அப்போது முனிவரும் அங்கு வந்து எல்லாம் இறைவன் அருள். உன் மூன்றாவது மகன் பொறுமை சாலி! அவனுடைய சகிப்புத் தன்மையினால் தேவலோக மங்கையை மணக்கும் பாக்கியம் பெற்றான். உங்கள் நாடு செழிக்கும் என்று வாழ்த்திச் சென்றார்.
  அது முதல் மூவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்.
(செவிவழிக்கதை)  
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. தவளைக் கதையை ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  2. நல்ல கதை சகோ.
    பல நாள் கழித்து வலைப்பக்கம் வருகிறேன்..நலமா?

    ReplyDelete
  3. ஸ்ரீராம்May 1, 2016 at 8:36 AM

    அதிசயங்கள் பொறுமைசாலியின் வாழ்வில் நிகழும். இது உண்மை.

    ReplyDelete
  4. எங்களை இளமைக்காலத்திற்கு அழைத்துச்செல்லும் தங்களின் கதைகள் அருமை.

    ReplyDelete
  5. தவளை கதை அருமை நண்பரே

    ReplyDelete
  6. நல்ல குழந்தைக் கதை!

    ReplyDelete
  7. ரசித்தோம் குழந்தைகளாக...அருமை...சுரேஷ்

    ReplyDelete
  8. நான் குழந்தையாகிப்போனேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!