சிறுதுளி!

சிறுதுளி!


அந்த பெரிய உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர் மணிவாசகமும் அவரது மகன் கோகுலும். மணிவாசகம் இன்றைக்கு ஊரில் பெரிய செல்வந்தர். ஒரு சாதாரண பணியாளாய் வாழ்க்கையைத் துவக்கியவர் தன் அயராத உழைப்பினால் இன்று ஒரு பெரிய சோப்பு கம்பெனியை நடத்தி வருகிறார்.
    உணவருந்தியதும் சர்வர் கொண்டுவந்த பில்லை செட்டில் செய்ய எடுத்தார் மணிவாசகம். “ஐயா! என்று தலையை சொறிந்தபடி நின்றான் சர்வர்.மணிவாசகம் அவனை ஏறிட்டும் பார்க்காமல் நேரே கவுண்டரில் சென்று பணத்தை கட்டிவிட்டு மீதிச்சில்லறையை வாங்கி பையில் போட்டுக்கொண்டார். கார் பார்க்கிங்கிலும் காரை கிளப்பியதும் வந்து நின்ற சேவகனை கவனிக்காதது போல கிளம்பிவிட்டார்.
   “சரியான சாவுகிராக்கி” என்று பின்னால் அவன் முணுமுணுப்பது தெரிந்து கோகுலுக்கு அவமானமாகப் போய்விட்டது. அங்கிருந்து ஒருபழக்கடைக்குச் சென்றவர் பழங்களை பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார். இறுதியில் ஒரு பத்து ரூபாய் குறைத்து வாங்கியதும் அவருக்கு மகிழ்ச்சி. இவர் காரில் ஏறும் பொழுது, கடைக்காரன் பெருசா வந்திருதுங்க காரை எடுத்துகிட்டு! பத்து ரூபாய்க்கு பேரம் பேசிக்கிட்டு! என்று சொல்ல மீண்டும் காரில் இருந்து இறங்கியவர், ஏன் காரில் வந்தால் பத்து ரூபாய் கூட வைச்சுத்தான் விற்பியா? என்று சண்டைக்குப் போய்விட கோகுலுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.
     “அப்பா! வாங்கப்பா! ப்ளீஸ்! இதுக்கு போய் சண்டை போட்டுக்கிட்டு?” என்று அழைத்தான்.
    “இதுக்குத்தான் சண்டை போடனும்! நியாயமான விலையில விற்கணும் அவன். காரில வர்றவங்களுக்கு ஒரு விலை நடந்து வர்றவங்களுக்கு ஒரு விலையா? இது எந்த சட்டத்துல இருக்கு?” என்று கத்தினார்.
   கூடியிருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க “ஐயோ அப்பா! போய் முதல்ல காரில் ஏறுங்க! எல்லோரும் நம்மையே பாக்கிறாங்க!” என்றான்.
    “பார்க்கட்டுமே! இதுல என்ன அவமானம் இருக்கு? நானா ஏமாத்தினேன்! அவன் அந்த கடைக்காரன் தான் பத்து ரூபா அநியாயமா சுருட்ட பார்த்தான். சரியா பேரம் பேசி வாங்கினா என்னையே மட்டமா பேசறான்.”
   இதற்குள் சிலர்,  “போங்க சார்! இதையெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு! சின்ன விசயம் சார் இதெல்லாம்! இந்த பத்து ரூபாய்ல அவன் கோட்டை கட்டிடப் போறானா? விட்டுத் தள்ளுங்க சார்!” என்றனர்.
    இன்னும் அவருக்கு கோபம் அதிகரித்து விட்டது.  “இப்படியே விட்டு விட்டுத்தான் எல்லாத்திலேயும் கரப்ஷன். அப்புறம் கவர்மெண்டை குறை சொல்றது”. என்று ஆரம்பித்தவர் மகன் காரினுள் சென்று அமர்ந்து விட்டதை பார்த்து இவன் ஒருத்தன்! எதுவுமே கேட்க மாட்டான். என்று தானும் சென்று காரில் ஏறிக்கொண்டார். கார் விரைந்தது.
   அடுத்த நாள் காலை வீட்டில் உணவருந்திக் கொண்டு இருந்த போது, அப்பா! நான் என் ப்ரெண்ட் மாதவனை பார்க்கணும் கார் எடுத்திகிட்டு போறேன்! என்ற மகனை நிறுத்தினார் மணிவாசகம். “ உன் ப்ரெண்ட் எங்க இருக்கான்?”  தி.நகர்லப் பா!
 நாம எங்க இருக்கோம்? இதென்ன கேள்வி என்பது போல பார்த்தவன் வட பழனிலப்பா! என்றான்.
   இந்த ரெண்டு எடத்துக்கும் அதிக பட்சம் எவ்வளவு தூரம் இருக்கும் ஒரு  ஐந்து இல்லே ஆறு கி,மீ வருமா? இதுக்கு கார் எதுக்கு? ஹெவி டிராபிக் ஏரியா?  நீ மட்டும் தானே போறே?  நீ ஒருத்தன் போறதுக்கு கார் எதுக்கு? என்றார்.
   கோகுலுக்கு எரிச்சலாய் வந்தது. “ ஐயோ! அப்பா! எதுக்கெடுத்தாலும் சிக்கனமா? நான் போகவே இல்லை விட்டுடுங்க?
   “ நான் போக வேண்டாம்னு சொல்லலை கோகுல்! கார்ல போக வேண்டாம்னுதான் சொல்றேன்”
   அதான் ஏன்னு கேக்கறேன்பா! நாம ஒண்ணும் பிச்சைகாரங்க கிடையாது. பணத்தை ஏன் இப்படி மிச்சப்படுத்தறீங்க?
   “ நாளைக்கு நாம பிச்சை எடுக்க கூடாதுன்னுதான்!”
   “என்ன சொல்றீங்கப்பா? அப்படியா இருக்குது நம்ம நிலைமை!”
   “கோகுல் நீ பணக்காரனுக்கு பிறந்தவன்! ஆனா நான் ஏழைக்கு பொறந்து இன்னிக்கு பணக்காரனா உயர்ந்து இருக்கேன்! உலகம் உருண்டைப்பா! உயர்ந்தவன் தாழலாம் தாழ்ந்தவன் உயரலாம்! இன்னிக்கு இருக்குங்கிறதுக்காக வீணா விரயம் பண்ணக்கூடாது. செல்வத்தை நாம மதிச்சா அது நம்மை மதிக்கும்! இல்லேன்னா அது நம்மல மிதிச்சி போட்டுரும்!”
    “புரியலைப்பா! சர்வருக்கு ஒரு பத்து ரூபா டிப்ஸ் தராம இருக்கிறதாலேயும் பழம் வாங்கறப்ப ஒரு பத்து ரூபா மிச்சம் பிடிக்கிறதுனாலேயும் நாம வளர்ந்திருவோமா?”
    “இங்கதான் நீ தப்பு பண்றே கோகுல்! சிறு துளிதான் பெரு வெள்ளமா மாறுது! பத்து பத்து ரூபாய் சேர்ந்தால்தான் நூறு ரூபா கிடைக்கும். இன்னிக்கு பத்து ரூபாதானேன்னு அலட்சியமா இருந்தா நாளைக்கு நூறு ரூபா! அப்புறம் ஆயிரம் பத்தாயிரம்னு வளர்ந்துட்டே போகும். நமக்கு பத்து ரூபா பெரிசா தெரியலை! ஆனா பழம் விற்கறவனுக்கு பத்து ரூபா பெரிசா தெரிஞ்சதனாலேதானே அதிகமா விக்கிறான். நியாயமா செலவு பண்ணலாம் தப்பு இல்லே! உழைக்கிறவனுக்கு ஒரு ரூபா அதிகமா கொடுக்கலாம். ஆனா இப்படி ஆளை பார்த்து ஏமாத்தறவங்க கிட்ட ஏமாந்துட கூடாது. ஒவ்வொரு ரூபாயும் நாம் உழைச்சுதான் சம்பாதிக்கிறோம்! அதை ஊதாரித்தனமா செலவு பண்ணக்கூடாதுங்கிறது என் பாலிசி. அதை நான் மாத்திக்க மாட்டேன்.   ஒரு காலத்திலே தண்ணி நிறைய இருந்தது! நிறைய செலவழிச்சாங்க! வீணடிச்சாங்க! ஆனா இன்னிக்கு தண்ணியை விலை கொடுத்து வாங்க வேண்டியதா போச்சு இல்லே! எதுக்கும் ஒரு அளவு இருக்கு. அந்த அளவோட பயன்படுத்தினா வளமா இருக்கலாம். இருக்குதுன்னு ஆட்டம் போட்டா அந்த ஆட்டம் கொஞ்ச நாள் தான் தாங்கும். நீயும் புரிஞ்சி நடந்துகிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார்.

  தந்தையின் பேச்சில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்ட கோகுல் நான் பஸ்ஸிலேயே போய் வரேன்பா! என்றான்.
   மகிழ்வுடன் புன்னகைத்தார் மணிவாசகம்.

(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மீள் பதிவாயினும் அருமையான வாழ்க்கைத் தத்துவத்தை கற்றுத் தந்தது நண்பரே நன்றி

    ReplyDelete
  2. கதை அருமை சுரேஷ்...வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. /// உலகம் உருண்டைப்பா! உயர்ந்தவன் தாழலாம் தாழ்ந்தவன் உயரலாம்! ///


    100% உண்மை...

    ReplyDelete
  4. நல்ல கருத்துடன் கூடிய அருமையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமை
    உண்மை
    தங்களை வலையில் சந்தித்து நாட்கள் பல கடந்து விட்டன நண்பரே
    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்... நியாயம்தான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2