ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் அன்னப்பாவாடை மகோற்சவம்!

ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் அன்னப்பாவாடை மகோற்சவம்!


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது திருமீயச்சூர் என்னும் அழகிய தலம். உலகை எல்லாம் கட்டி ஆளும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை ராஜ தர்பாரில் அமர்ந்து ஆட்சி செலுத்தும் அற்புதமான திருக்கோயில்.

  பேரளம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.  திருவாரூர் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் பேரளம் என்னும் இடத்தில் இருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் சிறிய சாலையில் சென்றால் திருமீயச்சூரை அடையலாம்.

  ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயிலும் மற்றும் அதனுள்ளேயே ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ சகல புவனேஸ்வரர் என்னும் இளங்கோயிலும் சேர்ந்து அமையப்பெற்றுள்ளது. சோழர் கால கற்கோயிலான இது கலையழகும் சிற்ப நயமும் கொண்டது. இராசேந்திர சோழன், செம்பியன் மாதேவி போன்றோர் திருப்பணி செய்துள்ளனர். கஜப்பிரஷ்ட விமான அமைப்பு உடையது.

சூரியன் பார்வதி பரமேஸ்வரரை கஜவாகன ரூபராய் வைத்து  பூஜித்தமையால் விமானம் இவ்வாறு அமைந்து உள்ளது. ஸ்ரீ பரமேஸ்வரரால் சாபம் பெற்று கருமை நிறம் அடைந்த சூரியன் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றான், சூரிய புஷ்கரணி இங்கு அமைந்துள்ளது.

  சூரியன் சாபவிமோசன காலம் முடிந்தும் கருமை நிறம் மாறவில்லையே என்று வருந்தி ஸ்ரீ லலிதாம்பிகையும் ஸ்ரீ மேகநாதரும் தவத்தில் இருக்கும் சமயம் “ஹேமிகுரா” என்று எனது கருமை நிறம் நீங்கவில்லையே என்று கதறுகிறார். இதனால் அம்பாளின் தவம் கலைந்து சூரியனுக்கு சாபம் கொடுக்க வருகிறார். சிவபெருமான் தடுத்து நிறுத்தி சாந்தப்படுத்துகின்றார். இது ஷேத்ரபுராணேச்வரர் சிற்பம் வடிவத்தில் ஆலயத்தில் காணப்படுகின்றது.

ஸ்ரீ லலிதாம்பிகை பண்டாசுரனை சம்ஹாரம் செய்து கோபாவேசம் தனிய தெற்கு முகமாக பஞ்சாசன பீடத்தில் ஸ்ரீ மேருவின் மீது அமர்ந்து தவக்கோலத்துடன் ஸ்ரீ மனோன்மணி சொரூபமாக  காட்சி தருகின்றார். அம்பாளை சாந்திப்படுத்த அம்பாளின் முகத்தில் இருந்து தோன்றிய வசின்யாதி வாக் தேவதைகள் மூலம் மிக உயர்ந்த ஸ்தோத்திரமான ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் முதன் முதலில் உலகிற்கு தோன்றிய தலம் இது. அது ஸ்ரீ ஹயக்கிரிவரால் ஸ்ரீ அகஸ்தியருக்கு உபதேசிக்கப்பட்டு  ஸ்ரீ அகஸ்தியர் மூலம் உலகில் அனைவராலும் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. அனைத்து அம்மன் ஆலயங்களில் லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்விக்கப்படுகின்றது. இதை பாராயணம் செய்து பலனடைந்தோர் ஏராளம். அப்படி பாராயணம் செய்பவர்கள் வருஷம் ஒரு முறையாவது ஸ்ரீ லலிதையின் சந்நிதியில் வந்திருந்து பாராயணம் செய்து மனநிறைவு அடைகின்றனர்.

  சர்வலாங்கார பூஷிதையாக கைகளில் வளையல்களும் அமர்ந்த நிலையில் கால்களில் கொலுசும் இடுப்பில் ஒட்டியானமும் கழுத்தில் சகல விதமான ஆபரணங்களும் அணிந்து அற்புதமாக காட்சி அளிக்கின்றாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.

  இத்தகு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மாசி மாத அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஆதி சைவ சிவாச்சார்யர்களும் அன்னையின் பக்தர்களும் அம்பாள் உபாசகர்களும் கூடி இணைந்து ஏகதின லெட்சார்ச்சணை, மற்றும் ஹோமம் பள்ளயம் எனப்படும் அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் போன்ற வழிபாடுகளை கடந்த பத்து வருஷங்களாக மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர்.

   இந்த வருஷமும் நாளை 2-03-2016 மன்மத வருஷம் மாசி மாதம் 19ம் தேதி புதன் கிழமை அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஏகதின லெட்சார்ச்சணையும் மற்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
லெட்சார்ச்சணையின் போது பத்து காலத்திற்கும் பத்துவிதமான பிரசாதங்கள் காலம் ஒன்றிற்கு பத்துகிலோ வீதம் நூறு கிலோ பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படுகின்றது. உச்சிகாலத்தில் விஷேசமாக பிரண்டை சாதம் பத்துகிலோ நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

 அர்ச்சனையின் போது காலை முதல் மாலைவரை 10 ஆயிரம் ஆவர்த்தி ஹோமமும் அதன் அங்கமாக ஆயிரம் ஆவர்த்தி தர்ப்பணமும் நடைபெற்று அம்பிகைக்கு மஹா அபிஷேகமாக  பால் பழம் பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்றவை செய்விக்கபட்டு கலசாபிஷேகம் செய்விக்கப்பட்டு சர்வாலங்கார பூஷிதையாக அலங்காரம், மலர் கிரீடம் தரித்து காட்சி தரும் அம்பிகைக்கு மஹா நைவேத்தியம் செய்விக்கப்பட உள்ளது.

  அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர்சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

  சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டு களித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.

இத்தகைய  சிறப்பு வாய்ந்த விழாவினை வேளாக்குறிச்சி ஆதின கர்த்தரும் பரம்பரை அறங்காவலருமான  ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னின்று நடத்திக் கொடுக்க இசைந்துள்ளார்கள்.

  எங்கும் காணக்கிடைக்காத இந்த அற்புத  காட்சியை தரிசனத்தை கண்டு அன்னை லலிதாம்பிகையின் அருளுக்கு பாத்திரர்கள் ஆகி அனைத்து நற்பலன்களையும் பெற்றுய்யுவோமாக.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் : தொடர்பு கொள்ள

  சிவஸ்ரீ கடலூர் டி. சரவண சிவாச்சார்யார்  செல்: 9786907954
 சிவஸ்ரீ கடலூர் எஸ். கைலாச சிவாச்சார்யார்  செல். 9443189253
சிவஸ்ரீ டி.வி. ரவிச்சந்திர சிவாச்சார்யார்  செல் 9440180621
சிவஸ்ரீ  பி. சதீஷ் குருக்கள், மாங்காடு  செல்: 9444701732

டிஸ்கி} இந்த விழாவில் கலந்து கொள்ள திருமீயச்சூர் செல்கிறேன். அருகில் உள்ள பதிவர்கள் நாளை ஆலயத்திற்கு வந்தால் என்னை சந்திக்கலாம். அல்லது என்னை செல்லில் (9444091441 ) தொடர்பு கொண்டால் என்னால் இயன்றால் சந்திக்க முயல்கிறேன். நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

Comments

  1. அருமையான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. சிறப்புகளை அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
  3. சிறப்பான வரலாற்றுத்தகவல் அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  4. வரலாற்றின் சிறப்புகளை தெரிந்து கொண்டேன் சார். நாளை எனது வலைப்பூ நான்காம் ஆண்டு தொடங்க இருக்கிறது. நாளை தேங்காய் பர்பியை சுவைக்க வலைபூவுக்கு வருகை தாருங்கள்.

    ReplyDelete
  5. சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சுரேஷ்

    ReplyDelete
  6. ஏனோ இதுவரை இந்தக் கோவில் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. அடுத்து தமிழகம் வருபோது செல்ல வேண்டும் எனும் அவா இந்தப் பதிவைக் கண்டதும் ஏற்படுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2