ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் நூல் விமர்சனம்
ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள்
சிறுகதை எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜூனியர் தேஜ் என்ற வரதராஜன் அவர்கள் தான் பல பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 5 பாகங்களாக புஸ்தகா டிஜிட்டல் மீடியா பதிப்பகம் வெளியிட்டுள்ளார். 130 முதல் 150 பக்கங்களுக்குள் உள்ள இந்த தொகுப்பு நூல்களின் வடிவமைப்பும் எழுத்துருவும் அருமையாக முதியோர்களும் வாசிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்தில் உள்ளது.
நான் வித்தியாசமாக இந்த தொகுப்பின் 5 ம்பாகத்தை ( குணசீலத்துக் கதைகள்) முதலில் வாசித்தேன்.
மனம் உடைபடுகையில் அதுவே ஆழ்ந்த ரணமாகி இளகிய மனம் கொண்டவர்களை மனநோயாளி ஆக்கிவிடுகின்றது. மனநோய்க்கு சூழ்நிலையும் பயமும் தன்னம்பிக்கை குறைதலும் ஆகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஓர் மனநோய் உள்ளது. அதை சிலர் வெளிப்படுத்துகையில் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டிவிடுகிறோம்.
இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளும் உளவியல் ரீதியாக நன்கு அலசி ஆராயப்பட்டு நல்ல தீர்வினையும் வழங்குகிறது. ஆசிரியர் ஓர் உளவியல் ஆலோசகரும் கூட என்பதால் சில கதைகளில் அவரே ஒரு பாத்திரமாக மாறி வழிநடத்துகிறார்.
பெசண்ட் நகர் க்ரிமிடோரியம், நீரடி, மனச்சிதைவு, பார்க்கின்சன் , நீ யாரு என்ற கதைகள் ஏ, ஒன் ரகம். சிதையா நெஞ்சுகொள் நான் வெளியிட்ட தேன்சிட்டு தீபாவளி மலரில் வெளியானது எனக்குப் பெருமை.
இது தவிர மற்ற நான்கு தொகுப்புக்களையும் இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டு மொத்தம் எட்டு மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.
அந்தளவிற்கு சுவாரஸ்யமாக அவரது எழுத்து என்னைக் கட்டிப் போட்டது. தன்னுடைய கதைகளில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஜூனியர் தேஜ் காட்சிப்படுத்துவது மிகவும் சுவாரஸ்யம். உதாரணமாக ஒரு கதையில் இஸ்திரி போடுவதை விவரிக்கையில் இஸ்திரி பெட்டியை சுத்தம் செய்து கரிபோட்டு தேங்காய் நார்கொண்டு பற்றவைத்து தணல் உருவாக்கி அதைப் பெட்டியில் போட்டு லாக் செய்வது வரை விவரிப்பது நம்மை அந்த கடை முன்னேயே கொண்டு செல்லும்.
ஒவ்வொரு தொகுப்பிலும் நாம் அன்றாட வாழ்வில் காணும் மனிதர்கள் கதை மாந்தர்களாகி வாழ்ந்து செல்கிறார்கள். ஒவ்வொரு கதையிலும் ஒரு படிப்பினை இருக்கிறது.
எழுத்து நடை அசத்துகிறது நிறைய தகவல்களை ஒவ்வொரு கதையிலும் அறிந்துகொள்ள முடிகிறது.
பெரும்பாலான கதைகள் விகடன் இணையதளத்தில் வெளியானவை என்பது இதன் தரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
உங்கள் வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டிய தரமான நூல்கள் இவை.
முதல் மூன்று தொகுப்புகள் ஒவ்வொன்றும் விலை ரூ 140.00
4 ம் பாகம். விலை ரூ 150.00
5 ம் பாகம் விலை ரூ 170.00
Comments
Post a Comment