திருடா! திருடி!

 

 திருடா! திருடி!

  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 


சென்னை மெரினா பீச். வழக்கம் போல களை கட்டியிருந்த்து. வீக் எண்ட் நாளான ஞாயிறு. ஜூலை மாத வெப்பத்தை ஈர்த்து குளிர்காற்றாய் வீசிக்கொண்டிருந்தது கடற்கரை காற்று. கடலுக்கு செல்லும் பாதை எல்லாம் கடைகளாய் மாறி இடத்தை அடைத்துக்கொண்டு இருந்த்து கரும்புசாறு முதல் கலர் கலரான காதணிகளும் பாசிமணிகளும், அலங்கார பொம்மைகளும் இன்னும் பலவும்    கடைகளில் ஆக்ரமித்து விற்பனைக்கு காத்திருந்தது.

  பொன்னியின் செல்வன் வந்த நேரமது என்பதால் பழங்கால வாட்களும் வேல்களும் பழங்கால காலணிகள், காதணிகள் உடுப்புகள் என்று ஓர் கடை புதிதாக முளைத்து அங்கு கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. ஆதித்த கரிகாலனின் அன்பு ரசிகையான நிலா அங்கே அந்த கடைக்குள் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

    இந்த வாள் என்ன விலை சொல்லுங்கண்ணா!”

  இது சில்வர் கோட்டீங்க் ஸ்வார்ட்! கைப்பிடியிலே லெதர் வைச்சு தைச்சிருக்கோம்! தவுசண்ட்  பைவ் அண்ட்ரட் ரூபீஸ் வரும்மா!”

   கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கண்ணா!”

    ஹண்ட்ரட் ரூபீஸ் கம்மி பண்ணிக்கொடுங்க! தவுசண்ட் போர் ஹண்ட்ரட்!”

   அண்ணா! அண்ணா! அவ்வளவுல்லாம் என்கிட்டே இல்லேண்ணா! தவுசண்ட் ரூபீஸ் வெச்சிட்டுக் கொடுங்க!”

    அவ்வளவு கம்மியா வராதும்மா! தவுசண்ட் ரூபீஸ்க்கு வேணும்னா இந்த ட்ரம்ஸ் தர்றேன்! எடுத்துக்கங்க!”

    இல்லேன்னா! அது வேணாம்! ஃபைனலா எவ்வளவுக்குத் தருவீங்க?”

    தவுசண்ட் த்ரி ஹண்ட்ரட் கொடும்மா!”

  தவுசண்ட் டூ ஹண்ட்ரட் வைச்சிட்டுக்கொடுங்க!”

   சரி சரி! எடுத்துக்கோங்க!” என்று அவன் ஒரு கவரில் வாளைப்போட்டுக் கொடுக்க அதை எடுத்துக்கொண்ட நிலா   பைக் ஸ்டேண்ட் பக்கமாக வந்தவள் அதிர்ந்தாள்.

   அவளது ஸ்கூட்டரை ஒருவன் ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தான்.

      எப்படி? கீ நம்ம கிட்டேதானே இருக்கு?”  அவசர அவசரமாக ஹேண்ட்பேக்கிற்குள் துழாவினாள்.

    அடச்சே! கீ காணலையே! வண்டியிலேயே விட்டுவிட்டோமோ?  பதற்றத்துடன்   .. ஏய் அது என் வண்டி..! ” கத்திக்கொண்டே ஓடினாள்.

  ஆனால் அவள் கத்தலை காதில் வாங்கிக்கொள்ளாமல் அந்த வாலிபன் வாயிலிருந்த பபிள் கம்மை துப்பிவிட்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு கிளம்பிப் போனான்.

    டேய்!  டேய்!  நிறுத்துடா!” … என்று கத்தியவள் சட்டென்று எதிரே குதிரை ஓட்டிக்கொண்டு வந்த நபரை கை காட்டி நிறுத்தினாள்.

   அவர் குதிரை சவாரிக்குத்தான் நிறுத்துகிறாள் போலும் என்று நிறுத்தி ஒரு ரவுண்டுக்கு இருநூறு ரூபா! ஓக்கே வா!”

     அதை காதில்வாங்காத நிலா சட்டென்று தாவி குதிரையில் ஏறி சேணத்தை கெட்டியாக பிடித்து காலால் குதிரையின் பின்புறம் உதைக்க குதிரை ஓடத் தொடங்கியது.

   ஏய்ஏய் பொண்ணு! எங்கே? எங்கே போறே?” கேட்டவாறே அந்த குதிரைக்காரன் துரத்த நாலு கால் பாய்ச்சலில் குதிரை கடற்கரையை விட்டு விலகி பீச் ரோடில் பயணிக்க ஆரம்பித்தது.

     நிலாவின் ஸ்கூட்டரைத் திருடிச்சென்றவன் இது அத்தனையும் ரிவர்வியு மிரரில் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பொண்ணு நம்மளை குதிரையில் துரத்தி வரப்போறாளா? அடக்கடவுளே! சிக்கினா செத்தோம்! கடவுளே காப்பாத்து என்று ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். அவன் சென்ற வழியே குதிரையில் நிலாவும் செல்ல அவன் சென்னை டிராஃபிக்கில் லாவகமாக புகுந்து புகுந்து வாலாஜா சாலை வழியாகத் திரும்பினான்.

     ஏய் நில்லுடா! உன்னை விடமாட்டேன்!” என்று வீரமங்கை வேலுநாச்சியார் ஸ்டைலில் கையில் வாளுடன் நிலா செல்வதை அங்கிருந்தோர் ஆச்சர்யத்துடன் பார்க்க ஸ்கூட்டரை எடுத்தவன் இன்னும் வேகமாக செல்ல ஆரம்பிக்க  நிலா விடாது துரத்தினாள்.

   ஹை! இதென்னது வேடிக்கையா இருக்கு! ராணி மாதிரி ஒரு பொண்ணு  குதிரையிலே போகுது!என்று கட்டணமில்லா மாநகரப் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து இந்த காட்சியை ரசித்துக்கொண்டிருந்தது மாதர் குலம் .

சாலையில் நடக்கும் இந்த துரத்தலை லைவ் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தது இன்ஸ்டா ரீலீல் பேமஸாக இருக்கும் இளசுகள். ”இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் வேகமாப் போ! அவனை புடிச்சிரலாம்!” குதிரையின் பிடறியில் தடவிக்கொடுத்து விரட்டினாள் நிலா.

  அப்போது சாலையில் சிக்னல் விழ அந்த ஸ்கூட்டர் திருடன் கடந்துவிட  குதிரையில் கடக்க முயன்ற நிலாவை நிறுத்தினார் ட்ராபிக் கான்ஸ்டபிள்.

        ஏம்மா! நில்லு! நில்லு! சிக்னல் விழுந்திருக்குள்ள!”

       அது குதிரைக்குத்தெரியாது சார்!”

   என்னம்மா! நக்கலா! குதிரைக்குத் தெரியாது! உனக்குத்தெரியுமில்லே!”

   ஸார்! வெரி வெரி அர்ஜெண்ட் சார்! என் ஸ்கூட்டியை ஒருத்தன் திருடிட்டு ஓடறான்! அவனை பிடிக்கத்தான் நான் ஒடிட்டிருக்கேன்! ப்ளீஸ் டோண்ட் ஸ்டாப் மீ!”

    அவ்வளவுதானே!  அடுத்த சிக்னல்லே வண்டியை மடக்கிடலாம்! ஸ்கூட்டியோட கலர் சொல்லு!”

    சார் அது ஸ்கூட்டி இல்லே சார்! ஆக்டிவ்வா!”  

   சரி இருக்கட்டும்! அதோட கலர் சொல்லு!”

 டார்க் ப்ளு சார்!” 

    இண்டிகாவா

     இண்டிகா இல்லே!சார்! ஆக்டிவ்வா!”

      ஆக்டிவாதான்! நான் கலரைக்கேட்டேன் !”

       அதான் டார்க் ப்ளு சார்!  சொன்னேனே?”

 அதைத்தாம்மா கேட்டேன் இண்டிகாவான்னு! சரி வண்டி நம்பர் சொல்லு!”

    ,, வண்டி நம்பர்?”

   சீக்கிரம் சொல்லும்மா! அடுத்த சிக்னல்லே மடக்கிடலாம்!”

     கண்டிப்பா மடக்கிருவீங்களா?”

  ஆமாம்! மடக்கிரலாம்! வண்டி நம்பரை சீக்கிரம் சொல்லு!”

 .. அது .. வண்டி நம்பர் தெரியலைங்க சார்!”

    என்னது வண்டி நம்பர் தெரியாதா?” டிராபிக் கான்ஸ்டபிள் நிலாவை ஒருமாதிரி பார்க்க,

  அதற்குள் சிக்னல் விழ டக்கென்று குதிரையை உதைத்தாள் நிலா. குதிரை பாய்ந்தோடியது 

   அந்த கான்ஸ்டபிள் வேற இரண்டு நிமிஷம் மடக்கிட்டாரு! இப்ப அவன் எங்க போயிருப்பானோ தெரியலையே! எங்கே போய் தேடுவேன். ராயப்பேட்டை பக்கம் போலாமா? இல்லே இப்படி செண்ட்ரல் பக்கம் போவோமா?  நிலா யோசித்துக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்த ஒரு டீக்கடை முன் அவன் தென்பட்டான்  வண்டியுடன்.

   வேகமாகச்சென்று அவன் முன்னே குதிரையிலிருந்து இறங்கினாள் நிலா. குதிரையில்வந்து இறங்கும் பெண்ணை வித்தியாசமாகப்பார்த்தது அங்கிருந்த கூட்டம். அந்த வாலிபன் அங்கிருந்து நழுவி வண்டியின் அருகில் வரவும் வேகமாக வந்து மடக்கினாள் நிலா

  ஏய்! மரியாதையா என் வண்டியை கொடுத்திரு!”

    ஏய்! சத்தம் போடாம பேசு!” அசிங்கப்படுத்திடாதே!

  உனக்கு அசிங்கம்லாம் வேறத்தெரியுமா? மரியாதையா வண்டி சாவியைக் கொடு! இது என்னோட வண்டி!” நிலா கொஞ்சம் மெதுவாகவே கேட்டாள்.

   என்னது உன் வண்டியா? இது என்னோடது!”

   ஏய்! பீச்சிலேருந்து என் வண்டியை திருடிக்கிட்டு வந்துட்டு இப்போ உன்னோடதுன்னு சொல்றியா? மரியாதையா சாவியை எடு!”

   சரி! வண்டி உன்னோடுதானே! வண்டி நம்பர் சொல்லு…!”

    அது.. அது..!”

   உனக்கெப்படித் தெரியும்? உன் வண்டியா இருந்தாத்தானே தெரியும்!”

    வண்டி நம்பர் தெரியலைன்னா வண்டி என்னோடது இல்லைன்னு ஆயிருமா? வண்டி என்னுதுதான்! மீன் என் ப்ரெண்டோடது!”

    ஏம்மா! உன் ரீல்ஸ் எல்லாம் இன்ஸ்டாவிலே போடு! எங்கிட்டே போடாதா! தெரியுதா?  ஆமாம் குதிரை கூட நல்லாத்தான் ஓட்டறே! உனக்கெதுக்கு வண்டி?” என்றான் அவன் நக்கலாக.

    ஏய்! வெறுப்பேத்தாதேடா! மரியாதையா என் வண்டி சாவியைக் கொடு!”

     ஏய்! யாரு வெறுப்பேத்தறாங்க! நீதான் இங்க வந்து லந்து பண்ணிக்கிட்டிருக்கே! இது என் வண்டி கிளம்பு கிளம்பு!” அவன் வண்டியைக் கிளப்ப முயல

   நிலா கத்தினாள். ”ஹெல்ப்.. ஹெல்ப்…!”

  இதுவரை  டீக்கடை முன் நின்று இவர்கள் சண்டையை ஏதோ லவ் தகறாரு என்று அசுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்த கும்பல் நிலா ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தியதும்  என்னம்மா! என்ன விஷயம்?” என்று அருகே வந்து விசாரிக்க ஆரம்பித்தது.

   .. இவன் என் வண்டியை பீச்சிலே இருந்து திருடிக்கிட்டு வந்துட்டான்! பின்னாலேயே துரத்திவந்து இங்கே பிடிச்சிட்டேன்! வண்டிசாவியை கொடுக்க மாட்டேங்கிறான்..!”

      என்னப்பா தம்பி! என்ன பாப்பா இப்படி சொல்லுது! நல்ல பையனா சாவியைக் கொடுத்திட்டு கிளம்பு!”  கூட்டத்தில் திடகாத்திரமான ஒருவன் முரட்டு மீசையுடன் பஞ்சாயத்து பண்ண வரவும்

     அண்ணே! எம் பேர் சங்கர்! இது என் வண்டி!  வண்டி நம்பர் டி,என் 22 8634. இதோ பாருங்க என் டிரைவிங் லைசென்ஸ்! இது என்னோட ஆர்.சி புக் செக் பண்ணி பாத்துக்கங்க!”

  முரட்டு மீசைக்காரன் எல்லாவற்றையும் வாங்கி சரி பார்த்தான். “ஆமா தம்பி! எல்லாம் சரியாத்தான் இருக்கு! இந்த பாப்பாத்தான் பொய் சொல்லுது! ஸ்டேஷனுக்கு  அனுப்பி வைச்சிரலாமா?”

   நிலாவுக்கு வியர்த்தது.

    அட போலீஸ் ஸ்டேஷனா?  உண்மையிலேயே இது அவன் ஸ்கூட்டர்தான் போலிருக்கு! வண்டியை திருடிட்டு வந்தோமே! ஏதாவது செக் பண்ணோமா? அட்லீஸ்ட் வண்டி நம்பரையாவது மனப்பாடம் பண்ணோமா? இல்லையே இவங்க கிட்டே மாட்டிக்கிட்டோமே! போலீஸ் கீலீஸ் என்று போனால் முதலுக்கே மோசமாகி விடுமே? ஐயோ என்ன செய்யலாம்?

   திடீரென்று.. தன் வாளை உயர்த்தினாள் நிலா, ”ஏய், இந்த குந்தவை நாச்சியாரையே சந்தேகப்படுகிறீர்களா? என் அண்ணன் ஆதித்த கரிகாலனிடம் சொல்லி உங்களை கழுவில் ஏற்றி விடுகிறேன்! என் தம்பி அருண்மொழியை கூப்பிட்டு உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன்! ம்வழி விடுங்கள்!” என்று வாளை சுழற்றியபடியே வந்து குதிரை மீது தாவி  ஏறியவள் குதிரையை விரட்டினாள்.

   அட சுத்த லூசுப் போல இருக்கு! குந்தவைன்னுது! ஆதித்த கரிகாலன்னுது! வாளை சுத்துது! நல்லா வந்து சேருதுங்க பாரு!  நீ போ தம்பி!” என்று கூட்டம் கலைய ஆரம்பித்தது.

    ஆக்டிவாவை கிளப்பியவன்  நகரின் ஒதுக்குப்புறத்திலிருந்த மெக்கானிக் ஷாப்புக்குள் நுழைந்து நிறுத்தினான்.

    வாடா! மனோஜ்!  இன்னிக்கு இந்த வண்டிதான் சிக்குச்சா! வண்டி பார்க்க நல்ல கண்டிசன்லதான் இருக்கு! பிரிச்சு மேய்ஞ்சிருவோமா?” என்று கண்ணடித்தான் மெக்கானிக் மைக்கேல்.

    இன்னிக்கு ஒரு பொண்ணு என்னை பிரிச்சு மேய்ஞ்சிருப்பா   ! நல்ல வேளை தப்பிச்சேன்!” என்று நடந்த அத்தனையும் சொல்லி முடித்தான் மனோஜ்.

    ஆமா! வண்டி நம்பர்! ஆர்சி புக் பேரு எல்லாம் எப்படிடா கரெக்டா சொன்னே!”

    வண்டியை எடுத்ததுமே! முதல்லே  டாஷ் போர்ட்லே கைவிட்டு உள்ளே இருந்த ஆர்சி புக் லைசென்ஸ் எல்லாம் எடுத்து பார்த்துட்டேன்! அதான் கரெக்டா சொல்லி தப்பிச்சிட்டேன்!”

   புத்திசாலிடா நீ! ஆனா அந்த பொண்ணு ஏன் நம்பர் சொல்ல பயந்துச்சு!”

   அதான் எனக்கும் தெரியலைடா!” என்று மனோஜ் சொல்லிக்கொண்டிருக்கும் போது

  சென்னையை விட்டுத் தள்ளியிருக்கும் புறநகரில்  ஒரு வீட்டின் முன் குதிரையை விட்டு இறங்கினாள் நிலா.

       என்னம்மா! ஆக்டிவாவிலே போனே! குதிரையிலே வர்றே!” அவளது அண்ணன் கேட்க

   ஒரு கேடிப் பய என்கிட்டே இருந்து அடிச்சுட்டான்னா!”

    அட உன்னையே ஒருத்தன் ஏமாத்திட்டானா?” “ஆமான்னா! அவன் பெரிய கில்லாடியா இருக்கான்! நல்ல வேளை ஒரு குதிரையை பீச்சிலேயிருந்து ஓட்டிக்கிட்டு வந்துட்டேன்! த்ரிஷா இல்லேன்னா நயந்தாராங்கற மாதிரி! என்று சிரித்தாள் நிலா.


(கணேஷ்பாலா முகநூலில் வைத்த படத்திற்கு கதை எழுதும் போட்டியில் இறுதிச் சுற்றுவரைக்கும் வந்த சிறுகதை)

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2