மன்னித்துவிடு மணிமொழி!

 மன்னித்துவிடு மணிமொழி!

அவன் அப்படி செய்வான் என்று கொஞ்சம் கூட மணிமொழி நினைத்துக்கூட பார்க்கவில்லை! பரபரவென உள்ளே வந்த்தும் யார் இருக்கிறார்கள் என்ன ஏது என்று ஒன்றைக்கூட பார்க்கவில்லை! என்னை மன்னித்துவிடு மணிமொழி! என்று சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்துவிட்டான்.

  அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவரவே ஒருநிமிஷம் ஆகிவிட்ட்து மணிமொழிக்கு. ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள். “என்ன ..என்னங்க இது! முதல்லே எழுந்திருங்க!” என்றாள்.

பக்கத்து அறையில் அவனது மாமனாரும் மாமியாரும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அதை சிறிதும் லட்சியம் செய்யாமல், ”மணிமொழி முதல்லே நீ என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தைச் சொல்லு! அப்போதான் எழுந்திருப்பேன்!” என்றான் மகேஷ். மணிமொழியின் கணவன்.

  “உங்களை எதுக்கு மன்னிக்கனும்?” என் பேர் எல்லாம் இன்னும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முதல்லே எழுந்திருங்க! ஏதோ சி எம் கால்லே விழற அமைச்சருங்க மாதிரி என் கால்லே விழுந்திருக்கீங்க என்றாள் மணிமொழி நக்கலாக.

 தடாலடியாக விழுந்தவன் தடாலடியாக எழுந்தான். இ..இந்த நக்கல்தான்  நம்மளை பிரிச்சது… அது மட்டும்..

  அது மட்டும் இல்லேன்னா! என்னை கட்டிக்கிட்டு அவளை வைச்சிக்கிட்டு இருக்க மாட்டீங்களா?

’பளார்” என்று கன்னத்தில் அடிவாங்கியது போல உணர்ந்தான்.

”மணிமொழி! எல்லாத்தையும் மறந்திருவோம்! என்னை மன்னிச்சிடு! நான் அவளை மறந்திட்டேன். இனிமே உன்னோடத்தான் வாழப் போறேன்!”

   ”அதுக்கு நான் ஒத்துக்கணுமே மிஸ்டர் மகேஷ்!”

”ப்ளீஸ் மணிமொழி! நான் திருந்திட்டேன்! எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு!”

“நிறைய சந்தர்ப்பங்களை உங்களுக்கு கொடுத்து பார்த்திட்டேன்! இனியும் அப்படிக் கொடுத்து ஏமாற நான் தயாரா இல்லை! இப்ப நீங்க எதுக்கு வந்திருக்கீங்க டைரக்டா நீங்க சொல்றீங்களா? இல்லை நானே சொல்லட்டுமா?

மணிமொழியின் இந்த அதிரடியான பேச்சால் அதிர்ந்தான் மகேஷ். ”அ.. அது வந்து..”

 ”போலீஸ்லே உங்க மேல கொடுத்த கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கனும் அதைத்தானே சொல்ல வர்றீங்க?

அவன் முகம் பேஸ்த் அடித்தாற்போல மாறியது.. அ.. அதேதான்! ப்ளீஸ் மணிமொழி இந்த ஒரு முறை…!

   ”யோவ்! நீ எது வேணுமின்னாலும் செய்வே! தாலிக்கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நான் மன்னிச்சு விட்டுகிட்டே இருக்கணுமா?”

  “தப்புதான் மணிமொழி!’ நீ மட்டும் டைவர்ஸுக்கு ஒத்துக்கிட்டிருந்தா நான் அப்படியொரு  வேலை செஞ்சிருக்க மாட்டேன்!”

”யோவ்! பொம்பளைங்கன்னா உங்க விளையாட்டுப் பொருளா? நினைச்சா கல்யாணம் பண்ணிப்பீங்க! வேண்டாம்னா டைவர்ஸ் வாங்கிப்பீங்க! நாங்க என்ன யூஸ் அண்ட் த்ரோ மெட்டீரியலா? இந்த நவீன யுகத்திலேயெயும் எங்களை அடிமையாவே  நடத்த பார்க்கிறீங்களே!”

 ”சாரி மணிமொழி! என் விருப்பம் இல்லாமலே வீட்டுலே உன்னை எனக்கு கட்டி வைச்சிட்டாங்க! நான் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அவளை மறக்க முடியலை! அதான் உன்னை விவாகரத்து பண்ணிட்டு அவளோட வாழனும்னு டைவர்ஸ் கேட்டேன்”.

 ”ஏய்யா! இந்த புத்தி கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடி வந்திருக்கணும்! நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்! அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உங்கப்பா அம்மாகிட்டே சொல்ல வேண்டியதுதானே.. கமுக்கமா இருந்துட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே! அதோட விட்டியா? ஒரு மாசம் முழுசா என் கூட குடித்தனம் நடத்திட்டு உன் லவ்வர் நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சதும் என்னை கழட்டிவிட துணிஞ்சிட்டே!”

 ”உனக்கு அவளைப்பிடிச்சிருந்தா அப்பவே என்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லே! நானே என் வீட்டில் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்! ஆனா கடைசி வரைக்கும் கமுக்கமா இருந்திட்டே என்னோட மனசை கலைச்சு என் உடம்பை சுவைச்சு எல்லாத்தையும் முடிச்சுட்டு எப்படிய்யா உனக்கு மனசு வந்த்து டைவர்ஸ் கேட்க.  உன் களவாணித்தனம் எல்லாத்தையும் மன்னிச்சு உன் கூட வாழ நான் தயாரா இருந்த போதும் நீ ருசி கண்ட பூனையா அவ பின்னாடியே சுத்தி வந்து என்னை டார்ச்சர் பண்ணி விவாகரத்து கேட்டே அதுக்கு நான் ஒத்துக்கலை!”

   ”சாரி மணிமொழி! நான் செஞ்சது தப்புத்தான்! ஆனா என்னாலே அவளை மறக்க முடியலை! அவ இல்லாம என்னாலே வாழ முடியாதுன்னு அப்ப தோணுச்சு!”… 

”சபாஷ்! கட்டின பொண்டாட்டிக்கிட்டேயே வைப்பாட்டி இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற தைரியமாவது உனக்கு இருக்கே! இந்த தைரியம் உனக்கு முன்கூட்டியே இருந்திருந்தா என்னோட வாழ்க்கையை நான் இழந்திருக்க மாட்டேன் இல்லே.?”

   ”உனக்கென்ன? தினம் ஒரு பொண்ணோட வாழ்ந்துட்டு போயிருவே! நான் அப்படி இருக்க முடியுமா? சமூகம் என்னைப்பத்தி என்னவெல்லாம் பேசும்? அதை யோசிச்சுப் பார்த்தியா? யோசிச்சு பார்த்திருந்தா அப்படி ஒரு வேலையை நீ பார்த்திருப்பியா?”

   ”இல்லே மணிமொழி! மேட்ரிமோனியல்லே உனக்கு வரன் வேணும்னு அப்ளை பண்ணது என்னோட தப்புத்தான் ஒத்துக்கறேன்! மகா மோசமான செய்கை அது! அதுக்காக நான் வெட்கப்படறேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சுரு!”

  ”செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு ஈஸியா மன்னிப்புன்னு கேட்டுட்டா சரியா போயிருமா? புருஷன் ஒருத்தன் இருக்கிறப்ப இன்னொருத்தன் என்னை பெண் கேட்டு வந்தா என் மனசு என்ன பாடுபட்டிருக்கும்? நான் எப்படி தவிச்சுப் போயிருப்பேன்! என் மன உளைச்சளுக்கு அளவே இல்லாம ஒரு நாளைக்கு பத்து இருபது போன் கால்கள்! இந்த கஷ்டத்தை எல்லாம் நான் அனுபவிச்சிட்டு உனக்கு மன்னிப்பு கொடுத்திடனுமா?”

 ”மணிமொழி நான் தப்பை உணர்ந்திட்டேன்! என் வீட்டுலேயே என்னை சேர்க்க மாட்டேன்னுட்டாங்க!  அவளும் என்னை உதாசீனப்படுத்திட்டு வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டு வைச்சிருக்கா! நீயும் என்னை வெறுத்து ஒதுக்காதே…!”

 “பலாக்கா இல்லேன்னுதான் இந்த கலாக்காவைத் தேடி வந்திருக்கியா? உன் புத்தி எப்படி மாறும்?”

  ”எல்லாம் உன்னாலேதான்! நீ மட்டும் சைபர் க்ரைம்லே புகார் பண்ணாம இருந்தா எல்லாம் நல்லபடியா போயிருக்கும்! எனக்கு வெளிநாட்டுலே வேலை கிடைச்சிருக்கும் அவளும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிருப்பா! உன்னாலே என் வாய்ப்பெல்லாம் போயிருச்சு! நீயாவது என்னை ஏத்துக்கோ! நடந்ததை மறந்துட்டு நாம நல்லபடியா வாழலாம்!”

  ”உன்னைப் போல ஒரு ஈனபுத்தி உள்ள மனுஷன் கூட நான் வாழத்தயாரா இல்லை! ஒரு காலத்திலே உன் கூட்த்தான் வாழ்க்கைன்னு இருந்தேன். ஆனா அது தப்புன்னு நீ நல்லாவே புரிய வைச்சிட்டே! நீ என்னதான் கால்லே விழுந்து மன்னிப்பு கேட்டாலும் உன்னை மன்னிக்க என் மனசு இடம் கொடுக்கலே! பொண்டாட்டிக்கே நீ புருஷன் தேடினவன் இல்லையா? அதுவும் ஒருவிதத்துலே நல்லதாத்தான் அமைஞ்சிருக்கு. அதுலே வந்த ஒரு வரன் எனக்குப் பிடிச்சுப் போச்சு! என் முழுக்கதையை அவருக்கு சொல்லிட்டேன். உன் கூட டைவர்ஸ் வாங்கிற வரைக்கும் அவர் காத்திருக்கிறதாவும் சொல்லிட்டார். நீ கேட்ட டைவர்ஸ் உனக்கு இப்ப ஈஸியா கிடைச்சிருக்கு வாங்கிட்டுப் போ!” என்று பீரோவைத் திறந்து விவாகரத்து பத்திரத்தை எடுத்து வீசி எறிந்தாள் மணிமொழி.

“அப்போ போலீஸ் கம்ப்ளைண்ட் வாபஸ் வாங்க மாட்டியா?”

”மாட்டேன்! நீ தண்டனை அனுபவிச்சே ஆகனும்! உன் குற்றம் உன்னை உறுத்தனும் ஆனா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம  என்னை ஏமாத்தி மன்னிப்பு கேட்டு கம்ப்ளைண்ட வாபஸ் வாங்க நினைச்சே இல்லே! அது தப்பு! உன்கிட்டே நான் மட்டும் இல்லே! எந்த பொண்ணுங்களும் இனி சிக்கக் கூடாது! அதுக்கு நீ போலீஸ் கொடுக்கிற தண்டனையை ஏத்துக் கிட்டுதான் ஆகனும்! இனிமே உங்களுக்கு ஜெயில்தான் மாமியார் வீடு மிஸ்டர் மகேஷ்.” மணிமொழி ஆக்ரோஷமாக சொல்ல 

     அதிர்ந்துபோய் பேச வார்த்தைகள் வராமல் தளர்ந்து போய் நடந்தான் மகேஷ்.

 (முற்றும்)

 (சில வாரங்களுக்கு முன் தினமலர் பேப்பரில் படித்த ஒரு செய்தியே இந்தக் கதையின் கரு.   மனைவிக்கு வரன் தேடி மேட்ரிமோனியலில் விளம்பரம் செய்த கணவர் கைது என்பதுதான் அந்த செய்தி>

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2