நாகினி- சிறுகதை

 

நாகினி!

      நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

  (


திரு கணேஷ்பாலா ஓவியக்கதைப் போட்டி சீசன் 6க்கு எழுதிய கதை)

ஒரு வாரமாய் உட்கார்ந்து மேட்ரிமோனியல் தளங்களில் வந்திருந்த ஜாதகங்களை அலசிக்கொண்டிருந்தான் சதீஷ். முப்பதுகளை கடந்த சாப்ட்வேர் இஞ்ஜினியர். லகரங்களில் சம்பளம் வாங்கினாலும் பெண் கிடைத்தபாடில்லை. தரகர் மூலமும் தெரிந்தவர்களிடம், சொந்த பந்தம் என்று விசாரித்து அவனது தாய் எத்தனையோ பெண்களைப் பார்த்தாயிற்று.

   எல்லாம் பொருந்தி வந்தாலும் ஏதோ ஒன்று குறைசொல்லி அவனை தட்டிக் கழித்தனர் பெண்கள். வெறுத்துப் போன சதீஷ் அம்மா நீ பெண் பார்த்த்து போதும்! எனக்கு கல்யாணம் பண்ணிக்கணுங்கிற இண்ட்ரஸ்டே போயிருச்சு!” ”அய்யோ! இந்த பொண்ணுங்கள் எவ்வளோ டிமாண்ட் பண்றாங்க!  சொந்த வீடு இருக்கணும் ஒண்ணரை லட்சம் சம்பளம் வேண்டும் கூட பிறந்தவங்க குறிப்பா நாத்தனார் இருக்கக் கூடாது. கல்யாணமான தனிக்குடித்தனம் போகணும் சொந்தமா கார் இருக்கணும். ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்கணும்! இப்படி ஆயிரம் கண்டீஷன்! எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாலும். தலையிலே முன் நெத்தி தெரியுது வழுக்கைன்னும்! நரை விழுதுன்னும் பல்லு  கோணையா இருக்கு! தொப்பை விழுந்திருக்குன்னு நொண்டி சாக்கு  சொல்லி தட்டிக்கழிக்கிறாங்க! இனிமே நீ எதுவும் தேடாதே! நான் நாலைந்து மேட்ரிமோனியல் சைட்ல  பதிவு செஞ்சு வச்சிருக்கேன்! அதுலே ஏதாவது ரிப்ளை வந்துச்சுன்னா பார்க்கிறேன்.  அதிலே வர ஜாதகம் போட்டோவைப் பார்த்து ஒரு பொண்ணை போய் பார்க்கிறேன்! கும்பல் வேணாம். எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போச்சுன்னா அப்புறம் மேரேஜ் பிக்ஸ் பண்ணிக்கலாம். கொஞ்ச நாளைக்கு இந்த பொண்ணு பார்க்கிறேன்னு கும்பல் கூட்டறதை எல்லாம் நிறுத்தி வை!” என்று சொல்லியிருந்தான்.

 உண்மையில் அதுவரையில் எந்த மேட்ரிமேனியலிலும் அவன் பதிவு செய்யவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டோமே என்று கூகிளி தேடியபோது ஏராளமான மேட்ரிமோனியல் சைட்கள். அதில் ஒரு நாளைந்து சைட்களை தேர்ந்தெடுத்து சில ஆயிரங்களை செலவு செய்து பதிவு செய்திருந்தான்.

   ஒரு மாதம் கடந்துவிட்டிருந்த்து. ஊரிலிருந்து அம்மாஎன்னடா ஏதோ மேட்ரிமோனியல் அது இதுன்னே! ஒரு மாசம் ஓடிப்போயிருச்சு! தரகர் ஒரு ஜாதகம் கொண்டு வந்திருக்கார் போய் பார்க்கலாமா? ”என்ற போது சூடுபட்ட பூனையாக, ”அம்மா! நீ சும்மா இரு! நான் மேட்ரிமோனியல் போய் தேடிப் பார்க்கிறேன். அந்த தரகர் கமிஷன் வாங்கிறதுக்கு நான் மாப்பிள்ளை வேஷம் கட்டத்தயாரா இல்லை! ”என்று பொரிந்து தள்ளியவன் மேட்ரிமோனியலை மேய்ந்தான்.

   அப்போதுதான் இந்த ராகினியின் போட்டோவும் ஜாதகமும் பார்த்தான். போட்டோவில் பழையகால சரோஜா தேவி வைஜெயந்திமாலா ஸ்டைலில் தாவணி போட்டு இருந்த பெண்ணைப் பார்த்து அட ஹோம்லி லுக்கா இருக்காங்க! போய்த்தான் பார்ப்போமே என்று அதில் கொடுத்திருந்த எண்ணுக்கு ரிங் செய்தான்.

    போன் எடுக்கப்பட்டது.” ஹலோ! யாரு? ”என்று ரீங்காரமிட்ட்து ஒரு பெண் குரல்.

  என் பேர் சதீஷ்! மேட்ரிமோனியல்லே உங்க புரபைல் பார்த்தேன்! நான் ஒரு சாப்ட்வேர் இஞ்ஜினியர்…”. சதீஷ் பேச ஆரம்பிக்க..

  ஹலோ.. இருங்க! நான் என் அண்ணாவைப் பேச சொல்றேன் என்று அண்ணா…! அண்ணா!” என்று குரல் கொடுத்தது அந்த குரல்

 ஓர் இரண்டு நிமிடக் காத்திருப்புக்குப் பின் ஹலோ சொல்லுங்க!” என்று கரகரப்பான அசோகன் குரலாய் ஒலித்த்து ஓர் ஆண்குரல்.

  சார்! நான் சதீஷ்! சாப்ட்வேர் இஞ்ஜினியரா இருக்கேன்”!

  இருந்துட்டு போங்களேன்! அதுக்கென்ன! எங்க கம்ப்யூட்டர்லே ஹார்ட்வேர் தான் ப்ராப்ளம்! சரி பண்ணுவீங்களா?”

   சார் கிண்டல் பண்ணாதீங்க! திருமண பந்தம் மேட்ரிமோனியல்லே உங்க சிஸ்டரோட புரபைல் பார்த்தேன்! எனக்குப் பிடிச்சிருக்கு! அதான் அலையன்ஸ் பேசலாம்னு கால் பண்ணேன்.”

    தம்பீ! அப்படி தெளிவா சொன்னாத்தானே புரியும்! ஆமா உங்க வீட்டுலே பெரியவங்க யாரும் இல்லையா? நீயே டைரக்டா கால் பண்ணிட்டே!”

   அம்மா இருக்காங்க சார்! ஆனா அவங்களுக்கு இந்த மேட்ரிமோனியல் விஷயம் எல்லாம் அவ்ளோ தெரியாது! நான் தான் அப்ளை பண்ணியிருந்தேன். உங்க பொண்ணோட ப்ரோபைல் பார்த்தேன். ஜாதகமும் திருமணப் பொருத்தம் ஆப்லே போட்டு சரி பார்த்தேன். பத்துக்கு ஒன்பது பொருத்தம் வருதுன்னு சொல்லுது! நீங்க விரும்பினீங்கன்னா ஒரு நாளைக்கு நேரடியா உங்க வீட்டுக்கு வரேன்! உங்க சிஸ்டருக்கு பிடிச்சிருந்தா என் அம்மாவை கூட்டிக்கிட்டு வரேன். நிச்சயம் பண்ணிக்குவோம் என்ன சொல்றீங்க!” ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

   தம்பி ரொம்ப பாஸ்ட்டாத்தான் இருக்கீங்க! ஆமாஉங்களுக்கு என்ன வயசு?”

   முப்பது நடந்துக்கிட்டு இருக்கு சார்!”

என் தங்கைக்கு இருபத்தாறுதான் ஆகுது! நாலு வருஷம் கேப் வருதே! சரி உன் போட்டோவை அனுப்பு இது வாட்சாப் நம்பர்தான்! இதுக்கே அனுப்பு! நாகினிக்கு பிடிச்சிருந்தா உன்னைக் கூப்பிடறேன் பொண்ணு பார்க்கிறதுக்கு!”

    நாகினியா? அதுக்கு எதுக்குய்யா பிடிக்கணும்?”

யோவ்? என்ன விளையாடிறியா? அது தான்யா என் தங்கச்சி! அதுக்குப் பிடிச்சாத்தானே உன்னை மாப்பிள்ளை ஆக்கிக்க முடியும்!”

  உங்க தங்கச்சிப் பேரு நாகினியா? ராகினின்னுதானே ப்ரோபைல்ல பார்த்தேன்!”

    ப்ரோபைல் பேரு ராகினி! வீட்டுலே கூப்பிடறது நாகினி!”

 ! அப்ப  சரி! நான் போட்டோவை அனுப்பி வைக்கிறேன்!”

விதி வலியது! இல்லாவிட்டால் சதீஷ் போட்டோவை அனுப்பி இருப்பானா? நாகினி என்னும் போதே உஷாராகி இருப்பான் அல்லவா?

போட்டோ அனுப்பிய மறுநாள் நாகினியிடமிருந்து போன். இல்லை இல்லை! நாகினியின் அண்ணனிடம் இருந்து போன்.

   ஹலோ! நான் ஆதிசேஷன் பேசறேன்!”

   ஆதிசேஷனா! யாரு அது? எனக்கு ஓவியர் ஆதிமூலம் தான் தெரியும்!”

  யோவ்! நாகினியோட அண்ணன்  பேசறேன்! நாகினிக்கு உன்னை போட்டோவுலே பிடிச்சிருக்கு! நேர்ல பார்க்க ஆசைப் படறா? நீ என்ன பண்றே? வர்ற வெள்ளிக்கிழமை ஒரு பத்து முட்டையும் ரெண்டு பாக்கெட் ஆவின் பாலும் வாங்கிட்டு காலையில பத்து மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்கு வந்துடு!”

    அது எதுக்கு சார் பத்து முட்டையும் பால் பாக்கெட்டும்?”

நீங்க பொண்ணு பார்க்க வந்தா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தரோம் இல்லையா? அதே போலத்தான் இப்ப  இதுதான் ட்ரெண்டு! உனக்கு நாகினியை பார்க்கணும்னா பத்து முட்டையும் பால் பாக்கெட்டும் வாங்கிட்டு வரே!”

   ஓக்கே சார் நோ ப்ராப்ளம்! ”

 அந்த வாரம் வெள்ளிக்கிழமை குளித்து முடித்து பய பக்தியாய் ஜீன்ஸ் எல்லாம் போடாமல் நல்ல பேண்ட்டும் சர்ட்டும் போட்டு படிய தலை வாரிக்கொண்டு நாகினியின் வீட்டுக்கு கிளம்பினான் சதீஷ்.

மளிகைக் கடை அண்ணாச்சியிடம், ரெண்டு பாக்கெட் ஆவின் பாலும் பத்து முட்டையும் கேட்க,

   என்ன தம்பி நாகாத்தம்மன் கோயிலுக்கா? பய பக்தியா கிளம்பிட்டீங்க போல! முப்பது வயசு ஆகிருச்சு இல்லே! இப்படி பயபக்தியா பரிகாரம் எல்லாம் பண்ணாத்தான் சீக்கிரம் பொண்ணு கிடைக்கும். நல்லபடியா போய் சாமி கும்பிட்டு வாங்க!” என்று கேட்காமலேயே அட்வைஸ் வழங்கினார்.

   ஒன்றும் பேச முடியாமல்ஹிஹிஎன்று வழிந்துவிட்டு நாகல்கேணி, நாகாத்தம்மன் கோயில் தெருவிலிருந்த நாகினியின் வீட்டுக்குள் நுழைந்தான்.

    காலிங் பெல்லை அழுத்தியதுமே உள்ளே மகுடி ஊதியது..!

  அடடே இது என்ன வித்தியாசமான காலிங் பெல்..!

  யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. கதவைத்திறந்துகொண்டு வெளியே வந்தான் ஆதிசேஷன். கழுத்தில் துண்டுக்குப் பதிலாக மண்ணுளிப் பாம்பு ஒன்றைப் போட்டிருந்தான்.

     கரெக்டா.. பத்து மணிக்கு வந்திட்டிங்களே! வாங்க வாங்க! ”என்று  அவன் கூப்பிடுகையில்புஸ் புஸ்என்று  உள்ளே இருந்து வரவேற்பு கொடுத்தது குட்டி நாகம் ஒன்று.

  திகிலில் உறைந்த சதீஷ்.. மிரண்டு போய் நிற்க, ”அட சும்மா வாங்க தம்பி! இதெல்லாம் ஒண்ணும் பண்ணாது! எல்லாம் நம்ம குட்டிங்கதான்! கரெக்டா பத்து முட்டையும் பாலும் வாங்கிட்டு வந்திட்டீங்களே!  உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு! நாகினிக்கும் ஒக்கேன்னா! உடனே நிச்சயதார்த்தம் தான்!”

      வாங்க தம்பி! வாங்க! இப்படி சேர்ல உக்காருங்க!” என்று வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து சேரில் அமர வைத்தான் ஆதிசேஷன்.

 எங்கிருந்தோ இரண்டு பாம்புகள் ஓடோடி வந்து அவன் காலடியில் ஊற அவசரமாய் கால்களை தூக்கிச் சேரில் வைத்துக்கொண்டான்.

  அம்மா நாகினி! மாப்பிள்ளைக்கு காபி கொண்டாம்மா!” என்றார் ஆதிசேஷன்.

   அடுத்த நிமிடம் நாகினி  ஒய்யாரமாய் பாவாடை தாவணியில் கையில் ஒரு தட்டில் ஆவி பறக்க காபி எடுத்து வர அந்த திகிலிலும் ஜொள்ளு விட்டான் சதீஷ்.

 இதற்குள் ஒரு பாம்பு நாற்காலின் கால்களில் ஏற…” பாபாம்….  ஃபூ…” என்று அண்ணாமலை ரஜினி போல காற்றில் குரலைவிட்டான் சதீஷ்.

 அட ஏன் தம்பி இப்படி பயப்படறீங்க! இதெல்லாம் நம்ம செல்லக் குட்டிங்க! பிறந்த்துலே இருந்து ஒண்ணு மண்ணா இங்கேயே நம்ம கூடவே குடி இருக்குதுங்க! நாகினிக்கு இதுங்கன்னா ரொம்ப இஷ்டம். இதுங்க ஒண்ணும் பண்ணாது சும்மா பயப்படாம மாப்பிள்ளை மாதிரி ஜோரா போஸ் கொடுங்க!”

 என்னது ஒண்ணு மண்ணா வளருதுங்களா?” குரலே எழும்பாமல் கேட்டான் சதீஷ்!

 அட ஆமாம் தம்பி! நாங்க பரம்பரை பாம்பாட்டி குடும்பம்! பாம்புகதான் எங்க குலதெய்வம்! அதனாலேதான் எங்க ஜீவனமே ஓடுது! இதோ இவன் தான் அண்ணாமலை படத்துலே நடிச்சிருக்கான். இதோ இவ இருக்காளே இவ நீயா டூ வில என்னாமா டான்ஸ் ஆடி அசத்துனா தெரியுமா? படையப்பாவுலே ரஜினி புத்துலே இருந்து  ஒரு பாம்பை எடுப்பாரே! அவன் தான் இவன்!” என்று அவர் அடுக்கிக் கொண்டே போனார்

ஜாதகப் பொருத்தம் எல்லாம் ஓக்கேதான் தம்பிஆனா அந்த பேருதான் எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை! மனச்சங்கடமா இருக்கு!”

  ஏன்? என் பேருக்கு என்ன கொறை?”

நாங்க பாம்புகளை குலதெய்வமா கும்பிடற வம்சம் தம்பி! எங்க காது குத்து கல்யாணம் எல்லாம் நாகத்தம்மன் கோயில்லதான் நடக்கும் எங்க பேரும் நாகராஜன், நாகம்மா, நாகினி, ஆதிசேஷன், நாகேஷ் இப்படித்தான் இருக்கும்! ஒரே ஒரு கண்டீசன் தான் உங்க பேரை மட்டும் நாகேஷ்னு மாத்திட்டீங்கன்னா எனக்கு டபுள் ஓக்கே

 கண்ணுங்களா! நம்ம மாப்பிள்ளை உங்களுக்கெல்லாம் பாலும் முட்டையும் வாங்கியாந்திருக்கார்! அவரைப் போய் பயமுறுத்தலாமா? பேசாமா இருங்க! தூர போங்க!” என்று அதட்டவும் செய்தார் ஆதி சேஷன்.

  என்னம்மா! நாகினி! மாப்பிள்ளையை உனக்குப் பிடிச்சிருக்கா வெட்கப்படாமா சொல்லும்மா!”

  போங்கண்ணா….! ”என்று நாகினி உள்ளே ஓடிவிட

மாப்ளே! பொண்ணுக்கு உங்களை பிடிச்சுப் போச்சு அதுக்கு அடையாளமா எங்க வழக்கப் படி பாம்பு மாத்திப்போம்! இந்தாங்கஎன்று தன் கழுத்தில் இருந்த பாம்பை ஆதிசேஷன் சதிஷின் கழுத்தில் போட வர

  ஐயோ! பாபாம்பும் வேணாம்! நாகினியும் வேணாம்!  கல்யாணமும் வேணாம்! ஆளை வுடுங்க! சாமி…! ”என்று ஓட ஆரம்பித்தான் சதீஷ்.

  (முற்றும்)

 

 

Comments

  1. ஹாஹாஹாஹா சிரித்து விட்டேன் சுரேஷ்!!! பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!! கதையை ரசித்தேன். வித்தியாசமான கதை.

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2