அஞ்சாயிரம் ரூபாய்!

 

அஞ்சாயிரம் ரூபாய்!

                                             நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

 


விடிந்தும் விடியாதப் பொழுதில் புழக்கடையில் பல் விளக்கிக் கொண்டிருந்தபோது அந்த குரல் கேட்டதுகடைசியிலே அவ செத்தேப் போயிட்டாளாங்க!”

 என்னது? இப்படி மொட்டையா சொன்னா எப்படி? யாரு..? அப்பா கேட்க

நம்மமுத்தம்மாங்க!”

வேலைக்காரி முத்தம்மாவா? ”நம்ப முடியாமல் கேட்டார் அப்பா.

அவசரமாய் முகம் கழுவிக் கொண்டு சமையல்கட்டில் நுழைந்தேன். காபி போட்டுக் கொண்டிருந்த அம்மா,” பாவம்டா! முத்தம்மா செத்துட்டாளாம்! ”என்றாள்.

அப்போ என் ஐயாயிரம் ரூபா அவ்ளோதானா?”  அதிர்ச்சியாக கேட்டேன்.

ஆமாம்டா! அவ உனக்கு ஐயாயிரம் தரணும் இல்லே…! பாவி, சண்டாளன்..! அவ பையன் நம்ப வைச்சு வாங்கிட்டுப் போனான் இல்லே..!”

அந்த காட்சி கண்முன்னே நிழலாடியது.

ஒரு மாதம் முன்பிருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மதிய வேளையில் ரிலாக்ஸாக போனில் யூ ட்யுப் மேய்ந்து கொண்டிருந்தபோது வாசலில் நிழலாடியது.

யாரு…?”

நான் பிரபுங்க….!  முத்தம்மாவோட பையன்..!”

உள்ளே வா..!”

கேட்டைத்திறந்துகொண்டு உள்ளே வந்தவன், ”அம்மா இல்லீங்களா? ”என்றான்.

இல்லையே.. அவங்க சிநேகிதி வீட்டு வரைக்கும் போயிருக்காங்க!”

வர நேரமாகுவுங்களா?”

எப்படியும் சாயந்திரம்தான் வருவாங்க!”

அவ்ளோ நேரமாவுங்களா?” அவன் முகத்தில் பதட்டக் களை!

ஏன் பதட்டப் படறீங்க? எதுவா இருந்தாலும் என்கிட்டே தயங்காம சொல்லுங்க!”

சார் உங்களை எனக்குப் பழக்கம் இல்லே..! உங்கம்மாவை நல்லாத் தெரியும். இதுவரை உங்களை பார்த்த்தும் இல்லே..!”

நான் ஞாயித்துக்கிழமையிலேதான் வீட்டுலே இருப்பேன். மத்தநாள்லே ஆபீஸ் போயிருவேன். லேட் நைட் தான் வீட்டுக்கு வருவேன். அதான் பாத்திருக்க மாட்டே.. என்ன வேணும் தயங்காம சொல்லு..”!

அவன் நெருங்கி வந்து கைகளைப் பிடித்துக் கொண்டான். அவன் மீதிருந்து சாராய நெடி வீசியது. கலைந்துபோன பரட்டைத் தலை! உதட்டின் கீழே சில முடிகள் தாடி என்றபெயரில் முளைத்திருந்த்து. மேலுதட்டில் பூனை மயிர்களாய் மீசை. மிஞ்சிப்போனால் ஒரு இருபந்தைந்து வயது இருக்கும். இதற்குள் குடிப்பழக்கமா..

அவன் கைகளை விலக்கிவிட்டு தூர நகர்ந்தேன்.

சாரி சார்..! என்னோட அண்ணன் மாதிரி நினைச்சு கையைப் பிடிச்சுட்டேன்..!”

இருக்கட்டும்! குடிச்சிருக்கியா? குடிப்பியா நீ..!”

அவன் முகம் ஒரு நொடி மாறி பின் இயல்புக்குத் திரும்பியது. ”மன்னிச்சுக்குங்க சார்.. மனசு ரொம்ப கஷ்டமாயிருந்தது.அதான் ஒரு கட்டிங் போட்டுட்டேன். தப்புதான்.. குடிச்சுட்டு உங்க வீட்டுக்கு வந்த்து தப்புதான்..”

சரி இருக்கட்டும்! என்ன விஷயம் சொல்லு.. என்ன மனக்கஷ்டம்..!”

அம்மாவுக்கு திடீர்னு உடம்பு முடியலே சார்.. வீட்டுலே வேலை செஞ்சிகிட்டு இருக்கும்போதே மூக்குலே இருந்து ரத்தமா கொட்டுச்சு!  நிக்கவே இல்லை.. ஆஸ்பிட்டல்லே கொண்டு போய் சேர்த்திருக்கேன். பி.பி அதிகமாயிருச்சாம். சுகர் வேற எக்கச்சக்கமா இருக்காம். அவசரமா ஒரு ஐயாயிரம் ரூபா வேணும் ஆஸ்பிடல் செலவுக்கு. எங்க கேட்டும் கிடைக்கலை! அடுத்த ட்ரிட்மெண்ட் பணம் கட்டினாத்தான் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க! பணம் புரட்ட முடியலை கையிலே இருந்ததை கட்டிதான் அட்மிட் பண்ணேன். இப்ப உடனடியா ஐயாயிரம் கட்டினாத்தான் ட்ரிட்மெண்ட் கண்டினியு பண்ண முடியும் இல்லாட்டி கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்றாங்க! இந்த நிலைமையிலே அவங்களை ஆஸ்பிடல் மாத்தினா எதாவது ஒண்ணு ஆயிருச்சுன்னா என்னாலே தாங்க முடியாது சார்…! ”உடைந்து அழுதான்.

எங்கெங்கேயோ கேட்டுப்பார்த்தேன் சார்! அம்மா வேலைப் பார்க்கிற வீடுங்க! என்னோட ப்ரெண்ட்ஸ் சொந்தக்காரங்க யாருமே உதவலை.. கையை விரிச்சுட்டாங்க! அதான் மனசு கஷ்டமாயிருச்சு! அதான் கொஞ்சம் சரக்கடிச்சிட்டேன். சாரி சார்.. என்னாலே அம்மாவை காப்பாத்த முடியலைன்னா எதுக்கு சார் நான் இருக்கணும்? நான் செத்துப் போறேன்.. என் உயிரை எடுத்துட்டு எங்கம்மாவை காப்பாத்தலாம்னா நான் என் உயிரைக் கொடுக்க்க் கூட்த் தயாரா இருக்கேன்! ஆனா பணம் இல்லே கேட்கறாங்க! நான் எங்கே போவேன்.”. மீண்டும் அழுதான்.

இதோ பார் பிரபுஅழாதே.. இப்ப இங்கே பணம் கேட்கத்தானே வந்தே..?”

ஆமாம் சார்! உங்கம்மா கிட்டே கேட்டு வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன். அவங்க இதுக்கு முன்னே ஒரு சமயம் கொடுத்திருக்காங்க! சும்மா வேணாம் சார்! கடனாத்தான் வாங்கிப்பேன். அடுத்தமாசம் சம்பளம் வாங்கினதும் திருப்பிக் கொடுத்துடறேன்.”

.. நீ வேலை செய்யறியா? என்ன வேலை செய்யறே..?”

ஒரு ப்ரைவேட் கம்பெனியிலே க்ரேன் டிரைவரா இருக்கேன் சார்!”

சரி எவ்வளோ வேணும்?”

ஐயாயிரம் சார்! ஐயாயிரம் இருந்தா போதும் டிரிட்மெண்ட் ஆரம்பிச்சிருவாங்க..!”

என்னோட அம்மாகிட்டே இதுக்கு முன்னாடி பணம் வாங்கியிருக்கியா?”

நான் வாங்கினது இல்லே சார்! அம்மா தான் ஆயிரம் ஐநூறுன்னு வாங்கியாரும்! என்கிட்டே நிறைய தடவை சொல்லியிருக்கு! நீங்க சந்தேகப்படற மாதிரி தெரியுது! வேணாம் சார்! நான் எங்கேயாவுது…!”

சரி! சரி! அதுக்குள்ளே முணுக்குன்னு கோபிச்சுக்கிறே! ஒரு க்ளாரிபிகேஷனுக்கு கேட்டேன் நான் ஐயாயிரம் தரேன்.. உங்கம்மாவுக்கு வைத்தியம் பண்ணு! ஆனா ஒழுங்கா அடுத்தமாசம் திருப்பிக் கொடுத்திடனும்

கண்டிப்பா கொடுத்திருவேன் சார்! இது என் அம்மா மேலே சத்தியம்! என்னை நீங்க முழுசா நம்பலாம்.”

ஐயாயிரம் எடுத்து வந்து கொடுத்தேன். வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டவன் சடாரென்று காலில் விழுந்தான்.

   என்னப்பா இது?”

நீங்க எனக்கு இப்ப கடவுள் மாதிரி சார்! எங்க அம்மாவை காப்பாத்தியிருக்கீங்க.. எத்தனை தடவை வேணும்னாலும் உங்க காலில் விழுவேன். சொந்தக்காரங்க ப்ரெண்ட்ஸ் யாரும் உதவாத போது என்னை முன்னே பின்னே பார்க்காத நீங்க உதவியிருக்கீங்க இதை நான் உயிர் இருக்கற வரைக்கும் மறக்க மாட்டேன் சார்!”

சரி சரி! எழுந்திரு! சீக்கிரம் போய் அம்மாவை கவனி”. அவன் கையெடுத்துக் கும்பிட்டபடி நகர்ந்தான்.

அன்று மாலை அம்மா வந்தவுடன் பிரபு வந்ததையும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்ததையும் சொன்னவுடன், ”ஏண்டா உனக்கு புத்தி இருக்கா இல்லையா?” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

ஏம்மா? முத்தம்மா நம்ம வீட்டு வேலைக்காரிதானே? அவளுக்கு உடம்புக்கு முடியலைன்னா நாமதானே உதவிப் பண்ணணும்.”

ஆமா இவரு பெரிய தாராளத் தர்மப் பிரபு! கர்ணமகாராஜா!”

இல்லேம்மா! நான் கடனாத்தான் கொடுத்திருக்கேன்..!”

டேய்..! உனக்கு சுத்தமா எதுவும் புரியலையா? இல்லே தெரியலையா?”

நான் முழிக்க, ”ஆளுதான் வளர்ந்துருக்கே தவிர அறிவு இன்னும் வளரலே..! முத்தம்மா நம்ம வீடு மாதிரி நாலு வீட்டுலே வேலை செஞ்சு மொத்தமா ஒரு பத்தாயிரமோ பாஞ்சாயிரமோ மாசம் சம்பாதிப்பாஅது அவ வீட்டுச்செலவுக்குச் சரியா போயிரும்! ஐம்பது நூறு கைமாத்து வாங்கினாக் கூட சம்பளத்துலே கழிச்சுப்பா.. திருப்பிக் கொடுக்க முடியாது.. அவளுக்குப் போய் ஐயாயிரம் கொடுத்து எப்படி திருப்பி வாங்கிறது..! சரி மாசம் ஆயிரம்னு பிடிச்சுக்க வேண்டியதுதான்.. உன்னை யாரு பெரியத் தனம் பண்ண சொன்னது இப்ப நான் அவஸ்தைப் படனும்! அதுவும் அந்த பிரபு ஒரு குடிகாரப் பய.. உண்மையாவே அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம வாங்கினானா இல்லே குடிக்க வாங்கினானோ முத்தம்மா வந்தப்புறம்தான் தெரியும்.”

என் முகம் தொங்கிப் போனது. தப்புப் பண்ணிவிட்டோமே! என்று மவுனமாக அறையில் புகுந்து கொண்டேன்.

மறுநாள் விடியற்காலையில் முத்தம்மா வந்து நிற்கவும்,” என்ன முத்தம்மா! உனக்கு உடம்பு சரியில்லை! ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்குன்னு உன் பையன் வந்து   ரூபா வாங்கிட்டுப் போயிருக்கான் நீ காலங்கார்த்தாலே நல்லபடியா வந்து நிக்கறே..!”

அடப்பாவி..! என் பேரை சொல்லி உங்களையும் ஏமாத்திட்டானா?”

என்னடி சொல்றே?”

குடிகாரப் பயமா அவன்! அவங்கப்பனை மாறியே எப்பவும் சரக்கடிச்சிட்டு திரியுது! போறாத கொறைக்கு கஞ்சாப் பழக்கமும் சேர்ந்துக்கிச்சு! வீட்டுலே பத்து பைசா நம்பி வைக்க முடியலை! எங்க வைச்சாலும் எடுத்துட்டு போயி குடிச்சுக் கெட்டுப்போறான்! எவ்வளோ சொல்லியும் திருந்தலை! வேலைக்கும் ஒழுங்கா போகாமா வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க! அதுக்கப்புறம் உறவுக்காரங்க சிநேகிதக்கார பசங்க கிட்டே இப்படி பொய் சொல்லிப் பணம் பறிச்சிட்டு இருந்தான். அவங்க இப்ப உஷாராகிட்டாங்க! கொடுக்கிறது இல்லே. அதான் இப்ப உங்க கிட்டே வந்து ஏமாத்தி வாங்கிட்டுப் போயிருக்கான் ஆமாம் எவ்வளவு கொடுத்தீங்க! ஆயிரமா ஐநூறா? என் சம்பளத்துலே பிடிச்சுக்கோங்க..!”

 ஆயிரமோ ஐநூறோ இல்லைடி.. சொளையா ஐயாயிரம்! என் பையன் ஏமாந்துபோய் கொடுத்திட்டான்!”

என்னம்மா இப்படி என் தலையிலே கல்லைத் தூக்கிப் போடறீங்க! ஐயாயிரமா? எப்படிம்மா நம்பிக் கொடுத்தீங்க! நான் எப்படிம்மா திருப்புவேன்.. புருஷனும் சரியில்லை! புள்ளையும் சரியில்லாமா வயித்தை கழுவ இப்படி பாத்திரம் கழுவி சம்பாதிக்கிறேன்! அதுலேயும் இந்தப் பாவி மண்ணை அள்ளிப் போட்டுட்டானே..! ரெண்டுமாசம் உங்க ஊட்டுலே சம்பளம் இல்லாம வேலை செய்ய வைச்சுட்டானே.. பாவிஇப்படி ஒரு புள்ளையை நான் பெத்த்துக்கு ஒரு கல்லைப் பெத்திருக்கலாம்!” ”என்று ஒப்பாரி வைத்தாள்.

சரி சரி! முத்தம்மா போனது போவட்டும்! ஒப்பாரி வைக்காதே! என் பையன் ஏமாந்துட்டான். உனக்கு பி.பி அதிகமாகி மூக்குலே ரத்தம் ஒழுகி ஆஸ்பிடல்லே சேர்த்துருக்குன்னு நம்பற மாதிரி பொய் சொல்லியிருக்கான் உன் பையன். இந்த லூசும் அதை நம்பிருச்சு!”

இப்ப என்ன செய்யலாம்மா! நான் எப்படிம்மா பணத்தை திருப்புவேன். உங்க சம்பளம் ரெண்டு மாசம் வரலைன்னா என் குடும்ப செலவுக்கு தடுங்கினத்தோம் போட வேண்டியதா ஆயிருமே..!”

அதை அப்புறம் பார்த்துக்கலாம்! மொத்தமா ஒண்ணும் நீ திருப்ப வேணாம்! மாசா மாசம் ஐநூறு ஐநூறா பிடிச்சுக்கறேன்! நி பொலம்பாம வேலையைப் பாரு..! ”என்றதும்தான் அவளுக்கு நிம்மதியாயிற்று.

   இது நடந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை! இதோ இன்று முத்தம்மா இறந்து விட்டாள்.

 டேய்..! என்னடா ஸ்தம்பிச்சுப் போயிட்டே..!”

 ஐயாயிரம் ரூபாம்மா!”

என்ன பண்றது? சிலது நஷ்டம் ஆகனும்னு கடவுள் எழுதிட்டா மாத்த முடியாது! உன் பணம் திரும்பக் கூடாதுன்னு கடவுள் முடிவுப் பண்ணிட்டாருப் போல! சரி விட்டுரு..”

என்னம்மா தத்துவம்லாம் பேசறே..! ஒரு ரூபாயா? ரெண்டு ரூபாயா.. சொளையா ஐயாயிரம் ரூபா..”

 என்ன பண்ண முடியும்? நீ ஏமாந்துட்டே!  திருப்பி தரேன்னு ஒத்துக்கிட்ட முத்தம்மா இறந்துட்டா! இந்த சமயத்துலே அங்கே போய் பணம் கேட்டுக்கிட்டா இருக்க முடியும்? இல்லாதப் பட்ட குடும்பம்! அப்பனும் புள்ளையும் குடிகாரங்க! ஒண்ணும் பண்ண முடியாது! தொலைஞ்சு போச்சு! எவனோ பஸ்லே பிக்பாக்கெட் அடிச்சுட்டான்னு நினைச்சு விட்டுரு..!”

என்னாலே முடியலைம்மா..! அவ ஒரு மாசம் வேலை செஞ்சதுக்கு மூவாயிரம் ரூபா கழிஞ்சாலும் ரெண்டாயிரம் போச்சு! ”

டேய்! என்ன சொல்றே?”

ஒரு மாசம் வேலை செஞ்சிருக்கா! சம்பளம் வாங்காம செத்துப் போயிட்டா! அந்த பணத்தை ஏன் கொடுக்கணும்!”

அது நியாயம் இல்லேடா! அவ மாசம் ஐநூறு திருப்பித் தரேன்னு சொல்லியிருந்தா! இப்ப இப்படி ஆயிருச்சு!”

அதான் சொல்றேன்! ஒரு மாச சம்பளம் கொடுக்க வேண்டாம்! ரெண்டாயிரம் இனி வரப்போறது இல்லே! மூவாயிரமாவது மிஞ்சட்டும்!”

அது முடியாது! நான் வேணா உனக்கு அஞ்சாயிரம் கொடுத்துடறேன்!”

 அது எப்படிம்மா சரியாகும்!”

அப்ப விட்டுரு!”

எப்படிம்மா விடறது? அஞ்சாயிரம் ஒரு மலை மாதிரி மனசிலே எழும்பி நிற்குது! மறக்கவே முடியலை!”

மனசைப் போட்டுக் குழப்பிக்காதே! ஏமாறனுங்கிறது உன்னோட விதி! பாவம் முத்தம்மா அவ என்ன செய்வா?”

அவ என்ன செய்வா பாவம் செத்துப் போயிட்டா என்னோட பணம் அஞ்சாயிரத்தை முழுங்கிட்டு!”

அதையே சொல்லிக்கிட்டு இருக்காதே! அஞ்சாயிரம் நமக்கு ஒண்ணும் பெரிசில்லை! மனசை தேத்திக்கோ! இங்க போனது பணம்தான்! அங்கே போனது ஒரு உயிர்! அந்த குடும்பத்தை தாங்கிட்டிருந்த ஒரு உயிர்! அதை நினைச்சு சமாதானம் பண்ணிக்கோ!சரி வா! ஒரு எட்டு முத்தம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துறலாம்!”

ஏம்மா?”

நம்ம வீட்டுலே வேலை செஞ்சவ? கடைசியா ஒரு தடவை முகத்தை பாத்துட்டு வந்துடலாம்! செலவுக்கு என்ன பண்றாங்களோ? இல்லாதபட்டவங்க முடிஞ்சதை கொடுத்துட்டு பார்த்துட்டு வந்துடலாம்”.

கொடுத்தது போதாதா? இப்ப வேற தண்டம் பண்ணனுமா?”

அப்படி சொல்லாதே! கிளம்பு.!”

அரைமனதோடு கிளம்பினேன்.

ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த குப்பத்தில் நுழையும்போதே டமுக்குச் சத்தம் கேட்டது. பந்தல் போட்டு ஐஸ் பாக்சினுள் உடல் கிடத்தப் பட்டு இருந்தது.

கொண்டு சென்ற மாலையை போட்டுவிட்டு பக்கத்தில் நின்றிருந்த அவள் மகளிடம் ஆயிரம் ரூபாயை திணித்தாள் அம்மா.

அந்தப் பெண்.. ”ஐயோ.. எதுக்கும்மா இது? வேண்டாம்.!”. மறுத்து திருப்பினாள்.

இல்லே வைச்சுக்கோ! செலவுக்குத் தேவைப்படும்!”. அப்புறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வா! உங்கம்மாவோட இந்த மாச சம்பளத்தை கொடுக்கிறேன்..! வீட்டுச்செலவுக்கு உதவும் இப்பவே கொடுத்தா இந்த செலவுலே கரைஞ்சு போயிரும்!

இந்தப் பணம் மட்டுமில்லேம்மா! அம்மாவோட சம்பளப் பணமும் வேண்டாம்மா! ஏற்கனவே அண்ணன் உங்க கிட்டே அஞ்சாயிரம் ரூபா பொய் சொல்லி ஏமாத்தி  வாங்கி இருக்காம் ஆஸ்பத்திரியிலே சேர்க்கும்போதே அம்மா புலம்பிட்டிருந்தது. மாசா மாசம் ஐநூறு ஐநூறா திருப்பிக் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கேன்! நான் இங்கே வந்து படுத்துட்டேன்! திரும்புவேனான்னு தெரியலை! நான் போயிட்டாலும் நீ வேலை செஞ்சு அந்த பணத்தை திருப்பிடுடின்னு சொல்லுச்சு! சொன்ன மாதிரியே செத்தும் போயிருச்சு! வேணாம்மா! உழைக்காத காசு ஒட்டாது! அண்ணன் தான் ஏமாத்தித் திரியுது! அது செஞ்ச பாவம் எங்கம்மா செத்துப் போயிருச்சு! ஒரு வாரம் பொறுத்துக்கங்க  நான் வேலைக்கு வரேன்! அந்த கடனை அடைச்சிடறேன் நீங்க இவ்வளோ தூரம் வந்து மரியாதை பண்ணதே போதும்மா! பணம் எல்லாம் வேண்டாம்மா! என்று அவள் குலுங்கிக் குலுங்கி அழ

என் மனதில் பெரியதாய் இருந்த அந்த அஞ்சாயிரம் ரூபாய் சிறுத்துப் போய் அவர்களின் நேர்மை பெரிதாய் பிரம்மாண்டமாய் நிறைந்து கொண்டது.

Comments

  1. // உழைக்காத காசு ஒட்டாது...//

    அருமை...

    ReplyDelete
  2. அருமையா எழுதியிருக்கீங்க சுரேஷ்....

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  3. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் சுரேஷ். உழைக்காத காசு ஒட்டாது என்று புரிய வைத்த கதை சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. சிறப்பு - வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2