தினமலர் வாரமலர்திருச்சி பதிப்பில் பரிசுபெற்ற கதை( வாசிப்புக்கு வசதியாக)இன்னும் சில நரகாசூரன்கள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

இன்னும் சில நரகாசூரன்கள்!
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
”அம்மோவ் தீவாளிக்கு எனக்கொரு டவுசரு எடுத்துத் தர்றியாம்மா?” தட்டில் வைத்த சோற்றைக் கூட திங்காமல் கண்களில் ஆவல் மின்ன கேட்கும் தனது 10வயது மகன் வேலனை வாஞ்சையோடு தலையில் தடவிக்கொடுத்த வள்ளி, “கண்டிப்பா டவுசரு, சட்டை எல்லாம் வாங்கிடலாம்டா! இப்ப சோறு துண்ணுவியாம்! என்று ஒரு கவளத்தை எடுத்து மகனின் வாயில் ஊட்டினாள்.
“போன தீபாளிக்கு கூட இப்படித்தான் சொன்னே? அப்புறம் பழைய துணியே போட்டுகிட்டு மிளகா டப்பாசு கொளுத்திட்டு கழிஞ்சு போச்சு! இந்தவாட்டியாவது நெறய கம்பி மத்தாப்பூ, புஸ்வானம், தரைச்சக்கரம், பெரிய வெடியெல்லாம் வெடிக்கணும்னு ஆசையா இருக்கும்மா!” ஏக்கம் நிறைந்த மகனின் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்த வள்ளி, ஆசுவாசப்படுத்திக்கொண்டு, எனக்கு மட்டும் ஆசையில்லையாடா வேலா! எங்க உங்க அப்பா வாங்கிற கூலி முச்சூடும் குடிச்சிட்டு வந்து நிக்கறாரு! என் சம்பளம் வாய்க்கும் வயித்துக்கும் சரியா போயிருது! அதான் …! ஆனா நீ கவலைப்படாதே! இந்த வருஷம் உனக்கு புது டவுசரு, சட்டை, நிறைய பட்டாசு அம்மா வாங்கித்தரேன். இப்ப நீ அடம்பிடிக்காம சோத்தை துண்ணு! என்று இன்னுமொரு கவளத்தை வாயில் திணித்து அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
வள்ளி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஓர் சராசரி குடும்பத்தலைவி. அவளது புருஷன் முனுசாமி பக்கத்து மில்லில் மூட்டைத்தூக்கும் கூலியாக வேலை செய்கிறான். மூட்டைத் தூக்கி தூக்கி முதுகுவலியால் அவதிப்படுபவன். வலி தெரியாமல் இருக்க குடிக்க ஆரம்பித்தவன் முழுநேரக் குடிகாரன் ஆகிவிட்டான். குடி அவனை அடிமையாக்கிவிட கூலி முழுதும் டாஸ்மாக்கிற்கு சென்றுவிட குடும்பம் பாஸ்மார்க் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது.
வள்ளியின் இரண்டாவது பையன் தான் வேலன். மூத்தமகள் லட்சுமி கவர்மெண்டு ஸ்கூலில் ”எட்டாப்பு” படிக்கிறாள். வள்ளிக்கு தனது பிள்ளைகளை அழகுபடுத்தி பார்க்க ஆசைதான். ஆனால் அவளது வருமானம் எட்டாக்கனியாக இருந்தது. கூலி முழுவதையும் குடித்துவிட்டு வீட்டு நினைப்பே இல்லாமல் சோற்று வேளையின் போது வரும் புருஷனை வைத்துக்கொண்டு அவள்தான் பாவம் என்ன செய்வாள்? ஏதோ நாலுவீட்டில் பத்துபாத்திரம் தேய்த்து வீட்டு வேலைகள் செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒருவேளைக் கஞ்சி குடிப்பதற்கே சரியாகப் போகிறது.
ஒரு சிலநாள் வேலையில்லாமல் இருக்கும் புருஷன் இவள் சேர்த்து வைத்த காசையும் அடித்து பிடுங்கி குடித்துவிட்டு வரும்போது பாவம் நொறுங்கிப்போவாள். அன்று பிள்ளைகளும் கூட பட்டினி கிடக்கவேண்டுமே! ஆத்திரம் தாளாமல் குடித்துவிட்டு வரும் கணவனை ஏசுவாள்.
“ஏ கூறுகெட்ட புருஷா! நீ தான் சம்பாரிச்சு போடலே! நான் சம்பாரிச்ச காசையும் எடுத்துட்டு போய் குடிச்சுட்டு வர்றியே? உனக்கு வெக்கமாயில்லை! பசங்க பட்டினி கிடக்குது! உனக்கு சரக்கு கேக்குதா?
“ஏய்! மூட்றி! என் ஊட்ல நான் காசு எடுத்து குடிச்சா தப்பா?” பெரிசா ஞாயம் பேச வந்துட்டா!”
”உம்பணத்தை நீ குடிச்சி அழிச்சிக்கோ கேக்கலை! எம்பணத்தையும் இல்லே சேர்த்து அழிக்கிறே?”
“நம்ப ஊடுடி இது! இதுல உன் பணம்! என் பணமுன்னு பிரிச்சு பேசற?”
“சட்டம் பேசறியா? நாலு காசு சம்பாரிச்சு போட துப்பில்ல! நாக்கு மட்டும் நாலுமுழம் நீளுது! ராவானா ஊட்டுக்கு வந்து கறிக்கொழம்பு வேணும்னு அதிகாரம் பண்ணத் தெரியுது! இப்படி ஊட்ல இருக்கிற காசையும் குடிச்சு தீர்த்தா தானா கொழம்பும் வெஞ்சனமும் வக்கணையா வந்துருமா? விட்டா நீ பொண்டாட்டியை கூட வித்துக் குடிப்பேய்யா!”
“என்னடி சொன்னே? பளார் என்று கன்னத்தில் அறைந்தவன் வெளியேறிப்போனான். வள்ளி அடியின் வேகம் தாளாது மூலையில் விழுந்து புலம்பிக்கொண்டிருக்க ஸ்கூல் விட்டு வந்த லட்சுமி, “அம்மா! நான் தாவணிப் போட்டு வந்தாத்தான் இனிமே ஸ்கூல்ல சேத்துப்பாங்களாம்! டீச்சர் கண்டிப்பா சொல்லிட்டாங்கம்மா! என்று தாயின் மடியில் முகம் பதித்தவள். ஏம்மா! அழுவுறே! அப்பா அடிச்சிதா? என்று தாயின் கன்னத்தை தடவினாள்.
“எல்லாம் வழக்கமா நடக்கிறதுதானே! பாவி மவன்! ஊட்டுல வைச்சிருந்த காசையும் குடிச்சுபுட்டு நியாயம் பேசறான்!” திருப்பி கேட்டா அடிச்சிட்டு திரும்பவும் குடிக்க போயிட்டான்!”
“ஏம்மா! இந்த கவர்மெண்டு டாஸ்மாக்கை திறந்துட்டே இருக்கு! அதே சமயம் நிறைய ஸ்கூலுங்களை இழுத்து மூடப்போவுதாம்! படிப்பை விட குடிப்பை நம்பித்தான் அரசாங்கம் இருக்குது!” வயதுக்கு மீறிய அறிவுடன் பேசும் மகளை ஏறிட்டாள் வள்ளி.
வயதுக்கு மீறி அறிவுமட்டுமா வளர்ந்திருக்கிறது. “மதமத”வென வளர்ந்து நிற்கும் மகளை பார்த்து பெருமூச்சு விட்டவள் தாவணி தேவைதான்! என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். இயற்கை தன் கடமையை செவ்வனெ செய்துவிட்டிருக்கிறது. ஆனால் கடமையை செய்ய வேண்டிய தகப்பனோ கடமை மறந்து குடித்து அழித்துக்கொண்டிருக்கிறான். இன்றோ நாளையோ தாவணிபோட வேண்டிய பருவ வயதை எட்டிவிடுவாள். அதற்கு இப்போதே ஒத்திகை பார்த்துவிடவேண்டியதுதான்.
தனக்குக்கூட ஒரு சேலையும் ரவிக்கையும் அவசியமென உணர்ந்தாள்வள்ளி. இருக்கும் சேலையை இன்னும் எத்தனை முறை ஒட்டுப்போட முடியும்? எப்படியோ இந்த ஆறு மாசத்தில் ஒரு ரெண்டாயிரம் ரூபாய் குருவி மாதிரி சேர்த்து கணவனுக்கு தெரியாமல் ஒளித்து வைத்திருந்தாள். அதை இந்த தீபாளி செலவுக்கு வைத்துவிட வேண்டியதுதான். பிள்ளைக்கு டவுசர் சட்டை, மகளுக்கு தாவணி பாவாடை, தனக்கு ஒரு சேலை ரவிக்கை கொஞ்சம் பட்டாசு என மனதுக்குள் பட்ஜெட் போட்டாள்.
மறுதினம் வேலைக்கு கிளம்புகையில் பெட்டியில் அடியில் ஒளித்துவைத்த காசை எண்ணிப்பார்த்து வைத்ததை இரண்டு கண்கள் பார்த்துவிட்டதை அவள் அறியவில்லை. வேலைக்கு போக கிளம்பியவளை பக்கத்து வீட்டு முனியம்மா தடுத்தாள். “ ஏ! வள்ளி! நம்ம ஊருல டாஸ்மாக் கடையை மூடனும்னு பொம்பளைங்க எல்லாம் போராட்டம் பண்ணப் போறோம்! நீயும் வர்றியா?”
“வர்றேன் முனியம்மா! குடிகார புருஷன் கிட்டே இருந்து குடியை கொஞ்சம் தூரமாவது துரத்தி அடிக்க வேணாம்! வர்றேன்” என்றவள் அவளுடன் கிளம்பிப் போனாள்.
போராட்டம் முடிந்து வீட்டுக்கு வருகையில் அதிர்ந்து போனாள். காலையில் அவள் வைத்துவிட்ட போன பெட்டி கலைத்துப்போடப்பட்டிருந்தது. அதிலிருந்த காசைக் காணோம். “அய்யோ! என் குடிகார புருஷா! என் புள்ளைங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? “தலையில் கை வைத்து உட்கார்ந்தாள்.
புல்லாக குடித்துவிட்டு வாயில் எச்சில் ஒழுக கையில் பிரியாணி பார்சலோடு உள்ளே வந்தான் முனுசாமி. “என்ன வள்ளி! முழுசா ரெண்டாயிரம் ரூபா! எனக்குத் தெரியாம மறைச்சு வைச்சா! நான் எடுக்காம விடுவேனா? இத்தனை நாள் கவர்மெண்ட் சரக்கு குடிச்சு குடிச்சு போரடிச்சு போச்சு! நாட்டுச்சரக்கு பக்கத்து ஊர்ல காச்சறங்கண்ணு கேள்விப்பட்டது கை அரிச்சுது! வந்து பார்த்தா ரெண்டாயிரம் ரூபா! அதான் ப்ரண்ட்ஸ்களோட போய் எல்லோரும் புல்லா ஏத்திட்டு வந்தோம். மிச்சத்துக்கு உனக்கும் புள்ளைங்களுக்கும் பிரியாணி வாங்கியாந்துட்டேன்! என் ஜாய்!”
“அடச்சீ! நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா! கட்டின பொண்டாட்டி கிழிஞ்ச துணியோட இருக்கா! பெத்த புள்ளைங்க அழுக்குத்துணி போட்டிருக்குது! அடுத்த வேளை சோத்துக்கு காசு இல்லே! இதுல உனக்கு நாட்டுச்சரக்கு கேக்குது! பாவம் புள்ளைங்க ஆசைப்படுதுன்னு ஆறுமாசம் கஷ்டப்பட்டு குருவி மாதிரி சேத்து வச்ச ரூபாயை ஒரே நிமிசத்துல குடிச்சு கூத்தடிச்சு வந்துட்டேயே! இதுல ஊட்டு நினைப்புல பிரியாணி வாங்கி வந்துட்டே! பேஷ்!”
“இன்னாமே! சவுண்ட் வுடறே? பொண்டாட்டி காசை புருஷன் எடுக்க கூடாதா?” ” யாரு! நீ புருஷனா? ஒரு நாளாவது சம்பாரிச்சு போட்டிருக்கியா? கஷ்ட நஷ்டம் புரியுதா? புள்ளைங்களை வளர்க்க ஒதவுணியா? உனக்கு குடிதானே முக்கியம்? போய்யா! போ! இனி என் கண் முன்னாலே நிக்காதே!”
“போறேண்டி! என்னை நீ புருஷனான்னு கேட்டுட்டே இல்லே! நான் ஒனக்கு தேவையில்லை இல்லே! எப்படி நீ வாழ்ந்திடறேன்னு பாக்கறேன்! போறேன்! அப்புறம் கஷ்டப்பட போறே!”
வெளியேறினான் முனுசாமி. வழக்கம் போல மூலையில் அமர்ந்து புள்ளைங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று அழுதுகொண்டிருந்தாள் வள்ளி.
மறுநாள் பொழுது விடிகையில்! “ஏ! வள்ளி! எழுந்துருடி! எங்கேடி உன் புருஷன். ஊரே களேபரமா இருக்குது! நேத்து பக்கத்து ஊர்ல கள்ள சாரயம் குடிச்சவங்க எல்லாம் வாந்தி பேதின்னு ஆகி ஆஸ்பத்திரியிலே சேத்திருக்காம்! எல்லாம் விஷ சாராயமாம்! நிறைய பேரு உசுருக்கு போராடறாங்களாம்! உன் புருஷனும் குடிகாரனாச்சே! ஆஸ்பத்திரிக்கு போய் பாரு!”
வள்ளி சலனமில்லாமல் நின்றாள். “ ஏண்டி அப்படியே சிலை மாதிரி நிக்கறே! நிறைய பேரு செத்துட்டாங்களாம்! அவங்களுக்கு மினிஸ்டரு பணம் கொடுக்கிறாங்களாம்!”

இப்போது வள்ளி சிரித்தாள். “ கடவுளே! என் புருஷனை சாகடிச்சிரு! மினிஸ்டரு கொடுக்கிற நிவாரண நிதியிலே என் புள்ளைங்க தீபாவளி கொண்டாடட்டும்! அம்மா! மாரியாத்தா! என் புருஷனை கொன்னுடு!” கண்ணீரோடு புலம்பினாள் வள்ளி. 

Comments

  1. மனதைத் தொட்ட கதை. இப்படியும் சில நரகாசுரன்கள்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2