ஆட்டம்! நூல் விமர்சனம்!

நூல் விமர்சனம்!

 ஆட்டம்!  வி.சகிதா முருகன். பாவைமதி பதிப்பகம்.

 

தமிழ்வாசகப்பெருமக்களுக்கு சகிதா முருகன் என்ற பெயர் மிகவும் பரிச்சயம் ஆனது. தமிழில் வெளியாகும் பிரபலமான வார மாத இதழ்களில் இவரது நகைச்சுவை துணுக்குகள் ஏராளமாக வந்து சிரித்து மகிழவைக்கும். அப்படி நகைச்சுவைக்கு சொந்தக்காரரான சகிதா முருகனை ஒரு வித்தியாசமான சமூக நோக்கம் உள்ள எழுத்தாளராக இந்த ஆட்டம் சிறுகதை தொகுப்பு நம்மிடையே அறிமுகம் செய்துள்ளது.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது சுவாரஸ்யமான முன்னுரையில் சொல்லியிருப்பது போல சகிதாமுருகன் வளர்ந்துவிட்ட எழுத்தாளர் என்பதை இந்த நூல் வாசிக்கும் போது உணர முடிகின்றது.

மொத்தம் இருபது கதைகள். ஒவ்வொன்றிலும் சமூக சிந்தனை விரிந்து கிடக்கிறது. சிறுகதைகள் என்றால் விரிந்து ஏழெட்டு பக்கம் இருக்கும் என்று எல்லோரும் பயந்துவிட வேண்டாம். இக்கால வாசிப்புக்கு ஏற்ப மூன்று நான்கு பக்கங்களில்  சிறுகதையை எழுதி சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாய் பதிவிட்டு விடுகின்றார் எழுத்தாளர்.

புத்தகத்தின் தலைப்பாய் வைத்துள்ள முதல் கதை ஆட்டம். ஆட்டத்தை அட்டகாசமாக துவக்கியிருக்கிறார். நாட்டுப்புற கலைகளை முதலாளி வர்கம் எப்படி கையாள்கிறது. வயிற்றுப்பாட்டுக்கு கலைகளோடு உடலையும் விற்கவேண்டிய நிலைக்கு ஆளாகும் நாயகி இறுதியில் எடுக்கும் முடிவு நம்மை அதிர்ச்சி அடையவைத்தாலும் நாட்டுப்புற கலைஞர்களை மோசமாக நடத்துவோர்க்கு ஓர் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

உரம் வாங்க முடியாத விவசாயி உரக்கம்பெனியில் வேலைக்கு சேரும் போது நம்கண்களில் ஈரம் வர அண்ணன் கதை பங்காளி பாசத்தை சொல்கிறது. முதிர்கன்னிகளின் சின்ன ஆசை கூட நிறைவேறாமல் போவதை பட்டுச்சேலை பேச கணவனே தெய்வமாக கணவனையே சுற்றிவந்தபெண் கணவன் திடீர்விபத்தில் சிக்கவும் குடும்ப பாரத்தை சுமப்பதை அழகுற விவரிக்கிறது துணைக்கோள்.

உயிர்ப்போராட்டம் என்ற அறிவியல் புனைக்கதையின் முடிவு நாம் எப்படி இந்த பூமியை நாசாமாக்கி வருகிறோம் என்று மண்டையில் அடித்துச்சொல்கின்றது.. உயிர்பிழைக்க முடியாத நடுத்தர வயது வாசக எழுத்தாளர் செய்யும் தானம் நம்மை கண்கலங்கச்செய்கிறது.ஸ்டெர்லெட் உயிரிழப்பு சம்பவங்களை அப்படியே கண்முன்னே நிறுத்தி தொழிலாளர்களின் நிதர்சனத்தை காட்டுகிறது நிதர்சனம் என்ற முத்தாய்ப்பான கதை.

மகன்கள் நிராகரித்துவிட கணவனோடு கிளம்பும் சரோஜினியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றி நடை போட வைக்கிறது.

மனைவியின் துரோகத்தை அறிந்து துடிக்கும் ஒரு கணவனின் முடிவு கைதட்ட வைக்கிறது துரோகமுள் சிறுகதையில்.

இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒரு மென் சோகத்தை கொடுத்து நம்மை கண்கலங்க வைத்தாலும் நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஏமாற்றங்களையும் சுருங்கச்சொல்லிவிடுகின்றார்.

சுவாரஸ்யம் குறையாத வாசிப்புக்கும் இந்த சமூகத்தின் மீது சிறிதளவாவது மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டவைக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரராகி தனது முதல் தொகுப்பிலேயே அசத்தலான பாராட்டுக்களை பெறுகின்றார் சகிதா முருகன்.

வெளியீடு: பாவைமதி வெளியீடு, தண்டையார்ப்பேட்டை, சென்னை.

பக்கங்கள்:96. விலை ரூ 100.00.


Comments

  1. வாசிக்கத் தூண்டும் விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்

    துளசித்ரன்

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!