அடையாளம்! ஒருபக்க கதை!
அடையாளம்! ஒருபக்க கதை!
கோடம்பாக்கம் அருகே ஒர் சுமாரான உணவகத்தில் சாலையை பார்த்தவாறு இருக்கும் மேஜையில் அமர்ந்து சர்வர் கொண்டுவந்து கொடுத்த மசால்தோசையை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தார். கல்லாவில் அமர்ந்தவரிடம் குரல் கொடுத்தார். அவரோ காசை வாங்கிப்போடுவதில் குறியாக இருந்தார் இவரை கவனிக்கவில்லை.
அடுத்து அவர் டேபிள் கிளீன் செய்யும் ஒரு பையனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்டார். அவனோ உள்ளே கை காட்டினான். அவர் மெதுவாக உள்ளே வந்து என் மேஜைமீதிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து கிளாசில் ஊற்றினார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் “சார்.. நீ.. நீங்க ஆக்டர் காமேஷ்தானே..! என்றேன்.
உஷ்! என்றுவாய்மீது விரல் வைத்து சைகைசெய்தவர், எதிரே அமர்ந்தார். பரவாயில்லையே என்னை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கீங்களே?
உங்களை மறக்க முடியுமா? 80களில் கொடிகட்டிப்பறந்த காமெடி கிங்காச்சே நீங்க?
அதெல்லாம் ஒரு காலம்! இப்ப ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழி கிடையாது!
நீங்க மறுக்கலைன்னா நான் ஒரு தோசை ஆர்டர் செய்யட்டுமா உங்களுக்கு?
மனம் அதை வெறுத்தாலும் பசி அவரை வென்றது. சரி என்றார்.
சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தேன்! சார் உங்களோடு ஒரு செல்ஃபி..?
தாராளமா? என்றவர் ஆனா ஒரு ரிக்வெஸ்ட்!
என்ன சார்?
தயவு செஞ்சு பேஸ்புக்லேயும் டிவிட்டர்லயோ போட்டு என்னை அசிங்கப்படுத்திடாதீங்க! காமேஷ்னா ஒரு இமேஜ் மக்கள் கிட்டே இருக்கு! அது ஒரு அடையாளம்! அந்த அடையாளத்தை உங்க போட்டோ உடைச்சிடக் கூடாது! இந்த போட்டோ உங்களோடேயே இருக்கட்டும்!
அடையாளத்தை இழந்த அவரின் அடையாளத்தை கலைக்க விரும்பாமல் மவுனமாய் கிளம்பினேன்.
சிலரின் நிலைமை இப்படித்தான்...
ReplyDelete