தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்!

தினமணி கவிதைமணியில் கடந்த வாரமும் இந்தவாரமும் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு!

நிழலில் தேடிய நிஜம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 08th April 2018 03:15 PM  |   அ+அ அ-   |  
நிழல்களில் சில நிஜங்கள் சுடவும் செய்யும்!
நிஜத்தில் சில நிழல்கள் ஒளிந்தும் போகும்!
நினைவுகளில் பதிந்த நிஜங்களை நிழலாக்கி
புனைவுகளில் பொலிவூட்டி ஓடவைக்கிறார்கள்!
நினைவே இனிமை என்பதால் நிழல் தரும்
நினைவுகளில் மூழ்கி நிஜத்தினை தொலைக்கின்றனர்!
நிழல் எப்பொழுதும் நிழல்தான்!
நிஜம் எப்பொழுதும் நிஜம்தான்!
நிழல் நிஜமாக முடியாது!
நிஜத்தில் தொலைத்த கனவுகளுக்கு நிழல்
ஓர் வடிகாலாகும்!
ஓடையிலே நீர் இருக்கும்வரை வடிகாலில்
புரண்டோடும்! வற்றிவிட காய்ந்து போகும்!
நிழலின் ஆயுள் அவ்வளவே!
நிஜத்தின் பிம்பம் நிழல்! நிஜம் சரியும் போது
நிழலின் பிம்பமும் சரிந்து போகின்றது!
ஒளியின் திசைக்கேற்ப நிழல்விழுகின்றது!
உள்ளத்தின் கட்டளைக்கேற்ப நிஜம் நடக்கின்றது!
நிஜங்களை படம்பிடித்து நிழலில் காட்டுகையில்
ரசம் சேர்த்து சிறிது ருசி கூட்டுகையில்
நிஜம் நீர்த்துப்போகின்றது!
பொய் பிம்பங்கள் அலங்கரித்து ஆடுகையில்
மெய் பிம்பம் மவுனத்தால் வெல்கின்றது!
நிழலிலாடும் நிஜங்கள் ரசிகனின்
நினைவைக் கவரலாம்! நிஜத்தில் நிற்கும்
மாந்தரே மக்களின் மனதை வெல்லலாம்!
நிழலில் தேடிய நிஜங்கள்  
ஒப்பனை போட்ட முகங்கள்!
ஒப்பனை கலைந்து போகையில்
நெருப்பாய் சுடும் நிஜங்கள்!



அலைபாயும் மனதினிலே: நத்தம் .எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 01st April 2018 03:40 PM  |   அ+அ அ-   |  
அலைபாயும் மனதினிலே
அமைதி இருக்காது!
உலைபோல கொதிக்கும் நெஞ்சினிலே
உறுதி இருக்காது!

கிளைவிட்டு கிளைதாவும் மந்திபோல
முளைவிடும் முன்னே மாறும் எண்ணங்களாலே
தளைகள்தான் துள்ளிவரும். நிலைபெறாது.
கலைந்து போகும் மேகக்கூட்டம் போல
நிலைபெறாது நீங்கும் கனவுகளாலே
வாழ்க்கை இனிக்காது!

மணலதினில் மழலைகள் கட்டும் வீடுபோல
மனதினிலே அலையும் எண்ணங்கள்
மகிழ்ச்சியினை நிலைக்க செய்யாது!
திடமில்லா மனதினிலே உதிக்கும் எண்ணங்கள்
தடமில்லா பாதையில் செல்லும் ஊர்திபோல
தடுமாறி  நிலை சாயும்!

உறுதியான எண்ணங்களே உன்னை உயர்த்தி
இறுதிவரை ஏற்றத்தில் வைக்கும்!
அலைபாயும் மனதினிலே நிம்மதியில்லை!
காற்றிலாடும் இலைபோல கலங்கிடுமே வாழ்க்கை!

நிலையான எண்ணங்களை நிறுத்திடவே
கலையாது உன் கனவு வாழ்க்கையே! 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2