தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் ஒதுக்கி கவிதைகள் வெளியிட்டு வருகின்றார்கள்.
வாரா வாரம் திங்களன்று கவிதைகள் வெளியாகும். ஒரு தலைப்பினை அவர்கள் தருவார்கள். அதற்கு நாம் கவிதை எழுத வேண்டும். வளர்ந்த வளரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலர் இந்த பக்கத்தில் பயனடைந்து வருகின்றார்கள்.

  கவிதை ஆர்வலர்களுக்கு இந்த பக்கம் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த பக்கம் குறித்து நண்பர் உலகநாதன் ஐயா தெரிவித்தார். முதலில் ஆர்வமின்றி இருந்த நான். பின்னர் இப்பக்கத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். போன மாதம் ஒரு கவிதையை அந்த பக்கத்தில் வந்தது என்று வெளியிட்டிருந்தேன் நினைவிருக்கலாம். தொடர்ந்து எனது கவிதைகள் அந்த பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. போனவாரம் அதற்கு முந்தைய வாரம் வந்த கவிதைகள் உங்களின் பார்வைக்கு.


சுமைகளும் சுகங்களும்: நத்தம். எஸ். சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 15th May 2017 04:19 PM  |   அ+அ அ-   |  
கருவொன்றை சுமப்பது தாய்க்கு
சுமையல்ல சுகம்!
கருவான பிள்ளை தடம் மாறிப்போனால்
தாய்க்கு சுகமல்ல சுமை!
பலர் பசி தீர்க்க தாரொன்று சுமப்பது
வாழைக்கு சுமையல்ல சுகம்.
கனியிருந்தும் கசந்து நிற்கும் எட்டிக்கு
பழம் சுகமல்ல சுமை!
நிழலதனை அளிக்க நெடும் வெயில்
சுமப்பது விருட்சங்களுக்கு சுமையல்ல சுகம்!
நெடிது உயர்ந்து நின்றாலும் நிழல் தர 
மனமில்லா மரங்கள் சுகமல்ல சுமை!
படிப்பில் ஆர்வமுள்ளவனுக்கு
பாடங்கள் சுமையல்ல சுகம்!
படிக்க பிடிக்காத மடையனுக்கு
பாடங்கள் சுகமல்ல சுமை!
சேற்றில் இறங்கி நாற்றுக்கள் நடுவது 
உழவனுக்கு சுமையல்ல சுகம்!
விவசாயத்தை வெறும் பாடமாய்
படிப்பவனுக்கு சேற்றில்
இறங்குவது சுகமல்ல சுமை!
கானமதை ரசிப்பவனுக்கு
பறவைகளின் சப்தம் சுமையல்ல சுகம்!
இசை அறியா மாந்தருக்கு இனிய
கானம் கூட சுகமல்ல சுமை!

குடும்பத்தை நேசிப்பவனுக்கு
சொந்தங்கள் சுமையல்ல சுகம்!
தனிமைதனை விரும்புபவனுக்கு
சப்தம் கூட சுகமல்ல சுமை!
கனவொன்றை சுமப்பது
லட்சியவாதிக்கு சுமையல்ல சுகம்!
ஊர் சுற்றி திரிபவனுக்கு உறக்கம் கூட
சுகமல்ல சுமை!
வெற்றியைத் தேடிச் செல்பவருக்கு
ஒவ்வொரு விநாடியும் சுமையல்ல சுகம்!
வீணர்களுக்கோ விடியும்
ஒவ்வொரு நாளும் சுகமல்ல சுமை!
சுமைகளும் சுகங்களும் நம் பண்பில்!
இதை உணர்ந்தால் உலகம் நம் அன்பில்!

ஒற்றைச்சிறகோடு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

By கவிதைமணி  |   Published on : 08th May 2017 02:31 PM  |   அ+அ அ-   |  
உயரே பறக்கையில் பறவையொன்று
உதிர்ந்துச் சென்றது ஒற்றைச்சிறகு!
உதிர்ந்ததும் வீசிய காற்றில்
உயரே எழுந்து பறந்தது அந்த ஒற்றைச்சிறகு!

ஒற்றைச்சிறகோடு பயணமானேன்!
காற்றின் திசையில் பயணமானது ஒற்றைச்சிறகு!
காற்றின் வேகத்தில் எழுந்து வேகம் குறைகையில் அடங்கி!

மண்ணிலே புரண்டு கல்லிலே விழுந்து
கால்களில் மிதிபட்டு மரக்கிளைகளில் சிக்குண்டு
காற்றிழுத்த வேகத்தில் பயணித்த ஒற்றைச்சிறகு
ஒன்றை உணர்த்திச் சென்றது!

பறவையின் சிறகுகளில் ஒன்றாய் இருந்தபோது
காற்றைக் கிழித்து பறவையை உயரப் பறக்கச் செய்தது.
சிறகுகளை விட்டு பிரிந்து ஒற்றைச் சிறகாய் உதிர்கையில்
காற்றின் வேகத்திற்கு கட்டுப்பட்டு கிழிந்து போனது!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
தேடி வந்து உணர்த்திச் சென்றது ஒற்றைச்சிறகு!

கீழே அதே தலைப்பிற்கு எனது மகள் பெயரில் எழுதிய கவிதை!

ஒற்றைச்சிறகோடு:  எஸ். வேத ஜனனி

By கவிதைமணி  |   Published on : 08th May 2017 02:30 PM  |   அ+அ அ-   |  
மாலைநேரத்து சூரியன்
வேலை முடித்து கிளம்புகையில்
வேப்பமர நிழலில் படுத்துறங்கியவன்  முகத்தில்மேல்
வந்து உதிர்ந்தது ஒற்றைச் சிறகு!

இதமான வருடலில் விழித்தெழுந்தவன் கேட்டான்.
ஒற்றைச்சிறகாய் உதிர்ந்துவிட்டாயே! வருத்தமில்லையா?
பறவையின் உடலோடு ஒட்டியிருக்கையில் அது
பறக்க உதவினேன். வளர்சிதை மாற்றத்தில் உதிர்ந்தேன்!

வருத்தம் எதற்கு மனிதா?
உன்னுள்ளே ஒட்டியிருக்கும் சிலவற்றையும்
ஒற்றைச் சிறகாய் நீயும் உதிர்த்துவிடு!
உள்ளத்தே எழும் பேராசைகள்!
பள்ளத்தே தள்ளும் பொறாமைகள்!

உயர்வுக்கு தடைபோடும் சோம்பல்கள்!
வெற்றிக்கு விடைகொடுக்கும் தயக்கம்
தோல்விக்கு வழிகொடுக்கும் அச்சம்.
இன்னும் எத்தனை எத்தனை கேடுகள்!

அத்தனையும் ஒவ்வொன்றாய் உதிர்த்துவிடு!
உதிர உதிர நீ உயர்ந்திடுவாய்!
காற்றோடு பயணிக்கும் முன் கனிவோடு
உணர்த்திச்சென்றது ஒற்றைச்சிறகு!
  இணைய இணைப்பு ஜியோ பயன்படுத்துகிறேன்!
அது மிகவும் ஸ்லோவாக இருப்பதால் முன்பு போல இணையம் வர முடிவதில்லை!
கூடிய விரைவில் முன்பு போல படைப்புக்கள் எழுத முயல்கிறேன்!
தங்களின்வருகைக்கும்  கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி!

    Comments

    1. கவிதைகள் மிக மிக அற்புதம்
      பதிவாக்கு அறியத் தந்தமைக்கும்
      இதுபோல் இன்னும் சிறப்பாகத் தொடரவும்
      மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      ReplyDelete

    Post a Comment

    Popular posts from this blog

    தேவதை குழந்தைகள்!

    அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

    வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2