தேன்சிட்டு மலர்ந்த கதை!

 


 தேன்சிட்டு மலர்ந்த கதை!

 வருடம் 1993. அப்போது ப்ளஸ் டூ முடித்து இருந்தேன். சிறுவனிலிருந்து இளைஞனாக மாறும் காலம். அதுவரை சிறுவர்களுக்கான இளந்தளிர் என்ற கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை நடத்திவந்தேன். இளைஞனாக மாறும் காலம் வந்ததால் இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது.

   தோழன் ஜெயேந்திர குமாருடன் ஆலோசித்தேன். ஆரம்பிக்கலாம். ஆனா தொடர்ந்து நடத்த முடியுமா?ன்னு கேட்டான். ஏனெனில் நான் மாதமிருமுறை இதழாக நடத்த வேண்டுமென்றேன். அது முடியுமா? என்றான். முடியும் என்று சொன்னேன். அப்போது நான் பி.காம் கரஸ்பாண்டெட் கோர்ஸ் சேர்ந்திருந்தேன். அதனால் வீட்டில் வெட்டியாக நிறைய பொழுதை செலவழித்தேன். அதனால் கொஞ்சம் உபயோகமாக பொழுதை கழிக்க உத்தேசித்து இதழ் தயாரிக்க முடிவெடுத்தேன்.

 16 பக்கங்கள். முன்று மூன்று பக்கங்களில் இரண்டு சிறுகதை. ஒரு இரண்டு பக்கத்திற்கு கவிதை. இரண்டு பக்கத்திற்கு ஜோக்ஸ்,  கடைசிப்பக்கம் என்று ஒரு பக்கம் சிறு கட்டுரை. ஒரு மூன்று பக்கத்திற்குத் தொடர்கதை என்று முடிவு செய்தோம். மீதமுள்ள பக்கத்திற்கு துணுக்குகள், சினிமா செய்திகள், ஆன்மீகம் என்று இதழுக்கு இதழ் மாற்றிக்கொள்ள உத்தேசம். அட்டையோடு மொத்தம் இருபது பக்கங்கள் கொண்ட இதழ்  தயாரிக்க  முனைந்தோம். ஆகஸ்ட் 15 1993 வெளியிடுவதாக உத்தேசம். என்ன பெயர் வைப்பது என்று  யோசித்தேன், பூக்கள் பெயர் யோசித்தேன். பிடிக்கவில்லை. பாரதியாரின் குயில்  பத்திரிக்கை நினைவுக்கு வந்ததால் பறவைகள் பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தேன். முதலில் தோன்றிய பெயர் தேன்சிட்டு. இப்பறவை எங்கள் வீட்டெதிரே வயல்களில் கூட்டமாக வந்திறங்கும்  கோயில் மரங்களில் அமர்ந்திருக்கும். எனவே அப்பறவை எனக்கு பிடிக்கும். அதே பெயர் பத்திரிகைக்கும் வைத்தாயிற்று.

 தேன்சிட்டு இளைஞர்களுக்கான பத்திரிக்கை  ஆனால் அட்டைப்படம் இலக்கியத் தரமானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.ஆனால் ஓவியர் நண்பர் ஜெயேந்திர குமார் ஓர் அழகிய ஓவியத்தை வரைந்து தந்தார்.  அது வீரசிவாஜி ஓவியம். அந்த அட்டைப்படத்துடன் மலர்ந்தது தேன்சிட்டு

 அதுவரை நான் சிறுவர்கதைகள் தான் எழுதி இருக்கிறேன். சிறுகதைகள் எழுதியது இல்லை. முதல் முதலால் ஓர் சிறுகதை எழுத முயற்சி செய்தேன்.புனித பூமியின் புல்லுறுவிகள் என்ற தலைப்பு. ஏதோ ஒப்பேற்றி எழுதி முடித்தேன். அதே போல கவிதைகளையும் எழுதி முடித்தேன். மற்ற படைப்பாளிகளை படைப்புகள் எழுதித் தரச்சொன்னால் முடியவில்லை என்றார்கள். முதலிதழ் ஓவியங்கள் தவிர மற்ற படைப்புகள் அனைத்தும் எனதே 16 பக்கங்களும் நிறைவு செய்தேன். ஆவி அழைக்கிறது என்ற பேய்க்கத தொடரும் எழுதினேன். ஆகஸ்ட் 15ல் வெளியாக புக் ரெடி. அப்போது வீட்டுக்கு வந்த சித்தப்பாவிடம் சொன்ன போது. ஆடி மாசம் டா! அடுத்த மாசம் வெளியிடு என்றார்.

  ஆனால் நான் முடிவில் மாறவில்லை! ஆகஸ்ட் பதினைந்து 1993 இதழ் மலர்ந்து வெளியானது. எங்கள் நண்பர்களுக்கிடையே நல்ல வரவேற்பு.  நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள். அடுத்தடுத்த இதழ்கள் வெளிவந்தது ஆனால் படைப்புகள் யாரும் எழுதி கொடுக்காத்தால் என்னால் மட்டும் 15 நாட்களுக்குள் அனைத்து படைப்பும் எழுத முடியவில்லை! ஜெயேந்திரகுமார் அட்டை ஓவியம் வரைய தாமதப்படுத்தினார். அப்போது அவர் ப்ளஸ்டூ படித்தார் என்று நினைக்கிறேன். அதனால் தேன்சிட்டு மாதம் ஒரு முறை என்று மாற்றி 40 பக்கங்களாக மாற்றினோம். இப்படி ஆரம்பித்த தேன்சிட்டு 2000 ஆண்டுவரை விட்டுவிட்டு வெளிவர ஆரம்பித்த்து. நிறைய புதிய பகுதிகள், சிட்டு பதில்கள் என்று அரசுபதில்கள் மாதிரி ஒரு பகுதி. கேள்வி கேட்க யாரும் இல்லை. பழைய அரசுபதில்களில் இருக்கும் வாசகர்களின் கேள்விகளை இதில் எடுத்துப்போட்டு நான் பதில் சொன்னேன். பழைய சினிமா பத்திரிக்கை பேட்டிகளை  சேகரித்து தேன்சிட்டில் போட்டு சினிமா செய்திகளை தந்தோம். சினிமா விமர்சனமும் தந்தேன். அப்புறம் சிலர் கவிதைகள் தேன்சிட்டில் எழுதினார்கள்.  தேன்சிட்டும் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் பெரிய வட்டத்திற்கு படிக்க கிடைத்து புரமோசன் ஆனது.

  ஆனால் 2001ல் என் தங்கையின் திருமணத்தை தொடர்ந்து என் எழுத்துப்பயணம் தடைபட்டது. டியுசன் செண்டர், டெலிபோன் பூத் என்று என் தொழில்கள் மாறியது. இருந்தாலும் அவ்வபோது ஒரு இதழ் வெளியிடுவேன். பாரட்டு பெறும். ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். 2011ல் இணைய இணைப்பும் கணிணியும் வாங்கியதால் தளிர் என்றொரு ப்ளாக் தொடங்கி அதில் தேன்சிட்டில் வந்த  படைப்புகளை பதிவிட்டேன். புதிதாகவும் எழுதினேன். 2017ல்  தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தில் இணைந்தவுடன். நட்பு வட்டம் பெறுகியது 2018ல் தேன்சிட்டு மின்னிதழாக மலர்ந்தது.. இரண்டரை வருடங்கள் மாத இதழாக பல்வேறு படைப்பாளிகளின்  படைப்புக்களோடு மலர்ந்தது. ஆனாலும் தொடர முடியாத நிலையில் 2020ல் நிறுத்திவிட்டேன். பின்னர் தீபாவளி மலர் மட்டும் தயாரித்து கொடுப்போம் என்று முடிவெடுத்து 2021 ல் இருந்து தீபாவளி மலர் தனிப்புத்தகமாக தயாரித்து வெளியிட்டு வருகிறேன். இப்போது ஆறாவது ஆண்டாக தீபாவளி மலர் மலர்ந்து பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. 2020 ல் தேன்சிட்டுக்கென்று தனி இணையதளமும் தொடங்கி பதிவுகள் இட்டுவந்தேன். ஆனால் தொடர்ந்து பணம் கட்ட முடியாததால் அந்த இணையதளம் முடங்கியது.

 தேன்சிட்டு தொடங்கியபோதும் ஒன்மேன் ஆர்மிதான்! இப்போதும் ஒன்மேன் ஆர்மிதான். இதுதான் தேன்சிட்டின் பலமும் பலவீனமும். இறைவன் சித்தமிருப்பின் அடுத்த ஆண்டும் தேன்சிட்டு மலரும்.

தேன்சிட்டு பழைய இதழ்கள் என்னதான் பாதுகாப்பாய் வைத்திருந்தாலும் பேப்பர்கள் மக்கி உதிர்ந்து போய்விடுகிறது. முதல் இதழின் அட்டைப்படம் கிடைத்தது மற்ற பக்கங்களும் கிடைத்தது. ஆனால் கடைசிப்பக்கம் கிடைக்கவில்லை. உங்களுக்காக தேன்சிட்டு முதல் இதழ், அடுத்தடுத்த இதழின் அட்டைப்படங்களை கீழே கொடுத்துள்ளேன்.



 

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!