நிதர்சனாவின் நிழல் நிமிஷங்கள்-

 குமுதம் வார இதழ் சில வருடங்கள் முன்பு 2020 என்று நினைக்கிறேன். எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் எழுதிய ஒரு சிறுகதையின் பாதியை தந்து மீதியை முடிக்கச்சொல்லி ஒரு போட்டி நடத்தியது. அந்த போட்டிக்கு நானும் ஒரு கதை எழுதினேன். அந்த சமயம் நிறைய வேலைப்பளுவால் போட்டி முடிய மூன்று நாட்கள் இருந்த போது அவசர அவசரமாக எழுதி ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பினேன். கதை தேர்வாகும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தேர்வு பெறவில்லை. அந்த கதையை கீழே தந்திருக்கிறேன். வாசிக்கும் நண்பர்கள் இக்கதையில் உள்ள குறைகளை சுட்டினால் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். இனி ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய கதைச்சுருக்கம் மற்றும் என் கதை கீழே..

என்னோடு கதை எழுதுங்கள்.

ஒட்டு மொத்த குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சினிமா ஆசையில் சென்னை வருகிறாள் நிதர்சனா. பிரபல நடிகையாகி விடும் அவளை பல வருடங்கள் கழித்து பார்க்க வரும் அண்ணன் அவளை தன் வீட்டுக்கு அப்பா அம்மாவை பார்க்க அழைத்து செல்ல அவளும் ஆவலோடு செல்கிறாள். அங்கே அப்பா அம்மா இருவரும் வாடிய மாலையோடு போட்டோக்களாக இருப்பதை பார்க்கும் நிதர்சனா, அதற்கு அடுத்ததாக தன் படம் புது மாலையுடன் இருப்பதை கண்டு அதிர்கிறாள்.

நிதர்சனாவின் நிழல் நிமிஷங்கள்!

அந்த மாடி அறையின் சுவரில் தொங்கியிருந்த அந்த படங்களை பார்த்து திடுக்கிட்டுப்போனாள் நிதர்சனா. கூடவே தன் படமும் வாடாத புதிய மாலையோடு இருப்பதைப் பார்த்த அவளுக்கு “பகீர்” என்றது.
நெஞ்சுக்குழிக்குள் உமிழ் நீர் சுரந்து அபாயத்தை உணர்த்தியது. கதிர் என்று அவளால் அழைக்கப்பட்ட கதிரேசன் இப்போது கொஞ்சம் விகாரமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

“ அண்ணா! என்னன்னா ஆச்சு அப்பா அம்மாவுக்கு?” ஏன் இப்படி சிரிக்கிறேண்ணா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு!”

“பயப்படு நிதர்சனா! நல்லா பயப்படு! அன்னிக்கு நீ அப்பா அம்மாவுக்கு பயந்திருந்தா இப்ப நீ இப்படி பயப்பட வேண்டியிருக்க நிலைமை வந்திருக்காது!”

“கதிர் அண்ணா! ஏன் இப்படி எல்லாம் பேசறே?” அப்பா- அம்மா எப்படி இறந்தாங்க?”

ஏய்! இன்னொரு முறை என்னை அண்ணான்னு கூப்பிடாதடி! பாவி! உன்னாலே எல்லாம் உன்னாலேதாண்டி … கதிர் இப்போது குலுங்கி அழ ஆரம்பித்தான்.
“அண்ணா! ப்ளீஸ் நடந்ததைச் சொல்லு! அழாதே..!”

”என்ன நடந்ததை சொல்றது? நான் இங்கே என்ன சினிமாவுக்கா கதை சொல்லிகிட்டிருக்கேன்! பெத்த அப்பா அம்மா செத்து போட்டோவில மாலையோட இருக்காங்க! இவ என்னடான்னா கதை கேக்கறா?”

”அதான் ஏன் செத்தாங்கண்ணு கேக்கறேன்…!”

”எல்லாம் நீ பண்ணின காரியம்தாண்டி! நல்ல ஆச்சாரமான குடும்பத்திலே பிறந்த நீ சினிமா கிறுக்கு பிடிச்சு ரிலீஸ் ஆகிற ஒரு படம் விடாது பாத்து பாத்து கெட்டொழிந்து ஹீரோயின் ஆகணும்னு ஆசைப்பட்டியே! அதனாலே வந்தது வினை!”
”ஏன்? சினிமா ஹீரோயின் ஆகறது அவ்வளோ கெட்ட தொழிலா?”
”நல்லதோ கெட்டதோ அது நமக்குத் தேவையில்லைன்னு அப்பா அம்மா எடுத்து சொன்னா கேட்டு நடந்திருக்கணும்! அதை விட்டுட்டு நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்னு பிடிவாதம் பிடிச்சு ஓடி வந்தியே…!”

”ஓடி வந்து நீ ஹீரோயின் ஆயிட்டே! ஆனா என்ன பிரயோசனம்! பெத்த பொண்ணு ஓடிப்போயிருச்சுன்னு அவமானம் தாங்க முடியாம ஊரோட கேலிப்பேச்சை கேட்க முடியாம அன்னிக்கே உங்க அப்பாவும் அம்மாவும் தூக்கு மாட்டி இறந்து போயிட்டாங்க!”

”ஐயோ! என்ன கொடுமை! அப்பா…. அம்மா… நீங்க இதென்ன கொடுமையான தண்டணை,…!” நிதர்சனாவின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.
“இந்த போலி அழுகையெல்லாம் வேண்டாம்…! நீ எப்ப வெளியே போனியோ அப்பவே அவங்க மனசாலே இறந்துட்டாங்க! அப்புறம் அவங்க இருந்தா என்ன? செத்தா என்ன?

”தப்பு செஞ்சது நீ! தண்டணை அனுபவிச்சது அவங்க! நீ இங்கே என்னடான்னு எவன் எவன் கூடவோ கட்டிப்பிடிச்சு டூயட் பாடிக்கிட்டு கோடிக்கணக்கிலே கருப்பும் வெள்ளையுமா வாங்கி பதுக்கிட்டிருக்கே..!”

நிதர்சனா இப்போது கண்களைத் துடைத்துக் கொண்டாள். ”தப்புதான்! பெரிய தப்பு பண்ணிட்டேன்..! அவங்களை கன்வின்ஸ் பண்ணி அவங்க அனுமதியோட நடிக்க வந்திருக்கணும்! ஆனா அதுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பாங்கண்ணு நான் எதிர்பார்க்கவே இல்லை!”

”வாழ்க்கையிலே நாம எதிர்ப்பார்க்கிறது எல்லாம் நடந்திட்டா அப்புறம் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாம போயிரும்! நான் கூடத்தான் என்னெல்லாமோ எதிர்பார்த்தேன். உன்னை கட்டிக்கிட்டு குழந்தை குட்டி பெத்துகிட்டு ஊரெல்லாம் சுத்தி வரணும்னு நினைச்சேன்.”

”கதிர் இன்னுமா நீ அந்த ஆசையை விடலை? நான் அப்பவே தெளிவா சொல்லிட்டேனே? நீ என் அத்தை பையனா இருந்தாலும் சின்ன வயசில் இருந்து ஒண்ணா விளையாடி பழகி உன்னை ஒரு அண்ணனாவே மனசிலே வருச்சிக்கிட்டேன். உன்னை என் ஹஸ்பெண்டா என்னாலே நினைச்சுக்கூட பார்க்க முடியாதுன்னு அப்பவே தெளிவா சொன்னேனே என்னோட ஆசையெல்லாம் ஹீரோயின் ஆகறதுதான். கல்யாணம் குடும்பம் குழந்தை எல்லாம் அப்புறம்தான்னு சொல்லிட்டுத்தானே நான் கிளம்பினேன்.”

” சொல்லிட்டே..! ஆனா என்னாலே அதை ஏத்துக்க முடியுமா? உங்க அப்பாவோட கோடிக்கணக்கான சொத்துக்கு நீதான் ஒத்தை வாரிசு! நான் ஓட்டாண்டி! உன்னை கட்டிக்கிட்டு அந்த சொத்து முழுசும் ஆயுள் முழுக்க அனுபவிக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேன். அதுக்காக உங்க அப்பா- அம்மாவை சரிகட்டி உன்னை எனக்கு கட்டிவைக்க சம்மதம் வாங்கி கல்யாணம் வரைக்கும் வந்தப்புறம் கடைசியிலே நீ கழுத்தை அறுத்திட்டியே! ”

”ஒரு சினிமா புரட்யூசர் பின்னாடி சினிமாவிலே நடிக்க நீ ஓடிவந்திட்ட! உன் அப்பா- அம்மா இடிஞ்சு போய் உக்கார உனக்கு முன்னாடி நான் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பவே பால்ல விஷம் வைச்சு அவங்களை கொன்னு தூக்கில மாட்டி பொண்ணு ஓடிப்போனது தாங்காம இறந்து போனதா ஊரிலே நம்ப வைச்சேன். அந்த முழுச்சொத்தையும் அனுபவிக்க ஆரம்பிச்சேன். ”

“அடப்பாவி! எங்க அம்மா- அப்பாவை கொன்னுட்டியா?”

”அவங்களை மட்டுமா? இப்ப உன்னையும்தான் கொல்லப் போறேன். உங்கப்பன் செத்தா சொத்தை வித்திடலாம்னு டாகுமெண்ட் செக் பண்ணா எல்லா சொத்தையும் உன் பேர்ல எழுதி வைச்சிருக்கான். இருக்கிற சொத்தை அனுபவிக்கலாமே தவிர விற்க உன் அனுமதி வேணும்! நீதான் இப்ப வசதியா கோடிக்கணக்கிலே சேர்த்து வைச்சிருக்கியே இந்த பிசாத்து சொத்து எதுக்கு?”
”இந்த டாகுமெண்ட்ல ஒரு கையெழுத்து போட்டுட்டு செத்துப்போயிரு!”

“ கதிர்! வேணாம் கதிர்! ஏன் இப்படி பண்றே?”

”எல்லாம் ஆசைதான்..! ஆசை எப்ப அதிகம் ஆகுதோ அப்பவே நம்மகிட்ட இருக்கிற நல்ல குணங்கள் குறைய ஆரம்பிக்கும்! ஆசையை குறைச்சா வாழ்க்கை இனிக்கும்! நீ சினிமாவிலே நடிக்க ஆசைப்பட்டே! நான் உன்னை கட்டிக்கிட்டு சொத்துக்களை அனுபவிக்க ஆசைப்பட்டேன்! உன் ஆசை நிறைவேறிடுச்சு! என் ஆசை நிறைவேற வேண்டாமா?”

”எத்தனையோ பேரை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து இன்னும் என்னவெல்லாமா அட்ஜெஸ்ட்மண்ட் பண்ணியிருப்பே இல்லே! இப்ப எனக்கு கொஞ்ச நேரம் பொண்டாட்டியா இரு! செல்லம்…! ” கதிரின் கண்களில் காமம் வழிந்தது.
”வே.. வேணாம் கதிர்….! என்னை விட்டுரு…! நீ விரும்பினப்படி டாகுமெண்ட்ல கையெழுத்து போட்டுத்தரேன். சொத்தையெல்லாம் நீயே எடுத்துக்க! ”
”அந்த சொத்து கிடக்கட்டும்! உங்கப்பன் சொத்து நீதாண்டி எனக்கு முதல்ல வேணும்…!”

நிதர்சனா கதிரிடம் இருந்து தப்பிக்க ஓடினாள்.. ”ஹெல்ப்..!” அவள் கத்த…

”யாரும் வரமாட்டங்க நிதர்சனா! கமான்…!” என்று பாய்ந்தான் கதிர்.
அவனிடமிருந்து ஒதுங்கி வேகமாக கதவை திறந்துகொண்டு மாடிப்படி இறங்கினாள் நிதர்சனா.

”ஓடிப்பிடிச்சுத்தான் விளையாடனும்னா! ஓக்கே நான் ரெடி!” பின்னாலேயே துரத்தினான் கதிர்.

அவனிடமிருந்து தப்பித்து லாவகமாக வாசல் கதவை நோக்கி நிதர்சனா வரவும் ஒரு சிறு போலீஸ் படையுடன் பூபாலன் வரவும் சரியாக இருந்தது.
தப்பி ஓட முயன்ற கதிரை போலிசார் மடக்கிப்பிடிக்க

” என்ன கதிர் நம்ப முடியலை இல்லை! நான் நடிக்கபோனதும் அப்பா- அம்மா இறந்துட்டாங்கன்னு ஊரிலெ இருந்து நம்பிக்கையான ஆளுங்க கிட்டேஇருந்து தகவல் வந்தது. நீதான் கொன்னுட்டேன்னு அவங்க சொன்னாலும் ஆதாரம் சிக்காம இருந்தது. நீயா வலிய வந்து என்னை கூப்பிட்டதும் பூபாலனும் நானும் ப்ளான் போட்டு உன்னை பொறிவைச்சு பிடிக்க நினைச்சோம். ஒரு மைக்ரோ ரெக்கார்டரோட நான் உன் கூட வந்தேன். நீ எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டே! க்ளைமாக்ஸ்லே பூபாலன் போலிஸோட வரவும் மாட்டிக்கிட்டே! ”

”என்னமோ சொன்னியே கதிர் ஆசைதான் துன்பத்துக்கு காரணம்னு! ஆமாம்! நல்லதுக்கு ஆசைப்பட்டா இன்பமான வாழ்க்கை கிடைக்கும்! கெடுக்கணும்னு ஆசைப்பட்டா துன்பம்தான் பரிசா கிடைக்கும்! உன் கெட்ட ஆசை உன்னை இப்போ சிறைக்கு அனுப்பிச்சிருச்சு! குட்பை! இந்த சிறை வாழ்க்கையாவது உன்னை திருத்தட்டும்!”

சொல்லி முடித்த நிதர்சனா நிதானமாக அந்த பங்களாவை விட்டு வெளியேற ஆரம்பித்தாள்.

நிதர்சனாவின் நிழல் நிமிஷங்கள் கரைந்து போக நிஜம் வெளிப்பட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றான் கதிர்.
முற்றும்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2