கண்மணி நில்லு! காரணம் சொல்லு! சிறுகதை

 

கண்மணி நில்லு! காரணம் சொல்லு!

                                                                                
                                                        

        நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 

கண்ட இடத்துலே கண்ணை அலையவிடாம ரோட்ட ஒழுங்கா பார்த்துப் போடா பொறுக்கி நாயே!”

   இப்படி ஒரு வார்த்தை எதிர்விட்டு கண்மணியிடமிருந்து தன்னை நோக்கிவரும் என்று நடேசன்  கனவில் கூட நினைத்துப் பார்த்த்தில்லை! ஆனால் இன்று நிஜமாகவே நடந்தேறிவிட்டது.

   இப்பொழுதெல்லாம் அவன் கண்மணியிடம் நிறைய மாறுதல்களை காண்கிறான். சிரிக்க சிரிக்க அவனுடன் பேசுபவள் அவனைக்கண்டாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாள். ஜாடை மாடையாகச் சாடுகின்றாள். இவனது தங்கையிடம் பேசிக்கொண்டே இருப்பவள் இவன் நுழைந்ததுமே அவசரம் அவசரமாக பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஓடிப்போகிறாள்.

   கண்மணி இப்படி நடக்க கூடியவள் இல்லை. சிறுவயது முதலே ஒன்றாக பழகியவள்தான். அவனும் அவன் தங்கை நித்யாவும் அவளும் கூடிவிட்டால் அரட்டைக்கச்சேரி ஓயவே ஓயாது. அந்த அரட்டைப்பேச்சு சிம்ரனின் நடனத்திலிருந்து ஹரிஹரனின் குரல்வளத்திற்கு தாவி, சச்சினின் பேட்டிங் சானியாமிர்சாவின் டென்னிஸ் என்று வளர்ந்து கொண்டே போகும். ஏதோ ஒரு சங்கிலித்தொடர் போல ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் பேச்சு நடேசனின் தாய்  பொறுக்க முடியாமல்டேய்! நடேசா! அப்படி என்னடா அரட்டை சோறு தண்ணிக் கூட சாப்பிடாம? ஏண்டியம்மா! கண்மணி உன் வீட்டுலே உன்னைத் தேடவே மாட்டாங்களா? வளவளன்னு பேசி எம்புள்ளைங்களை மடக்கி உட்கார வைச்சிட்டிருக்கே அவங்களை கொஞ்சம் அவுத்து விடேன்!” என்று குரல் கொடுத்தபின் தான் ஓயும்.

 அப்படிப்பட்ட கண்மணியா இது? இப்போதெல்லாம் அவள் நடேசன் வீட்டுக்கு வருவதே இல்லை! அப்படி வந்தாலும் நடேசன் இருப்பதை தெரிந்துகொண்டால் வாசலோடு விடைபெற்று விடுகின்றாள், என்ன ஆயிற்று அவளுக்கு? ஓர் முறை நடேசனே வலியச் சென்று!  ஏய் கண்மணி! என்ன ஆச்சு உனக்கு? ஏன் என் கூட பேச மாட்டேங்கிறே?” என்று கேட்டும் விட்டான்.

   அதற்கு அவள் அவனை நேருக்கு நேர் பார்த்து கண்களில் தீட்சண்யம் பொங்ககண்ட நாய்ங்க கூட எனக்கெதுக்கு பேச்சு?” என்று தலையைவிலுக்கென்று சிலுப்பிக்கொண்டு வேகமாக வெளியேறிவிட்டாள்.

நடேஷ்! நடேஷ்! என்று சதா சர்வகாலம் அழைத்த வாய்தான் இன்று கண்ட நாய் என்று சொல்கிறது. பிறந்து வளர்ந்தது ஒன்றாகப் பழகி விளையாடி இதோ இன்று கல்லூரிக்காலம் வரை ஒன்றாய் பழகிய நட்பு திடீரென ஏன் கசந்து போனது? நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்? அவள் வாயிலிருந்து இப்படி ஒரு சொல்லா? மனம் உடைந்து போனான் நடேசன்.

 அவன் நினைவும் மனதும் குழம்பிக் கிடந்தது. அவன் தங்கை நித்யாவே இப்படித் திட்டியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பான். ஆனால் கண்மணியின் வாயிலிருந்து இப்படி ஏச்சுவரும் என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. நான் எப்போது பொறுக்கி ஆனேன்? அப்படி அவள் பார்வையில்  அவனை காண்பித்த விஷயம் எது? அதை தெரிந்து கொள்ளாவிட்டால் அவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது

ஃபேன் காற்றில் படுத்துப்பழகியவர்களுக்கு ஒருநாள் ஃபேன் ஓடாவிட்டாலும் தூக்கம் வராதாம். அது போல மீன் மார்க்கெட்டில் அதன் வாடையோடு தூங்கிப்பழகியவர்களுக்கு நல்ல சுத்தமான இடத்தில் தூக்கம் பிடிக்காதாம். அது போலவேத்தான் நடேசனுக்கும் கண்மணியின் நட்பு இல்லாமல் என்னவோ போலிருந்தது. ஏதோ ஒன்றை இழந்தவன் போலவே நடைபிணமாய் மாறிக்கிடந்தான்.

  இன்று என்ன ஆனாலும் சரி! கண்மணியிடம் நேரடியாக என் மேல் என்ன தப்பு? விலகிப்போக என்ன காரணம் என்று கேட்டுவிடவேண்டியதுதான்! என்று மனதில் சொல்லிக்கொண்டவன் கண்மணியின் வீட்டுக்கு தன் ஸ்கூட்டரில் சென்றான்.

  கண்மணியின் வீட்டை அடைந்த நடேசன் வாசலிலேயே கண்மணி இருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தான். ஒரு சிறு புன்னகையை வீசியபடி! “ஹாய் கண்மணி! உன் கிட்டே ஒரு விஷயம் கேட்கணும்! என்று வண்டியைவிட்டு இறங்கவும் கண்மணி அவனை லட்சியம் செய்யாமல் தலையைவிசுக்கென்று திருப்பியபடி பதிலே சொல்லாமல் உள்ளேச் செல்ல<

  நடேசன், சட்டென்று அவள் கையை பிடித்து இழுத்து! “கண்மணி  நில்லு! உன்கிட்டே ஒரு விஷயம் பேசனும்னு சொல்றேன்ல…! நீ பாட்டுக்கு போயிட்டே இருந்தா எப்படி?” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் கன்னத்தில்பளீர்என ஒரு அறைவிட்டாள் கண்மணி.

   பொறுக்கி ராஸ்கல்! வீட்டுக்கே வந்து கையைப் பிடிச்சு இழுக்கிறியா? மரியாதையா போயிரு! செருப்பு பிஞ்சிடும்!”   தடித்த சொற்கள் அவள் வாயிலிருந்து விழ  நடேசன் கண்களில் கண்ணீர் திரண்டு வெளியே வெடித்தது. “.. கண்மணி..! ப்ளீஸ்!...!” அவன்  கூப்பிடக் கூட கதவைவெடுக்கென்று சாத்திய கண்மணி உள்ளே சென்றுவிட்டாள்.

    உள்ளேயிருந்து கண்மணியின் அம்மாவின் குரல் கேட்டது.  ஏண்டி கண்மணி? நம்ம நடேசன் வந்திருந்தான் போலிருக்கே…! உள்ளே கூப்பிடலையா?”

   அது என்ன நம்ம நடேசன்?” அவன் நமக்கென்ன உறவா? “

  உன் ப்ரெண்டோட அண்ணன் தாண்டி! நீங்கள்லாம் ஒண்ணு மண்ணா பழகிட்டு இருந்தீங்களேடி!”

  அதுக்காக கண்ட ராஸ்கல்ஸையெல்லாம் உள்ளாற கூப்பிட்டு கொஞ்சிட்டு இருக்க முடியுமா?

   என்னடி ஏன் இப்படி பேசறே? அந்தபையன் நல்ல பையன் தானே! ஏண்டி இப்படிப் பேசறே?

  நீதான் மெச்சிக்கணும் அவன் நல்ல குணத்தை! சரியான ருத்திராட்ச பூனை! ” இனிமே அவனைப் பத்தி எதுவும் கேட்காதே! சரியான தெருப்பொறுக்கி!”

     இதற்குமேல் கேட்கப்பிடிக்கவில்லை நடேசனுக்கு! வண்டியை எடுத்துக் கொண்டு சித்தப் பிரமை பிடித்தது போல ஓட்டிக்கொண்டு வர ஒரு திருப்பத்தில் எதிரே வந்த காரை கவனிக்காது போக கார் அவன் மீது மோதி தூக்கி அடித்தது.

  நல்லவேளை!  அந்த காரில் வந்தவர் நல்லமனசுக்காரர். காரை நிறுத்திவிட்டு ஓடோடி வந்து அவனை தூக்கி முதலுதவி அளித்து தன் காரிலேயே அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நடேசனின் தாய்க்குத் தகவல் தந்தார்.

  பதறியடித்து ஓடிவந்த நடேசனின் தாயை சமாதானம் செய்து ஆற்றுப்படுத்தி ஒன்னும் பயப்படறதுக்கு இல்லே! கால்லே ஒரு சின்ன ப்ராக்சர்தான்! ஆபரேசன் செய்தா சரியாயிரும்! மொத்த செலவையும் நானே செய்துடறேன். நீங்க பயப்பட வேணாம்!” என்று தைரியம் கொடுத்தார் அந்த கார்க்காரர்.

  நடேசனுக்கு அடிபட்ட விஷயம் அறிந்தபின்னும் கண்மணி அவனைப் பார்க்கவே செல்லவில்லை. அந்த பொறுக்கிப்பயலும்  இதுவும் வேணும் இன்னமும் வேணும். அந்த கையும் உடையாம போயிருச்சே என்று சாபம் கொடுத்தாள்.

 அப்படி சாபம் கொடுக்கும் படி அப்படி என்ன நடந்துவிட்டது.

  அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அந்திப்பொழுது! தூர்தர்ஷனில் மாலையில் அனைவரும் ஒன்றுகூடி படம் பார்த்துக்கொண்டிருந்தபோது நடேசனின் வீட்டுக்குள் நுழைந்தாள் கண்மணி.

  என்ன எல்லோரும் படம் பார்க்கறீங்களா?  இது சுத்த போர் அடிக்கிற படமாச்சே! ஆமாம் நித்யா எங்கே? என்று கேட்டாள்.

  அவளுக்கு படம் பார்க்க பிடிக்கலையாம்! மாடியிலே இருக்கா!”

  அப்படியா நான் போய் பார்க்கிறேன்”. விடுவிடுவென படியேறினாள் கண்மணி.

 நித்யா! நித்யா! ” குரல் கொடுத்தபடி மாடி ரூம் கதவைத் திறந்தாள். உள்ளே கும்மிருட்டு! ”என்னடி நித்யா? லைட் கூட போடாம அப்படி என்ன பண்ணிக்கிட்டிருக்கே உள்ள?” கேட்ட படி உள்ளே நுழைய  அப்போது ஓர் முரட்டுக் கரம் அவளை பின்னாலிருந்து கட்டி அணைத்து முகத்தில் முத்தமிட முயல..

   அவள் கற்றுக்கொண்டிருந்த கராத்தே தற்காப்பு சமயத்தில் உதவியது.  கட்டி அணைத்தவனை உதைத்து தூர தள்ளிவிட்டு அழுதபடி வெளியே ஓடி வந்தாள்  கண்மணி.

     ஏய் கண்மணி! எங்கேடி மாடியிலிருந்து ஓடி வர ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு! நில்லுடி!  என்று நித்யா பின் கட்டிலிருந்து குரல் கொடுத்தபடி வர  பதிலேதும் சொல்லாமல் ஓடிவிட்டாள் கண்மணி.

  அந்த இருட்டறையில் தன்னிடம் தகாதவாறு நடந்து கொண்டவன் நடேசன் தான் என்று முடிவு செய்துவிட்டாள் கண்மணி. அப்படி அவள் முடிவு செய்ய காரணம்  நடேசன் சதா பயன் படுத்தும் இண்டிமேட் செண்ட் நறுமணம்.அவளிடம் தவறாக நடக்க முயன்றவனிடம் வீசியதுதான்.

  ச்சே! இந்த ஆம்பளை பசங்களை நம்பவே கூடாது! சந்தர்பம் கிடைக்கிறவரைக்கும்தான் நல்லவங்க! சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால் வில்லனா மாறிடறானுங்க!  நடேசனும் அதற்கு விதிவிலக்கு அல்ல! இனி அவனோடு பழகவே கூடாது. இந்த விஷயத்தை நித்யாவிடம் மட்டுமல்ல இனி யாரிடமும் கூறவேண்டாம். சொன்னால் பாவம் நித்யா மனசு கஷ்டப்படும். இது தன்னோடயே மறைந்து போகட்டும் என்று முடிவெடுத்தவள் நடேசனோடு பழகுவதை தவிர்த்தாள்.

  என்ன கண்மணி! நடேசனை உனக்கு இப்ப பிடிக்கலைன்னாலும் ஒண்ணா பழகினவங்க! அவ தங்கை உன் கூடப் படிக்கிறா? போய் பார்க்காட்டி நல்லா இருக்காது! ஒரு எட்டுப் போய் பாத்துட்டு வந்துருவோம். நீ சும்மா கூட வா போதும்!” என்று தாயின் வற்புறுத்தலில் மருத்துவ மனைக்குச்சென்றாள் கண்மணி.

   அங்கே நடேசன் வயதில் இரண்டுபேர் நடேசன் அறைக்கு முன் சேரில் அமர்ந்து கொண்டிருக்க அதில் ஒருவன் வைத்த கண் வாங்காமல் கண்மணியை முறைத்துப்பார்த்துக் கொண்டிருக்க  அறைக்குள் நுழைந்தாள் கண்மணி.

  உள்ளே காலில் கட்டுடன் நடேசன் திரும்பி படுத்துக்கிடக்க அவன் முகத்தை பார்க்க விரும்பாமல் தாய் உள்ளே நுழைந்த்துமே அம்மா! நீ பேசிட்டுரு! இதோ வந்திடறேன்!” என்று வெளியேற கதவைத் திறக்க முயன்றவள் வெளியே பேச்சில் தன் பெயர் அடிபட அப்படியே நின்றாள்.

    என்னடா முரளி! உள்ளே போனவளை அப்படி வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டிருக்க!”

   ஆளு செமையா இருக்கா மச்சி!”

 தூர இருந்து  பார்த்தே இந்த ஜொள்ளு விடறியே  நான் அவமேல கையையே வைச்சிட்டேன் தெரியுமா?”

   என்னடா சொல்றே?”

 இந்த லூசுப்பய நடேசன்  இருக்கானே இவன் வீட்டுக்கு போன மாசம் போயிருந்தேன். எல்லோரும் டீவி பாத்துட்டிருந்தாங்க!  மாடி ரூமுக்கு அவனோட தங்கையை தேடி இந்த பொண்ணு போச்சு! டீவி பார்த்திட்டிருந்த எனக்கு சும்மா இருக்க முடியலை! நைசா நழுவி அவ பின்னாடியே சத்தம் போடாம போய் அவளை அப்படியே பின்னாடி இருந்து கட்டி அணைச்சு கிஸ் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா ஆளு செம உஷார் பார்ட்டி! கராத்தே எல்லாம் கத்து வைச்சிருக்கா போல! என்னை அடிச்சு கீழே தள்ளிட்டு ஓடிட்டா!”

   ஏண்டா பார்க்கிறதோட விடாம இப்படி கை எல்லாம் வைப்பியா? அவ கம்ப்ளைண்ட் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும்?”

    இதெல்லாம் ஒரு த்ரில்தான்!  இதையெல்லாம் பொண்ணுங்க வீட்ல சொல்ல மாட்டாங்கன்னு ஒரு குண்டு தைரியம் தான்.”

     அடப்பாவி!  நீதான் இதுக்கெல்லாம் காரணமா? அது தெரியாம ஒரு நல்ல மனசை நோகடிச்சு இப்படி படுக்கையிலே தள்ளிட்டேனே! பாவிப்பயலே உன்னை விட மாட்டேண்டா!” விறுவிறுவென அவனை நோக்கி கண்மணி வரவும்  அதேஇண்டிமெட்வாசனை.

   பொறுக்கிப் பயலே!  த்ரில்லுக்கு பொண்ணுங்களை கட்டிப்பிடிப்பியா!” இந்தா வாங்கிக்க! வேகமாக அவன் முகத்தில் குத்தொன்று விழ, அவன் நிலைகுலைந்து போக  என்னம்மா! என்ன ஆச்சு?என்று கும்பல் கூட  இவனுங்க ரெண்டு பேரும் என்னை மோசமா கமெண்ட் பண்றானுங்க! அதான் ஒரு அடி விட்டேன்.” என்று கண்மணி சொல்லவும்

 அங்கிருந்தவர்கள் அந்த இரண்டு பேரையும் திட்டி வெளியே அனுப்ப கண்கள் கலங்க மீண்டும் நடேசன் இருந்த அறைக்குள் நுழைந்த கண்மணி

  சாரி! நடேஷ்! என்னை மன்னிச்சுரு! தப்பு என் மேலத்தான்! உன்னை தப்பா புரிஞ்சுகிட்டு உன்னை நோகடிச்சு உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டேன்!  என்னை மன்னிப்பாயா நடேஷ்?” என்று குலுங்கி அழ ஆரம்பித்தாள் கண்மணி.

Comments

  1. நல்ல கதை. ஆராயாமல் எடுத்த முடிவு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2