பசி!

 

இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று யாரும் எங்களை கேள்விகேட்கப்போவதில்லைதான்! ஆனாலும் எங்கள் பொழப்பை நினைக்கையில் எங்களுக்கே வெட்கமாத்தான் இருக்கிறது!”

யாரும் எங்களை வரவேற்று பூச்செண்டு கொடுக்காவிட்டால் கூடப் பரவாயில்லை! முறைக்காமலும் துரத்தி அடிக்காமலும் இருந்தால் போதும் எங்கள் வேலையை சத்தம் போடாமல் .. அச்சச்சோ அதுமட்டும் முடியாது! சத்தம் போட்டு முடித்துவிட்டுச் சென்று விடுவோம்.”

முன் வாசல் வழியாக எங்களை யாரும் அனுமதிப்பது இல்லை! எப்போதும் பின் வாசல்தான்! அதனால் எங்கள் வழி தனிவழிதான்! ஆனால் தனி ஆளாய் சென்றால் எங்கள் வேலையை யாரும் கவனிக்கக் கூட மாட்டார்கள்! அவர்கள் பாட்டுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள்.

 என்னடா ஒரு ஜீவன் இவ்வளவோ கஷ்டப்படுகிறதே! குடிக்க ஒரு டம்ளர் ஜூஸோ பாலோ கொடுப்போம் போனால் போகட்டும் என்று எவரும் சிந்தித்து பார்ப்பதே கிடையாது. எல்லோரும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக எங்கே அமைதியாக ? “ஹோவென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.

 அந்த சத்தத்தில் நாங்கள் போடும் சத்தம் கூட கொஞ்சம் குறைவாகத்தான் கேட்கும். வரவர எங்கள் பொழப்பு ரொம்பவுமே நாறிவிட்டது.

 ஏதோ கொரானாவாம்! உலகம் முழுக்க அந்த கொடூரன் பரவி விட எல்லோரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். ஒரு விருந்து இல்லை! விஷேசம் இல்லை! கல்யாணம் இல்லை! காதுகுத்தல் இல்லை! அப்புறம் தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது!

கடைகளும் ஹோட்டல்களும், திருமண மண்டபங்களும்  மூடியே கிடக்கின்றன. எங்கள் பசி குறையவே இல்லை!  அப்படியே நான் சும்மா இருந்தாலும் வயிறு சும்மா இருக்குமா? கூவிக்கொண்டேயிருந்தது  !   

  நாலு நாட்களாய் வீதி வீதியாய் ஊர் ஊராய் சுற்றி ஏதும் அகப்படாதா என்று பார்த்து வருகிறேன்!  

   ! என்னோட கூட்டணி வைத்து என் நண்பர்களும் என்குடும்பமும் என் பின்னாலேயே சுற்றி சுற்றி வருகின்றனர்.

டீக்கடைகள் தொறந்தாலாவது பொறையும்பன்னும் கிடைக்கும்! அதைக் கூட அடைத்துவிட்டார்கள்! என்னைப் போல எத்தனை ஜீவன்கள் டீக்கடைகளை நம்பி இருக்கிறோம் தெரியுமா? அதெல்லாம் இந்த முதல்வர் கண்ணுக்குத் தெரிகிறதா? “ டாஸ்மாக் பக்கமும் போக முடியவில்லை! வயிற்றுப்பாட்டுக்கு வழியே இல்லாமல் ஊரை விட்டு ஊர் வந்தாகிவிட்டது.  .

இவர்கள் எல்லோரையும் காபந்து பண்ணி ஏரியா விட்டு ஏரியா வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. ஏரியாக் காரர்கள் கண்ணில் பட்டுவிட்டால் போலீஸ்காரர்கள் கையில் சிக்குவதை காட்டிலும் ஆபத்தாகிவிடும் எப்படியடா எங்க ஏரியாவுக்குள்ளே நுழைந்து எங்க சொத்தை ஆட்டைய போடறே? ”என்று கடித்துக் குதறி விடுவார்கள். ஒருவாய் சோறு சாப்பிடுவதற்குள் உடம்பு ரணகளமாகிவிடும்.

எப்படியோ ஏரியாக் காரர்களையும் காவலாளிகளையும் ஏமாற்றி இதோ இந்த பெரிய பங்களாவுக்குள் நுழைந்து விட்டேன். இங்கே ஏதோ கல்யாணமாம்! சொந்தங்கள் சிலரோடு எளிமையாக நடக்கிறதாம்! மேளச்சத்தம் கேட்டது! அதுவா எனக்கு வேண்டும். பசி அல்லவா வயிற்றை கிள்ளுகிறது! ஆஹா! சாம்பாரின் வாசம்! நெய்மணக்கும் கேசரி வாசனை! எண்ணெய் வாசம் தூக்கும் வடையின் வாசம்! நாவில் எச்சில் ஊற எங்கள் கும்பலோடு பின் வாசலில் காத்திருந்தேன்.


  இதோ முதல் பந்தி முடிந்துவிட்டது! இன்னும் சில நிமிடங்கள்தான்! அப்புறம் நமக்கான வேளை வந்துவிடும்! இத்தனை நாள் காத்திருந்தது வீண்போகாது! இன்று நல்ல வேட்டைதான்!  நினைத்து கொண்டிருக்கையில் பணியாள் ஒருவன் கூடையில் எச்சில் இலைகளை கொண்டுவந்து  அங்கிருந்த தொட்டியில் கொட்ட மறு கணம்லொள் லொள்என்று குரைத்தபடி என் கூட்டத்தினருடன் அந்த இலைக் குவியலில் உணவைத் தேடி உண்ணத் துவங்கினேன்.

Comments

  1. சுரேஷ் மனம் ரொம்ப நெகிழ்ந்துவிட்டது. கதை ரொம்ப நன்றாகச் சொல்லியிருக்கீங்க. பாவம் இவை. கொரோனா காலத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டன. வாழ்த்துகள் சுரேஷ்

    கீதா



    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!