ரன் எக்ஸ்பிரஸ் மிதாலி ராஜ்- பகுதி 5

 

ரன் எக்ஸ்பிரஸ் மிதாலி ராஜ்- பகுதி 5

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடையாளமாகிவிட்டார் 38 வயதான மிதாலி என்றால் மாற்றுக் கருத்தில்லை. எப்படி ஆண்களுக்கு கபில்தேவ்வும், கவாஸ்கரும், சச்சினும், தோனியும், கோலியும் வளரும் கிரிக்கெட் தலைமுறையினருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனோ அப்படிதான் பெண்களுக்கு மிதாலி ராஜ் ஒரு ஆதர்சன வீராங்கனையாக வளம் வருகிறார், எப்போதும் இருப்பார் . இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வினையும் மிதாலி ராஜையும் இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்த விருதைப் பெற்றால் இவ்விருது பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனையாக இருப்பார்.

   கிரிக்கெட்டை மணந்துகொண்ட மிதாலி திருமணம் செய்துகொள்ளவில்லை! இந்திய பெண்கள் பலருக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் மிளிரவும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் சாதனை படைக்கவும் ஒரு தூண்டுகோலாக  மிதாலி விளங்குகிறார் என்றால் மிகையில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார் மிதாலிராஜ். இந்த சாதனையை இதுவரை எந்த பெண் கிரிக்கெட்டரும் செய்த்து இல்லை. சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகள் 91 நாட்கள் கிரிக்கெட் விளையாடி இந்த சாதனையில் முதலிட்த்தில் இருக்கிறார். கூடிய விரைவில் இந்த சாதனையையும் மிதாலி முறியடிக்க கூடும்.

சமீபத்தில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றபோது டெண்டுல்கர் மிதாலியை பாராட்டி ட்விட் செய்தார். அதற்கு பதில் அளித்த மிதாலி நான் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருந்தார். அப்போது இடையில் புகுந்த ரசிகர் ஒருவர் மிதாலிக்கு தமிழ் தெரியாது என்று ட்விட் செய்ய கடுப்படைந்த மிதாலி தன் அடுத்த ட்வீட்டை தமிழில் எழுதினார். அதில் தமிழ் என் தாய்மொழி. நான் நன்றாக தமிழ்பேசுவேன் தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்றுகூறிய மிதாலி ஆனால் அதை விடவும் பெருமை நான் ஒரு இந்தியன் என்பதுதான் என்று கூறியிருந்தார்.

2019 ம்வருஷம் டிசம்பர் 3 அவரது பிறந்தநாள் அன்று அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதாக அறிவிப்பு வந்தது. சபாஷ் மித்து என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் மிதாலியாக டாப்சி நடிக்க ராகுல் தொலாகியா இயக்குவதாக சொல்லப்பட்டது. கரோனா சூழ்நிலைகள் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போக இயக்குனர் பொறுப்பில் இருந்து ராகுல் தொலாகியா தற்போது விலகிவிட்டார். ஸ்ரீஜித் முகர்ஜி இப்போது இந்தப்படத்தை இயக்க உள்ளார்.

பவார் மிதாலி மோதல்: மிதாலிராஜ் கிரிக்கெட் கேரியரில் ஒரு பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் இவருக்கும் நடந்த மோதல்தான். என்னுடைய கிரிக்கெட் கேரியரை அழிக்க பவார் முயல்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மிதாலி.

இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரமேஷ் பவார், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டி வரை அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது , உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

 அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையாக வெடித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மாறி மாறி புகார் தெரிவித்தனர். தன்னை அவமானப்படுத்தியதுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ் பவார் முயற்சிக்கிறார் என்று மிதாலி ராஜ் குற்றம் சாட்ட, மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று ரமேஷ் பவார் புகார் கூறினார். இந்த பிரச்சினையால் பவாரின் ஒப்பந்தம் .புதுப்பிக்கப்படவில்லை. இந்த 2018 டி20 தொடரில் அணியின் கேப்டனாக இருந்தவர் ஹர்மன் ப்ரீத் கவுர். அவர் மிதாலி ராஜ் தொடக்கத்தில் ரன் சேர்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து தன் செல்வாக்கை பயன்படுத்தி ஓப்பனிங்க் ஆடிய மிதாலி அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் குவித்தார். மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயம் காரணமாக களமிறங்கவில்லை. அடுத்த முக்கியமான அரையிறுதியில் மிதாலிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்தப் போட்டியில் இந்திய அணி படு மோசமான தோல்வியை சந்தித்தது. இதை ஒரு மூத்த வீர்ருக்கு இழைக்கப்பட்ட அநீதியாக மீடியாக்கள் செய்தி பரப்பின. இதையடுத்து  பவார்- மிதாலி இருவரையும் அழைத்து விசாரித்த பி.சி.சி. பவாரை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவித்து டபிள்யூ வி.ராமனை புதிய பயிற்சியாளராக நியமித்தது.

   ஆனாலும் ஹர்மன் ப்ரித் உடனான கருத்து வேறுபாடு காரணமாக டி20 அணியில் புறக்கணிக்கப்பட்ட மிதாலி டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இத்தனைக்கும் டி20 போட்டிகளில் ஆண்கள் அணி பெண்கள் அணி இரண்டையும் சேர்த்து முதன் முதலில்  2000 ரன்களை குவித்தவர் மிதாலி என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பாவன்களில் ஒருவரான டெண்டுல்கர் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றார். அது இரண்டு தசாப்தங்கள் அதாவது இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியது ஒரு தகர்க்க முடியாத சாதனையாக இதுவரை இருந்துவருகிறது.  டெண்டுல்கர் 22 ஆண்டுகள் 91 நாட்கள் விளையாடி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிதாலி களமிறங்கிய போது 22 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இதுவரை எந்த பெண் கிரிக்கெட்டரும் நெருங்காத சாதனை இது. கடந்த 1999 ஜூனில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கி மிதாலி  இந்த ஜூனில் 22 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.
 2022
ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை விளையாட உள்ள மிதாலி விரைவில் டெண்டுல்கரின் இந்த சாதனையை முறியடிக்க உள்ளது பெண்கள் கிரிக்கெட்டின் உச்சபட்ச  சாதனையாகும்.

மேக்கர்ஸ் இந்தியாவெளியிட்டிருக்கும் இந்தியாவுக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித் தந்த பெண்களின் பட்டியலில் பட்டியலில்தான் மிதாலி  2020ம் ஆண்டு இடம்பிடித்தார்.


பல்வேறு தடைகளைக் கடந்து, எதிர்ப்புகளைச் சந்தித்து, பாலின அழுத்தங்களை மீறி தனக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ந்தவர்களின் பட்டியலே அது. அந்தப் பட்டியலில் சகுந்தலா தேவி, மேரிகோம் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் மிதாலி ராஜ் இடம்பிடித்திருக்கிறார்.

பெண் டெண்டுல்கர்: டெண்டுல்கரைப் போல 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். டெண்டுல்கர் போல 10,000 ரன்களை குவித்துள்ளார். டெண்டுல்கர் போலவே 22 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளர். மிதாலி. 90 களில் மிடில் ஆர்டரில் டெண்டுல்கரை இந்திய அணி பெரிதும் நம்பியிருந்த்து. அதே போலவே மிதாலியும் மிடில் ஆர்டரில் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஸ்கோர் செய்து பல போட்டிகளில் வெற்றிபெற உதவியிருக்கின்றார். பெண்கள் கிரிக்கெட்டின் டெண்டுல்கர் என்றும் இவரை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 இந்திய அரசாங்கத்தால் 2003 ஆம் ஆண்டு அர்ஜுனா  விருது இவருக்கு வழங்கப்பட்டது.2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். கிரிக்கெட் வீர்ர்களால் கொண்டாடப்படும் விஸ்டன் விருதை 2015ம் ஆண்டு பெற்றார். இந்த விருதைப் பெற்ற ஒரே பெண் கிரிக்கெட்டர் இவர்தான்.2017ல் வோக் ஸ்போர்ட்ஸ் மேன் ஆப் இயர் ஆகத் தேர்வுபெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது தனிநபர் ஸ்கோர் 214 இவருடையது. .சி.சி உலக கோப்பை பைனல் போட்டிகளில் இரண்டு முறை தலைமை தாங்கி சாதனை புரிந்த ஒரே பெண் இவர்தான். 2005 மற்றும் 2017ல்  இந்த சாதனை புரிந்தார். 200 ஒருநாள் போட்டிகளை கடந்த ஒரே பெண் வீராங்கனையும் இவரே. உலக கோப்பை போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனையும் இவரே.

 இவ்வளவு சாதனைகள் வைத்திருந்தும் ஒரு உலக கோப்பை மட்டுமே அவரது கனவு. ஒருமுறை அதை கையில் ஏந்திவிட்டால் சந்தோஷமாக ஓய்வுபெற்றுவிடுவேன் என்று சொல்லும் மிதாலி 2022ம் ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிகளுக்காக காத்திருக்கிறார். 2005 முதல்17 ஆண்டுகளாக கைநழுவிக் கொண்டிருக்கும் அந்தக் கோப்பை மிதாலியின் கரங்களில் வந்தடைய அவரின் கனவு நிறைவேற நாமும் பிரார்த்திப்போம்.


 

Comments

  1. அருமையான பதிவு
    https://vannasiraku.blogspot.com/2019/11/blog-post_18.html

    ReplyDelete
  2. மிதாலி ராஜ் - நாமும் வாழ்த்துவோம்!!..
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2