நல்ல வைத்தியன்! பாப்பா மலர்!

நல்ல வைத்தியன்!  பாப்பா மலர்!


சின்னம்பேடு என்ற கிராமத்தில் சீனிவாசன் என்ற வைத்தியர் ஒருவர் வசித்து வந்தார். எத்தகைய நோயாக இருந்தாலும் தீர்த்துவிடும் ஆற்றல் அவருக்கு உண்டு. பல்வேறு வைத்திய நூல்களை கற்று எல்லாவிதமான மூலிகை மருத்துவங்களையும் படித்து இருந்தார். அதனால் அவ்வூரில் மட்டும் அல்ல பல சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும் அவரிடம் வைத்தியம் பார்க்க குவிந்தனர். அதனால் அவரது செல்வாக்கு கூடியது. அவருக்கு தலைக்கனமும் உண்டாகியது.
    அவரை சந்திக்க வைத்தியம் செய்து கொள்ள முன்கூட்டி அனுமதி பெற்று வரவேண்டும் என்ற சூழலும் உருவாகியது. இருப்பினும் அவரிடம் வைத்தியம் செய்து கொள்ள நிறைய பேர் விரும்பியதால் வருமானம் செழித்து வந்தது. வைத்தியம் பார்ப்பது மட்டும் இல்லாமல் வைத்தியம் கற்றுக்கொடுக்கவும் செய்தார் அவர். அவரிடம் பல சீடர்கள் மருத்துவம் கற்றுக்கொண்டு உதவி செய்து வந்தனர். அதில் ஒருவன் நல்ல முத்து. நல்ல அறிவாளி திறமை சாலியும் கூட. நல்ல முத்து நோய்நாடி நோய் முதல் நாடி என்பது போல நோய் எதனால் வந்தது என்பதை நோயாளியின் பேச்சில் இருந்தே அறிந்து கொண்டு அதற்கேற்ப வைத்தியம் செய்யும் ஆற்றல் உடையவன். சீனிவாசன் ஊரில் இல்லாத சமயம் நல்லமுத்து வைத்தியம் பார்ப்பான். அவனது திறமை பற்றியும் ஊரில் நல்ல பேச்சு இருந்தது.
   ஒரு நாள் சீனிவாசன் வைத்தியரிடம் ஒருவர் அரக்க பரக்க ஓடிவந்தார். ”ஐயோ குடலைப் புரட்டுகிறதே குமட்டி எடுக்கிறதே! வாந்தி வருகிறதே! ”என்றவாரு வாந்தியும் செய்து விட்டார் அவர். அவரின் படபடப்பான நிலையை பார்த்த வைத்தியர் ”என்ன ஆயிற்று?” என்று கேட்டார். வந்தவர் ”ஐயா! பல்லியை முழுங்கிவிட்டேன்! அதான் வயிற்றை குமட்டுகிறது. வாந்தி மயக்கமாய் வருகிறது!” என்றவாரே மயங்கிவிழுவதுபோல தெரிந்தார்.
     ”என்னது பல்லியை முழுங்கி விட்டீரா? எப்படி?” என்றார் சீனிவாசன்.” ஐயா! நல்ல வெயில் வேளை வெளியே சென்று வந்தேனா! தாகம் பிடுங்கி எடுத்தது. வீட்டில் பானையில் நன்னாரி ஊறப்போட்ட தண்ணீர் வைத்து இருந்தனர். தாகத்திற்கு ஒரு சொம்பு மொண்டு குடித்துவிட்டேன்! அப்படி குடிக்கும்போதுதான் தொண்டைக்குள் ஏதோ சிக்கிக் கொண்டார் போல இருந்தது. அது என்னவாக இருக்கும் என்று அப்படி மோட்டுவளையை நோக்கினேனா! அங்கே இரண்டு பல்லிகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போதுதான் தெரிந்தது. பல்லி பானைக்குள் விழுந்து அதை தெரியாமல் நான் தண்ணீருடன் சேர்த்து முழுங்கிவிட்டேன் என்று. ஐயா! காப்பாற்றுங்கள்! கதை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களே! பல்லி கடித்தால் பத்துநிமிடத்தில் மரணம் என்று சொல்வார்களே! நான் பல்லியையே முழுங்கிவிட்டேனே என்ன ஆகுமோ?” என்று தவித்தார் அவர்.
   வைத்தியர் சீனிவாசன் அவரை அமைதிப் படுத்தி நாடி பிடித்து பார்த்தார். உதட்டை பிதுக்கிவிட்டு ,”ஐயா! உங்களுக்கு ஒன்றும் இல்லை! நீங்கள் பல்லி எதையும் முழுங்கவில்லை! தண்ணீரில் இருந்த நன்னாரி வேர் ஒன்றைத்தான் முழுங்கி இருக்கிறீர்கள் ! வீண்பயம் காரணமாக உங்களுக்கு இந்த வாந்தியும் மயக்கமும்! கவலைப்படாதீர்கள்! மருந்து ஒன்றும் தேவையில்லை போய் வாருங்கள்” என்றார்.
   வந்தவரோ! ”நீர் என்ன பெரிய வைத்தியர்! நான் பல்லியை முழுங்கிவிட்டு வாந்தியும் மயக்கமுமாய் வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறேன்! நீர் என்னடாவென்றால் மருந்து தேவையில்லை என்று விரட்டி அடிக்கிறீரே!” என்று கோபப்பட்டார்.

   வைத்தியர் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை! பல்லியை முழுங்கியது உறுதி! அதற்கு மருந்து தந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் செய்தார். இல்லாத நோய்க்கு என்ன மருந்து கொடுப்பது என்று சீனிவாசன் முழித்தார். இது அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல முத்து,” ஐயா! நான் இவருக்கு வைத்தியம் செய்யட்டுமா?” என்று மருத்துவர் சீனிவாசனிடம் கேட்டார்.
    ”என்ன நீ மருத்துவம் செய்கிறாயா? இவர்தான் எதையும் முழுங்கவில்லை என்று நான் கூறுகிறேன்! நீ அதை மறுக்கிறாயா?” என்றார் வைத்தியர்.
    ”அவர் மறுக்கிறாரே! அவருக்கு வைத்தியம் செய்யவேண்டியது நம் கடமை அல்லவா? ”என்றார் நல்லமுத்து.
    ”ஐயா! நீங்கள் எனக்கு வைத்தியம் செய்யுங்கள்! எதாவது மருந்து தாருங்கள்! என் வயிற்றில் புகுந்த பல்லி என்னமோ செய்கிறது? ”என்று துடித்தார் வந்தவர்.
   சீனிவாசனும் என்னமோ செய்துகொள்! என்று கிளம்பிவிட்டார். நல்லமுத்து வந்தவரை நாடி பிடித்துப் பார்த்தார். சில மருந்துகளை கலக்கி புகட்டினார். அருகில் இருந்த இன்னொரு சிஷ்யனுக்கு கண்ஜாடை காட்டி அருகில் வரவைத்து அவனது காதில் ஏதோ சொன்னார். அவனும் நகர்ந்தான்.
     வந்தவர் ”ஐயோ! வயிற்றை கலக்குகிறதே! ”என வயிற்றை பிடித்துக் கொண்டார். ”உன் வயிற்றில் புகுந்த பல்லியை வெளிக்கொண்டுவர பேதிக்கு கொடுத்துள்ளேன்! போய் மலம் கழியுங்கள் அதில் பல்லி வந்துவிடும்!” என்றார் நல்ல முத்து. வந்தவர் மறைவிடம் நோக்கி ஓடினார். அவர் மலம் கழித்தபோது அவர் அறியாமல் அந்த மலத்தில் ஒரு செத்த பல்லியை  போட்டனர் நல்ல முத்துவின் சிஷ்யர்கள்.
      மலம் கழித்து எழுந்தவர் அங்கிருந்த பல்லியை பார்த்து, தான் முழுங்கிய பல்லி வெளியே வந்துவிட்டது என்று மகிழ்ந்தார். முழு மகிழ்ச்சியுடன் நல்லமுத்துவிடம் வந்து! ஐயா! நல்ல வேளை செய்தீர்கள் என் வயிற்றில் புகுந்த பல்லியைவெளியே வரச்செய்து விட்டீர்கள் நீங்கள்தான் நல்ல வைத்தியர். உங்கள் குருவை விட நீங்கள் தான் திறமை சாலி! இந்தாருங்கள்! என்று சிறிது பொன்னை தந்துவிட்டு போனார்.
   இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த குரு கேட்டார். ”எப்படி இல்லாத பல்லியை வரவைத்தாய்?”
  நல்லமுத்து நடந்ததை கூறினார்”. இது வைத்திய சாஸ்திரத்துக்கு விரோதம் இல்லையா?”
  ”இதில் விரோதம் எங்கே வந்தது? நோயின் காரணத்தை அறிந்தேன்! அதை தீர்த்து வைத்தியம் செய்தேன். இங்கு வந்தவருக்கு பல்லியை முழுங்கிவிட்டதாக சந்தேகம் இல்லை! நம்பிக்கையே கொண்டிருந்தார். அவர் உங்கள் பேச்சை மறுத்தபோதே அவர் பல்லியை முழுங்கிவிட்டதாக முழு நம்பிக்கையில் உள்ளார். அதுவே அவருக்கு நோயை தந்துள்ளது என்று அறிந்தேன். அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் சென்றார்” என்றார்.
      சீடனின் திறமையை மெச்சிய குரு, ”நான் தான் வைத்திய சாஸ்திரத்தில் சிறந்தவன் என்று பெருமை பட்டு கொண்டிருந்தேன். இன்று நீ என்னை  மிஞ்சிவிட்டாய்! நோயின் காரணத்தை சிறப்பாக அறிந்து அதற்கேற்ப வைத்தியம் செய்து நல்ல பெயரை எடுத்துவிட்டாய்!” என்று பாராட்டினார்.
     
     இப்படித்தான் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து வீண்பீதியில் நோயாக கற்பனை செய்துகொள்வோர் பலர். அவர்களை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்த வேண்டும். அதை செய்த நல்ல முத்து உண்மையிலேயே நல்ல வைத்தியர் தானே!

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறீத்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அதிர்ச்சி வைத்தியம்... அருமை...

    ReplyDelete
  2. சொல்ல வேண்டிய விஷயத்தை சுவார்ஸ்யமாக, கோர்வையாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு. அதான் சிறப்பு.

    பல்லி மாதிரி வேறு வெர்ஷான்களில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.
    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எதை எப்படித் தீர்க்க வேண்டும் என்று அறிந்து அடுத்த கட்டத்துக்குப் போய் விட்ட சிஷ்யர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!