கார் கட்டு!

   கார் கட்டு!   
         
    
அந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து நகரினுள் வேகமாக நுழைந்தது பெருவேகமாய் வந்த கார். காரை ஒரு இருபது வயது இளம்  யுவதி செலுத்திவர மேலே பேனெட்டில்  இளைஞன் ஒருவன் கட்டப்பட்டிருந்தான். அவன் வாய், ஏய்… நிறுத்து…! நிறுத்து..! ஸ்டாப்…! ஸ்டாப்..!  ஸ்டாப் தட் இடியட் கேர்ள்!  இதற்கெல்லாம் நீ அனுபவிப்பாய்! என்று கத்திக் கொண்டிருக்க, கடைத்தெருவில் காய்கறி வாங்குவதிலும் மளிகைப் பொருட்களை வாங்குவதுமாய் இருந்தவர்களும் உடன் பயணித்த வாகனத்தில் இருந்தவர்களும் வித்தியாசமாய் பார்த்தார்கள்.
   ஏய்.. அதோ பாருடா! காரு மேல ஒருத்தன் கட்டிப் போட்டிருக்கு..!
 சினிமா ஷூட்டிங்கா?
அந்த பொட்டைப் பொண்ணுக்கு என்னா துணிச்சல் இருந்தா ஒரு ஆம்பளையை இப்படி கார்மேல கட்டி வச்சிக்கிட்டு போவும்…!
ஆளாளுக்கு முணுமுணுத்தார்களே தவிர ஒருவரும் அந்த காரை மடக்கவோ வழிமறிக்கவோ இல்லை.
  கார் மிகவேகமாக அந்த நகரத்தைக் கடந்து ஒரு கிளைச்சாலையில் பிரவேசித்தது. ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு தன்னந்தனியான பங்களா முன் நின்றது.
  காரை நிறுத்தி இறங்கிய அந்தப் பெண். காரின் மேல் கத்திக் கொண்டிருந்தவன் கன்னத்தில் ஓர் அறைவிட்டாள். இடியட்! இன்னுமா கத்திக் கொண்டிருக்கிறாய்! உன் கத்தல் இனிமேல் யார் காதுக்கும் எட்டாது! என்றவள் கார் கதவைத் திறந்து உள்ளே இருந்த சூட்கேஸ்களை எடுத்தாள்.
    சூட்கேஸ்களை எடுப்பதை பார்த்தவன் மேலும் கத்தினான். அடியேய்! பாவி! அது எல்லாம் நான் உழைத்து சம்பாதித்த பணம்டி!
   ஹா..ஹா! இருக்கட்டுமே! என்றவள் சூட்கேஸில் இருந்த  ஒரு நெக்லஸை எடுத்து அணிந்து கொண்டு மிரரில் பார்த்தாள்.
      எவ்வளவு ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து இந்த நெக்லஸை வாங்கிக் கொடுத்தேன். இப்படி என்னை ஏமாற்றிவிட்டாயேடி!
   ஏன்? ஏமாற்றுவது எல்லாம் ஆண்களின் சொத்தா? பெண்கள் ஏமாற்றக் கூடாதா என்ன?
      உன் அழகிலும் பேச்சிலும் மயங்கி பெற்றோரை எதிர்த்து உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டேனே… எனக்கு சரியான தண்டணை கிடைத்து இருக்கிறது..!
      ஹாஹா! இந்த அழகு! இதுதான் என் மூலதனம்! இதை வைத்து நான் எத்தனையோ பேரை ஏமாற்றிவிட்டேன். நீ இருபத்தைந்தாவது நபர். சில்வர் ஜுப்ளி அதற்கேற்ற பணமும் நகையும் கிடைத்துவிட்டது. இன்னும் சில நிமிஷத்தில்  என் கூட்டாளி இங்கே வருவான். அவனோடு நான் கிளம்பிவிடுவேன். இன்னும் கொஞ்சநாள் தலைமறைவு வாழ்க்கை! அப்புறம் இன்னொருத்தன் ஏமாறாமலா போய்விடுவான்?
     ப்ளீஸ்! வேண்டாம்! உன் பழைய குற்றங்களையெல்லாம் மன்னித்துவிடுகிறேன். உன்னை என்னால் மறக்கமுடியவில்லை! திருந்திவிடு! நாம் சேர்ந்து வாழலாம்.
    நீ என்ன என்னை மன்னிப்பது? உன்னோடு வாழ நான் தயாரில்லை! புதுப்புது நபர்கள்! புதுப்புது நகர்கள்! புதுப்புது அனுபவங்கள்! என் மனம் புதியதையே நாடுகிறது! நீ பழையவன் ஆகிவிட்டாய்!
   என்னை அவிழ்த்துவிடு! அவன் கத்தினான்.
உன்னை பேசவிட்டதே தவறு! என்று ஒர் ப்ளாஸ்திரியை அவன் வாயில் பொறுத்தினாள். சூட்கேஸ் இரண்டில் ஒன்றில் கட்டு கட்டாய் பணம். இன்னொன்றில் நகை துணிமணிகள். அனைத்தையும் சரிபார்த்தாள். இன்னும் ஏன் நம் சகா வரவில்லை… பொறுமை இழந்தாள்.
  மேலும் சிலநிமிடங்கள் கடந்தபின்  ஒரு ஜீப்பில் அவன் வந்தான். ஏன் இவ்வளோ  லேட்? என்று கத்தினாள்.
   வழியில் ஜீப் மக்கர் செய்துவிட்டது. டயர் பஞ்சர்…
  ஏன் இவன் வாயை அடைத்திருக்கிறாய்?
போடா முட்டாள்! இவனுக்கு என்ன மயக்க மருந்து கொடுத்தாய்? பாதிவழியில் விழித்துக் கொண்டு ஒரே கலாட்டா? விடாமல் பிணாத்திக்கொண்டே இருக்கிறான்.! அதான் வாய்க்கட்டு போட வேண்டியதாகிவிட்டது.
   சரி..சரி இஞ்செக்‌ஷணை எடு! அவனுக்கு போட்டு அந்த ஜீப்பில் தூக்கி வீசு..!
   காரின் நம்பர் ப்ளேட் மாற்று! டிசைன் மாற்று ஆகட்டும் சீக்கிரம்!
வந்தவன் இஞ்ஜெக்‌ஷன் போட  நெருங்கும் சமயம்  சைரன் ஒலிக்க சூழ்ந்து கொண்டது போலீஸ் டீம்.
     காரில் கட்டுப்பட்டு இருந்தவன்,  ஹாஹாஹா! என்று சிரித்தான்…!
  மாட்டிகிட்டியாடி என் மரிக்கொழுந்தே!  எப்படி எப்படி? நான் இருபத்தைந்தாவது ஆளா? சில்வர் ஜுப்ளியா? இதோடு உன் ஆட்டத்துக்கு நிறைவு விழா,
     அந்தப் பெண் திகைத்து நிற்க, சூழ்ந்த போலீஸ் அவள் கைகளிலும் அவளது சகாவின் கைகளிலும் விலங்கை மாட்டியது.  நீ எப்படி ஒவ்வொரு ஊரிலேயும் மேட்ரிமோனியல் சைட்ல புகுந்து இளைஞர்களை வசப்படுத்தி ஏமாத்தி கல்யாணம் பண்ணி சுருட்டறேங்கிறது எங்க போலீஸ் டீமுக்கு தகவல் வந்திருச்சு. உன்னை பிடிக்க வலை விரிச்சோம். மேட்ரிமோனியல் சைட்ல மாப்பிள்ளையா அறிமுகம் ஆகி பெரிய கோடீஸ்வரனா நடிச்சேன். நீயும் ஏமாந்திட்டே. நானும் ஏமாந்த மாதிரி நடிச்சு  உன் ஆட்டத்துக்கு எல்லாம் ஒத்துழைச்சேன்.
       ரிசார்ட்ல எனக்கு  மயக்க மருந்து கொடுத்தபோது அந்த பாலை குடிக்காம கீழே கொட்டி மயக்கம் வந்த மாதிரி நடிச்சு நீ கட்டி போட ஒத்துழைச்சேன். அப்பவே என் போன்ல ஜி.பி,எஸ் ஆன் பண்ணி உள்ளே வைச்சிட்டேன்.
    ஜி.பி,எஸ் சிக்னல் வைச்சு இப்ப ஒண்ணை மடக்கியாச்சு! வாம்மா! மாமியார் வீட்டுக்கு போவோம்! என்றான் அந்த இளம் எஸ்.ஐ. கண்ணடித்து!

பதிவர் கணேஷ்பாலா  முகநூலில் வைத்த போட்டோ கதைப்போட்டியில் கலந்து கொண்டு நான் எழுதிய கதை!  தலைப்பை மட்டும் மாத்தி இங்கே பதிவிட்டுள்ளேன்!  நீண்ட நாளுக்கு பின் எழுதியதால்  நிறைய தப்பு இருக்குது போல பரிசுக்கு தேர்வாகவில்லை!  இந்த கதையில் ஒரு புதுமை புகுத்தி இருக்கேன்! இன்னான்னு சொல்லுங்க பார்க்கலாம்!Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!