Monday, September 26, 2016

தளிர் சென்ரியு கவிதைகள்!

தளிர் சென்ரியு கவிதைகள்!


1.அரசவைப் புலவர்களான
அமைச்சர்கள்!
சட்டமன்றம்!

2.வீடுதேடிவந்த புடவைகள்!
கொலுப்படியில் அமர
தனிப்படி!

3.நீரூற்றாமலே
வளர்ந்து கொண்டிருக்கிறது
காவிரி பிரச்சனை!

4.மூடிய கதவுகள்!
தட்டியும் திறக்கவில்லை!
காவிரி நீர்!

5.நெகிழிப்பைகள் வருகை
நினைவிழந்தன
துணிப்பைகள்!

6.ஆட்டம் போட்ட பூமி!
அடங்கிப்போனது ஊர்!
பூகம்பம்!

7.விளக்குமாற்றுக்குப் பஞ்சுமெத்தை
விளையாட்டாகிப் போனது சொத்தை!
ஒலிம்பிக்!

8.கால்கள் வளைந்தாலும்
வளையவில்லை நம்பிக்கை!
தங்க மாரியப்பன்!

9வாரி இரைத்துவிட்டு
பொறுக்கிறார்கள்!
தேர்தல்வெற்றி!

10.விலை பேசப்படும் வாக்குரிமை!
வலை வீசும் வேட்பாளர்கள்!
தேர்தல்!


11. கடைவாசல் தவம்!
கடைந்தேற வழியில்லை!
குடிமகன்!

12.விளைந்து அறுவடையில்லை!
வீணாய் போனது
மழைநீர்!

13.நோட்டுக்கள் சிக்கின!
விடுபட்டார்
அமைச்சர்!

14.இறக்கும் வரை
போராடிக்கொண்டிருந்தன!
அரசுப் பேருந்துகள்!

15.சில்லரைத் தட்டுப்பாடு!
உறக்கம் பிடிக்கவில்லை!
குருக்களுக்கு!

16.குழலூதும் கண்ணன்!
தாளம் போட்டது சில்லரை
பிச்சைக்காரன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Saturday, September 24, 2016

குதிரை கற்றுக்கொடுத்த பாடம்! பாப்பா மலர்!வீராபுரம் என்ற சிற்றூரில் கேசவன் என்ற வணிகர் ஒருவர் வசித்துவந்தார். அந்த ஊரை அடுத்துள்ள நகரத்தில் பெரிய வியாபாரியாக அவர் திகழ்ந்தார். கேசவன் ஒரு கடைந்தெடுத்த கருமி! வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அவர் பிறருக்கு ஒரு கவளம் சோறு கூட போட மாட்டார். வேலை செய்யும் பணியாளர்களுக்கும் குறைந்த அளவே சம்பளம் தருவார். அவரிடம் குதிரை ஒன்று இருந்தது. அவர் எங்கு செல்வதானாலும் குதிரையில்தான் செல்வார். அந்த குதிரை இல்லாமல் அவருக்கு பொழுது போகாது. பணி நிமித்தமாக எங்கு செல்வதாக இருந்தாலும் குதிரை சவாரிதான் அவருக்கு பிரியம்.

     அவரின் வாகனமான அந்த குதிரை அவரிடம் வரும் வரை நன்றாக கொழுத்து  வலிமையாக இருந்தது. கருமியான கேசவன் அதற்கு ஒழுங்காக உணவு அளிப்பதில்லை! நாளொன்றுக்கு சிறிதளவு புல்கட்டும் கொள்ளும் மட்டும் வைப்பார். பாவம் அது குதிரையின் கால் வயிறுக்கு கூட பத்தாது. அதனால் அது நாளுக்கு நாள் மெலிந்து போய் கொண்டு இருந்தது. ஆனாலும் கேசவன் குதிரையை கண்டுகொள்ளவில்லை. வடி கட்டிய கஞ்சனான அவர் குதிரைக்கு தீனி போட முன் வரவில்லை.

   அவருடைய குதிரை இரண்டு நாட்களாக பட்டினியாக கிடந்தது, அன்று அவர் வெளியில் கிளம்ப வேண்டும் என்பதற்காக ஒரு கட்டு புல்லை எடுத்து வந்து குதிரை முன் போட்டார். பசியில் குதிரை வேகமாக மேய ஆரம்பித்தது. பாதி தின்னும் போதே குதிரையில் ஏறி விரட்ட ஆரம்பித்தார் கேசவன். பாவம் குதிரை அதற்கு கால் வயிறு கூட நிரம்பவில்லை! இன்று கேசவனுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும் என குதிரை முடிவு செய்தது.

   கேசவன் செலுத்திய பாதையில் இருந்து விலகி ஓட ஆரம்பித்தது குதிரை. கேசவன் எவ்வளவோ முயன்றும் அவரால் குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை! மிக வேகமாக ஓட்டம் பிடித்த குதிரை காடு மேடு பள்ளங்களை தாண்டி ஒரு அடர்ந்த புல்வெளியை அடைந்தது. அதற்குள் உச்சி வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்திருந்தது. அந்த புல் வெளியில் கேசவனை கீழே தள்ளிய குதிரை புற்களை நிதானமாக மேய ஆரம்பித்தது.

     நல்ல வெயில் குதிரையின் மிரட்டல் காரணமாக சோர்ந்து போயிருந்தார் கேசவன். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ஆனால் அந்த இடத்தில் உண்பதற்கு எதுவுமே இல்லை. சுற்றிசுற்றி பார்த்தார் ஒன்றும் கிடைக்கவில்லை! ஊர் திரும்பலாம் என்றாலோ வழி தெரியவில்லை! குதிரையின் அருகில் சென்றாலோ குதிரை முட்டவந்தது.

   மாலை மங்கிவர வயிறார உண்டு முடித்தது குதிரை அருகில் இருந்த குளத்தில் நீரை அருந்தியது. பின்னர் சற்று நேரம் ஓய்வு எடுத்தது. ஆனால் கேசவனை அருகில் நெருங்கவிடவில்லை! பசியின் மயக்கத்தில் மிகவும் களைத்து போயிருந்தார் கேசவன். குதிரை அவரை சட்டை செய்யவில்லை. மீண்டும் புற்களை மேய ஆரம்பித்தது. இருட்டும் வேளையில் குதிரை என்ன நினைத்ததோ தெரியவில்லை. கேசவனின் அருகில் வந்து நின்றது.

   குதிரை மீது ஏறக்கூட சத்து இல்லாமல் கிடந்தார் கேசவன். அப்புறம் தட்டுத் தடுமாறி ஏறி குதிரை மேல் அமர்ந்தார்.குதிரை அவரை சுமந்து சென்று அவருடைய வீட்டில் விட்டது. அப்போதுதான் அவருக்கு பசியின் கொடுமை புரிந்தது. இத்தனை நாள் மற்றவரையும் குதிரையையும் பட்டினி போட்டோமே! இன்று ஒருநாள் பட்டினியையே நம்மால் தாங்க முடியவில்லையே! நமக்கு சரியான தண்டனை கிடைத்தது. குதிரை நல்ல பாடம் கற்றுக் கொடுத்தது என்று எண்ணினார்.

  வீடு சேர்ந்ததும் கை கூட கழுவாமல் உணவை அள்ளி உண்டார். அவருக்கு புத்திவந்தது. இனி கஞ்சத்தனம் செய்ய கூடாது. அனைவருக்கும் வயிறார உணவு போட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது வெளியில் ஐயா! பழைய சோறு ஏதாவது இருந்தா போடுங்க என்ற குரல் கேட்டது. உடனே கேசவன் வீட்டில் இருந்த உணவுகளை எடுத்து வந்து அந்த பிச்சைக்க்காரனுக்குப் போட்டார்.

    கருமியான கேசவன் வீட்டில் பிச்சை போடுவதை மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். குதிரை கற்றுக் கொடுத்த பாடம் நல்ல வேலை செய்தது.
(மீள்பதிவு)
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இந்த வார பாக்யாவில் (செப்30-அக்-6) எனது ஜோக்ஸ்கள் பத்து!

இந்த வார பாக்யாவில் என்னுடைய பத்து ஜோக்ஸ்கள்!

பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவந்தாலே ஓர் தனி பரவசம்தான்! பல இதழ்களுக்கு தொடர்ந்துஎழுதி அனுப்பினாலும் பாக்யாவில்  என்னுடைய ஜோக்ஸ்கள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக( இடையில் ஒருவாரம் இல்லை) வெளிவந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது. பாக்யாவை அறிமுகம் செய்து வைத்த பூங்கதிர் சார்! தொடர்ந்து படைப்புக்களை வெளியிட்டுவரும் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி!  இதோ ஜோக்ஸ்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, September 23, 2016

கஷ்டங்கள் போக்கும் கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி!

கஷ்டங்கள்  போக்கும்  கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி!


சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி அமைந்திருக்கும். சிவனுடைய அம்சமான இவர் ஆலயங்களின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டார். அக்காலங்களில் ஆலயங்களின் கதவை பூட்டி பைரவரின் சன்னதியில் வைத்துவிடுவது வழக்கம். மறுதினம் பைரவரை வழிபாடு செய்து சாவி எடுத்துச் சென்று கதவு திறப்பார்கள்.

  பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி திதி ஆகும். ஒரு மாதத்தில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என்ற இரு அஷ்டமி திதிகள் உண்டு. அதில் தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபட உகந்தது ஆகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.


 ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும்.


பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும்

அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்


பைரவரை காலைநேரத்தில் வழிபட நோய்கள் நீங்கும் பகல் வேளையில் வழிபட நினைத்த காரியம் கைகூடும்  அந்தி நேரத்தில் வழிபட செய்த பாபங்கள் விலகும் அர்த்த சாமத்தில் வழிபட வளமான வாழ்வும் மனச்சாந்தியும் கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் கிடைக்கும்.


வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். சொர்ணாகர்ஷண பைரவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.

வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.


மூல மந்திரம்

ஓம் ஹேம்,ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சஹவம்ச ஆபத்துதோராணய  அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷனாய மம தாரித்திரியம்  வித்வேஷனாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:

காயத்திரி:
பைரவாய வித்மஹே ஹரிஹர பிரம்மாத்மஹாய தீமஹி
தன்ன ஸ்வர்ணாகர்ஷன பைரவ ப்ரச்சோதயாது


அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்குவோம்! அல்லல்கள் அகன்று ஆனந்தம் அடைவோம்!

(இது தளிர் தளத்தின் 2000 மாவது பதிவு.)

(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


Related Posts Plugin for WordPress, Blogger...