தித்திக்கும் தமிழ்! பாகம் 2 பகுதி 3

 

தித்திக்கும் தமிழ்! பாகம் 2 பகுதி 3

 சனி ஞாயிறாய் வந்து உதித்த திங்கள்!

இன்றைய தமிழ் கவிஞர்கள் திரைப்பாடல்களில் நாடுகள் நகரங்கள், பத்திரிகைகள், இலக்கியங்களின் பெயர்களை பாடலாக புனைந்து பாராட்டு பெறுகின்றனர். ஆனால் இந்த வழக்கம் பண்டைக் காலத்தே இருந்திருக்கிறது என்று உணர்த்துகின்றது தமிழ்ப் பாடல் திரட்டில் காணப்படும் இந்த பாடல். அப்படி என்ன அந்த பாடலில் அதிசயம் ஒளிந்து கிடக்கிறது என்கிறீர்களா? அதிசயம்தான். வாரங்கள் ஏழும் இந்த பாடலில் ஒளிந்து தலைவனை பிரிந்திருக்கும் தலைவியின் பிரிவுத்துயரை அழகாக உணர்த்துகின்றது.

    இப்படி எழுதத் தனித்திறமை வேண்டும் தானே. இந்தப் பாடலை எழுதிய புலவரின் பெயர் தொகுப்பில் காணப்படவில்லை! ஆனால் அந்த புலவரின் திறமை தனித் திறமை!  அந்த பாடலை கீழே காண்போம்.

    என்னசனி ஞாயிறுபோல் இத்திங்கள் வந்துதித்தால்

    மின்னியசெவ் வாய், மின் மெலியாளோ---- உன்னரிய

    மன்னுமத  னம்புதனால் வாய்த்தவியா  ழம்படைத்தாள்

    அன்னையெதிர் வெள்ளியா  னான்.

 

ஏழு கிழமைகளும் பாடலின் உள்ளே பொருள்பட புதைந்து நிற்கும் அதிசயம்தான் என்னே? பாடலின் பொருள் விளங்குகிறதா?

களவுக் காலத்தே தலைவனை பிரிந்திருக்கின்றாள் தலைவி. அப்போது நிலா வெளிப்படுகிறது. அதைக் கண்டு வருந்தி தோழியின் பிரிவாற்றாமையையும் மெலிந்து போவதையும் தோழி பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இப்போது பாடலின் பொருளை பார்ப்போமா?

  நாம் ஏதாவது ஒரு முக்கியமான பணியில் இருக்கும் போது வேண்டாத ஒருவர் வந்துவிட்டால் என்ன சொல்வோம்? இந்த சனியன் ஏன் இந்த நேரத்தில் வந்து தொலைக்குது என்போமா இல்லையா? அதே போல நிலவைச் சாடுகின்றாள் தோழி. அது மட்டுமில்லால் வந்தவரை நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் வருகை நமக்குச் சுடத்தானே செய்யும். அதேபோலத்தால் இங்கே முழுமதியும்  கதிரவனைப் போலச் சுடுகின்றதாம்.

   ஒளிவீசும் சிவந்த வாயினை உடைய மின்னல்கொடி போன்ற தலைவி இந்த சூரியன் போன்ற நிலவினால் மேனி மெலிந்து போகின்றாளாம். அந்த நிலாவைப் பார்க்கும்போதெல்லாம் தலைவனின் நினைப்புவர எண்ண முடியாத அளவு மன்மதனின் அம்புகளால் துளைக்கப் பட்டு பசலை நிறத்தை அடைந்தாள்.அப்போது அன்னை அங்கே எதிரே கண்டு அவள் அஞ்சி உடல் வெளுத்துப் போனாள்.

 

காதலனின் பிரிவினால் வாடும் தலைவி முழுமதிநாளில் அவன் நினைவுகளினால் உடல் மெலிந்து பசலைநோய் பிடித்துக் கொண்டாள். அப்போது அன்னைவர அவள் உடல் வெளுத்துப் போனது.

இந்த பொருளுணர்த்தும் பாடலில் சனி, ஞாயிறு, திங்கள், வியாழம், வெள்ளி என்பது செஞ்சொல்லாகவும், செவ்வாய், புதன் என்பது குறிப்பு சொல்லாக அமைந்துள்ளது.

  செஞ்சொல் நேரடியாக பொருள் உணர்த்துகிறது. சனி- சனியன், ஞாயிறு- கதிரவன், திங்கள்- முழுநிலா, வியாழம்- குரு குருவின் நிறம் வெளிர்மஞ்சள், வெள்ளி- வெள்ளைநிறம்.

புதன்  மன்னுமதனம்புதனால்-   மன்மதன் அம்புதனால் என்று பிரித்து படிக்க வேண்டும்.  மன்மதனுடைய அம்புகளால் துளைக்கப்பட்டு என்று குறிப்பால் உணர்த்துகின்றது. செவ்வாய்-  சிவந்த வாய்- அதையே குறிப்பாக உணர்த்துகையில் சிவந்து மெலிந்து நிற்கும் கொடி போன்ற தலைவி.என்ற பொருளை குறிப்பால் உணர்த்துகின்றது.

 

மாலைப்பொழுதில் நிலா உதிக்கிறது! காணுற்ற தோழி புலம்புகின்றாள்! என்ன சனியன் இது? தலைவி தலைவனைப் பிரிந்திருக்கையில் அவளை சுடுவது போல சூரியனாக இத்திங்கள் வந்து உதிக்கிறதே!

 சிவந்தமேனியையை உடைய மெல்லிய மேனியைக் கொண்ட அவள் தலைவன் குறிந்த நினைவுகளால் சூழப்பட்டு மன்மத பாணங்களால் பீடிக்கப்பட்டு பசலை நோயுற்றாள். அவள் அன்னை வரும்போது பயத்தினாள் உடல் வெளுத்துப் போவாள் என்று பாடுகின்றாள் தோழி!

என்ன அழகான பாடல்!  ஏழு கிழமைகளில் தோழியின் நிலையை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் கவிஞர். வியந்தோதும் நம் தமிழ்க் கவி மூதாதையரை! மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன். நன்றி!

பதிவுகுறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இலக்கியத்திலும் அசத்துகின்றீர்கள். மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிகவும் அழகான விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2