தித்திக்கும் தமிழ்! பாகம்.2 பகுதி 2 “வெள்ளத்தி மரம்”

 

தித்திக்கும் தமிழ்! பாகம்.2  பகுதி 2  “வெள்ளத்தி மரம்”

 


பண்டைக்காலத் தமிழ்ப் பாடல்களில் பொருள் நயத்தோடு சிலேடையும் சொற்சுவையும் கலந்திருக்கும். அத்துடன் சில வரலாற்று குறிப்புகளும் மருத்துவக் குறிப்புகளும் கூட கலந்திருக்கும். நற்றமிழ் அறிஞர்கள் இயற்றிய இந்த பாடல்களை படித்து நாம் வியந்தோதுவதில் வியப்பேதுமில்லை.

  ஐயம் இட்டு உண், ஈவது விலக்கேல் என்று சொன்ன தமிழ்தான் ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்லியிருக்கிறது. பிறருக்கு உதவி செய்யவேண்டும். சாப்பிடும் போது எவர் வரினும் அவருக்கும் உணவு அளித்து உண்ண வேண்டும் என்று ஈகையை சிறப்பிக்கையில்  யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிவிடக் கூடாது என்று ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்லிக் கொடுக்கிறது.

தானம் வாங்குவதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்கச் சொல்கிறது தமிழ். புகழ்ச்சிக்காக பெருமைக்காக தானம் செய்பவரிடம் யாசகம் பெறாமல் இருப்பதே சிறப்பு என்கிறது பண்டைய இலக்கியங்கள்.

இதோ தனிப்பாடல் திரட்டில் ஒரு பாடல்

 

 வள்ளற்கைத் தலமில்லா மானிடரைப்

   பாடியவர் வாசற் போந்து

தள்ளத்தள் ளூணடைந்த நோவெல்லாம்

   புலவீர்காள் சாற்றக் கேளீர்!

உள்ளத்தன் பாற்கண்ணீர் ஊற்றவலஞ்

  சுழியில்வளர்ன் தொருகொம் போங்கும்

வெள்ளத்தி யடையின்பால் இட்டத்தால்

நமக்காதி விடுங்கண் டீரே!

ஒரு புலவர் மற்ற புலவர்களைப் பார்த்து பாடுவதாக அமைந்த இப்பாடலில்  கலைமகள் அருளால் புலமைபெற்ற புலவர்களாகிய நாம்  நம்முடைய வறுமையை நீக்குவதற்காக மன்னாதி மன்னர்களையும் மனிதர்களையும் பாடி சிறுமை அடையக் கூடாது. எல்லோருக்கும் அருள் புரியும் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரை போற்றி உய்வோம் என்று சொல்கிறார்.

இப்பாடலில் சொல்லணிச் சிலேடையில் வெள்ளை விநாயகரை “வெள்ளத்திமரம்” என்று நயம்பட எடுத்துரைக்கிறது.

அந்தப் புலவர் எத்தனை அழகாய் எடுத்துரைக்கிறார் பாருங்கள்!  புலவர்களே! வறியோர்க்கு வழங்கும் வள்ளல்தன்மை இல்லாத கைகளையுடைய மானிடரை உணவுக்காகவும் உடைக்காகவும் பாடிக்கொண்டு அவர் வீட்டு வாசலில் எத்தனை காலம் காத்துக் கிடக்கப் போகிறீர்கள்? அவர் உங்களை எள்ளி நகையாடி வாசலில் பிடித்து தள்ளும்போது உங்கள் உடம்பு பட்ட வலியெல்லாம் நீங்க மருந்து ஒன்றை கூறுகிறேன்! கேட்பீர்களாக!

  உள்ளத்தில் எழுந்த அன்பினால் ஆனந்த கண்ணீர் வழிய வழிபடுவார்க்கு அருள்புரியும் பொருட்டு திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் நீண்ட ஒற்றைக் கொம்பை உடைய வெள்ளை விநாயகரை சரண் அடையுங்கள்! அவர் அருளினாலே நமக்கு ஏற்பட்ட உடல் உபாதையெல்லாம் நீங்கி ஆறிவிடும் என்கிறார் புலவர்.


இதிலென்ன சிலேடை என்று கேட்கிறீர்கள்தானே!

” உள்ளத்தன் பாற்கண்ணீர் ஊற்றவலஞ்’

   சுமியில்வளர் தொருகொம் போங்கும்

வெள்ளத்தி யடையின்பால்  இட்டத்தால்”

இந்த வரிகளில்தான் சிலேடை அமைந்துள்ளது.

சிலேடையின் பொருள்”  உள்ளத்தில் எழுந்த அன்பால் ஆனந்த கண்ணீர் வழிய வழிபடுவோர்க்கு அருள்புரியும்  திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் வெள்ளைக் கொம்புடைய விநாயகரை சரண் அடைந்தால் துன்பம் நீங்கும் என்றும்.

அதே வரிகளில்

அன்பர்கள் முயற்சியோடு நீரூற்றி வளர்த்தமையால் வளர்ந்து வலப்பக்கமாக சுழித்தெழுந்து ஒரு பக்கத்தில் நீண்டுவளர்ந்திருக்கும் அத்திமரக் கிளையில் உள்ள இலையின் பாலை இட்டுத் தேய்த்தால் உடம்புவலி ஆறிவிடும் என்று இன்னொரு பொருளும்

சிலேடையாக அமைந்துள்ளது.

இதில் வெள்ளத்தி என்ற சொல்லானது வெள்ளையானை என்ற பொருளுணர்த்தி வெள்ளை விநாயகரையும். வெள்+ அத்தி என்று பிரிந்து அத்திமர இலையின் பால் என்றும் பொருளுணர்த்துகிறது.

அத்தோடு நில்லாமல் இப்பாடலில் நாம் பெறும் மருத்துவக் குறிப்பும் ஒன்று உள்ளது. அது. அத்திமர இலையின் பால் உடல் வீக்கத்தையும் வலியையும் நீக்கும் என்பதே!

நம் முன்னோரின் தமிழறிவும் மருத்துவ அறிவும் அவர்கள் கொண்டிருந்த சிலேடை நயமும் எத்தனை சிறப்பானது. அத்தனை சிறப்பான தமிழை மறத்தல் தகுமோ.?

தமிழை வாசிப்போம்! தமிழை என்றும் நேசிப்போம்!

Comments

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!