அல்லல்கள் போக்கும் ஆஞ்சநேயப் பெருமான்! இன்று ஹனுமன் ஜெயந்தி!

அல்லல்கள் போக்கும் ஆஞ்சநேயப் பெருமான்! ஹனுமன் ஜெயந்தி!


  பெருமாள் அவதாரம் எடுக்கும் போதெல்லாம் ஹனுமானும் அவதாரம் எடுப்பதாக சொல்கின்றன புராணங்கள். மார்கழி மாதம் அமாவாசையோடு கூடிய மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஹனுமன். இவரது பிறந்த நாள் அனுமன் ஜெயந்தியாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்திரா பவுர்ணமி அன்றும் வட இந்தியாவில் வைகாசி பவுர்ணமியை அடுத்த செவ்வாய்கிழமையும் ஹனுமத் ஜெயந்தியாக அனுசரிக்கப் படுகின்றது.

  அசாத்திய பலமும் வீரமும் துணிவும் கொண்டவர் அனுமன். ஆனால் அவரது பலம் அவருக்கே தெரியாது. மற்றவர் சொல்லி ஊக்கம் ஊட்டுகையில் முடியாத காரியத்தையும் முடித்து வைத்துவிடுவார்.  கடல் சூழ் இலங்கையை அடைந்து சீதையின் இருப்பிடத்தை கண்டு சேதுபாலம் அமைத்து இராவணன் வதைக்கு முக்கிய உதவியாக இருந்தார். இவரை வழிபட்டு வருகையில் நமது பலத்தை உணர்ந்து காரியங்களில் வெற்றி பெறுவோம் என்பது நம்பிக்கை.

அனுமனை வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, இசை சங்கீதத்தில் தேர்ச்சி, சனிபகவான் பாதிப்பில் இருந்து விடுதலை, மனதில் மகிழ்ச்சி, தைரியம் கைகூடும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

 அனுமன் சைவம், வைணவம் இருபிரிவிலும் கொண்டாடப்படும் தெய்வம். சிவ விஷ்ணு  ஸ்வரூபியான இவரை வழிபட்டால் சிவன் விஷ்ணு இருவரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமார் இருப்பார். ராம நாமம் சொல்லி வழிபட அனுமனின் அநுக்கிரகம் பூரணமாக கிடைக்கும்.


 அனுமனுக்கு செந்தூரம், வெண்ணைய் சாற்றுபடி, வெற்றிலை மாலை அணிவித்தல் வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டுள்ளது. செவ்வாழை, கொய்யாக் கனி, தயிர் சாதம், வடைமாலை, சர்க்கரைப் பொங்கல், அவல்கடலை பானகம் போன்றவை முக்கிய நிவேதனங்கள்.

வெற்றிலை மாலை அணிவிப்பது ஏன்?
 அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை.

ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.


 வெண்ணைய் சாற்றுவது ஏன்?
ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.

சனியின் பாதிப்பில் விடுபட அனுமன் வழிபாடு:
இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார்.

``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்கமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன்.

அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

அனுமன் சாலீஸா!

  அனுமன் சாலீஸா என்பது அனுமன் மீது பாடப்பட்ட நாற்பது பாடல்களின் தொகுப்பு ஆகும். துளசி தாசரால் அவாதி மொழியால் எழுதப்பட்டது. இதுவே அவரது சிறந்த இந்து உரையாகவும் போற்றப் படுகிறது.
 இந்த தொகுப்பில் 36 வது பாடலில் இந்த பாடல் பாராயணத்தின் பலன் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் யார் அனுமன் சாலீஸாவை நூறு நாட்கள் தினமும் நூறு தடவை பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்தில் இருந்து விடுபட்டு அதிக ஆனந்தத்தை அடைவார்கள் என்கிறது அந்த பாடல். மேலும் இந்த பாடலின் ஒவ்வொரு சுலோகமும் ஓர் வரத்தை வழங்குவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

அனுமன் சாலீஸா பாராயணம் செய்ய இங்கே செல்லவும்  ஹனுமன் சாலீஸா 
அனுமன் சாலீஸா தமிழாக்கம் படிக்க  அனுமனின் நாற்பது

துளசி இலை மஹாலஷ்மி வாசம் செய்யும் இடமாகும்.மஹாலஷ்மி சீதைக்குச் சமமானவர். இதனால் துளசி இலையை ஹனுமன் பாதார விந்தங்களில் சமர்ப்பிதைவிட மாலையாக கட்டி சார்த்துவது சிறப்பு என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.


ஆஞ்சநேயர் பிறந்த தினமான இன்று அருகில் உள்ள அனுமன் ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி  
 ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே 
வாயுபுத்ராய தீமஹி 
தன்னோ ஹனுமத் பிரச்சோதயாத்
 என்ற காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடுவோம். அனுமன் நம் அல்லல்களை அகற்றி இன்பம் அருளுவார்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம்.

    ReplyDelete
  2. ஸ்ரீராமஜெயம்.....

    ஹனுமத் ஜெயந்தி அன்று சிறப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  3. ஹனுமத் ஜெயந்தி அழகான எழுத்துவடிவத் தரிசனம். கொஞ்சம் தாமதமாகிவிட்டது..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?